பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தங்களின் விஷ்ணுபுரம் எனும் மிகப் பெரும் காவியத்தை வாசித்து முடித்து விட்டு இந்த கடிதம் எழுதுகிறேன்.படிக்க ஆரம்பிக்கும் போது உண்மையில் இதன் உள்ளே செல்ல முடியுமா என்ற பெருத்த சந்தேகத்துடன் தான்
தொடங்கினேன். விஷ்ணுபுரம் போன்ற செவ்வியல் (கிளாசிக்) படித்து எனக்கு அனுபவம் இல்லாதது ஒரு காரணம் ஆக இருக்கலாம். பொதுவாக, முதல் 20-25 பக்கங்களில் ஒரு புத்தகத்திற்குள் என்னால் உள்ளே செல்ல முடியவில்லை எனறால் அதை படிக்க மாட்டேன். ஆனாலும் விஷ்ணுபுரத்தை பொறுத்த வரையில், அதனை வாசிப்பதையே ஒரு பெருமையாகவும் தகுதியாகவும் எண்ணியதால் , அற்புதமான ஒரு அனுபவமாக இருக்க போவதை எதிர் பார்த்து , எளிதாக விட்டு விட கூடாது என்று நினைத்து தொடர்ந்தேன். என் எண்ணம் வீண் போக வில்லை. எவ்வளவு விஷயங்கள், உணர்வுகள், கிளர்வுகள் , கதைகள், தத்துவங்கள் ,வரலாறுகள் – ஒரே புத்தகத்தில். ஒட்டு மொத்த இந்திய தத்துவ ஞான மரபையும், சில நூறு ஆண்டுகளில் நடக்கும் நிகழ்வுகளை காவியமாக, செவ்வியலாக தொகுத்து அளித்து உள்ளீர்கள். பல தத்துவ வினாக்களை இந்த ஒரே நூலில் நாம் காண முடிகிறது .இதை எழுதும் பொழுது உங்களின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என ஊகிக்கிறேன் .ஒரு மிகச் சிறந்த படைப்பாளிக்கு கூட எளிதில் சாத்தியம் இல்லாத ஒரு படைப்பு என நினைக்கிறேன். என்னுடைய கருத்து, தமிழில் உங்களின் இந்த ஒரு படைப்பு போதும். கால காலத்திற்கும் இது நிலைத்து இருக்கும். நூல் பற்றி எதோ ஓரளவு நான் எழுதவேண்டும் என்றால் பல முறை நான் வாசித்தால் மட்டுமே சாத்தியம் . நிச்சயம் வாசித்து கொண்டே இருப்பேன். இரண்டாம் முறை வாசிக்க தொடங்கி விட்டேன்.
ஆங்கில புதினங்களை பொறுத்த வரை, அது அளவில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதை மிக எளிதாக விரைவில் முடித்து விடுவது எனது வழக்கம். இது நாள் வரையில் நான் அதிக காலம் எடுத்து கொண்டு வாசித்தது விஷ்ணுபுரம் தான். பல வித மன நிலைகளை எனக்கு அது கொடுத்தது. சில குறிப்பிட்ட பகுதிகளை வாசிக்கும் பொழுதும் சரி, வாசிப்பை முடித்த பிறகும் சரி ஒரு விவரிக்க முடியாத , இனம் புரியாத மன நிலையில் இருந்தேன் என சொல்ல முடியும் . தொண்டையில் எதோ இருந்து கொண்டே இருந்தது. உங்கள் எழுத்து வாசகனின் ஆன்மாவோடு பேசும் என்று ஒரு கட்டுரையில் படித்ததாக நினைவு. அது தானா என்று தெரிய வில்லை. எனக்கு இருந்தது துக்க மன நிலை இல்லை என்று மட்டும் சொல்ல
முடியும். இப்படி ஒரு மன நிலை ஒருவருக்கு கதை படித்து வரும் என்று சில காலம் முன்பு சொல்லி இருந்தால் நான் நம்பியே இருக்க மாட்டேன். உங்களின் சில கதைகளை படித்த பிறகு எதுவும் சாத்தியம் என புரிந்தது. பித்து மாதிரியான மனநிலை உள்பட… வார்த்தைகளை வைத்து கொண்டு உணர்வுகளோடும், உள்ளங்களோடும் சுழன்று, விளையாட்டு நடத்துகிறீர்கள். நான் வாசித்த உங்களின் மற்ற புனைவுகளையும் சேர்த்தே சொல்கிறேன் .
விஷ்ணுபுரத்தை மேலும் நுட்பமாக படித்து விட்டு அந்த அனுபவங்களையும் நான் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். எனது தத்துவ வாசிப்பில் மிக முக்கிய இடத்தில அதை வைத்திருப்பதால், என்றென்றும் நினைவில் வைக்க அது உதவும் என நான் கருதுகிறேன். அதனுள் நான் உள் செல்ல உதவிய நூல் என்று இந்து தத்துவ மரபில் ஆறு தரிசனங்களை நான் குறிப்பிடவேண்டும்.
விஷ்ணுபுரம் பொறுத்த வரையில் மற்றொரு முக்கியமான விஷயம், வாசிக்கும் நாட்களில் முழுமையாக கதை களத்தோடு நான் பயணித்ததால், கனவில் கூட கதை வாசிக்கும் உண ர்வோடு இருந்து கொண்டிருந்தேன். தூக்கத்தில் தெளிவாக எனக்கு விஷ்ணுபுரம் வாசிக்கிறோம் என்ற உணர்வும், புத்தகத்தில் உள்ள வாக்கியங்களை கூட என்னால் படிக்க முடிந்ததும் ஆச்சர்யம் அளிக்கும் உண்மை. இப்படி மிகவும் அரிதாகவே நிகழக்கூடியது என்று நான் நினைக்கிறேன். எனக்கு இதுவே முதல் அனுபவம், பிறகு கூகுளில் தேடிய பொழுது அறிவியல் ரீதியாக இது சாத்தியம் இல்லை எனவும் lucid dream -இல் மட்டுமே இது ஏற்படுகிறது என படித்தேன். என்னை பொறுத்த வரை, என்னுடைய அனுபவம் நிச்சயம் பாதி விழிப்பு நிலையோ அல்லது கனவை கனவாகவே அறிந்த உறக்கமாகவோ இல்லை. எனது அதிகம் வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பரிடம் இதை சொன்ன பொழுது அவர் இப்படி எல்லாம் நிகழ்வது மிக மிக அரிது என்றே கூறினார். இதை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இங்கே குறிப்பிடுகிறேன்.
உங்களின் புனைவுகளில் காட்சி படுத்துதல் மிக தெளிவாக வருகிறது. பொதுவாக புனைவுகளில் கதை கருவோ,போக்கோ, நிகழ்வுகளோ கொஞ்ச காலம் நினைவில் நிற்கும். உங்களின் பல கதைகளில் அவைகளோடு காட்சிகளும் (visuals )நினைவில் உள்ளது என்பது மிக அதிசயமான உண்மை.கதை கருவை விட அதன் காட்சியை சொன்னால் உடன் கதை நினைவுக்கு வருகிறது . இந்த தெளிவாக காட்சி படுத்தல் என்பது எல்லா கதை ஆசிரியர்களுக்கும் சாத்தியப்படுகிறது என்று என்னால் சொல்ல முடிய வில்லை அல்லது எனக்கு அந்த அனுபவம் இல்லை. மற்ற கதைகளை படிக்கும் பொழுது இப்படி யோசித்ததும் இல்லை. இந்த காட்சி படுத்துதல் என்பது மிக அற்புதமான ஒரு அனுபவமாக இருந்த புனைவுகள், கன்னி நிலம்., இரவு. இப்பொழுது கூட என்னால் கதையில் உள்ள காட்சிகளை நினைவில் கொண்டு வர முடிகிறது. உங்கள் கட்டுரைகள், கதைகள் பற்றி நிறைய எழுதி கொண்டே இருக்கலாம். உங்கள் இணைய தளத்தில் மேலும் மேலும் வாசித்து கொண்டே இருக்கிறேன். உங்கள் கட்டுரைகள் மிகவும் பயன் அளிப்பவையாக உள்ளது. சீக்கிரம் பல விஷயங்களை பற்றி படிக்க வேண்டும் என நான் நினைத்தாலும், பல்வேறு பணிகளுக்கு இடையில் முழு நேரத்தையும் ஒதுக்க சற்று சிரமமாகவே உள்ளது. உங்கள் தளத்திற்கு வந்து சேர்ந்ததால் ஒரு நாளில் 24 மணி நேரம் போத வில்லை. படித்த கட்டுரைகள் பற்றியெல்லாம் பகிர விஷயம் ஏராளம் இருக்கிறது என்றாலும் உங்களின் நேரத்தை அதிகம் வீணாக்க விரும்பாததால் நான் எதுவும் உங்களுக்கு எழுதி அனுப்பவில்லை. நீங்கள் அனுமதி அளித்தால், எனக்கு ஏற்படும் சந்தேகங்கள் மட்டும் அனுப்புகிறேன்.
மனமார்ந்த நன்றிகளுடன்
சுப்ரமணியன் எஸ் .
அன்புள்ள சுப்ரமணியம்
நான் எழுதிய நூல்களில் திரும்பி புரட்டிக்கூட பார்க்காத நூல் விஷ்ணுபுரம். அன்று நானிருந்த அவஸ்தைகளின் பதிவு. நெடுந்தொலைவுக்கு வந்துவிட்டேன் என உணர்கிறேன் – அல்லது உண்மையிலேயே வந்துவிட்டேனா என்று ஐயுறுகிறேன்
அந்த அவஸ்தைகளாக, தேடலாக அதை வாசிக்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஆகவே அதை மீண்டும் அணுகலாம்
ஜெ