புழங்குதல்

aruna2
இந்தோனேசியாவில் அருண்மொழியிடம் பேசிச் சிலையானவர்கள்

கடந்த ஏழுநாட்களாக அருண்மொழி டெல்லியில் இருக்கிறாள். சைதன்யாவும் உண்டு. அவள் தோழி இன்னொரு சைதன்யாவும் அவள் அம்மாவும் என மொத்தம் நான்குபேர். நான்கு பெண்கள் மட்டும் என்பதற்கான அனைத்துக்கொண்டாட்டங்களும். சின்னப்பதற்றங்களுடன் நான் ஃபோனில் அழைத்தால் “என்னை தொந்தரவு செய்யாதே…நான் சுதந்திரப்பறவை” என்கிறாள். ஆகவே நான் அவ்வப்போது குறுஞ்செய்தி அனுப்புவதுடன் சரி

அருண்மொழிக்கு கொஞ்சம் பெரிய கண். அந்தக்காலத்தில் நான் கண்ணாத்தா என்றெல்லாம் அழைப்பதுண்டு. புதியவிஷயங்களைக் கண்டால் இன்னும் கொஞ்சம் பெரிதாகும். அயல்நிலங்களில் திருதிருவென்றே விழிப்பாள். ஆனால் எப்படியோ எல்லாவற்றையும் தலையைத்தலையை ஆட்டி விசாரித்து மீண்டும் உறுதிசெய்துகொண்டு சரியாகச்செய்துவிடுவாள். அவளை நான் விடாப்பிடியாக வெளியூர் அழைத்துச்செல்வதற்கு காதலை தவிர முக்கியமான காரணம் நான் கண்ட இடங்களில் தடுமாறவேண்டியதில்லை என்பதுதான்.

நான் தனியாகச் சென்றபோதெல்லாம் பிரச்சினைதான். சிங்கப்பூர் செல்லும்போது விசா நகலை தொலைத்துவிட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. மின்னஞ்சலில் இருந்தது. அதைப்பார்க்கவேண்டுமென்றால் வெளியே செல்லவேண்டும். நுழைவுச்சீட்டு போட்டுவிட்டதனால் வெளியே செல்ல சிறப்பு அனுமதி தேவை. என் பெட்டிகள் வேறு உள்ளே சென்றுவிட்டன. அங்கே இங்கே பதறி பரிதவித்து வெளியே சென்று அங்கே ஒரு டிராவல்ஸில் கெஞ்சி மின்னஞ்சலைத் திறந்து பிரதி எடுத்து உள்ளே நுழைந்தேன். வெளிநாடுகளில் கைவிடப்பட்ட குழந்தை போலத்தான் இருப்பேன்.

ஆனால் அமெரிக்காவில் ஒரு விமானநிலையத்தில் எங்கள் பெட்டிகளுக்கு ஐம்பதுடாலர் கட்டணம் வேண்டும் என்றார்கள். டாலர் நோட்டு ஏற்புடையதல்ல, கார்டில்தான் கட்டவேண்டும் என்றுவிட்டாள் கருப்பினக்குண்டழகி. எங்கள் இந்திய மாஸ்டர்கார்ட் வேலை செய்யவில்லை. கருப்பழகி நாங்கள் மேலே மேலே சொல்வதைக் கேட்காமல் மென்றுகொண்டிருந்தாள். விமானம் கிளம்பிக்கொண்டிருந்தது

அருண்மொழி பக்கத்தில் நின்ற வெள்ளையின மாதரசியிடம் பேசி அவளிடம் டாலரை அளித்து அவள் கார்டில் பணம் கொடுத்து உள்ளே சென்றோம். அப்படி தோன்றியது நல்ல விஷயம். ஆனால் அந்தப்பெண்ணை எப்படி தேர்ந்தெடுத்தாள். ஆச்சரியத்துடன் கேட்டபோது “பாத்தாலே தெரியுதே, அவங்களும் என்னை மாதிரின்னு” என்றாள். “அவங்க திருதிருன்னு முழிக்கலையே” என்று சொல்லி முறைக்கப்பெற்றேன்.

ஆகவே டெல்லியில் செல்போனில் கூகிளில் இந்திச்சொற்களைத் தேடி இணைத்து பேசி புழங்கிக்கொண்டிருக்கும் அருண்மொழியை கற்பனைசெய்து நான் ஆச்சரியப்படவில்லை. என்னால் அதைச்செய்யமுடியாது, கண் தெரியாமல் ஹீப்ரு என தேடி அச்சொற்களைப்பேசி “ஸாலா…” என அழைக்கப்படுவேன்,. முன்பின் தெரியாதவர்களுக்கு அவள் டெல்லியில் பிறந்தவள் என இதற்குள் தோன்ற ஆரம்பித்திருக்கும். அவள் தமிழே கொஞ்சம் கீச் என்றுதான் இருக்கும் என்பதனால் இந்திபேசிக் கேட்டால்தான் சிலையாகிவிடுவார்கள்.

எனக்குத்தான் இந்த  ஐந்து அறைகளுக்குள் அடிக்கடி வழிதவறிவிடுகிறது. நேற்று பகலில் பெரும்பகுதி கண்ணாடி தேடுவதில் செலவழிந்தது. இத்தனைக்கும் ஒன்றுக்கு மூன்று கண்ணாடி வைத்திருக்கிறேன், தொலைந்துவிடக்கூடாதே தேடினால் அகப்படவேண்டுமே என்று. கடைசியில் மூன்று கண்ணாடிகளும் ஒரே இடத்தில் இருந்தன.

கண்ணாடியை தேடியது எங்காவது காசு இருக்கிறதா என்று தேட. இல்லை என்றால் ஏடிஎம் கார்டைத் தேடவேண்டும்.  ஆனால் அதற்குமுன் ஒரே இடத்தில் எப்படி மூன்றுகண்ணாடிகளும் சென்றுசேர்ந்தன என்று கண்டுபிடிக்கவேண்டும். அந்த இயங்கியலை மட்டும் ஒரு கொள்கையாக வகுத்துக்கொண்டால் அதைபயன்படுத்தி இனிவரும் சந்ததிகள்கூட மனைவி இல்லாத வீட்டில் பொருட்களைக் கண்டுபிடிக்கமுடியும்.

முந்தைய கட்டுரைகோவை புத்தகக் கண்காட்சி, விருது, சொற்பொழிவு
அடுத்த கட்டுரைபாபு நந்தன்கோடு