எதிர்வினைகள்

திரு ஜெயமோகன்,

”குஷ்பு குளித்த குளம்” என்ற தலைப்பில் ‘முந்தையவை சில’ பக்கம் படித்தேன்.

தாங்கள் தமிழ் தட்டச்சு செய்யும் முறை தெரியவில்லை. ஆனாலும் சில இடங்களில் ”ஷூ” ஹூ போன்ற எழுத்துக்கள் – ஷ¥ ஹ¥ ஆக வடிவம் பெறுகின்றன!

உதாரணம் – ”மச்சான் நம்மூருலே இந்தமாதிரி ஷ¥ட்டிங் [ ஷூட்டிங்]

G Mail – ”Compose Mail” உபயோகித்து பாருங்கள். நான் சில வருடங்களாக இதன் மூலம் தடமாடி தான் கற்றுக்கொண்டேன். கொசுறாக கிடைப்பது ”spell Check”

” போல மாற்று வார்த்தைகள் ‘suggestion’.

இப்படிக்கு,
சங்கரன். C. N.

அப்போது முரசில் அடித்து யூனிகோடுக்கு மாற்றிக் கொண்டிருந்தேன். அப்படி மாற்றும்போது வந்த குறியீடுகள். இப்போது என் எச் எம் ரைட்டரில்

எனக்கு நான் தட்டச்சு செய்யும் முறையை மாற்றுவது எளிதல்ல. ஆழ்மனம் அதற்குள் அமைய பலநாட்கள் ஆகும்

நன்றி

ஜெ
===========================================

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் வலைத் தளத்தில் சொல்வனத்தில் வந்த என்னுடைய கே.வி.மகாதேவன் பதிவை பரிந்துரைததற்கு மிக்க நன்றி. இன்னும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் இந்த அளவு தரத்துடன் எப்பொழுதும் எழுத வேண்டும் என்ற ஒரு பயமும் வருகிறது. என்னை எழுதத் தூண்டிய சேதுபதிக்கும் நான் நன்றி சொல்லக் கடமைபட்டிருகிறேன்.

நன்றி,

சுரேஷ்

அன்புள்ள சுரேஷ்

இணையத்தில் எதையாவது வாசித்து, உழைத்து எழுதுபவர்களே குறைந்துவிட்டார்கள். வலை என்பதே வம்பாக ஆகிவிட்டது. உங்களைப்போன்றவர்களே நிறைய எழுத முடியும். எதிர்வினைகள் அல்லாமல் நேரடியாக எழுதப்படும் கட்டுரைகள் இன்று அவசியத் தேவை

வாழ்த்துக்கள்

ஜெ

==================================================

ஜெ,

// நாத்திக நம்பிக்கை கொண்டவர் என்பதனால் ஒருவர் இந்தியாவின் நம்பிக்கைகள் வாழ்க்கைமுறைகள் சடங்குகளில் இருந்து விலகிச் செல்லவேண்டியதில்லை என்றே நான் நினைக்கிறேன். //

நாத்திக நம்பிக்கை – நன்றாக இருக்கிறது இந்தச் சொல்லாடல் :))

ஜடாயு

அது ஜெ கிருஷ்ணமூர்த்தியின் வரி. ’கடவுள் ஒரு நம்பிக்கை. கடவுள் இல்லை என்பது இன்னொரு நம்பிக்கை’

அதை அதற்கு முன் ரமணர் சொன்னார் ’கடவுள் ஒரு கருத்து. கடவுள் இல்லை என்பது இன்னொரு கருத்து’

ஜெ

================================

ஜெ,

இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் வெளிப்படுத்திய கருத்துக்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தியபின், சில எண்ணங்களை முன்வைக்க விரும்புகிறேன் – முக்கியமாக ‘உள்ளுணர்வு’ பற்றி…..

//சாதாரணமாக நிகழும் நிகழ்ச்சிகளுக்கு, அல்லது காட்சிகளுக்கு உள்ளுணர்ச்சி சார்ந்து ஏதேனும் அர்த்தங்களை கற்பித்துக்கொள்ளுதல். வீட்டை….//

இந்த வாக்கியத்தில், ‘உள்ளுணர்ச்சி’ என்னும் வார்த்தை நிச்சயமாக சரியாக இருக்க முடியாது – ‘எண்ணம்’ அல்லது ‘மன பிம்பம்’ என்பதே சரியாக இருக்க முடியும். ‘உள்ளுணர்வு – insight ‘ குறித்து நீங்களே பலமுறை உங்கள் வலை தளத்தில் எழுதி உள்ளீர்கள். எண்ணம் இருக்கும் இடத்தில் (இருக்கும்போது) உள்ளுணர்வு இருக்க முடியாது. உள்ளுணர்வு இருக்கும் இடத்தில் (இருக்கும்போது) எண்ணம், மன பிம்பம் இருக்க முடியாது.

அடுத்தது தர்க்க புத்தி. தர்க்க புத்தி, சாதாரண மன நிலையில் இது அல்லது அது என்பதாக மட்டுமே இருக்க முடியும். இதுவும் அல்லது அதுவும், இதுவும் அதுவும் அல்ல என்ற நிலைபாடுகளை எடுக்க உள்ளுணர்வு அல்லது உள்ளுணர்வுடன் கூடிய தர்க்க புத்தி மிக மிக அவசியம். வெறும் தர்க்க புத்தி உள்ள வியாபாரி அல்லது நிர்வாகி வியாபாரத்தையும் நிர்வாகத்தையும் திறம்பட நடத்தலாம், ஆனால் அத்துடன் வாழ்கையையும் சேர்ந்து வாழ முடியாது.

நான் புரிந்துகொண்டமட்டில் இந்த பத்தையும் ஒரு கலைஞன், ஒரு சிந்தனையாளன் கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் அவன் கலையில், சிந்தனையில் படைப்புத்தன்மை இருக்க முடியாது.

இதில் குறிப்பிட்டுள்ள பத்து கருத்துகளும் அடிப்டையில் தேவையற்ற எண்ணங்களால் உருவாவது. எண்ணம் எங்கு தேவை, எங்கு தேவை இல்லை குறித்த நமது அறியாமையின் காரணமாக நாம் நம் மனதுக்குள் உருவாக்கி கொள்வது. உள்ளுணர்வு உள்ள மனதில் இந்த பத்து தவறுகளும் நடக்க வாய்ப்பே இல்லை.

நன்றி,
அகிலன்
http://change-within.blogspot.com

அன்புள்ள அகிலன்

மனப்பிழைகள் பத்து என்பது ஒரு நிர்வாக உத்தியே. உண்மையில் மனப்பிழைகள் பல. அவை ஆளுக்கொன்று. நேரத்துக்கு ஒன்று. மனப்பிழைகளில் பெரும்பாலானவை மனப்பழக்கங்களே. சில சொந்த அனுபவம் மூலம் வருபவை. சில மூத்தாரிடமிருந்து வருபவை. இடதுகாலை எடுத்து வைத்து நான் வெளியே கிளம்புவதில்லை. ஏதோ தப்பு நிகழும் என்ற அச்சம். அது என் அம்மாவிடமிருந்து வந்த நம்பிக்கை

ஜெ

முந்தைய கட்டுரைவெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்-4
அடுத்த கட்டுரைஅருந்ததிராய்.. இணைப்புகள்