ஐயையா, நான் வந்தேன்

jessu

அய்யய்யா நான் வந்தேன் என்னும் பாடல் பேராசிரியர் ஜேசுதாசனைப் பற்றிய நினைவுகளைப் பீரிடச்செய்தது. அவருக்கு மிகப்பிடித்தமான பாடல் இது. அவர் முகம், சிரிப்பு என நினைவுகள் எழுந்து வந்தபடியே இருந்தன. பாடலை கேட்கும்தோறும் மிக அருகே இருப்பதைப்போல உணர்ந்தேன். தாய்தந்தையர், உற்றார் மறையலாம். குருநாதர்கள் மறைவதே இல்லை.

மிகச்சிறிய உடல். மிகச்சிறிய பாதங்கள். காற்றால் கொண்டு செல்லப்படுவது போன்ற நடை. குழந்தைச்சிரிப்பு. மனம் நெகிழ்கையில் முகச்சுருக்கங்களில் வழியும் கண்ணீர். பேராசிரியர் இலக்கியம் மானுடனை எங்கு கொண்டு செல்லமுடியும் என்பதற்கான சான்று.

இந்த வயதில் மெல்ல முற்பிறப்பு குறித்த நம்பிக்கைகள் ஆழம்கொள்கின்றன. நாம் எதையோ ஈட்டியபடியே இங்கு வருகிறோம். இல்லையேல் வாழ்நாளெல்லாம் விழியீரமின்றி நினைக்கமுடியாத மாமனிதர்களை நாம் சந்திப்பது நிகழ்வதில்லை.

இந்தப்பாடல் பி.சுசீலாவின் குரலால் இந்த அழகைப்பெறுகிறது. ஆனால் அதைவிட இதன் மொழி. பைபிள் மொழி என்பதனாலேயே இதிலுள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டு மணம். துஷ்டன் போன்ற வடமொழிச் சொற்கள். முற்றிலும்புதிய சொல்லிணைவுகள். இசையுடன் இணைந்து வரிகளைக் கேட்டால் பல இடங்களில் வியப்பும் பரவசமும் உள்ளது

துய்யன் நீர், பாவி எனக்காய் சோரி சிந்தி தயைசெய்வோம் என்றே துஷ்டன் எனை அழைத்தீர்; இதை அல்லாது போக்கில்லை – என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

இதில் சோரி என்ற சொல் வருகிறது. குருதி என்று பொருள். கம்பராமாயணத்தில் வரும் சொல்லாட்சி. தூயன் என்பது துய்யன் என்பதும் கம்பராமாயணச் சொல்லாட்சிதான். இதனால்தான் பேராசிரியர் ஜேசுதாசனுக்கு மிகப்பிடித்தமான பாடலாக இது அமைந்தது போலும்.

இந்த வரிகள் எனக்கு எனக்குரிய பொருள் அளிக்கின்றன. ஆசிரியனிடம் சென்று சேரும் எளிய மாணவன். ஆட்டுக்குட்டி என அவனை அள்ளி நெஞ்சோடணைத்துக் கொள்கிறார் அவர். அவனுடைய அறியாமையே அவர் கைகளில் அமரும் தகுதியை அளிக்கிறது.

இந்த இரவில் நூறுதடவை இப்பாடலை கேட்கவேண்டும். தெய்வவடிவென அமைந்த பேராசானின் அடிகளை எண்ணி வணங்கவேண்டும்.

ஐயையா, நான் வந்தேன் ;-தேவ
ஆட்டுக்குட்டி ,வந்தேன் .

சரணங்கள்

துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தி
துஷ்டன் எனை அழைத்தீர் -தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா

உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால்நான் வருவேன் என்று -நில்லேன் ;
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா

எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ !-இவை
திண்ணம் அகற்றி எளியேனை  ரட்சியும் ,
தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா
ஏற்றுக்கொண்டு மன்னிப்பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் -மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்
தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா

மட்டற்ற உம் அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே – இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா

======================

========================================================

சில கிறித்தவப்பாடல்கள்

கிறித்தவப்பாடல்கள், கடிதங்கள்

=================================================
குருபீடம்
குரு என்னும் உறவு 
மத்துறு தயிர் [சிறுகதை]-1
மத்துறு தயிர் [சிறுகதை] -2
முந்தைய கட்டுரைஎன்ன வேண்டும் ? வலிமை வேண்டும்!
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 58