ரஹ்மான்,மொழிப்பூசல்

rahman_2633264f

அன்புள்ள ஜெ

ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் இந்திக்காரர்கள் தமிழ்ப்பாட்டு பாடியபோது எதிர்ப்பு தெரிவித்து எழுந்துசென்ற மொழிவெறியை எப்படிப் பார்க்கிறீர்கள்? இதைக் கண்டித்து மொழிவெறிக்கு எதிராக நிறையபேர் எழுதிவிட்டார்கள். உங்கள் கருத்து என்ன?

ஆர். மணிமாறன்

***

அன்புள்ள மணிமாறன்,

பொதுவாக இசைநிகழ்ச்சிகளில் ஒன்றை கவனித்திருக்கிறேன், ஏற்கனவே தெரிந்த பாடல்களைத்தான் சாமானியர்களால் ரசிக்கமுடியும். என்னையும் சேர்த்தே சொல்கிறேன். அந்தப்பாடல்கள் சினிமாக்காட்சிகளுடன் இணைந்து, நடிகர்களுடன் இணைந்து, வாழ்க்கையில் அப்பாடல் ஒலித்த பல தருணங்களுடன் இணைந்து நினைவில் எழுவதையே அவர்கள் ரசிக்கிறார்கள். இசையை மட்டுமே ரசிப்பவர்கள் நூற்றில் ஒருவரே.

சாமானியர்களைப் பொறுத்தவரை சினிமாப்பாடல் என்பது ஒருவகையில் நினைவைக்கொண்டாடுவதும் ஒருவகையான கூட்டுக்களியாட்டமும் மட்டுமே. அவர்களுக்குபெரிய அளவில் இசையனுபவமெல்லாம் அதில் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஏறத்தாழ எல்லாருமே அப்படிப்பட்டவர்களாகவே இருப்பார்கள். பெரிய அளவில் கட்டணமும் செலுத்தியிருப்பார்கள். தெரியாத பாடல், அது எத்தனை மகத்தானதாக இருந்தாலும், அவர்களுக்குச் சென்றுசேராது. கொடுத்தகாசுக்கு முதலாகவில்லை என்ற நுகர்வோர் மனநிலையே எரிச்சலாக வெளிப்படுகிறது. பாமரர்கள் எங்கும் ஒரேமாதிரித்தான் நடந்துகொள்கிறார்கள்..

இம்மாதிரி ஏதாவது ஒரு பரபரப்பான செய்தியை பிடித்துக்கொண்டு தங்கள் வழக்கமான அரசியல் திட்டங்களை சிலர் பேச ஆரம்பிப்பதும் எப்போதும் நடப்பதுதான். பக்தர்களுக்கு எங்கும் பெருமாளே தெரிவதுபோல. உலகநிகழ்ச்சிகள் அனைத்தும் இவர்களின் அரசியலை நிரூபிப்பதற்காகவே நடக்கின்றன இவர்களுக்கு.இது மொழிவெறியுடன் மொழிவெறியைக் கண்டித்தல், அவ்வளவுதான்

ஜெ

***

 85/7

முந்தைய கட்டுரைASYMPTOTE பரிசு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோவை புத்தகக் கண்காட்சி,விருது வழங்கும் விழா