அன்புள்ள ஜெ.
எனக்கு மிகவும் பிடித்து பல நண்பர்களிடம் பகிர்ந்த, ஒரு சிறுகதை. மொழியை தெரிந்து கொள்வது முதல் பிரயாணம் என எண்ணினேன். வார்த்தைகளின் அர்த்தங்களை கதைகள் மூலம் ஒரு மெல்லிய நகைச்சுவையுடன் என்பது, உலக அளவில் பலரைத் தொடக்கூடும் எனத் தோன்றியது. அதனை ஒரு சிறப்பான மொழி பெயர்ப்பின் மூலம் சுசித்ரா அவர்கள் நடத்திக் காட்டி உள்ளார்கள். நட்பு கலந்த நன்றி.
உங்களுக்கும், சுசித்ரா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நீங்களே படித்த கதையையும் கேட்டேன். அலுவலத்திற்கு 30 நிமிடம் தாமதம் :) நீங்கள் அருகிலிருந்து படிப்பது போன்ற உணர்வு. அதுவும் மிக சிறப்பாக இருந்தது.
எனது நண்பர் (திருமதி, உஷா) – தமிழ் மெதுவாகத்தான் படிக்க முடியும். ஆனால் உங்கள் ஒளிப்பதிவு கேட்டு, பின் மீண்டும் ஆங்கிலத்தில் படித்து விட்டு உடனே குறுஞ்செய்தி. இரண்டும் மிக அற்புதமென்று. சுசித்ராவிற்கென்று விசேஷ வாழ்த்துக்கள் – அற்புதமான மொழி பெயர்ப்பிற்கு. இப்போது தமிழில் மெதுவாக படித்துக் கொண்டு இருக்கிறார்.
தற்போது, வெண்முரசின் நீர்க்கோலம் பற்றி எழுத நினைத்து கொண்டு இருந்தேன். இந்த நிகழ்வின் உற்சாகம் அதனை பின்னே தள்ளிவிட்டது. பிறகு எழுதுகிறேன்.
எனக்கு தெரிந்த எல்லோரிடமும் உற்சாகத்துடன் – தமிழ், ஆங்கில, மற்றும் ஒலிப்பதிவை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறேன்.
மீண்டும் வாழ்த்துக்கள்
அன்புடன் முரளி
அன்புள்ள முரளி,
நான் அந்த வாசிப்பைக் கேட்டபோது இன்னும் கொஞ்சம் நிதானமாக வாசித்திருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டேன்
ஜெ
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்தியா தைபே அசோசியேசனின் (India Taipei association – like இந்திய தூதரகம்) முகப்புத்தகத்தில் இன்றய பதிவில் உங்கள் படைப்புக்கு கிடைத்தஅங்கிகாரம் பற்றிய செய்தி குறிப்பு வெளியாகியிருக்கிறது.
அதன் லிங் உங்கள் பார்வைக்கு
https://www.facebook.com/ITATW/posts/1419576921456375
இந்திய தைபே அசோசியேசனின் தற்போதய முதன்மைஇயக்குனர் திரு. ஸ்ரீதரன் மதுசூதனன் அவர்கள்இலக்கியத்தில் சிறந்த ஈடுபாடு கொண்டவர், சிறந்தஎழுத்தாளர். சீன சங்க இலக்கியத்தை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.
அவரை பற்றிய குறிப்புகள்
https://en.wikipedia.org/wiki/Sridharan_Madhusudhanan
அன்புடன்,
சு. பொன்முகுந்தன்.
அன்புள்ள பொன் முகுந்தன்,
ஸ்ரீதரையும் அவர் மனைவி வைதேகியையும் 30 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத்தெரியும். அப்போது ரயில்வேயில் பணியாற்றியபடி நாடகம் போட்டுக்கொண்டிருந்தார். [சூரியனின் கடைசிக்கிரணம் முதல் முதற்கிரணம் வரை] இந்திய ஆட்சிப்பணிக்கு படித்துக்கொண்டுமிருந்தார். பின்னர் தொடர்புகள் இல்லை
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களின் பெரியம்மாவின் சொற்கள் சிறுகதைக்கு சர்வதேச விருது கிடைத்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியம்மாவின் சொற்கள் ஒரு அபாரமான கதை என்பதிலோ, மொழிகளைத் தாண்டியும் வாசிக்கப்பட வேண்டிய கதை என்பதிலோ எந்தச் சந்தேகமுமில்லை.
இந்தக் கதையை நான் முதல் முதலாக வாசித்த போதே, It is such a wonderful classic என்ற முடிவுக்குத்தான் வந்தேன். அதன் தாக்கத்தால்தான் 2015-ல் கதை வெளியான போதே அதைக் குறித்து எழுதியுள்ளேன். இன்று மீண்டும் அதை வாசித்தபோது சரியாகவே சொல்லியிருப்பதாகப் பட்டது.
வாழ்த்துக்களும், விருதுகளுமே சிறந்த படைப்புகளை முன்னெடுத்துச் செல்லும் என்ற வகையில் தங்களின் பெரியம்மாவின் சொற்கள் தேசம், மொழி கடந்து சென்றிருப்பது பெருமைக்குரியது.
http://kesavamanitp.blogspot.com/2015/11/3.html
அன்புடன்,
கேசவமணி
அன்புள்ள கேசவமணி,
கோவை புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
ஜெ
ஜெ வணக்கம்
உங்களுக்கும், சுசித்ராவுக்கும் பாராட்டுக்கள். மொழியாக்கத்தை பற்றிய கதை. அதன் ஆங்கில மொழியாக்கத்திற்கு, மொழியாக்கத்தை ஆராய்ச்சி செய்யும் டேவிட் பெல்லோஸின் தேர்வு.
ஆங்கில மொழியாக்கம் ஒரு வகையில் reverse translation, ஆங்கிலத்தில் வாசிப்பவர்க்கு தமிழை அறிமுகம் செய்கிறது. இந்திய புராண கதைகளையும்.
முக்கியமயாக சுசித்ராவின் நேர்காணல் சிறப்பாக இருக்கிறது.
மொழியாக்கம் செய்வதற்கு இது இன்னும் உத்வேகம் அளிக்கிறது.
சதீஷ் கணேசன்
அன்புள்ள சதீஷ் கணேசன்,
நலம்தானே?
இந்த விருது குறித்த செய்தி மலையாளத்தில் 5 செய்தித்தாள்களில் வந்துள்ளது. வங்க,இந்தி, கன்னட மொழி நாளிதழ்களிலும் வந்துள்ளதாகச் சொன்னார்கள். தமிழில் இதுவரை எங்கும் எந்தச் செய்தி ஊடகங்களுக்கும் இது ஒரு செய்தியாகவே தெரியவில்லை.
இது நம் சூழலின் ஒரு சித்திரம். அறிவார்ந்த வறுமை. வம்புகளுக்கு அப்பால் பண்பாட்டு நடவடிக்கைகள் எதிலும் ஆர்வமில்லாமை. இப்பின்னணியில் எழுதுவதென்பது தனக்குத்தானே செய்துகொள்ளவேண்டிய ஒரு செயல். கனவுகாண்பதுபோல. அதன் இன்பத்திற்காக மட்டுமே
எழுதவரும் ஒவ்வொருவருக்கும் இதையே சொல்லவேண்டியிருக்கிறது. சுந்தர ராமசாமி என்னிடம் இதைச் சொன்னார். அடுத்தலைமுறை எழுத்தாளர்களுக்கு நான் சொல்கிறேன்
ஜெ