வண்ணதாசன் இணையதளம்

சில சமயம் சன்னல்களின் திரைச்சீலைகூட அசையாமல் காற்று உள்ளே வருவதுண்டு. நம் உடலையா மனதையா தீண்டியதென்றறியாமல் அது தழுவிச்செல்வதுண்டு. சிலசமயம் மழைக்குப்பிந்தைய இளவெயிலாக காற்று விரிந்து கிடப்பதை நாம் காண நேர்வதுண்டு. சிலசமயம் இருளில் நாம் ஆழ்ந்த தனிமையுடன் துயருடன் இருக்கையில் நம்முடன் மிக அந்தரங்கமாக காற்றும் இருப்பதுண்டு. இளங்காற்று போன்றவை வண்ணதாசனின் கதைகள். எழுபதுகளில் எழுதவந்தவர். தமிழில் அவருக்கு ஒரு முன்னோடி மரபு உண்டு. கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன் என ஒரு மரபு. ஒளிவிடும் ஓடை என மொழி வழிந்தோடும் தடம் என கதையின் வடிவத்தை அமைத்துக்கொண்டவர்கள் இவர்கள். ஓடை தடம் மாறுவதேயில்லை. காதலியின் முத்தம் போலவோ நூற்றுக்கிழவின் ஆசி போலவோ எங்கோ சென்று தைப்பவை. வண்ணதாசனின் சிறுகதைகள் தமிழ் சேர்த்துக்கொண்ட செல்வம். வண்ணதாசன் சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். அவருக்கு அந்த வடிவம் ஆகி வந்திருக்கிறது. புறக்காட்சிகளை ஓவியத்துல்லியத்துடன் தீட்டும் சொற்கள். புறத்தில் இருந்து அகம் செல்ல திறந்துகொண்டே இருக்கும் மர்மப்பாதைகள். சின்னுமுதல் சின்னு வரை போன்ற குறுநாவல்களும் சிறுகதைகளாகவே உள்ளன. மென்மையும் இதமும் கொண்ட அவரது கதைகளுக்குள் மானுட அடிப்படை இயல்புடன் குரூரத்தையும் வலியையும் காட்டும் விஷமுட்கள் எப்போதும் உள்ளன. தமிழ்புனைவுலகில் மானுட அகத்தின் உக்கிரமான இருளைத் தொட்டுக்காட்டிய பல படைப்புகளை வண்ணதாசன் அவரது மெல்லிய இறகுப்பேனாவால் எழுதியிருக்கிறார் என்பது ஒரு பெரிய முரண்பாடு, கலையைப்புரிந்துகொள்வதனூடாக மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. வங்கி ஊழியராக இருந்து நெல்லையில் வாழும் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம் 62 வயதில் தொடர்ந்து எழுதிவருகிறார். அவருக்காக சுல்தான் என்ற நண்பர் [நாஞ்சில்நாடனுக்காக இணையதளம் நடத்துபவரும் அவரே] இணையதளம் ஒன்றை நடத்திவருகிறார் வண்ணதாசன் இணையதளம்

முந்தைய கட்டுரைஉலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அடுத்த கட்டுரைவெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 2