
தமிழில் பொதுவாக மொழியாக்கங்கள் சகிக்கமுடியாமலிருப்பதே வழக்கம். என் வீட்டில் அப்படி ஆசைப்பட்டு வாங்கி வாசிக்கமுடியாமல் வைத்திருக்கும் பல நூல்கள் உள்ளன. ஆங்கிலம் நம்மவருக்கு ஓரளவேனும் தெரிகிறது, தமிழ்தான் தெரியவில்லை. ஆங்கிலத்தின் கூட்டுச்சொற்றொடர்களை எழுவாய்- பயனிலையுடன் தமிழில் எழுத முடிவதில்லை. மூலத்தைப்புரிந்துகொள்ளாமல் மொழியாக்கம் செய்வது இன்னொரு காரணம்.
தமிழில் பொதுவாக முந்தையதலைமுறையினரே நன்றாக மொழியாக்கம் செய்கிறார்கள். வயது குறையக்குறைய மொழியாக்கத்தின் தரம் வீழ்ச்சி அடைகிறது. இது நம் கல்வியில் வந்த வீழ்ச்சியினால் என நினைக்கிறேன்.
தமிழில் மிகநல்ல மொழியாக்கங்களில் ஒன்று ராமச்சந்திர குகாவின் காந்திக்குப்பின் இந்தியா இரண்டு பகுதிகளும். அவற்றை சிறப்பாக மொழியாக்கம் செய்தவர் எழுத்தாளர் பா. ராகவனின் தந்தை ஆ.பி.சாரதி. அவர் இன்று இறந்துவிட்டதாகச் செய்திவந்தது. அவருக்கு என் அஞ்சலி.
காந்தியின் கையில் இருந்து நழுவிய தேசம்- இந்திய வரலாறு-காந்திக்கு பிறகு பகுதி ஒன்று
காந்தியின் தேசம்