திரும்புதல்

aruna

டெல்லி சென்ற இரண்டாம் நாள் அருண்மொழிக்கு தோசைமாவு எங்கே இருக்கிறது என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். “எனக்குத்தெரியாது. நான் அதையெல்லாம் நினைக்க விரும்பவில்லை. என்னை மகிழ்ச்சியாக இருக்க விடு” என்று ஒரு பதில். மிகக்கறாராக. நான் ஒன்றும் சொல்லாமலிருக்கவே “எங்க போனாலும் வீட்டை கட்டிட்டு அழணுமா? நான் பாட்டுக்கு ஓட்டலிலே சாப்பிட்டுட்டு சந்தோஷமா இருக்கேன். உனக்கு அது கடுப்பா இருக்கா?”

நான் சரிதான் சுதந்திரப்பறவை சிறகு விரிக்கட்டுமே என்று தேடினேன். குளிர்ப்பெட்டியில் இருக்கும் என்பதை கணக்கிட மறந்துவிட்டதனால் ஒருமணிநேரம் கழித்து கண்டுபிடித்தேன். அருண்மொழி வீட்டில் பாதுகாப்பாக இருக்கவேண்டிய அனைத்தையும் குளிர்ப்பெட்டிக்குள் வைப்பதுண்டு, சமயத்தில் நகைகளைக்கூட.

தோசைமாவு எம்பியிருந்தது..உப்பு போட மறந்துவிட்டதனால் தோசை ஒருமாதிரியாக இருந்தது. அது ஏன் அப்படி இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கூர்ந்து நோக்கினால் நான் என்ன செய்வேன் என்ற பாவனையில் இருந்தது. கண்டுபிடித்து தெளிவடைய பாதி தோசையை தின்னவேண்டியிருந்தது.

எஞ்சிய தோசைமேல் உப்புநீரை நீவி சாப்பிட்டேன். நாமே சமைத்தால் ருசியாகத்தான் இருக்கிறது. மங்கையர் மலருக்கு ஒரு சமையல்குறிப்பு எழுதினால் என்ன? ‘தோசைமாவில் உப்புபோட மறந்துவிட்டீர்களா? சிமிட்டா உப்புத்தூளை எடுத்து நன்றாகக் கரைத்து…”.

அதன்பின் மாநிலத்தில் இருந்து எந்த அழைப்புக்கும் டெல்லியில் இருந்து பதில் இல்லை. நள்ளிரவுவரை அசைவு இல்லாததனால் நான் சற்று கோபமாக குறுஞ்செய்தி அனுப்பினேன். “எனக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும். நாங்கள் இங்கே உல்லாசமாக இருக்கிறோம். நீ உன் வேலையைப்பார்” என்று மறு செய்தி.

இந்தக் குறுஞ்செய்திகளுக்கு ஆங்கிலம் உகந்த மொழி அல்ல. அன்பாகக் கொஞ்சினால் க்ளீஷே ஆகவும் திட்டினால் சங்கைப்பிடிப்பது போலவும் தோன்றுகின்றது. குடும்பவாழ்க்கைக்கு க்ளீஷேக்களே ஆதாரம் என்றாலும் அவற்றை நாம் உணர்ச்சிகரமாக நேரில்தான் சொல்லவேண்டும்.

ஆக இரண்டு நாட்களாக ரத்தினச்சுருக்கச் செய்திகள் மட்டும். ? என்றும் ! என்றும் .நானே இங்கே ஒருமாதிரி தட்டுத்தடுமாறி ஏதோ செய்ய ஆரம்பித்துவிட்டேன். டோராவுக்கு கோழியிறைச்சியை கேழ்வரகு மாவுடன் வேகவைத்து கிண்டி ஆற்றி கொடுக்கவேண்டும். எளிய சமையல். ஆனால் அடிப்பிடித்தால் சாப்பிடாது. ‘அடப்பாவி’ என்பதுபோல ஒரு பார்வை. ஆகவே அடுப்படியில் நின்றாகவேண்டும். அப்போது கிருஷ்ணன் கூப்பிட்டு “சார் இந்த கலையிலே மணிகண்டன் என்ன சொல்றார்னா…”

இன்றுகாலை குறுஞ்செய்தி சற்றே நீளமாக வந்தது. ‘ஜெயன் தோசைமாவை ஃப்ரிட்ஜிலே வைக்கிறப்ப மூடாம வச்சிராதே. கேஸ் அடுப்பையும் சிலிண்டரையும் மூடியாச்சான்னு எப்பவும் செக்பண்ணிரு. கொல்லைப்பக்கம் பூட்டியாச்சான்னு பாத்துட்டு படுக்கப்போ. சீனிடப்பா மொளகாப்பொடி டப்பா எல்லாத்தையும் மூடியே வை. எறும்பு வந்திடும்” அப்படியே அருண்மொழிகுரலில்.

ஓக்கே என்று குறுஞ்செய்தி அனுப்புவதற்குள் அடுத்த குறுஞ்செய்தி. “அரிசிடப்பாவை மூடியே வை. எலி வருது. டோராவுக்குச் சூடா வைக்காதே. வாயை வச்சிரும். கொல்லையிலே காயப்போட்ட துணிகளை எடுத்து மடிச்சு உள்ளே வச்சாச்சா? ஃப்ரிட்ஜை திறந்தா சரியா மூடியாச்சான்னு பாத்திரு” அப்பாடா ஒருவழியாக எல்லாம் இயல்புநிலைக்கு மீள்கின்றன.

“மசமசன்னு எழுதிட்டிருக்காம சாயங்காலமாவது குளி. டீ டம்ளர் அங்கங்கே செதறிக்கிடக்கும். எடுத்து கழுவி வை. பாத்திரங்கள அப்டியே போட்டிராதே. பூசணம் பிடிச்சிரும்” என்ன ஒரு நிம்மதி. பார்வதிபுரம் ஏரியாவில் சட்டம் ஒழுங்கே மீண்டுவிட்டதுபோல் ஓர் உணர்வு.

அதாவது பறவை நிலத்தில் இறங்கிவிட்டது. உளம்வந்து சேர்ந்துவிட்டது. ஆள்வந்துசேர நாலைந்துநாள் ஆகும். ஆனால் இங்கே ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் அங்கே தெரிந்துவிடும். சீனிடப்பா உருண்டு தரையெல்லாம் சீனி. இதோ குறுஞ்செய்தி ரீ ரீ என்கிறது. “அங்கே என்ன சத்தம்?” என்றுதான் இருக்கும். சந்தேகமே இல்லை.

****

புழங்குதல்

முந்தைய கட்டுரைஇந்திய வரைபடத்தின் இதிகாசம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57