கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார் ..,
நல்ல இருக்கீங்களா..?, சென்னையில் வர விருக்கும் புத்தக காட்சியில் தங்களின் என்னென்ன நூல்கள் வர விருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாமா ..? புத்தக வெளீயீட்டு விழா சென்னையில் நடக்குமா சார் ..?


Regards
dineshnallasivam

அன்புள்ள தினேஷ்

இந்தவருடம் இரு நூல்கள்.

1. உலோகம் -கிழக்கு
2. இரவு -தமிழினி

வெளியீட்டு விழாவெல்லாம் இல்லை. புத்தகக் கண்காட்சிக்கு வருவதும் சந்தேகமே. பயணத்தில் இருப்பேன்

கிழக்கு வெளியீடாக பல நூல்கள் மறுபதிப்பாகின்றன.

ஜெ

அன்புள்ள ஜெ,
வணக்கம். கொடுங்கல்லூர் பரணி குறித்து சில வீடியோக்களை யூ ட்யூபில் பார்த்துக்கொண்டிருந்தேன். உணர்ச்சி வசப்பட்ட நிலையின் உச்சத்தில், தலை விரிகோலமாக பெண்களும், ஆண்களும், வெளிச்சப்பாடுகளும் ஆவேசமாக அரிவாளால் தலையில் அடித்து முகமெங்கும் வழிந்தோடும் ரத்தக் களரியில், கள் வெறியும், சேவல்களை அறுத்து அம்மையின் கர்ப்பக்ருஹ கூரையில் விட்டெரிந்தும், மூங்கில் குச்சிகளால் அடித்தும், ‘தெறி’ப்பாட்டு பாடியும் ரத்தச்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்த கூட்டம் பெரும் குருதிப் பிரவாகமாக பகவதி கோவிலை வலம் வந்து கொடுங்கல்லூர் கோவிலகம் தம்புரானின் ஆசியுடன் ‘காவு தீண்ட’லும்…… இன்னதென்று விளக்க முடியாத அமானுஷ்ய அனுபவமாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள கோவில் கொடை பலி ஐதீகங்களை விட இது வேறுபட்டதாக உள்ளதே? அதிலும் அந்த பரணிப்பாட்டு..?? கற்பனை பண்ணமுடியாத அளவுக்கு ‘அர்த்தங்கள்’ உள்ள பாட்டுக்கள் ஆரம்பம் முதலே புழக்கத்தில் உள்ளதா? காவு தீண்டலில் பங்குபெரும் உரிமை அச்சடங்கை நிகழ்த்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் உள்ளது என்றும் அறிந்தேன். எதை வெளிப்படுத்துகிறது இச்சடங்குகள்? ஏதேனும் பழங்குடி மரபின் வழிபாட்டு முறையின் திரிந்து போன வடிவமா இது? தயவுசெய்து இதன் உண்மையான வரலாற்றையும், தாத்பரியத்தையும் விளக்குங்களேன்..
நன்றி,

பிரகாஷ், தென்கரை.

அன்புள்ள பிரகாஷ்

கொடுங்கோளூர் கண்ணகி என ஒரு நூலை நான் தமிழாக்கம் செய்து தமிழினி வெளியிடாக வந்துள்ளது. அதில் விளக்கமாக எல்லாக் கேள்விகளும் விவரிக்கப்பட்டுள்ளன.

கொடுங்கல்லூரம்மா என்று இன்று அழைக்கப்படுவது கண்ணகி. அது சேரன் செங்குட்டுவன் எடுத்த பத்தினிக்கோயில். இடம்மாறி இன்றைய இடத்துக்கு வந்தது. பின் துர்க்கை ஆக மாறினாலும் வழிபாட்டில் கண்ணகி இருக்கிறாள். கோயிலில் பாடப்படும் நல்லம்ம தோற்றம் என்ற பாடல் கண்ணகி பாடலே

இது கண்ணகியை பார்த்த குறும்பர் என்ற பழங்குடிகளுக்கு முதலுரிமை உள்ள கோயில். கண்ணகிக்கே குறும்பா தேவி என்றுதான் பெயர். சமீபகாலம் வரை உயிர்ப்பலி இருந்தது. குறும்பாடு முதல்பலி. இன்றும் குறியீட்டுவடிவில் நீடிக்கிறது

குறும்பர்களின் வழிபாட்டுமுறையே பூரப்பாட்டு. கண்ணகி கன்னி ஆதலால் அவள் காமத்தை தணிவிக்கும் பாட்டு என்பார்கள். கொடுங்கல்லூர் பூரம் ‘காவு தீண்டல்’ எனப்படுகிறது. மக்கள் மதுரைக்கு ஆறாச்சினத்துடன் திரண்டு சென்ற நிகழ்ச்சியின் நினைவே அந்த காவுதீண்டல் பயணம் என்றும் சொல்லப்படுகிறது

கொற்றவை நாவலையும் வாசிக்கலாம்

ஜெ

==============

அன்புள்ள எழுத்தாளர்(கேள்வியே இதைப்பற்றி தான்) ஜெயமோகன் அவர்களுக்கு,
ஒருவர் எப்பொழுது தன்னை “எழுத்தாளர்” என்று சொல்லிக்கொள்ளலாம் ? . பேனாவும் , பேப்பரும் கிடைத்த மாத்திரத்தில் எழுத முயல்பர் அனைவரையும் எழுத்தாளர் என்று சொல்லிவிட முடியாது. எதன் அடிப்படியில் ஒருவர் “எழுத்தாளர்” என்று தீர்மானிக்கப்படுகிறார்? ( தன்னை தன்னாலும் , பிறாராலும்).
உங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் ,
பிரவின் சி

பிரவின்

இதிலென்ன ஐயம். ஒருவன் தன்னை எழுத்தாளன் என எப்போது ஆத்மார்த்தமாக உணர்கிறானோ அப்போது அவனுக்கு அவன் எழுத்தாளனே. அவன் ஏதாவது ஒன்றை எழுதிவிட்டான் என ஒரு வாசகனுக்கு தோன்றும்போது வாசகன் நோக்கில் அவன் எழுத்தாளன்

ஜெ

=====================

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் கனிவான மறுமொழிக்கு மிக்க நன்றி! தங்களது எழுத்துக்கள் பரவலாக கவனிக்கப்படுகிறது. தங்கள் எழுத்துக்களின் மூலமாக தமிழ் சினிமாவில் பிராமணக் காட்சிப்படுத்தல் பற்றி படிப்பவர்கள் கொஞ்சம் யோசிப்பார்களே என்பதாலேயே தங்களிடம் இது பற்றி கருத்து கேட்க முனைந்தேன்.

அரசியலை விட சினிமாவால் உண்டாகும் தாக்கம் தான் பெரியது என்று கருதுகிறேன். மேலும் அரசியல் வாதிகள் ஆயிரம் பேசினாலும் மக்களுக்கு பயனளிக்காத வகையில் அந்த பேச்சுக்கள் நிராகரிக்கப்படும். ஆனால் சினிமா எந்த பயனும் கொடுக்காவிட்டாலும் தாக்கத்தை ஏற்படுத்திச் செல்லும். மேலும் அரசியலை விட சினிமாவை ஜாதிமத பேதமில்லாமல் அநேக மக்கள் ரசிக்கும் நிலையில் அவற்றில் ஜாதி பேதத்தை அதுவும் குறிப்பாக பிராமண பேதத்தை தொடர்ந்து புகுத்துவது ரசிக்கத் தகுந்ததாக இருப்பதில்லை. சமூகத்தில் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூச்சல் போடும் சினிமாக்காரர்களால் கேவலம் இரண்டரை மணிநேர சினிமாவை ஜாதி இல்லாமல் எடுக்க முடியாது என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

//அதேசமயம் தமிழ் சினிமாக்களில் பலர் பிராமணர்களை திட்டமிட்டே இழிவுசெய்கிறார்கள், பிறசாதிகளை அப்படிச்செய்ய துணிவதில்லை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்.// இந்தக் கருத்தை வெளிப்படையாக சொல்வதற்கு கூட பலர் தயங்கும் நிலையில் தங்கள் எழுத்துக்களில் பார்ப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த ஒரு வரியாவது ஏதாவது ஒரு சினிமா கதாசிரியரையோ, இயக்குனரையோ அல்லது நடிகர்களையோ யோசிக்க வைத்தால் அதுவே பெரிய நிகழ்வாக இருக்கும்.

தங்கள் நிலையை தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். தங்கள் கனிவான பதிலுரைக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது கடிதம் மூலமாக தங்கள் அமைதியை சில வினாடிகளேனும் கெடுத்திருப்பேனெனில் மன்னிக்கவும்.

என்றும் அன்புடன்,
ராம்

முந்தைய கட்டுரைநெய்தல் படைப்பாளிகள்
அடுத்த கட்டுரைபட்டியல்கள்…