ASYMPTOTE பரிசு -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

பெரியம்மாவின் சொற்கள் சிறுகதை மொழியாக்கம் பெற்ற ASYMPTOTE  இலக்கிய இதழ் விருதினை பற்றி உங்கள் தளத்தில் அறிந்தேன்.

திரைப்படம் எடுப்பது தொடர்பான திரைப்படங்கள் பல உண்டு. எழுத்தாளர் கதை எழுதுவது பற்றிய கதைகளும் உண்டு. பெரியம்மாவின் சொற்கள் போன்ற மொழியாக்கம் பற்றிய கதை வேறு எங்கும் வாசித்ததில்லை. சுசித்ராவால் இந்த தனித்துவமான கதையை மொழியாக்கம் எப்படி செய்ய முடிந்தது என எண்ண ஆச்சரியமாக இருந்தது.
விருது பற்றிய David Bellos ன் குறிப்பு என்னைப் போன்ற மொழியாக்கம் செய்பவர்களுக்கு, உற்சாகமூட்டுவதாக இருந்தது.

எங்கள் மதுரை பெண் சுசித்ராவிற்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  உங்களுக்கு என் வணக்கங்கள்.

உங்கள் வாசகன்,

சிவமணியன்

***

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றைய நாள் இனிதாக மலர்த்திருக்கிறது!.’Asymptote’ சர்வேதேசநாளிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் உங்கள் கதைக்கு முதல் பரிசு கிடைத்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி! மற்றும் வாழ்த்துக்கள்!.இக்கதையை பரிசுக்கு தேர்ந்து எடுத்தது பற்றி David Bellos அவர்கள் … இரண்டாவது பரிசுக்கு தகுதியுடைய போட்டியாளர்கள் பலர் இருந்தாலும் முதல் பரிசுக்கு தகுதியுடையது தங்கள் கதை மட்டும்தான் என்பதில் தனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் இது அழகான  அசாதாரணமான  கதை   என்றும்  குறிப்பிட்டிருக்கிறார்!. இந்நிலையில் இந்த வித்தியாசமான கதையை சிறப்பாக மொழியாக்கம் செய்து பரிசு பெற காரணமாக இருந்த தங்கள் வாசகியும்,நண்பருமான சுசித்திரா ராமச்சந்திரன் அவர்களும் பாராட்டுதலுக்குரியவர் என்று கருதுகிறேன்.

அன்புடன்,

அ .சேஷகிரி.

***

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். இன்று காலையில் உங்கள் இணையதளத்தில் ‘பெரியம்மாவின் சொற்கள்’ கதைக்கு தைவான் நாட்டிலிருந்து Asymptote-‍ன்சர்வதேச இலக்கிய பரிசு கிடைத்திருக்கிறது என்பதை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதற்கு இரண்டுகாரணங்கள் ஒன்று உங்கள் கதைக்கு கிடைத்த பரிசு. இரண்டாவதாக நான் தற்பொழுது வாழ்கின்ற தைவான் நாட்டில் இருந்து என்பது கூடுதல் மகிழ்வு. ‘பெரியம்மாவின் சொற்கள்’ உங்கள் இணையதளத்தில் வந்த அன்றே படித்திருந்தாலும் இன்று மீண்டும்ஒருமுறை படிக்கும் போது என் அம்மவும் மகனும் எப்படிபேசிக்கொள்கிறார்கள் என்பது கண் முன் காட்சியாகவந்து சென்றது.

“You is Bond”

சர்வதேச இலக்கிய பரிசு பெற்ற உங்களுக்கு தைவான்நாட்டிலிருந்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு
சு. பொன்முகுந்தன்.
தைவான்

***

அன்பின் ஜெமோ,

வணக்கம்.நலமா?நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன். பெரியம்மாவின் சொற்கள் “சிறுகதைக்கு சர்வதேசப் பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துகள்.எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை,எனவே மகிழ்ச்சியாக உள்ளது. இச்சிறுகதை வெளிவந்த போதே இதைப்பற்றி எழுதியிருந்தேன்.மீண்டும் இன்று வாசித்தபோதும் அதே உணர்வு தான்.சொற்களின் மீது கட்டப்பட்ட உணர்வுகள்.சொற்கள் தீர்ந்துவிட்டால் இலக்கியமும்,இயக்கங்களும் நின்று விடும். ஆங்கில மொழிபெயர்ப்பில் சிறுகதை சரியான உச்சத்தை அடைந்திருக்கிறது. மீண்டும் மீண்டும் kind,mercy, mango, kuddai…என்றெல்லாம் சொற்கள் என்னைச்  சூழ்ந்திருக்கின்றன.சிறந்த இக்கதைக்கு கிடைத்த அங்கீகாரம் மனதிற்கு நிறைவைத் தருகிறது.

அன்புடன்
மோனிகா மாறன்.

***

பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு
டேவிட் பெல்லொஸ்,பெரியம்மாவின் சொற்கள்

 ஒரு சிறு வாழ்த்து

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59
அடுத்த கட்டுரைரஹ்மான்,மொழிப்பூசல்