கோவை புத்தகக் கண்காட்சி,விருது வழங்கும் விழா

1

இன்று காலை கோவை வந்து சேர்ந்தேன். ரயிலில் மேல் படுக்கையில் டிஷர்ட்டில் பணத்தையெல்லாம் வைத்துக்கொண்டு அசந்து தூங்கி அதில் பலவகையில் உருண்டு புரண்டு காலையில் எழுந்து தொற்றி இறங்கி போர்வையை இழுத்தால் கீழே இருந்த கவுண்டர் மீது ரூபாய் நோட்டுகள் கொட்டின. “ஏனுங் பணமழையா கொட்டுதுங்?” என்றார். அவரே பொறுக்கி என்னிடம் அளித்து “மேலே இன்னும் பணம் காய்ச்சிருக்குங்களா?” என்றார்.

வரவேற்க புத்தகக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜனும் நண்பர்கள் கதிர்முருகனும் விஜய் சூரியனும் வந்திருந்தார்கள். அறைக்கு வந்து கொஞ்சம் ஓய்வெடுத்தேன். ஒரு சின்ன கட்டுரை எழுதினேன். அதற்குள் நண்பர்கள் வந்துவிட்டனர். டைனமிக் நடராஜன் காரில் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன்.

2
இயககோ சுப்ரமணியம் அறிவிக்கை வழங்குகிறார்

புத்தகக்கண்காட்சி என்றாலே என்னை விலகச்செய்யும் அம்சம் புழுக்கம், மூச்சுத்திணறல். நெரிசலும் சேர்ந்தால் அது பெரிய அவஸ்தை. சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்று பல ஆண்டுகளாகின்றன. கொடிஷியா புத்தகக் கண்காட்சி அரங்கு மிகப்பெரியது. உயரமான கூரை. ஆகவே உள்ளே குளிர்த்தென்றல் வீசியது. விரிவான அரங்குகள். வசந்தகுமாரைப் பார்த்தேன். உற்சாகமாக இருந்தது நெடுநாட்களுக்குப்பின் அவரைப் பார்த்தது.

நேஷனல் புக்டிரஸ்டின் தலைவர் பல்தேவ் பாய் சர்மா வந்து சேர்ந்தபின் புத்தகக் கண்காட்சியை அவர் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். அதற்குள் அங்கே விற்பனை நடந்துகொண்டிருந்தது. என் நூல்களுக்கு மட்டுமான அரங்கை நாஞ்சில்நாடன் திறந்துவைத்தார். புவியரசுவைச் சந்தித்தேன்.நண்பர்கள் சு.வேணுகோபால், மரபின்மைந்தன் முத்தையா போன்றவர்கள் வந்திருந்தனர்.

a
நாஞ்சில்நாடன் ஜெயமோகன் நூல்களுக்கான தனிஅரங்கைத் திறந்துவைக்கிறார்

ஆறுமணிக்கு தொடக்க விழா. எனக்கு இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனை விருது அளித்தனர். கொடிஷியா துணத்தலைவர் ராமமூர்த்தி வரவேற்புரை அளித்தார். புத்தகக் கண்காட்சி அமைப்பாளர் சௌந்தர ராஜன், டாக்டர். ஏ.வி.வரதராஜன் [நிர்வாக இயக்குநர் CIPL] ,டி.பாலசுந்தரம் [தலைவர் கோயம்புத்தூர் கேப்பிடல்] காந்தி கண்ணதாசன் ஆகியோர் பேசினார்கள். தொழிலதிபரும் எழுத்தாளருமான இயகாகோ சுப்ரமணியம் அவர்கள் விருது அறிவிக்கையை வாசித்து அளித்தார்.

பல்தேவ் பாய் சர்மா விருதை வழங்கி தலைமையுரை ஆற்றினார். ஆளுயர மலர்மாலை, பொன்னாடை என வழக்கமான மங்கலங்கள். இத்தகைய நிகழ்ச்சிகள் இனிய செயலின்மை ஒன்றை மனதில் நிறைக்கின்றன.

.

a

டி.பாலசுந்தரம் அவர்களிடம் நான் கோவையின் பெருமைமிக்க அடையாளங்களில் பெரியசாமித் தூரன், ஆர்.ஷண்முகசுந்தரம் போன்ற அறிஞர்கள், படைப்பாளிகள் முக்கியமானவர்கள். அவர்களை முக்கியப்படுத்தவேண்டும் என்று கோரியிருந்தேன். புத்தகக் கண்காட்சியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கு படைக்கப்பட்டுள்ளது. முதல்நாள் பெரியசாமிதூரன் நினைவுக்கு.

ஏற்புரையில் நான் பெரியசாமித்தூரன் பற்றிய ஒரு நினைவூட்டலை நிகழ்த்தினேன். பாலசுந்தரம் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழகத்தை மாற்றிய பத்து நூல்கள் என்னும் தலைப்பில் பேசினேன். ஒருவகையில் பத்து நூல்களினூடாக தமிழக வரலாற்றை சுருக்கிச் சொல்லும் ஒரு முயற்சிதான் அது.

.

PeriasamyThooran
பெரியசாமித் தூரன்

கோவை என்றாலே டைனமிக் நடராஜனின் முகமும் நினைவிலெழுகிறது. அவருக்கு நான் எனக்குள் நன்றி சொல்லிக்கொண்டேன். விழா முடிந்து அனைவருக்கும் விருந்து. சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தேன். வாழ்நாள் சாதனை செய்து முடித்துவிட்ட நிறைவு. இந்நிறைவை கிழித்து வெளியே சென்றாகவேண்டும்.

.

b

கொடிஷியா வாழ்த்தறிக்கை

நவீனத்தமிழிலக்கியத்தின் ஊற்றுமுகம் புதுமைப்பித்தன் என்றால் பொங்குமாங்கடல் எழுத்தாளர் ஜெயமோகன். வெகுஜன வாசகர்கள் வணிகஇலக்கியங்களை மட்டுமே வாசித்தும் கொண்டாடியும் வந்த ஒரு சூழலில் தனதுபடைப்புகளால் தமிழ்ச்சமூகத்தை தீவிரஇலக்கியம் நோக்கித்திரும்ப வைத்தவர் ஜெயமோகன்.

அதிகம் எழுதினால் படைப்புகள் நீர்த்துப் போய்விடும் என்றொரு நம்பிக்கை இலக்கிய உலகில் இருந்தது. அதைப் பொய்யாக்கியவர் ஜெயமோகன்.

சிறுகதைகள், நாவல்கள், இலக்கிய மதிப்பீடுகள், காவிய மறு உருவாக்கம், மொழிபெயர்ப்புகள், கட்டுரைத்தொகுப்புகள், பயணநூல்கள் என கடந்த முப்பதாண்டுகளாக அடுத்தடுத்து இவரிடமிருந்து வரும்படைப்புகள் ஒவ்வொன்றும் தன்னளவில் தனிச்சிறப்பும், ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் அறிவியக்கத்தை ஓரங்குலமெனும் முன்னகர்த்தும் முனைப்பும்கொண்டவை.

இவர் தினம் ஓர் அத்தியாயம் என எழுதி வரும் மகாபாரத மீள் உருவாக்க நாவல்தொடர் ’வெண்முரசு’ தினமும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்படுகிறது. தமிழிலும் மலையாளத்திலும் தரமான திரைப்படங்களின் உருவாக்கத்திற்குப் பங்களிக்கும் காத்திரமான திரைக்கதையாசிரியராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டுள்ளார்.

எழுத்தாளன் அச்சுஊடகங்களையோ பதிப்பகங்களையோ அண்டியிருக்கவேண்டும் என்கிற நிலைமையை தனது இணையதள எழுத்துக்களின் வழியே உடைத்தவர் இவர். இலக்கியம், கலை, வரலாறு, இந்திய ஞானமரபு, காந்தியம், சூழியல், தத்துவம் என நெடிய உரையாடல்களை தன் தளம் மூலம் நிகழ்த்தி வருபவர். தமிழ் அறிவியக்கத்தின் ஆகப்பெரிய இணையக் களஞ்சியமாக இவரது தளம் திகழ்கிறது.

முதிராக் கலை ரசனையும், மிகைப் பீற்றல்களும் கொண்ட பெருவாரி சமூகத்தை தன் எழுத்துக்களால் சீண்டிச் சீண்டி தொடர் விவாதங்களை உருவாக்குவதில் விற்பன்னர். தகுதியற்றவர்களால் விருதுகளும் அங்கீகாரங்களும் கைப்பற்றப்பட்டு வந்த சூழலில் தகுதியான ஆளுமைகள் கொண்டாடப்படவேண்டும் என்பதில் உறுதியாக நின்று தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் ஆகிருதிகளை எழுதிஎழுதியே நிறுவியவர் ஜெயமோகன்.

இவர் தோற்றுவித்த விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தமிழின் முன்னோடிப் படைப்பாளிகளை அடையாளம் கண்டு கவுரவிக்கிறது. தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு இலக்கிய அமர்வுகளை ஒருங்கிணைக்கிறார். இவரால் துண்டப்பட்டு இலக்கிய உலகத்திற்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழின் அறிவியக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் ஞான சபையாக உருமாறியுள்ளனர்.

தமிழிலக்கியத்தின் தலைமகன் ஜெயமோகனுக்கு வாழ்நாள்சாதனையாளர் விருது வழங்குவதில் கொடிசியா பெருமை கொள்கிறது.

***

 

ோவை புத்தகக் கண்காட்சி – ஜெயமோகன் அரங்கு

கோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்

முந்தைய கட்டுரைரஹ்மான்,மொழிப்பூசல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60