59. அரங்கொழிதல்
தமயந்தியின் அறைக்கதவை மெல்ல தட்டி சேடி “அரசி” என்றாள். அவள் கதவைத் திறந்ததும் “முரசுகள் ஒலிக்கின்றன. அவர்கள் அணுகிவிட்டார்கள்” என்றாள் சேடி. தமயந்தி “கருணாகரர் எங்கிருக்கிறார்?” என்றாள். “அவரும் சிற்றமைச்சர்களும் சிம்மவக்த்ரரும் படைத்தலைவர்களும் அனைவருமே கோட்டைவாயிலுக்கு சென்றுவிட்டார்கள்” என்றாள். தமயந்தி திரும்பி ஆடியில் தன்னை நோக்கியபின் “நான் முகம் கழுவிக்கொள்ளவேண்டும்” என்றாள். அவள் மிக எளிய ஆடையையே அணிந்திருந்தாள். அணிகொள்ளவேண்டுமல்லவா என்று நாவிலெழுந்த சொற்களை சேடி விழுங்கிக்கொண்டாள்.
சேடியுடன் சென்று முகம் கழுவி குழல் திருத்தியபின் தமயந்தி தலைமைச்சேடி சுபத்ரையிடம் “இந்திரசேனையை இங்கே வரச்சொல். இளவரசன் அமைச்சருடன் நிற்கவேண்டும் என்று சொல்லிவிடு” என்றாள். சுபத்ரையின் கண்கள் சிவந்திருந்தன. அவள் விழிகொடுக்காமல் “ஆணை” என்றாள். காவல்மாடத்தின் முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. அந்த ஓசை அணுகி வருவது போலிருந்தது. தமயந்தி சாளரத்தருகே சென்று வெளியே நோக்கியபடி நின்றாள். முதற்காலை ஒளியில் அரண்மனைமுற்றம் கண்கூசும்படி மின்னியது. கூரைச்சரிவுகள் நீர்ப்படலம்போல ஒளியடித்தன. அவள் பொருளில்லாமல் நோக்கியபடி நின்றாள்.
அகத்தளத்தில் சேடியர் விரைவுகொள்ளும் ஓசைகள் எழுந்தன. அழைப்புகள், ஆணைகள், மந்தணப்பேச்சுக்கள், காலடிகள், வளையொலிகள், உடைச்சரசரப்புகள். எவரோ “வந்துவிட்டார்களடி” என்றனர். “பேசாதே… அரசி” என்றது இன்னொரு குரல். அவர்கள் எவரும் துயருறுவதாகத் தெரியவில்லை. துயரை வெளிக்காட்ட வேண்டுமென்ற கட்டாயம்கூட முதுசேடியருக்கே இருந்தது. இளையோர் ஓசையை தாழ்த்திக்கொண்டாலும் கண்களில் ஆவலும் குறுகுறுப்பும்தான் தெரிந்தன. அவர்கள் எதையோ அடக்கிக்கொண்டதுபோல தோள்கள் இறுகி உடல் குறுகியிருக்க சிற்றடி வைத்து நடந்தார்கள்.
அவர்கள் எதிர்பாராத ஒரு நிகழ்வு, அது அளிக்கும் பரபரப்பின் உவகை என்றுதான் முதலில் தோன்றியது. மாறாதது என அவர்கள் எண்ணும் ஒன்று தலைகீழாக மாறுவது அவர்களுக்குள் எப்போதுமிருக்கும் ஆழத்துக் கனவுகளை தூண்டிவிடுகிறதோ? சுபத்ரையிடம் மெல்லிய சிரிப்புடன் அதைப்பற்றி கேட்டாள். “அவர்களுக்குள் வாழும் கீழ்மை வெளிப்படும் தருணம் இது, அரசி” என்றாள் அவள். சிரித்தபடி “அனைவரிடமும்தான் அது உள்ளது” என்றாள் தமயந்தி.
சுபத்ரை சீற்றத்துடன் “கீழ்மைக்கும் எல்லையுண்டு. அவர்கள் உண்பது தாங்கள் அளித்த அன்னம். இங்கே உங்கள் முன் கண்கள் நீரோட நன்றி சொல்லி விதும்பாத எவருள்ளனர் இந்த அகத்தளத்தில்? உங்களை கண்முன் எழுந்த கொற்றவை என ஒருமுறையேனும் சொல்லி வணங்காதவர் உண்டா என்ன?” என்றாள். “ஆனால் இன்று மறுநிலை கொண்டுவிட்டனர். அவர்கள் குளக்கரையில் பேசுவதை நான் கேட்டேன். தூண்மறைவில் நான் நின்றமையால் என்னை அவர்கள் காணவில்லை. அனைவரும் இளம்சேடிகள்.”
“பேரரசி ஐந்தாம்வர்ணத்தவள் ஆனால் என்ன வேலை பார்ப்பாள் என்று ஒருத்தி கேட்டாள். கன்றுத்தொழு கூட்டலாம். சாணிபொறுக்கி உலரவைத்து எரிவட்டு செய்யலாம் என்றாள் இன்னொருத்தி. அதைவிட தோலுரித்து பதப்படுத்தலாமே என்றாள் அப்பால் ஒருத்தி. அரசிக்கு அதெல்லாம் தெரியுமா என இளையவள் ஒருத்தி கேட்டாள். என்னடி சொல்கிறாய், அவர்கள் யார்? சத்ராஜித் அல்லவா? அவர்களுக்குத் தெரியாத ஒன்று உண்டா என்றாள் இன்னொருத்தி. அனைவரும் சேர்ந்து நகைத்தனர். ஏன் நகைக்கிறார்கள் என்று பிறர் கேட்டுக் கேட்டு அவர்களும் நகைத்தனர்.”
“அங்கே நின்றிருந்த என் உடல் பற்றி எரிந்தது. என்னை அவர்கள் காணவில்லை. அப்படியே திரும்பி வந்துவிட்டேன். இந்த அரண்மனையில் பெண்டிரின் உணர்வுகள் இவைதான், அரசி” என்றாள் சுபத்திரை. “தாங்கள் சத்ராஜித் ஆனதற்காக எவரெல்லாம் பொறாமை கொண்டிருக்கக்கூடும் என எண்ணுகிறீர்கள்? மகதனும் அங்கனும் வங்கனும் மாளவனும் மட்டுமா? அல்ல அரசி, அதற்கிணையாகவே இங்கே அடுமனையில் கலம் கழுவும் சூதப்பெண்ணும் பொறாமை கொண்டிருக்கிறாள். மானுட உள்ளத்தை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.”
தமயந்தி “உள்ளூர எவர் எங்கிருக்கிறார் என நாம் எப்படி அறிவோம்?” என்று புன்னகை செய்தாள். “நான் தங்கள் முடிவை உசாவும் தகுதிகொண்டவள் அல்ல, அரசி. ஆனால் இவர்கள்முன் இப்படி இழிவுகொள்ளத்தான் வேண்டுமா என்றே என் உள்ளம் சொல்கிறது. விதர்ப்பத்தின் இளவரசியென நீங்கள் தலைநிமிர்ந்து தேரேறிச் சென்றிருந்தீர்கள் என்றால் நான் என் தெய்வங்கள் முன் சென்று விழுந்து தலையறைந்து நன்றி சொல்லியிருப்பேன்.”
தமயந்தி “இவை ஊழ் என்றால் அதனுடன் போரிடாமலிருப்பதே மேல்” என்றாள். “இவர்களுக்கும் ஒரு தருணத்தை அளிக்கவேண்டுமென்று தெய்வங்கள் எண்ணியிருந்தால் அவ்வாறே ஆகுக” என்றாள். சுபத்ரை பெருமூச்சுவிட்டு “தங்கள் நிலையை ஏன் என் மடிவளர்ந்த இளையோர் அடையவேண்டும்? அவர்கள் செய்த பிழை என்ன?” என்றாள். “தந்தையின் செல்வத்திற்கு உரிமையுள்ள மைந்தர்கள் பழிக்கும் பொறுப்பேற்றாக வேண்டும்” என்றாள் தமயந்தி.
சுபத்ரை திரும்ப வந்தபோது இந்திரசேனை அவளுடனிருந்தாள். அவள் புத்தாடை அணிந்து அணிபுனைந்திருந்தாள். தமயந்தி விழிதூக்க சுபத்ரை “ஆம், நானேதான் அணிபுனையச் செய்தேன். அங்கே குடிகள் முன் என் இளவரசி எளிய பெண்ணாகச் சென்று நிற்கவேண்டியதில்லை. தெய்வங்கள் அவ்வாறு எண்ணுமென்றால் அவ்விழிமகன் என் இளவரசியின் அணிகளை களையட்டும்” என்றாள்.
தமயந்தி மகளின் தலையைத் தொட்டு அருகழைத்து அணைத்துக்கொண்டாள். “இன்று என்ன நிகழவிருக்கிறது என்று அறிவாயா?” என்றாள். “ஆம்” என்று அவள் சொன்னாள். “அதில் உனக்கு துயர் உள்ளதா?” என்றாள். “ஆம், எனக்காக அல்ல. தந்தையின்பொருட்டு” என்று அவள் சொன்னாள். “இது அவர் ஆடிய ஆட்டத்தின் விளைவால் அல்லவா?” என்றாள் தமயந்தி. “அன்னையே, இதையே ஒரு சேடியும் என்னிடம் சொன்னாள். இந்த அரசும் அரண்மனையும்கூட அவர் ஆடிய ஆட்டத்தின் பெறுபயன்களே என்று நான் சொன்னேன்.” தமயந்தி முகம் மலர்ந்து “நன்று” என்றாள். சுபத்ரை “அவர்கள் சத்ராஜித் என அவையமர்ந்த அரசி தமயந்தியின் குருதி, பேரரசி. அதற்குரிய எண்ணமும் சொல்லுமே எழும்” என்றாள்.
முரசுகள் அரண்மனை வாயிலில் ஒலித்தன. தமயந்தி வெளியே எட்டிப்பார்த்தாள். காகக்கொடி பறக்க ஒரு தேர் முதலில் வந்தது. அதைத் தொடர்ந்து அணிச்சேடியர் ஏறிய திறந்த தேர் வந்தது. தொடர்ந்து மங்கல இசை எழுப்பியபடி சூதர் செறிந்த தேர். கவச உடையணிந்த வீரர்கள் ஏறிய காவல்புரவிகளின் நிரைக்குப்பின் புஷ்கரனின் அரசத்தேர் வந்தது. வாழ்த்தொலிகள் ஏதும் எழவில்லை. முரசொலி அடங்கியதும் சகட ஓசையும் குளம்போசைகளும் மட்டும் கேட்டன.
புஷ்கரனின் தேர் நின்றதும் காவலர் ஓடிச்சென்று படியை எடுத்து கீழே வைத்தார்கள். அவன் இறங்கியபோது அவனுடன் வந்த வீரர்கள் மட்டும் வாழ்த்தொலி எழுப்பினர். அரண்மனை முற்றத்தைச் சூழ்ந்து நின்றிருந்த இந்திரபுரியின் காவலர்கள் விழிகள் திறந்திருக்க அசையாமல் நின்றனர்.
“எவரும் வாழ்த்தொலிக்கவில்லை” என்றாள் சுபத்ரை. தமயந்தி புன்னகைத்து “விஜயபுரியில் சூதில் பேரரசர் தோற்றுக்கொண்டிருந்தபோது வெளியே ஒவ்வொரு காய்நகர்த்தலுக்கும் நகர்மக்கள் உவகைக்கூச்சலிட்டு நடனமிட்டனர். அவர் முற்றிலும் தோற்றபோது அந்நகரமே கொந்தளித்துக்கொண்டிருந்தது. இன்றும் அவர்கள் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றாள். சுபத்ரை “ஆனால்…” என்று சொல்ல அவள் மேலும் புன்னகைத்து “அவர்களே இங்குள்ள குடிகளும்” என்றாள்.
புஷ்கரன் இடையில் கைவைத்து நின்று சுற்றிலும் நோக்கியபின் கையசைத்தான். அவனைத் தொடர்ந்து வந்த மூடுதிரையிட்ட தேர் முற்றத்தில் ஏறி நின்றது. அதிலிருந்து நளன் இறங்கினான். எளிய வெண்ணிற ஒற்றையாடை மட்டும் அணிந்திருந்தான். கண்கள் ஒளிக்குக் கூச சற்றே தலைகுனிந்து நின்றான். கூடிநின்ற வீரர்களிடமிருந்து எழுந்த மெல்லிய பேச்சொலியின் கார்வை தவிர வேறெந்த குரலும் எழவில்லை. தொடர்ந்து வந்த தேர்களில் இருந்து கருணாகரரும் பிறரும் இறங்கி நின்றார்கள்.
தமயந்தி “அவன் அரண்மனை முற்றத்தை அரங்கென்று ஆக்க விழைகிறான்” என்றாள். சுபத்ரை அவளை திகைப்புடன் நோக்கினாள். மூடுதிரைத் தேர் ஒன்று வந்து சற்று வளைந்து அப்பால் நின்றது. அதை நோக்கி இரு வீரர் ஓடி படியமைக்க உள்ளிருந்து திரைவிலக்கி வெளியே வந்த மாலினிதேவி அவளை வாழ்த்தி குரல்கள் எழுப்பப்படும் என எண்ணியவள்போல சூழ நோக்கினாள். அங்கிருந்த அமைதியை அப்போதுதான் முழுதுணர்ந்து கைகளைக் கட்டியபடி விலகி நின்றாள். புஷ்கரனின் சிற்றமைச்சர் ஒருவர் பணிந்து ஏதோ சொல்ல கையசைத்து அவர் விலகிச்செல்ல ஆணையிட்டாள்.
தொடர்ந்து தேர்கள் வந்துகொண்டிருந்தன. சுநீதரும் ரிஷபனும் தேர்களில் இருந்து இறங்கி புஷ்கரன் அருகே வந்து சற்று விலகி நின்றனர். அவை ஒருங்குவதை தமயந்தி நோக்கி நின்றாள். அந்த இடத்தில் அது நிகழவேண்டுமென்ற திட்டம் எவருடையது? புன்னகையுடன் கைகட்டி நின்றிருக்கும் மாலினியிடமே முதல் விழி சென்றது. ஆனால் புஷ்கரனின் அருகே சற்று உடல் வளைத்து நின்றிருக்கும் ரிஷபனே அனைத்துக்கும் அடிப்படை என அரசுசூழ்தலறிந்தவர் உய்த்துவிட முடியும். அவன் நின்றிருப்பதிலேயே ஒரு பிழை இருந்தது. ஒரு கோணல். அவன் கால்கள் ஒன்றைவிட ஒன்று சிறிதாக இருக்கக்கூடும். அவன் உடலின் ஒரு பக்கம் இன்னொன்றைவிட சிறிதாக இருக்கலாம். அவன் உள்ளத்தின் இயல்பே உடலில் வெளிப்படக்கூடும்.
ஸ்ரீதரர் மேலேறிவந்து இடைநாழியின் மறுமுனையில் நின்று தலைவணங்கினார். அவள் ஏறிட்டு நோக்க “அரசி, தங்களை அரசர் அழைத்துவரும்படி ஆணையிட்டார்” என்றாள். அவள் எழுந்து இந்திரசேனையின் தலையைத் தொட்டு விழிகளால் வரும்படி சொல்லிவிட்டு முன்னால் சென்றாள். படிகளில் இறங்கி கூடத்தைக் கடந்தபோது அங்கே அரண்மனை ஊழியர்கள் தோள்முட்டிச் செறிந்திருப்பதை கண்டாள். அவர்கள் அமைதியாகப் பிரிந்து வழிவிட்டார்கள். அவள் அதனூடாக கடந்து சென்றபோது மெல்லிய பேச்சொலிகளின் முழக்கம் எழுந்தது.
முற்றத்தில் கண்கூசும் வெயில். அவள் முகத்தைச் சுளித்தபடி படிகளில் இறங்கியபோது அங்கே எழுந்த கலைவோசை முற்றத்தில் நின்று ஆடை சீரமைத்தபோது அவிந்தது. அமைதி எழுந்து சூழ அவள் விழிதூக்கி புஷ்கரனையும் அருகே நின்றிருந்த ரிஷபனையும் பார்த்தாள். புஷ்கரன் அவள் நோக்கை விலக்க ரிஷபன் எந்த உணர்வுமில்லாமல் வெறும் நோக்கை நிறுத்தினான். சுநீதர் கரவுப் புன்னகையுடன் புஷ்கரனிடம் ஏதோ சொன்னார். அவள் நளனை நோக்கினாள். அவன் ஒருகணம் விழிதொட்டபின் தலைகுனிந்தான். அமைச்சர்கள் கைகூப்பியபடி நின்றிருந்தனர். இந்திரசேனனை ஒரு காவலர்தலைவன் அழைத்துவந்து அருகே நிறுத்தியிருந்தான்.
இந்திரசேனை தமயந்தியின் மேலாடையைப் பற்றியபடி அவள் உடலில் பாதி மறைந்து நின்றாள். காலைவெயிலில் அனைவருமே வியர்வை வழிய முகம் சுளிக்க நின்றிருந்தனர். அந்த முகச்சுளிப்பே உள்ளத்தையும் சுளிக்க வைத்து அனைவரையும் எரிச்சல்கொண்டவர்களாக ஆக்கியது. சில சிற்றமைச்சர்களும் ஏவலர்களும் கண்ணீர் வழிய நின்றிருந்தார்கள். அமைதியில் எங்கோ ஒரு கலம் உருளும் ஓசை. ஆடை உரசும் ஒலியுடன் எவரோ அப்பால் நடந்தார்கள்.
“ரிஷபரே, சொல்லும்” என்றான் புஷ்கரன். ரிஷபன் “விதர்ப்ப அரசி, தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றான். தமயந்தி கைநீட்டி இடைமறித்து “நான் அறிந்தது இருக்கட்டும். நீ சொல்லவேண்டியதை முழுமையாக சொல்” என்றாள். அவன் “அவ்வண்ணமே” என எந்த உணர்வுமின்றி சொல்லி “நிஷதகுலத்தின் அரசராக சபரகுடிப் பிறந்த நளன் அமைந்து நாடாண்டது குடித்தலைவர்களின் கோலாணையின்படியே. குடித்தலைவர்கள் சபரனாகிய நளன் மீது மூன்று குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். நிஷாதர்களின் குலதெய்வமாகிய கலியை இடநீக்கம் செய்து அங்கே அயல்தெய்வமாகிய இந்திரனுக்கு ஆலயம் அமைத்தது முதற்பிழை.”
“அப்பிழை நிகழ்ந்த பின்னர் பதினெட்டுமுறை அக்குடித்தலைவர்கள் பேரரசர் முன் கோல்தாழ்த்தியிருக்கிறார்கள்” என்றாள் தமயந்தி. “நான் சொல்லாடவில்லை, அரசி. நான் எளிய ஊழியன். எனக்கிடப்பட்ட ஆணைப்படி குடித்தலைவர் சொற்களை சொல்லவிருக்கிறேன்” என்றான் ரிஷபன். “நிஷதகுடியின் தலைவராக நளனையே குடித்தலைவர் தேர்ந்தெடுத்தார்கள். அவர் ஷத்ரிய இளவரசியாகிய உங்களை பரிவேள்வி செய்ய வைத்ததும் நீங்கள் நிஷாதநகரியில் சத்ராஜித் என அமைவதும் இரண்டாவது பிழை.”
தமயந்தி “அதை படைமுகத்தில் மட்டுமே சொல்லியிருக்கவேண்டும். புரவியை கடந்துபோக விட்டது அவர்களின் பிழை” என்றாள். அவளை கேட்காதவன்போல ரிஷபன் “மூன்றாவது பெரும்பிழை, காளகக் குடித்தலைவராகிய சீர்ஷரை உணவுக்கூடத்தில் வெட்டி வீழ்த்தியது. அதன்பொருட்டு காளகக்குடி நளன் மீது வஞ்சம் கொண்டுள்ளது” என்றான். தமயந்தி அவனை நோக்கியபடி நின்றாள். “இப்பிழைகளின்பொருட்டு நளன் குடித்தலைவர்களால் தொல்முறைப்படி முடிநீக்க்கம் செய்யப்பட்டார். அவர்கள் கோலேந்தி அவை அமர்ந்து இளையவராகிய புஷ்கரரை அரசர் என தெரிவுசெய்தனர்.”
“ஆகவே இனி காளகக்குடித் தோன்றலும் வீரசேனரின் மைந்தருமாகிய புஷ்கரன்தான் நெறிகளின்படி நிஷாதர்களின் அரசர். அதை முறைப்படி சபரகுலத்து நளனுக்கு தெரிவித்தோம். அதை அவர் ஏற்காமல் முடிதுறக்க மறுத்தமையால் அவரை நிஷத அரசர் புஷ்கரன் போருக்கு அறைகூவினார். குடிப்போரைத் தவிர்க்கவேண்டும் என்று குலமூத்தார் விழைந்தமையால் அது நிகரிப்போராக நடக்கட்டும் என முடிவெடுக்கப்பட்டது. சென்ற சனிக்கிழமை விஜயபுரிநகரில் குலத்தலைவர்களும் குடிகளும் முன்னிலையாக, அனல் சான்றாக நடந்த நாற்களப் போரில் நளன் முழுத்தோல்வி அடைந்தார். தன் முடியுரிமையுடன் குடியுரிமையையும் வைத்து ஆடி இழந்தார்.”
அவன் சொல்லி முடித்ததை இரு நிமித்திகர்கள் ஏற்று கூவினர். அது எதிரொலி என மேலும் மேலும் நிமித்திகர்களால் சொல்லப்பட்டு பரவிச்சென்றது. நகரெங்கும் அச்செய்தி பரவ குடிகள் எழுப்பிய ஓசை முழங்கியது. முரசொலி எழுந்தபோது மீண்டும் அமைதி உருவானது. “முடியுரிமையை இழந்த நளனின் அரசு, அரியணையுரிமைகள், கருவூலம் அனைத்தும் ஒரு பிடி மண்ணோ, ஒரு மணி அரிசியோ, ஒரு கந்தலாடையோ எஞ்சாமல் அரசர் புஷ்கரருக்கு உரிமையானவை என்று அறிக!” என்றான் ரிஷபன்.
உணர்ச்சியற்ற குரலில் அவன் தொடர்ந்தான் “குடியுரிமையை இழந்த நளன் நால்வர்ணத்திற்கும் வெளியே வர்ணமற்றவராக இனி கருதப்படுவார். அவர் மணந்த தேவியும் மைந்தரும் அவரைப்போன்றே வர்ணமற்றவராக ஆவார்கள். அரசர் அரண்மனை புகுந்து நிஷத அரியணையில் அமர்வதற்கு முன் அவர்கள் தங்கள் உரிமைகளை ஒழித்து நீங்கவேண்டும் என்று இதனால் ஆணையிடப்படுகிறது.” தலைவணங்கி அவன் கைகூப்பினான்.
தமயந்தி அங்கே கூடி நின்றவர்களை பார்த்தாள். அனைவரும் உடலில் வலிகொண்டவர்களைப்போன்ற முகத்துடன் மெல்ல அசைந்தனர். சிலர் கைகளையோ மேலாடையையோ கூர்நோக்கி எதையோ சீரமைத்தனர். தமயந்தி “எங்கள் அரசர் அனல் தொட்டு அளித்த ஆணைக்கு முழுக்க கட்டுப்படுகிறோம். கிளம்புகிறோம்” என்றாள். மாலினி அங்கிருந்தே உரக்க “அவ்வண்ணமே கிளம்ப முடியாது, கீழ்மகளே. நீ அணிந்திருக்கும் அணிகள் இவ்வரசுக்குரியவை. அவற்றை கழற்றிவிட்டுச் செல்…” என்றாள். அவள் தன் வஞ்சத்தையும் எக்களிப்பையும் மறைக்கவில்லை.
தமயந்தி “அவ்வாறே, அரசி” என தலைவணங்கினாள். பற்கள் தெரிய நகைத்தபடி “இங்கிருந்து நீ ஆடையெதையும் கொண்டுசெல்லக்கூடாது. அடிமைக்கு நல்லாடையணிய உரிமையில்லை. உனக்கும் மகளுக்கும் மரவுரி அளிக்க ஆணையிடுகிறேன். பத்மை…” என்றாள். மாலினியுடன் வந்த சேடி பத்மை “அரசி” என தலைவணங்க “அவளுக்கு பழைய மரவுரிஆடை ஒன்றை அளி. அவளுடன் சென்று அவளும் அவள் மகளும் இடையிலோ உடற்கரவிலோ எதையேனும் ஒளித்துக்கொண்டு செல்கிறார்களா என்று தேடிப்பார்” என்றாள். பத்மை “ஆணை” என்றாள்.
புஷ்கரன் கைநீட்டி அவளைத் தடுத்து “நளனின் மைந்தனையும் மகளையும் நான் இந்த விலக்கிலிருந்து தவிர்க்கிறேன். இது அரசாணை” என்றான். மாலினி திகைத்து பின் சினம் பற்றிக்கொள்ள “என்ன சொல்கிறீர்கள்?” என்று கைநீட்டிக் கூச்சலிட்டபடி முன்னால் வந்தாள், அவள் இளவரசி என்பதையே மறந்துவிட்டவள்போல. அருகே நின்றிருந்த சேடிப்பெண் “அரசி, இது முற்றம்” என்றதும் அவளை நோக்கித் திரும்பி “போடி” என சீறியபின் “எப்படி அவர்களை நீங்கள் விலக்க முடியும்? எந்த நெறிகளின்படி?” என்றாள்.
கருணாகரர் “அவர்கள் இருவரும் வர்ணமில்லாதவர்கள் ஆவதை எவரும் தடுக்கமுடியாது. ஆனால் அவர்களை அரசர் அடிமைகளாகக் கொள்ளமுடியும். அடிமைகளுக்கு விடுதலை அளிக்கவும் குடியுரிமை கொடுக்கவும் அரசருக்கு உரிமை உண்டு” என்றார். புஷ்கரன் “ஆம், இரு குழந்தைகளையும் நான் அடிமைகளெனக் கொண்டு விடுதலை அளித்துள்ளேன். அவர்களை இங்குள்ள விதர்ப்பநாட்டார் விதர்ப்பத்துக்கு அழைத்துச் செல்லட்டும். இங்கிருந்தே…” என்றான்.
சிம்மவக்த்ரன் தலைவணங்கி “அவ்வாறே” என்றான். “இல்லை, நான் ஒப்பமாட்டேன். அவர்கள் இங்கிருக்கவேண்டும். நம் அடிமைகளாக இருக்கவேண்டும்” என்றாள் மாலினிதேவி. “நாவடக்கு. இல்லையேல் உன் தலையை உருட்டுவேன்” என்றான் புஷ்கரன். அவள் திகைத்துப்போய் ரிஷபனை நோக்க அவன் விழிகளால் ஆணையிட்டான். அவள் பற்களைக் கடித்துக்கொண்டு பின்னடைந்தாள். பின் தரையில் காறித் துப்பினாள்.
புஷ்கரன் “விதர்ப்பநாட்டு அமைச்சர்களும் அரசுப்பணியாளரும் அனைத்துப் படைகளும் குடிகளனைவரும் இப்போதே கிளம்பி நகரிலிருந்து அகல வேண்டும். நாளைமாலை இந்நகருக்குள் இருக்கும் விதர்ப்பர் எவராக இருப்பினும் கொல்லப்படுவார்கள்” என்றான். சிம்மவக்த்ரன் ஒன்றும் சொல்லாமல் வந்து நளனின் அருகே நின்றிருந்த இந்திரசேனனிடம் “விதர்ப்ப இளவரசே, வருக. நம் நாட்டுக்குச் செல்வோம்” என்றான். அவன் திகைத்த விழிகளுடன் நின்றான்.
தமயந்தி “செல்க. அங்கே நற்பொழுதொன்றில் காண்போம்” என்றாள். பின் இந்திரசேனையிடம் “செல்க!” என்று சொல்லி தலையை வருடினாள். சுபத்ரை கண்ணீர் வழிய “சென்றுவருகிறோம், அரசி” என்றாள். “மைந்தரை உன்னிடம் அளிக்கிறேன், சுபத்ரை” என்றாள் தமயந்தி. சுபத்ரை கண்ணீரை வலக்கையால் மறைத்துக்கொண்டு இடக்கையால் இந்திரசேனையை அணைத்து முன்னால் நடந்தாள். சிம்மவக்த்ரன் “வருக, இளவரசே!” என்றபடி இளவரசனின் தோளில் கைவைத்தான். அவன் ஓடிவந்து குனிந்து தமயந்தியின் கால்களைத் தொட்டு வணங்கினான். “நலம் சூழ்க!” என அவள் வாழ்த்தினாள்.
இந்திரசேனன் சிம்மவக்த்ரனுடன் பாதிவழி நடந்து பின் நின்று திரும்பி நளனை நோக்கி ஓடினான். அவன் நளனின் கால்களை நோக்கி குனிய அவன் மைந்தனை கைவிரித்து வாரி எடுத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டான். முகத்தை தந்தையின் மார்பில் புதைத்து இந்திரசேனன் மெல்ல விசும்பினான். “ஆண்மகன் என்றிரு. எதுவும் முடியவில்லை” என்றான் நளன். அவன் விடுவித்துக்கொண்டு குனிந்து நளனின் கால்களைத் தொட்டு வணங்கியபின் சிம்மவக்த்ரனுடன் சென்றுசேர்ந்துகொண்டான். அவர்களுடன் விதர்ப்ப வீரர்கள் அனைவரும் வாள்களையும் வேல்களையும் தாழ்த்தியவர்களாக சேர்ந்துகொண்டார்கள்.
தமயந்தி அவர்கள் செல்வதை மாற்றமில்லாத முகத்துடன் நோக்கி நின்றாள். பத்மை “வா” என்று அவள் தோளைத் தொட்டாள். அவள் திரும்பி பத்மையுடன் உள்ளே சென்றாள். புஷ்கரன் நளனிடம் “நீ அணிந்திருக்கும் ஆடையும் இவ்வரசுக்குரியது. இங்குள்ள எவரிடமேனும் ஒரு மரவுரியை இரந்து பெற்று அணியலாம்” என்றான். நளன் தலைவணங்கியபின் இரு கைகளையும் விரித்து நீட்டி நின்றான். கருணாகரர் அருகே நின்ற ஒருவனிடமிருந்து மரவுரியை வாங்கியபடி ஓடி அவனருகே சென்றார். பின்னர் தயங்கி சுற்றுமுற்றும் நோக்கி அங்கே நின்ற ஒரு படைவீரனிடம் அளித்து “அவரிடம் கொடு” என்றார்.
அவன் திகைத்து “நானா?” என்றான். “ஆம், அளி” என்றார் கருணாகரர். அவன் இடம்பொருள் புரியாமல் இளித்தபடி “இதோ” என அதை வாங்கி நளனிடம் அளித்தான். நளன் அதை அங்கே நின்றபடியே உடுத்துக்கொண்டான். தன் வெண்ணிற ஆடையைக் கழற்றி மடித்து நிலத்தில் வைத்தான். “பொன்னோ நாணயமோ உன்னிடம் இல்லை அல்லவா?” என்றான் புஷ்கரன். “இல்லை, அரசே” என்றான் நளன். ஒற்றை மரவுரி ஆடை அணிந்து தமயந்தி வெளியே வந்தாள். அவளுக்கு அவ்வாடை பழக்கமில்லாததனால் அதை மார்புடன் இரு கைகளாலும் அள்ளிப் பற்றியிருந்தாள். அவளுடைய குதிகால்கள் வரைதான் அந்த ஆடை இருந்தது.
புஷ்கரன் நளனிடம் “நீங்கள் இருவரும் கிளம்பலாம்… இந்த அரண்மனை வளாகத்திலிருந்து நீ செல்ல நான் ஒப்புகிறேன். அதன்பின் ஆற்றலுள்ள எவரும் உன்னை அடிமைகொள்ளலாம்” என்றான். நளன் தமயந்தியை நோக்க அவள் அவனருகே வந்து நின்றாள். அவன் அவளிடம் தலையசைத்துவிட்டு தலைகுனிந்து நடந்தான். கருணாகரர் கண்ணீருடன் அவர்களைத் தொடர்ந்து சென்றார். அவருக்குப் பின்னால் ஸ்ரீதரரும் நாகசேனரும் சென்றனர். நளன் “அந்தணரே, உங்கள் கடமை அரசுடனோ அரசனிடமோ அல்ல. குடிகளிடமும் அறத்திடமும் வேதத்திடமும்தான். அது இங்கு தொடரட்டும்” என்றான். “ஆம்” என்றார் கருணாகரர். அவர்கள் கைகூப்பியபடி நின்றுவிட்டனர்.
நளன் அரண்மனை முற்றத்தை நடந்து கடப்பதை அனைவரும் ஓசையில்லாமல் நோக்கி நின்றனர். அவர்களின் காலடியோசை மட்டும் ஒலித்தது. மூச்சொலிகள், ஓரிரு தும்மல்கள். புரவி ஒன்று குளம்பு மாற்றியது. ஒருவர் இருமினார். இரு வாள்கள் முட்டிக்கொண்டன. அரண்மனைக்குள் ஒரு கலம் விழுந்து உருண்டது. காலைவெயில் வெம்மைகொண்டிருந்தமையால் அனைவரும் வியர்த்திருந்தனர். சிறுகாற்று வந்து சுழன்றபோது வியர்வை வாடையும் குதிரைச் சிறுநீர் வாடையும் கலந்து வீசியது.
அவர்கள் அரண்மனையின் கோட்டைவாயிலைக் கடந்ததும் பின்னாலிருந்த திரளில் ஒருவன் “சத்ராஜித் வெல்க!” என்று கூவினான். அந்த ஓசையிலிருந்த கேலி அனைவரையும் நகைக்கச் செய்தது. அக்கணம்வரை இருந்த இறுக்கம் அச்சிரிப்பால் அவிழ கூட்டம் உரக்க பேசிச் சிரிக்கத்தொடங்கியது. “அந்த வேள்விப்பரியையும் கூடவே அனுப்புங்கள்” என்று ஒருவன் கூவினான். “விரும்பினால் இந்திரன் சிலையையும் கொண்டுபோகட்டும்” என்றது ஒரு குரல். கூச்சலும் சிரிப்புகளும் எல்லா திசைகளிலிருந்தும் எழுந்தன.
உப்பரிகைகளில் நின்றிருந்த பெண்களில் ஒருத்தி “தொழுவப் பணிக்கு எனக்கு ஒரு விதர்ப்ப அடிமை தேவை” என்றாள். அங்கிருந்த பெண்கள் கூவிச்சிரித்தனர். ஒருத்தி தன் தலையிலிருந்த வாடிய மலர்மாலையை எடுத்து மலர்களை உருவி அவர்கள் மேல் வீசி “அரசி ஊர்வலம்!” என்று சொன்னாள். மற்ற பெண்களும் அதையே செய்யத் தொடங்கினர். பின்னர் கூடிநின்றவர்கள் கையில் அகப்பட்டவற்றை எல்லாம் எடுத்து அவர்கள்மேல் வீசினர். பழைய துணிகள், இலைச்சருகுகள், தோரணங்கள் என அவர்கள்மேல் வந்து விழுந்தபடியே இருந்தன.
நளன் உடல்குவித்து குனிந்து நிலத்தை நோக்கியபடி நடந்தான். தமயந்தி தலைநிமிர்ந்து தன்னைப் பார்த்து இளிநகை புரிந்த கூட்டத்தினரை நேருக்குநேர் நோக்கியபடி உறுதியான காலடிகளுடன் சென்றாள். கூவிச்சிரித்தபடி எதையாவது அவள்மேல் வீச வந்தவர்களில் அவள் விழிகளை சந்தித்தவர்கள் திகைத்து கைதளர பின்வாங்கினர்.
அவர்கள் கோட்டைவாயிலை அடைவதற்குள் நகர்மக்களில் பெரும்பகுதியினர் சாலைமருங்குகளில் கூடிவிட்டனர். கூச்சலும் பழிப்பும் கலந்த முழக்கமாக நகரம் அறைந்துகொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் “சக்ரவர்த்தி, நில்லுங்கள்”, “ஐந்தாம்வர்ண சத்ராஜித் இதோ” என்று கூவியபடி வீணர்கூட்டம் ஒன்று வந்தது. ஒருவன் “தொழுப்பணிக்கு வாடி” என்றான். இன்னொருவன் “தொழுவத்தில் இரவில் குளிருமே” என்றான். “இரவு என் படுக்கையறையில் படுத்துக்கொள்” என்றான் அவன். அவர்கள் கைகளை அறைந்து துள்ளிக்குதித்து சிரித்தனர்.
அங்காடிமுகப்பை அடைந்தபோது ஒருவன் கள்மொந்தை ஒன்றை வாங்கிக்கொண்டு ஓடிவந்து அதை அவர்கள்மேல் வீசினான். “இனிய கள்! கள்ளில் ஊறிய காட்டாளர்கள்”! என்று கூவினான். மேலும் சிலர் கள்ளை வாங்கிக் குடித்தபடியே வந்து எஞ்சியதை அவர்கள்மேல் வீசினர். நளன் கால்தடுக்கி பலமுறை விழப்போனான். அவன் தோளை தமயந்தி தன் கைகளால் வலுவாகப் பற்றியிருந்தாள். தெருநாய்க் கூட்டம் எல்லையில் நிற்பதுபோல அவர்கள் அனைவரும் கோட்டைவாயிலில் நின்றுவிட்டனர். ஊளைகள் சிரிப்புகள் பின்னால் ஒலித்தன.
கோட்டைவாயிலைக் கடந்தபோது நளன் கால்தளர்ந்து அமரப்போனான். அவன் தோளை தமயந்தி பற்றிக்கொண்டாள். “செல்வோம், அமரக்கூடாது” என்றாள். “என்னால் நடக்கமுடியவில்லை” என்று அவன் சொன்னான். அவள் அவனை மெல்ல தாங்கிச் சென்றபடி “அருகேதான் காடு… அதற்குள் நுழைந்துவிடுவோம்” என்றாள். அவன் தழைந்த குரலில் “நான் உணவருந்தி மூன்று நாட்களாகின்றன” என்றான். “விடாய் என்னைக் கொல்கிறது” என்றபோது குரல் மேலும் தளர்ந்து அழுகையென்றே ஒலித்தது.
“காட்டுக்குள் உணவும் நீரும் உண்டு” என்று அவள் சொன்னாள். நிஷதபுரியின் அரசர் அரண்மனை புகுவதை அறிவிக்க கோட்டையின்மேல் காவல்மாடங்களில் பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. நகர்மக்கள் எழுப்பிய வாழ்த்தொலி அவ்வோசையை மூழ்கடித்தபடி பெருகியெழுந்தது.