57. குருதி நாற்களம்
அவைக்கு தன்னை கூட்டிச்செல்ல சுநீதர் வருவார் என்று நளன் எண்ணினான். மாலையிலேயே நீராடி ஆடையணிந்து காத்திருந்தான். சாளரம் வழியாக நோக்கிக்கொண்டிருந்த நாகசேனர் “அவை கூடிக்கொண்டிருக்கிறது, அரசே. குடித்தலைவர்கள் ஒவ்வொருவராக வந்து அவைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார்.
நளன் “பார்ப்போம், முறைமைப்படி குடித்தலைவர் வருவார்” என்றான். “முறைமைப்படி குடித்தலைவர்கள் அனைவரும் வந்தாகவேண்டும். கோல்தாழ்த்தி அழைத்து அவைக்கு கொண்டுசெல்லவேண்டும். செல்லும் வழியில் படைத்தலைவர்கள் அனைவரும் நின்றிருக்கவேண்டும். அப்படைத்தலைவர்களில் ஒருவராக இளவரசர் வாள்தாழ்த்தி நிற்கவேண்டும்” என்றார்.
நளன் ஒன்றும் சொல்லவில்லை. “அரசே, அந்தணனாக நான் இதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்றார் நாகசேனர். “அன்னசாலையில் நீங்கள் வாளெடுத்தது அத்துமீறல். அது முதற்பிழை. அந்தக் குற்றவுணர்ச்சியால் இப்போது உங்கள் நிலைமீறி தணிகிறீர்கள். இது அதைவிடப் பெரும்பிழை. அரசர்கள் மீறல் செய்யலாகாது. செய்தால் அதற்கான பொறுப்பை ஏற்று தன் தெய்வத்தின் முன்பும் குலமூத்தார் முன்பும் பிழையீடு செய்யவேண்டும். ஒருபோதும் குடிகள் முன்பும் ஊழியர் முன்பும் எதிரிகள் முன்பும் ஆற்றலின்மையாக அதை வெளிப்படுத்தலாகாது.”
நளன் “ஆம், ஆனால் நான் அவ்வாறு உணரவில்லை. இது என் கடமை. இத்தருணத்தில் சற்று பொறுமைகொள்ளலாம் என்று எண்ணுகிறேன்” என்றான். “இது பொறுமை அல்ல. நாம் இவர்களின் வலையில் வந்து சிக்கிக்கொண்டிருக்கிறோம். அரசுசூழ்தலில் செயல்களுக்கு இரு பொருள்கள் உண்டு. நேர்ப்பொருள் ஒளி என்றால் குறிப்பொருள் நிழல். நிழலே பெரிது. நாம் இன்று இங்கு செய்வதன் குறிப்பொருள் நாம் தோற்கிறோம் என்பதே” என்றார். “இதுவரை வந்துவிட்டோம். இந்த மாலையை கடந்துவிடுவோம். நாளை ஆவன எண்ணுவோம்” என்றான் நளன்.
அந்தி மயங்கியபோது அவனே பொறுமையிழந்தான். கூடத்தில் நிலையழிந்து உலவியவன் நின்று ஏவலனை அழைத்து “நீ சென்று அங்கு என்ன செய்கிறார்கள் என்று பார்த்து வா” என்றான். “வேண்டாம்” என்றார் நாகசேனர். “செல்லலாகாது. பொறுப்போம்.” நளன் அவரை நோக்க “அரசே, அங்கே அவை கூடிவிட்டது. சொல்லுசாவல் நிகழ்கிறது” என்றார். நளன் “எப்படி தெரியும்?” என்றான். “அவைக்குச் செல்லும் ஏவலரின் உடல்மொழியைக் கொண்டு உணர்கிறேன்.” நளன் “நான் செல்லாமல் எப்படி அவை கூடலாம்?” என்றான். “அவைக்கு நீங்கள் விருந்தினர்தான் என்றால் கூடலாம். அவையின் தலைவர்களில் ஒருவர் என்றால் கூடமுடியாது” என்றார் நாகசேனர். நளன் பெருமூச்சுடன் மீண்டும் வந்து பீடத்தில் அமர்ந்தான்.
அவனை அழைத்துச்செல்ல அவைச்செயலர் பிரவீரர் இரு ஏவலருடன் வந்தார். அவர் வருவதை சாளரத்தினூடாகக் கண்டதுமே நாகசேனர் “அவைச்செயலர் வருகிறார். அவர் அந்தணர்கூட அல்ல” என்றார். நளன் “இனி ஒன்றும் செய்வதற்கில்லை, கிளம்புவோம்” என்றான். “இப்போதுகூட நீங்கள் மறுத்துவிடலாம், அரசே. உங்களுக்கு உடல்நலமில்லை என்று சொல்லிவிடுகிறேன். இந்த அவைமுறைமையை ஏற்று நான் செல்கிறேன். அங்கே சொல்லவேண்டியதை சொல்கிறேன்.”
நளன் “வேண்டாம். அது மோதலென்று பொருள்படும். இப்போது நான் வந்தது அமைதிக்காக” என்றான். “அது நிகழுமென நினைக்கிறீர்களா?” என்றார் நாகசேனர். “ஆம், நான் அவனை நேருக்குநேர் பார்த்தால் போதும். இளையோனே, உன்னிடம் நேரில் பேசவேண்டும். அவை கலையும்போது நாம் சேர்ந்து உணவருந்துவோம் என்று சொல்வேன். அதை அவன் மறுக்கவியலாது.” நாகசேனர் “தாய்மடம் என்று ஒன்றுண்டு. தந்தைமடம் அதைவிடப் பெரிது” என்றார்.
ஏவலன் பிரவீரர் வருகையை அறிவித்தான். மூன்று பணிப்பெண்கள் மங்கலத் தாலங்களுடன் வந்தனர். தொடர்ந்து மூன்று சூதர்கள் முழவும் கொம்பும் சங்குமாக வந்தனர். மங்கல இசை முழங்கி அமைந்தது. பிரவீரர் முறைப்படி வணங்கி “இந்திரபுரியின் அரசரை விஜயபுரியின் காவலர், கலியின் அடியவர், நிஷதகுடிகளின் தலைவர், புஷ்கரர் வரவேற்கிறார். அவரது அவைக்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று பணிந்து கோருகிறார்” என்றார். நளன் கண்கள் சினத்தால் எரிந்து அணைந்தன. மீசையை நீவியபடி “நன்று” என்றான்.
நாகசேனர் “விஜயபுரியின் படைத்தலைவரை சந்திக்க நிஷாதர்களின் பேரரசர் உளம் கனிகிறார்” என்றார். நளன் செல்வோம் என கைகாட்டி மேலாடையை எடுத்து அணிந்தபடி எழுந்தான். இசைச்சூதர் மங்கலம் முழங்கி முன்செல்ல நளன் நடந்தான். அவனுடன் நாகசேனர் நடந்தார். பிரவீரர் “இவ்வழி, அரசே” என்றார். இடைநாழிகளில் எவருமே இல்லை. வீரர்களை நிறுத்தியிருந்தால் அவர்கள் வாழ்த்துக்கூவவேண்டியிருக்கும் என்று எண்ணி தவிர்க்கப்பட்டார்கள் என தெரிந்தது. அவைமுகப்பில் ஒற்றைக் காவலன் நின்றிருந்தான். பிரவீரர் “இந்திரபுரியின் அரசர் வருகை” என்றார். அவன் தலைவணங்கி உள்ளே அவையறிவிப்பு செய்தபின் வெளியே வந்து “அவைநுழைவொப்புதல்” என்றான்.
கதவு திறக்க நளன் உள்ளே சென்றான். அவையிலிருந்த காவலர்கள் மட்டும் வாள்தாழ்த்தி அவனை வணங்க அவைச்சூதரின் இசை முழங்கியது. அவையிலிருந்த எவரும் எழவில்லை. அரசமேடையில் அரியணையில் அமர்ந்திருந்த புஷ்கரன் அவனை நோக்காததுபோல அமர்ந்திருந்தான். அமைச்சர் பத்ரர் புஷ்கரனிடம் சென்று “இந்திரபுரியின் அரசர் நளன் அவை வருகை” என்றார். புஷ்கரன் திரும்பி நோக்கி மிகச் சிறிதாக தலைவணங்கி பீடத்தில் அமரும்படி கைகாட்டினான். நளன் அவையை ஒருமுறை நோக்கிவிட்டு சென்று தனக்கான பீடத்தில் அமர்ந்தான்.
அவனுக்கான இருக்கை அயல்நாட்டு வருகையாளர்களுக்கான நிரையில் போடப்பட்டிருந்தது. இந்திரபுரியின் மின்கதிர்க்கொடி அதற்குப் பின்னால் பறந்தாலும் எளிய மரப்பீடம் அது. தங்கள் இறகுத்தலையணிகளும் தோல்போர்வைகளும் குடிக்கோல்களுமாக அமர்ந்திருந்த குலத்தலைவர்கள் அனைவரும் அவனை நோக்காமல் இறுக்கமாக அமர்ந்திருந்தனர். சுநீதர் எழுந்துசென்று ரிஷபனிடம் ஏதோ சொன்னார். புஷ்கரன் தன்னருகே அமர்ந்திருந்த மாலினியிடம் சற்று சரிந்து மெல்ல பேசினான். அவை முழுக்க பேச்சொலிகள் இணைந்த மெல்லிய ரீங்காரம் பரவியிருந்தது.
அமைச்சர் கைகாட்ட நிமித்திகர் எழுந்து சென்று அறிவிப்புமேடையில் நின்று “அவையீரே, இன்று இந்த அவையில் நம்மை சிறப்புறுத்தவும் நம் குடிகளை வாழ்த்தவும் நம் முடிகொண்ட தலைவர் புஷ்கரரின் மூத்தவரும், இந்திரபுரியின் அரசருமான நளன் வந்துள்ளார். அவரை இந்த அவை தலைவணங்கி வரவேற்கிறது” என்றார். அவையினர் கோல்களைத் தூக்கி ஒப்புகை ஒலியெழுப்பினர். “இந்த அவைக்கு அவர் உரைக்கும் நற்செய்திக்காக அரசரும் குலத்தலைவர்களும் பிறரும் காத்திருக்கிறார்கள். நன்று சூழ்க!” என்றபின் அவர் வணங்கி இறங்கினார்.
நளன் சில கணங்கள் அவையை நோக்கியபின் “விஜயபுரியின் படைத்தலைவருக்கும் குடிகளுக்கும் என் வணக்கம். நலம் சூழ்க!” என்றான். “இங்கே அவையறிவிப்பில் விஜயபுரியின் படைத்தலைவன் என்று என் இளையோனை கூறினர். இனி அவனை விஜயபுரியின் அரசன் என்று சொல்லவேண்டுமென்ற அறிவிப்பை இந்த அவையில் வெளியிடுகிறேன். என் வருகையின் முதல் நோக்கம் அதுவே” என்றான். அவை எந்த ஓசையையும் வெளிக்காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தது.
நளன் அதை எதிர்பாராததனால் சற்று திகைத்தான். “என் இளையோன் முடிசூடி அமரும் இந்நிலம் கிழக்கே காஞ்சிவரை பெருகும். அதற்கு என் படைவல்லமை உடனிருக்கும். இது இந்திரபுரிக்கு நட்புநாடாகவும் உறவுநிலமாகவும் என்றும் நீடிக்கும்” என்றான். அவையின் அமைதி அவனை படபடப்பு கொள்ளச்செய்தது. “இந்திரபுரியின் அஸ்வமேதநிறைவு விழவுக்கு என் இளவலாகவும் விஜயபுரியின் தனியரசனாகவும் புஷ்கரன் வரவேண்டும் என்று அழைக்கவும்தான் நான் வந்தேன்” என்றான். அவையில் மெல்லிய குரல்கள்தான் ஒலித்துக்கொண்டிருந்தன.
நளன் சினம் கொள்வது தெரிந்தது. நாகசேனர் அதை உணர்ந்ததும் எழுந்து “மாமன்னர் நளன் தன்னால் கைப்பற்றப்பட்டதும் தன் ஆட்சிக்குரியதுமான இந்நிலத்தை தன் இளவலுக்கு அளிக்கும் விழவையும் அஸ்வமேதநிறைவு நாளிலேயே நடத்தலாமென்று எண்ணுகிறார். அதற்கு இந்த அவையொப்புதலை எதிர்பார்க்கிறார்” என்றார். அவை புஷ்கரனை நோக்கியது. அவன் ரிஷபனை நோக்க அவன் தன் மேலாடையின் பொன்னூல் முடிச்சு ஒன்றை இழுத்து சீரமைத்துக்கொண்டிருந்தான்.
அவையின் அமைதியில் நளன் நிலையழிந்தான். உரத்த குரலில் “அவையோரே” என்றபடி எழுந்தான். ஆனால் அவர்களை திரும்பி நோக்கியதுமே அவன் குரல் தழைந்தது. “என் குடியினர் நீங்கள். என் குருதி. நான் உங்களிடம் அரசனாக வரவில்லை, உங்கள் குடியைச் சேர்ந்தவனாக மட்டுமே வந்துள்ளேன். ஆம், பெரும்பிழை ஒன்றை செய்துவிட்டேன்…” அவன் குரல் இடறியது. கைகூப்பி “என்னை இந்தக் குலப்பேரவை பொறுத்தருளவேண்டும். நான் இயற்றவேண்டிய பிழைநிகர் என்னவென்று உரைக்கவேண்டும். நான் சித்தமாக உள்ளேன்” என்றான்.
அவையில் ஒரு ததும்பல் உருவாவதை காணமுடிந்தது. அது ஒரு சொல்லென துளிக்கும் முன்னர் ரிஷபன் எழுந்தான். “சீர்ஷரின் இறப்புக்கு நிகர் என்ன என்பதை குடியவை முடிவுசெய்யட்டும். அதற்குமுன் முடிசூடுவது குறித்த செய்திக்கு அரசர் மறுமொழி சொல்வார்” என்றான். புஷ்கரன் பேசுவதற்குள் மாலினிதேவி உரத்த குரலில் “விஜயபுரி இப்போது உங்களிடம் இல்லை, இந்திரபுரிக்கரசே. இந்திரபுரி உங்களிடம் இருக்குமா இல்லையா என்பதைப்பற்றித்தான் நாம் பேசவேண்டியுள்ளது” என்றாள்.
அந்த நேரடியான சிறுமைச்செயல் நளனை சொல்லிழக்கச் செய்தது. அவன் அறியாமல் நாகசேனரை நோக்க அவர் அமைதியாக “அரசி, விஜயபுரியை பேரரசர் நளன் படைகொண்டு வென்று சதகர்ணிகளிடமிருந்து கைப்பற்றி நெடுநாட்களாகின்றன. அப்போது தாங்கள் சிறுமியாக இருந்திருப்பீர்கள். விஜயபுரியை வென்றபின் மூன்றாண்டுகளுக்குப் பின்னர்தான் பேரரசர் கலிங்கத்தை வென்றார். தங்கள் தந்தை இந்திரபுரிக்கு வந்து பணிந்து கப்பம் அளித்தமையால் தண்டபுரம் அவருக்கு அளிக்கப்பட்டது. அதை நீங்கள் நினைவுறுவீர்கள் என நினைக்கிறேன்” என்றார். “இப்போது பரிவேள்வி முழுமையடைந்துள்ளது. பாரதவர்ஷத்தில் நளமாமன்னரின் புரவிப்படையால் வெல்லப்படாத அரசுகள் சிலவே.”
மாலினிதேவி முகம் சிவந்து திரும்பி பல்லைக் கடித்தபடி புஷ்கரனிடம் ஏதோ சொன்னாள். அவள் கண்கள் இடுங்கி பற்கள் வெளித்தெரிய முகம் சீறும் ஓநாயின் தோற்றம் கொண்டது. புஷ்கரன் ஒருமுறை கனைத்தபின் “நான் அரசுசூழ்தல் அறியாதவன். நேரடியாகவே சொல்கிறேன். விஜயபுரியில் இன்றிருக்கும் படைகளும் குலங்களும் என்னை அரசனாக ஏற்கின்றன. நான் இங்கே இன்னும் சில நாட்களில் முடிசூட்டிக்கொள்வதாக இருக்கிறேன். எவ்வகையிலும் விதர்ப்பினியின் செங்கோலை நிஷாதர்களாகிய நாங்கள் எங்கள்மேல் ஏற்றுக்கொள்ள முடியாது. அவள் எங்கள் அரசியாக பரிவேள்வி நிறைவுசெய்வதையும் ஒப்பமாட்டோம். அந்நிகழ்வு நடக்குமென்றால் படைகொண்டுவந்து இந்திரபுரியை தாக்குவோம்…” என்றான்.
நளன் “உன் சினம் புரிகிறது, இளையோனே. நாம் அதைப்பற்றி பேசுவோம். நான் உன்னுடன் சிறிது தனித்தமரவேண்டும். நீ விழைவதை சொல்” என்றான். “நாம் தனித்துப்பேச ஏதுமில்லை. நீங்கள் இங்கே என் பகையரசராகவே வந்திருக்கிறீர்கள். தூதராக வந்தமையால் அவ்வண்ணமே ஏற்று உங்களிடம் இதை சொல்கிறேன். அரசி தமயந்தி பதவி துறக்கவேண்டும். நிஷதகுடிகளின் அரசனாக நான் முடிசூடி அரியணை அமர்வேன். இது நிஷதகுடித்தலைவர்கள் குலதெய்வம் கலிமேல் தொட்டு எனக்கிட்ட ஆணை” என்றான்.
“நான் சொல்வதை கேள்” என்றான் நளன். “நீங்கள் மூத்தவராக பேசவேண்டியதில்லை. உங்களை நிஷதகுடியினரென்று இனிமேல் கருதுவதில்லை என மூத்தோர் முடிவெடுத்திருக்கிறார்கள். நீங்கள் எனக்கு அயலவர். அரசுமுறையாக ஏதேனும் சொல்வதற்கிருந்தால் சொல்க!” நாகசேனர் “அவ்வாறு முடிவெடுக்க எவர் இவர்களுக்கு உரிமை அளித்தது? அங்குமிருக்கிறார்கள் நிஷதகுடித்தலைவர்கள்” என்றார். “ஆம், அங்கிருக்கும் குலக்கேடர்களுக்கு நெறி கற்பிப்போம்” என்றார் சுநீதர். “சபரர்களுக்கு நிலம் தேவை என்றால் அவர்கள் அதை விதர்ப்பத்தின் அருகே எங்காவது அமைத்துக்கொள்ளட்டும். சபரர்களில் ஏழு குடிகள் எங்களுடன் உள்ளன, எஞ்சியவர்கள் இனி நிஷாதர்கள் அல்ல.”
“நீங்கள் குடிப்போர் ஒன்றுக்கு களமொருக்குகிறீர்கள். போர் நிகழுமென்றால் நம் குடியே அழியும். நம்மை சூழ்ந்திருக்கின்றன குருதிப்பசி கொண்ட நாடுகள். நம்மால் வேட்டையாடப்பட்டு அடிமைகொள்ளப்பட்டவை அவை” என்றார் நாகசேனர். “இது குடிப்போரேதான். ஆனால் உறுதியாக நாங்கள் வெல்வோம். நிஷதகுடிகளில் ஆற்றல்மிக்கது காளகக்குடி. எங்கள்மேல் ஏறி சபரர்கள் அடைந்த வெற்றிகளை இதுகாறும் குடிப்பூசல் வேண்டாமென்று எண்ணியே தாங்கிவந்தோம். இனி அது நடக்காது. போர் நிகழட்டும். காளகர்களை எவர் வெல்வார் என்று பார்க்கிறோம்” என்றார் சுநீதர். காளகக்குடியினர் எழுந்து கோல்களைத் தூக்கி உரக்க உறுமலோசை எழுப்பினர்.
நாகசேனர் ஏதோ சொல்ல வாயெடுக்க அவரை கையமர்த்திவிட்டு நளன் உரத்தகுரலில் சொன்னான் “உங்களுக்கு நம்பிக்கையளிப்பது எதுவென்று அறிவேன். பகைநாட்டரசரின் உதவிகளை நம்பியிருக்கிறீர்கள். அவர்கள் நம் குலத்தை பிளக்கிறார்கள். பிளந்தபின் அவர்கள் நம்மை முற்றழிப்பார்கள். நாம் அவர்களிடம் சென்ற காலங்களில் இரக்கம் காட்டவில்லை என்று உணர்க! இந்த எளிய சூழ்ச்சியைக்கூட உணரமுடியாமல் உங்களைத் தவிர்ப்பது எது?” என்றான். ரிஷபன் “நட்பும் பகையும் அரசியலில் மாறுபடும். இப்போது நாங்கள் அவர்களுக்கும் அவர்கள் எங்களுக்கும் தேவைப்படுகிறார்கள்” என்றான்.
மாலினிதேவி “குலப்பூசலைத் தவிர்க்க எளியவழி உள்ளது, இந்திரபுரியின் அரசே. நீங்களும் உங்கள் விதர்ப்ப அரசியும் முடிதுறக்கலாம். நிஷத குடிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இளையவரை அரசராக்கலாம். வாளேந்தி அவருக்கு படைத்துணை நிற்கலாம்” என்றாள். நளன் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து “வாயைமூடு, இழிமகளே! இவையனைத்தும் உன் சூழ்ச்சி. உன் களவுத்துணைவனாகிய இவனுடைய திட்டம். இன்று நீ செய்வதற்காக உன்னை ஒருநாள் கழுவேற்றுவேன்” என்றான்.
அவள் சினவெறியுடன் நகைத்து “இதைத்தான் வெறுக்கிறது நிஷதகுடி. நீங்கள் தலைவெட்டி வீழ்த்திய சீர்ஷரின் குருதி இங்கே மணக்கிறது. இதோ இங்கே இருக்கிறது மூத்தவரின் மீளா உயிர். இந்திரபுரியை வென்று அங்கிருக்கும் இந்திரன் ஆலயத்தை இடித்து அங்கே கலிதேவனை மீட்டமரச் செய்த பின்னரே அவர் விண்ணேகுவார்… அவரே வெறியாட்டனில் எழுந்து சொன்னது இது…” என்றாள். எழுந்து அவை நோக்கி “சொல்லுங்கள்… உங்கள் குருதிப்பழி இது. இனி எந்த பேச்சுக்கும் இடமில்லை என்று சொல்லுங்கள். குருதியை நீரால் கழுவ முடியாதென்று இவர் அறியட்டும்” என்றாள்.
அவை முழுமையாக எழுந்து கைகளையும் கோல்களையும் நீட்டி கூச்சலிட்டது. முழக்கத்திற்குள் வசைச்சொற்களும் இருப்பதை நளன் கேட்டான். நாகசேனர் “கிளம்புவோம், அரசே” என்றார். சுநீதர் “நீ யாரென்று எண்ணினாய்? குடிமூத்தாரை தலைவெட்டி வீழ்த்திய உன் குருதியால் எங்கள் கலிதேவனின் பீடத்தை கழுவுவோம்…” என்று கூச்சலிட்டார். வெறிகொண்ட நீர்விழிகள். இளித்த பற்கள். புடைத்த தொண்டைநரம்புகள். நளன் வெறித்த விழிகளுடன் நோக்கி நின்றான்.
பின்னர் மீண்டு புஷ்கரனை நோக்கி “இளையோனே…” என்று கைநீட்டினான். புஷ்கரன் “இதோ அறிவிக்கிறேன், நாளையே படைகள் எழுக! சதகர்ணிகளும் கலிங்கர்களும் நம்முடன் வருவார்கள். நாம் இந்திரபுரியை தாக்கும் அதேநாள் வடக்கிலிருந்து மகதமும் வங்கமும் சேதியும் இணைந்து தாக்கும். மேற்கே அவந்தியும் மாளவமும் தாக்கும். விதர்ப்பினியின் ஆணவத்தை அழிப்போம். அவள் கட்டிய அந்த வேள்விப்பந்தலை எரியூட்டுவோம். அவள் வேள்விப்பரியை கொன்று சமைத்து உண்டாட்டு நடத்துவோம். இது அரசாணை” என்றான்.
அவை வெறிக்கூச்சலிட்டது. சூழ்ந்திருந்த அத்தனை வீரர்களும் கூவி ஆர்ப்பரித்தனர். சிலர் ஏளனச் சிரிப்புடன் நளனை நோக்கி வந்தனர். நாகசேனர் “செல்வோம், அரசே” என்று கூவி அவரே முதலில் வெளியே நடந்தார். நளன் அவருக்குப் பின்னால் செல்ல ஊளைகளும் ஏளனக் கூச்சல்களும் வசைகளும் பின்னால் முழங்கின.
தன் அறைக்குள் நுழைந்ததுமே நளன் “ஆடைகளை எடுத்துக்கொள்ளுங்கள். புரவிகள் ஒருங்கட்டும்” என ஆணையிட்டான். “நாம் தெற்குவாயிலினூடாகச் செல்வோம். மையச்சாலையில் நகர்மக்கள் நடுவே சென்றால் நாம் இழிவுபடுத்தப்படுவோம்” என்று காவலர்தலைவன் சொன்னான். “அவைச்செய்திகள் நகரில் பரவிவிட்டன. தெருக்களெங்கும் மக்கள் கொந்தளிக்கிறார்கள். நள்ளிரவிலும் நகர் ஓயவில்லை.” நாகசேனர் “படைமுரசு கொட்டத் தொடங்கிவிட்டது, அரசே” என்றார். “உண்மையாகவே படையெழுச்சிக்கு ஆணையிட்டிருக்கிறார் இளவரசர்.”
நளன் காலோய்ந்து பீடத்தில் அமர்ந்தான். காவலர்தலைவன் “நாம் தெற்குவாயிலினூடாகச் செல்வோம் என்பதையும் வீரர் சிலர் உய்த்தறிந்துவிடக்கூடும். தெற்குவாயில் இருட்டாக இருக்கவும் வாய்ப்பில்லை. மூடுதேர் ஒன்றை கொண்டுவரச் சொல்கிறேன். அதை ஓட்டியபடி நான் மையச்சாலை வழியாக செல்கிறேன். அதை அவர்கள் சிறுமை செய்யட்டும். அப்பொழுதில் தாங்கள் தெற்குவாயில் வழியாக செல்லலாம்” என்றான். நாகசேனர் “இந்திரபுரியின் அரசர் அப்படி ஒளிந்து ஓடலாகாது. மையச்சாலை வழியாகவே செல்வோம். எத்தனையோ முறை குடிகளின் வாயால் வாழ்த்தும் அரிமலரும் பெற்றிருக்கிறார் அரசர். இதுவும் அவர்களின் கொடையே. இதையும் அவர் அறியட்டும்” என்றார்.
ஏவலன் வந்து வணங்கி “குடித்தலைவர்கள்” என்றான். நளன் வியப்புடன் நாகசேனரை நோக்க “வரச்சொல்” என்றார் அவர். நளனிடம் “ஏதேனும் மாற்றுவழி கண்டிருப்பார்கள். குடிப்பூசலை தவிர்ப்போம் என கலிதேவனின் முன் குருதிதொட்டு ஆணையிட்டுத்தான் அவர்கள் கோலெடுக்கிறார்கள்” என்றார். நளன் பெருமூச்சுவிட்டான். குடித்தலைவர்கள் எழுவர் தங்கள் அவைக்கோலத்திலேயே வந்திருந்தார்கள். முறைப்படி நளனை வணங்கி முகமன் உரைத்தனர்.
“நாங்கள் அவையில் நிலைமீறியது உண்மை. சீர்ஷரின் பெயர் அவ்வாறு எங்களை கொந்தளிக்கச் செய்தது” என்றார் சீரகுலத்தலைவராகிய பணிதர். “ஆனால் அவை முடிந்து வெளியே சென்றதுமே போர்முரசுக்கான ஆணைகளை படைத்தலைவர்கள் கொண்டுசெல்வதை கண்டோம். எங்கள் உள்ளம் அஞ்சிவிட்டது. பல நூறாண்டுகள் நிஷாதர்களாகிய நாம் ஒருவரோடொருவர் போரிட்டு அழிந்தோம். நம்மை அயவலர் அடிமைகளாக பிடித்துக்கொண்டுசென்று சந்தைகளில் விற்றனர். வயல்களில் நுகங்களில் கட்டி உழுதனர். துறைநகர்களில் சுமை எடுத்தோம். கலங்களில் துடுப்பு வலித்தோம். நம் குடியில் மகாகீசகர் தோன்றியமையால் நாம் எழுந்தோம். அது நம் குடித்தெய்வங்களின் அருள். அடிமைகளாக அழிந்த நம் மூதாதையரின் தவம்…”
நளன் “ஆம், அதை எண்ணியே நான் அஞ்சுகிறேன்” என்றான். “போர்முகத்தில் நான் கொன்றழிக்க வேண்டியவர்கள் என் குருதியினர், என் இளையோர், மூத்தோர்.” சூரர்குடித்தலைவரான இகடர் “அதை தவிர்த்தாகவேண்டும் என்று பேசிக்கொண்டோம். இளவரசரிடம் நேரில் சென்று போரைத் தவிர்ப்பதைப்பற்றி பேசலாமென முடிவெடுத்தோம். அவர் உணவருந்திக்கொண்டிருந்தபோது நேரில் சென்று கண்டோம். நாங்கள் பேசவே அவர் ஒப்பவில்லை. போருக்கு முடிவெடுத்துவிட்டதாக சொன்னார்” என்று பணிதர் தொடர்ந்தார்.
“அருகே அமர்ந்திருந்த மாலினிதேவி போர்முரசு கொட்டியபின் தயங்குவது அச்சமென்று பொருள்படும் என்றார். அரசர் வெறியுடன் உரக்க நகைத்தபடி எழுந்து போர் தொடங்கிவிட்டது. இனி பின்வாங்குதலே இல்லை என்றார். அவையில் வஞ்சினம் உரைத்தபின் போரை எண்ணித்தயங்க அவர் சித்தமாக இல்லை என்றும் சீர்ஷரின் குருதிதொட்டு உரைத்த அந்த வஞ்சினம் தெய்வங்கள் மேலிட்ட ஆணை என்றும் சொன்னார். எங்கள் சொல் செவியேறவேயில்லை.”
நாகசேனர் “போர் வருமென்றால் ஒழியவேண்டியதில்லை. இருபதாண்டுகள் போரை நடத்தும் ஆற்றல் நிஷதபுரிக்கு உண்டு. மொத்த பாரதவர்ஷத்தையும் வெல்ல எங்கள் அரசரால் இயலும்” என்றார். “நிஷதர்களின் குருதி நிலத்தில் விழவேண்டுமென்பது ஊழ் என்றால் அவ்வாறே நிகழ்க!” நளன் “ஆம், அஞ்சவேண்டிய இடத்தில் நானோ என் படைகளோ இல்லை. இவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதே அஞ்சுகிறார்கள் என்பதற்கான சான்று” என்றான்.
“இல்லை அரசே, ஒரு வழி திறந்துள்ளது” என்றார் பிருங்க குலத்தவராகிய சுருதர். “நாங்கள் சோர்ந்து திரும்பிவந்தோம். குலப்பேரழிவை கண்களால் பார்க்கவிருக்கிறோம் என்று உறுதிகொண்டோம். அப்போதுதான் அமைச்சர் பத்ரர் எங்களை நோக்கி வந்தார். என்ன நிகழ்ந்தது, என்ன சொன்னார் அரசர் என்று கேட்டார். போர் நிகழ்ந்தே ஆகவேண்டும் என்று அரசர் வெறிகொண்டிருக்கிறார் என்று நான் சொன்னேன். அவ்வாறென்றால் போர் நிகழட்டும், ஆனால் குருதிப்பொழிவு வேண்டாம் என்றார் பத்ரர்.”
நளன் புருவத்தை சுருக்க இகடர் “இத்தகைய சூழல்களுக்காக மூதாதையர் ஏதேனும் ஒரு வழி வைத்திருப்பார்களே என்று நூல்களில் தேடினேன், ஒரு வழி உள்ளது என்றார். நாங்கள் நம்பிக்கையுடன் நோக்க, நாற்கள ஆட்டம் என்றார்” என்றார். நளன் “சூதா?” என்றான். “ஆம், நாற்களம் என்பது நிகரிப்போர். நால்வகைப் படைகளும் எதிர்நின்றாடும் களம். குருதிப்போரைத் தவிர்க்க நிகரிப்போரை இரு சாராரும் ஏற்றுக்கொண்டால் நிகழ்த்தலாம் என்று பத்ரர் சொன்னார்.”
நளன் நாகசேனரை நோக்க அவர் “நிகரிப்போர் என்றால்…” என்று தொடங்க பணிதர் உரக்க “பாரதவர்ஷத்தில் குலப்போரும் குடிப்பூசலும் நிகழாத காலம் இல்லை. ஒருதாய்மைந்தரிடையே வஞ்சினம் உரைக்கப்பட்டால் நிகரிப்போரே தெய்வங்கள் விரும்பும் வழி என்று நூலுரை இருப்பதை பத்ரர் சொன்னார்” என்றார். இகடர் “இது ஒன்றே நாங்கள் காணும் வழி. நீங்கள் உங்கள் இளையோனுடன் அவைநடுவே நாற்களம் ஆடுங்கள். வென்றவர் முடிசூடட்டும்” என்றார். நளன் திகைத்தவன்போல அமர்ந்திருந்தான்.
நாகசேனர் “சூது பழிக்குரியது என்று சொல்லப்பட்டுள்ளது” என்றார். “ஆம், உடன்பிறந்தகுருதியை வீழ்த்துவது அதைவிடப் பெரும்பழிக்குரியது. வானிலுள்ளனர் முலையூட்டிய அன்னையர். நாம் மண் நீத்தால் சென்று அவர்கள் முன் நின்றாகவேண்டும். அதை மறக்கவேண்டியதில்லை” என்று இகடர் சொன்னார். “அவன் என்ன சொன்னான்?” என்று நளன் கேட்டான். “அவரிடம் பேசி ஒப்புதல்கொள்ள வைக்கமுடியும். ஏனென்றால் அனைத்துக் குலத்தலைவர்களும் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். போருக்கு நாங்கள் ஒப்பினால் மட்டுமே அவர் படையெழுச்சி கொள்ளமுடியும்” என்றார் பணிதர். “நம் குருதியினர்தான் மறுநிரையிலும் இருப்பார்கள் என்பதை சற்று பொழுது செல்லும்தோறும் நம் படைவீரர் உணர்ந்துகொள்வார்கள்… அவர்கள் எதிர்ச்சொல் முழக்கத் தொடங்கினால் அது இளவரசருக்கே இழிவு. அதற்குள் நிகரிப்போரை அறிவித்துவிடலாம்.”
நளன் “அவன் ஒப்புக்கொண்டால் நான் சித்தமே” என்றான். இகடர் முகம் மலர்ந்து “போதும், எஞ்சியதை நான் பார்த்துக்கொள்கிறேன். இதோ இங்கிருந்தே அரசரை சந்திக்கச் செல்கிறோம். உடன் எங்கள் குடியின் படைத்தலைவர்களும் வருவார்கள். முடிவுசெய்துவிட்டோம். நிகரிப்போர்தான், குலப்போர் அல்ல” என்றார். பணிதர் “நாளையே நேரம் குறிப்போம்” என்றார். “அவன் தயங்கக்கூடும், அவன் சூதில் வல்லவன் அல்ல” என்றான் நளன். “அவருக்கு வேறுவழியில்லை. எங்கள் மைந்தரின் குருதிமேல் நடந்து அவர் முடிசூடமுடியாது” என்றபின் இகடர் எழுந்து “விடைகொள்கிறோம்” என்றார்.
அவர்கள் செல்வதை நளன் வெறித்து நோக்கி சற்றுநேரம் அமர்ந்திருந்தான். நாகசேனர் “வேறுவழியில்லை என்பது சித்தத்துக்கு உறைக்கிறது. ஆனால் உள்ளம் பதறிக்கொண்டே இருக்கிறது, அரசே” என்றார். “அவனால் சூதில் வெல்லமுடியாது. அவன் எப்படி ஒப்புவான்?” என்றான் நளன். “அவருக்கு வேறுவழியில்லை. இப்போது பார்த்தால் நாளை மாலையே எல்லாம் இனிது முடியவேண்டும். ஆனால் நான் அஞ்சுவது அவனை” என்றார். யாரை என நளன் உணர்ந்திருந்தான். “அவன் கலிவடிவன்” என்றார் நாகசேனர்.