55. ஆடியுடன் ஆடுதல்
தமயந்தியின் புரவி தடையேதுமில்லாமல் தண்டபுரத்தைக் கடந்து ராஜமகேந்திரபுரியை அடைந்தது. தான்யகடகத்தையும் இந்திரகீலத்தையும் வென்றது. அஸ்மாகர்களும் வாகடர்களும் பல்லவர்களும் அதை வணங்கி வாள்தாழ்த்தினர். திருமலாபுரத்தை வென்றபின் அமராவதியை அது அடைந்தபோது சதகர்ணிகள் ரேணுநாட்டையும் கடந்து தென்காவேரிக் கரைகளுக்கு பின்வாங்கிச் சென்றனர். கிருஷ்ணையை அடைந்தபின் அது வடக்கே திரும்பியது.
“அதை இப்போது நாம் ஒன்றும் செய்யமுடியாது, அரசே” என்றார் சுமத்ரர். “புரவி கிளம்பும்போது விதர்ப்பினி ஐயத்துடன் இருப்பாள். நம்மை வென்று கடப்பதுவரை அவள் முழு விசையும் படைகளுடன் இருக்கும். தென்னகத்தை வென்றதுமே நம்மை முழுதும் அடக்கிவிட்டதாக எண்ணுவாள்.” சுகர்ணன் “அவளை அத்தனை எளிதாக எண்ணவேண்டாம்” என்றான். “ஆம், பாரதவர்ஷத்தின் மாபெரும் அரசியல்சூழ்ச்சியாளர் அவள். சுக்ரரின் மகள் தேவயானியின் மறுபிறப்பு என்கிறார்கள். ஆனால் ஆணவம் எவரையும் மழுங்கச்செய்யும். நம்மை எளிதில் வென்றமையாலேயே மீண்டும் எளிதில் வென்றுவிடலாம் என்னும் உளப்பதிவிலிருந்து தப்ப அவளால் இயலாது” என்றார் சுமத்ரர்.
“அவளுடைய வேள்விக்குதிரை வடக்கே மச்சர்களையும் கிராதர்களையும் வென்று மேலெழட்டும். அவந்தியையும் மாளவத்தையும் வெல்லட்டும். அதன்பின்னர்தான் நாம் தொடங்கவேண்டும்” என்று அவர் சொன்னபோது சதகர்ணியாகிய சுகர்ணன் “அப்போது அவள் பாரதத்தை பெருமளவு வென்றிருப்பாள்” என்றான். “ஆம், அவள் வெல்ல வெல்லத்தான் புஷ்கரனின் ஐயமும் வஞ்சமும் பெருகும்… அவள் சத்ராஜித் என அமர்ந்துவிடுவாள் என்றாகும்போது அவன் எரிகொள்வான்.”
சுகர்ணன் அவரை நோக்கியபடி மீசையை நீவிக்கொண்டு அமர்ந்திருந்தான். “ஐயம் கொள்கிறீர்கள், அரசே” என்றார் சுமத்ரர். “ஆம், இவையெல்லாம் உங்கள் விழைவுக்கற்பனைகளோ என்ற எண்ணம் எழுகிறது.” சுமத்ரர் சிரித்து “எட்டுபுறமும் எண்ணியே அனைத்தையும் சூழ்கிறேன். அரசே, தண்டபுரத்தின் கலிங்க அரசன் பானுதேவனிடமும் புஷ்கரனின் அணுக்கன் ரிஷபனிடமும் ஒவ்வொரு நாளும் தொடர்பிலிருக்கிறேன்.”
சுகர்ணன் “ரிஷபனைப்பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அவன் கலிங்க ஒற்றன், அப்பால் என்ன?” என்றான். “நானும் முதலில் அவ்வண்ணமே எண்ணினேன். ஆனால் அவனைப்பற்றி ஒற்றர்கள் சொன்ன செய்திகள் ஐயமூட்டின. அவன் கலிங்க அரசி மாலினிதேவிக்கே அணுக்கன்” என்றார். மீசையை நீவிக்கொண்டிருந்ததை நிறுத்தி கூர்ந்து நோக்கியபின் “அதுவும் அரண்மனைகளில் புதிதல்ல” என்றான். “ஆம், ஆனால் பெரும்பாலும் அவர்கள் ஏவலர்களாகவே இருப்பார்கள். ரிஷபன் அரசகுடியினன்” என்றார்.
விழிசுருங்க “எக்குடி?” என்றான் சுகர்ணன். “அவன் கலிங்க மன்னர் சூரியதேவருக்கு அவருடைய முதிய அகவையில் நாகர்குலத்து இளவரசி ஒருத்தியில் பிறந்த மைந்தன்” என்றார் சுமத்ரர். அவையிலிருந்த படைத்தலைவன் மகாபாகு “என்ன இது? அவர்களிடையே உறவு…” என சொல்ல முற்பட “அதுவும் அரண்மனையில் வழக்கமே” என்றான் சுகர்ணன். சற்றுநேரம் அமைதி நிலவியது. மகாபாகு மெல்ல அசைந்து பெருமூச்சுவிட்டதும் அது கலைந்தது. “அவன் வழிநடத்துகிறான் அனைத்தையும். அவனுடன் இணைந்தே நான் இவற்றை வகுத்துள்ளேன்” என்றார்.
சில நாட்களிலேயே தெற்கு நோக்கிச்சென்ற வஜ்ரகீர்த்தியின் படையை கிருஷ்ணை நதிக்கரையின் நாகர்குடிகள் எதிர்கொண்டு தோற்கடித்தார்கள் என்ற செய்தி வந்தது. வஜ்ரகீர்த்தியைக் கொன்று ஒரு மூங்கில் தெப்பத்தில் கட்டி அவர்கள் கிருஷ்ணையில் ஒழுக்கினார்கள். ஓரிரு நாட்களுக்குப்பின் வடக்கு நோக்கிச்சென்ற பகுஹஸ்தன் கிராதர்களால் கொல்லப்பட்டான் என்றும் அவனை நூறு துண்டுகளாக வெட்டி கழுகுகளுக்கு உணவாக்கினார்கள் என்றும் அவன் குருதியை தங்கள் குடித்தெய்வமான கூளிக்கு முழுக்காட்டி தாங்கள் நெற்றியில் பூசிக்கொண்டார்கள் என்றும் செய்தி வந்தது.
“தோல்விக்கு திட்டமிடுவதிலும் அரசியின் நுட்பம் வியக்கச் செய்கிறது!” என்றார் சுமத்ரர். “அரசர்களிடம் போரில் வேண்டுமென்றே தோற்றால்கூட அது இழிவு. அவர்கள் அதை கதைகளாக சூதர்நாவில் நிறுத்துவார்கள். அவர்களின் படைகள் நிஷதப்படைகள் வெல்லப்படக்கூடியவையே என்னும் உணர்வை அடைந்து அச்சமழியவும் வாய்ப்பாகும். ஆகவேதான் தொல்குடிகளிடம் தோற்க வைக்கிறாள். அவர்களுக்கு சொல்லில் வரலாற்றை நிறுத்தத் தெரியாது.” சுகர்ணன் “அதைவிட அவர்களை வேருடன் அழிக்க அவளுக்கு ஒரு அடிப்படை கிடைக்கிறது” என்றான்.
நிஷதபுரியின் படைகள் கிளம்பிச்சென்று நாகர்களையும் கிராதர்களையும் தோற்கடித்து அவர்களின் குலங்களை ஆண்வேர் இல்லாமல் அழித்து அவர்களின் ஊர்களை எரித்தன. அவர்களை மேலும் மேலும் காடுகளுக்குள் துரத்திவிட்டு மீண்ட அப்படைகளை இந்திரபுரியின் மக்கள் நாட்டின் எல்லையிலேயே வந்து எதிர்கொண்டு சூழ்ந்து நடனமிட்டு வெற்றிக்களிப்புடன் நகருக்கு கொண்டுசென்றனர்.
ஏழு நாட்கள் நகரெங்கும் வெற்றிக்கொண்டாட்டம் நிகழ்ந்தது. நூற்றெட்டு எருமைகளை கலிதேவனுக்கு வெட்டி குருதியாட்டு நிகழ்த்தினர். நூற்றெட்டு அருமலர்களால் இந்திரனுக்கு பூசெய்கை நிகழ்ந்தது. நகர் மக்கள் கடந்தவை அனைத்தையும் மறந்தனர். ஒவ்வொருவரும் அவ்வெற்றிக்கு தாங்களும் உரியவர்களென எண்ணினர். காமமும் கள்ளும் நகரில் இரவுபகல் ஒழியாமல் கொப்பளித்தன. சூதர்கள் கதைகளைச் சுமந்தபடி நிஷாதர்களின் சிற்றூர்களெங்கும் சென்றனர்.
“அவள் ஒவ்வொன்றையும் எண்ணியிருப்பதிலுள்ள கூர் என்னை அச்சுறுத்துகிறது, அமைச்சரே” என்றான் சுகர்ணன். “அவள் ஏன் கிராதர்களையும் நாகர்களையும் தேர்ந்தெடுத்தாள்? அவர்களை குருதியும் தீயும் கொண்டு அழித்தாள். அதை ஷத்ரியர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாளை அந்த வாள் உங்களுக்கும் வரும் என எச்சரிக்கிறாள். அதே சமயம் ஷத்ரியர்களிலோ பிற அரசர்களிலோ எவருக்கேனும் அவ்வண்ணம் அவள் செய்திருந்தால் அதுவே அவர்களை ஒருங்கிணைய வழிவகுத்திருக்கும். அதை தவிர்த்துவிட்டாள். இவளை வெல்லுதல் எளிதல்ல.”
சுமத்ரர் “ஆம், ஆனால் அவள் நகரில் எழும் அக்களிவெறியே அவளுக்கு எதிரானது…” என்றார். “அது எங்கே எல்லை மீறுமென சொல்லமுடியாது. உட்பூசல்கள் கொண்ட ஒரு குலம் கட்டற்ற விழவை பன்னிரு நாட்கள் நீட்டிக்கக்கூடாது.” ஆனால் ஒவ்வொருநாளும் நிஷாதர்களின் கொண்டாட்டம் மிகுந்துகொண்டிருப்பதையே செய்திகள் சொல்லின. களியாட்டு சிற்றூர்களுக்கும் சென்று சேர்ந்தது. எங்கும் உண்டாட்டும் விழவுக்கூடலும் மூத்தோரூட்டும் தெய்வமாட்டும் நிகழ்ந்தன.
“மக்கள் வெற்றியை விழைகிறார்கள். ஏனென்றால் வெற்றி என தன் வாழ்க்கையிலிருந்து ஒன்றைச் சொல்ல அவர்களிடம் ஏதுமில்லை” என்றார் சுமத்ரர். “நான் என சொல்லத்தெரியாதவர்கள், நாம் என்று சொல்லி கொந்தளிக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் மறுக்கமுடியாத அரசக் குருதியால் அன்றி குடிகளை ஒருங்கிணைக்க முடியாது. சென்ற காலங்களில் நிஷதநாடுபோல் எழுந்துவந்த எத்தனை அரசுகள் இருந்திருக்கின்றன! அவையனைத்தும் மறைந்தன. அஸ்தினபுரியும் மகதமும் பாஞ்சாலமும் வங்கமும் கலிங்கமும் எத்தனை வீழ்ச்சிக்குப் பின்னரும் நீடிக்கின்றன. ஏனென்றால் அவர்களின் அரசகுடி தெய்வ ஆணை பெற்றது. மாற்றற்றது. அது கருவறைத்தெய்வம், அது இருக்கும் இடமே ஆலயமென்றாகும்.”
ஒவ்வொருநாளுமென வெற்றிச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. பின்னர் களியாட்டே நிஷாதர்களின் அன்றாட வாழ்க்கை என்றாயிற்று. வேள்விப்பரியாகிய கிரிஷை மகதத்திற்குள் நுழைந்து கங்கையை அடைந்தது. அதை கங்கைநீரில் நீராட்டினர். அதன் திசைச்செலவு நிறைவடைந்ததை அறிவிக்கும்பொருட்டு வைதிகர் பதினெட்டு பொற்கலங்களில் கொண்டுவந்திருந்த கிருஷ்ணை நதியின் நீரை கங்கைநீர்ப்பெருக்கில் கரைத்தனர்.
நிமித்திகன் வலம்புரிச்சங்கை ஊத முரசுகளும் கொம்புகளும் மணிகளும் பெருகி உடனெழுந்து வானை அறைந்தன. “பேரரசி தமயந்தி வாழ்க! நிஷதகுலத்தரசி வாழ்க! சத்ராஜித் என அமரும் விதர்ப்பினி வெல்க!” என வாழ்த்தொலிகள் எழுப்பினர் கங்கைக்கரையை நிறைத்தபடி சூழ்ந்திருந்த நிஷதப்படைவீரர். கங்கைநீரை பதினெட்டு பொற்குடங்களில் அள்ளிக்கொண்டு வைதிகர்கள் கரையேறினர். மலரிட்ட பாதையில் நடந்து அவர்கள் முன்னே செல்ல வேள்விக்குதிரை அவர்களைத் தொடர்ந்து சென்றது.
புரவி திரும்பிவருவதை அறிந்ததும் தமயந்தி வேள்விநிறைவுக்கு ஆணையிட்டாள். ஆயிரத்தெட்டு வைதிகர்கள் கூடி வேள்விக்கு நாள்குறித்தனர். வேள்விக்குரிய பொருட்களை சேர்த்தனர். அரண்மனைமுகப்பில் பன்னிரு நிலைகொண்ட வேள்விப்பந்தல் அமைந்தது. சாரஸ்வதம், காங்கேயம், சைந்தவம், பஞ்சதட்சிணம், மேருதீர்த்தம் என்னும் ஐந்து நாடுகளிலும் இருந்து வந்துசேர்ந்த வைதிகர்கள் நகரில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட குடில்களில் நிறைந்தார்கள். எரிகுளங்கள் அமைக்கப்பட்டன. புரவி மகத எல்லையைக் கடந்ததும் வேள்வி தொடங்கியது. நாற்பத்தொன்றாம் நாள் அது நகருள் நுழைந்து வேள்விப்பந்தலை அடையும் என்று கணித்தனர்.
வேள்வி முழுமைக்குப்பின் தமயந்தி சத்ராஜித் என முடிசூட்டிக்கொள்ளவிருந்தாள். அவளுக்காக கலிங்கப் பொற்சிற்பியான ஜயந்தன் அமைத்த ஏழு அடுக்குகொண்ட பசுந்தளிர் மணிமுடி அரண்மனையில் குடித்தெய்வங்களான ஏழு மூதன்னையர் அமர்ந்த நிலவறைக்குள் பூசெய்கைக்கு வைக்கப்பட்டது. ஆயிரத்தெட்டு மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட அந்த முடி காலைக்கதிர்பட்ட தளிர்க்குலை என சுடர்விட்டது. நிஷதகுடியின் முதல் மாமன்னர் மகாகீசகர் சூடியிருந்த பச்சைக்கற்கள் பதிக்கப்பட்ட பிடி கொண்ட உடைவாளும் அன்னையர்முன் வைக்கப்பட்டது. ஒவ்வொருநாளும் குருதிபலி கொடுத்து அதிலுறைந்த கொலைத்தெய்வங்கள் விடாய்நிறைவு செய்யப்பட்டன.
ஜயந்தனும் எட்டு உதவியாளர்களும் அரண்மனையை ஒட்டியிருந்த சப்தமாளிகையில் தங்கி எவருமறியாமல் ஹரிதமாயூரம் என்னும் அரியணை ஒன்றை வடித்துக்கொண்டிருந்தார்கள். பீதர்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆயிரம் தூய மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட அது மயில்கால்களும் தோகைவிரித்த சாய்விடமும் இருபுறமும் எழுந்த இறகுகளும் கொண்டிருந்தது. வேள்விநிறைவன்று அரசமண்டபத்தில் அரசி சத்ராஜித் என முடிசூடுவாள். அவளுக்கு மூன்றடுக்குள்ள வெண்குடை பிடிக்கப்படும். அது பாரதவர்ஷத்தில் அவளுக்கு மட்டுமே உரிய அடையாளமாகும்.
பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு ஷத்ரிய அரசர்களுக்கும் நூற்றெட்டு பிற அரசர்களுக்கும் முறைப்படி அழைப்புகள் அனுப்பப்பட்டன. முதன்மை அரசர்களை அமைச்சர்கள் நேரில் சென்று அழைத்தனர். பிறருக்கு தூதர்களும் சூதர்களும் செய்தி கொண்டுசென்றார்கள். அரசர்கள் வந்தால் தங்குவதற்காக இருநூறு புதிய மாளிகைகள் நகரைச்சுற்றிய சோலைகளுக்குள் எழுப்பப்பட்டன. அரசர்களுடன் வரும் அகம்படியினரும் ஏவலரும் காவல்படைகளும் தங்குவதற்காக மரத்தாலான ஈராயிரம் பாடிவீடுகள் இந்திரக்குன்றுக்கு கிழக்குச்சரிவில் காடு திருத்திய வெளியில் கட்டப்பட்டன.
நகரின் அனைத்துக் கட்டடங்களும் பழுதுநோக்கி புதுப்பிக்கப்பட்டன. தாழ்வாரங்களில் வண்ணக்கொடிகள் கட்டப்பட்டன. குவையுச்சிகளில் கொடிகள் அசைந்தன. சூழ்ந்திருப்பவற்றை செம்மை செய்கையில் உள்ளம் செம்மைகொள்வதை உணர்ந்த பெண்கள் மேலும் மேலும் வெறிகொண்டு பணியாற்றினர். கலங்களெல்லாம் தேய்க்கப்பட்டு பொன்னும் அனலும் வெள்ளியும் மின்னின. கலவறையில் மறந்திட்டவற்றைக்கூட எடுத்து துலக்கி அடுக்கினர். காவல்நிலைகளும் கோட்டைகளும் வெள்ளையும் அரக்கும் பூசப்பட்டு அன்று கட்டப்பட்டவை என எழுந்தன. நகரம் ஒவ்வொருநாளும் உருமாறிக்கொண்டே இருந்தது. எவ்வளவு செய்த பின்னரும் பணிகள் எஞ்சியிருந்தன.
“வசந்தமெழுந்த ஆலமரம் இந்நகரம். இலையெல்லாம் தளிராக தளிரெல்லாம் மலராக பொலிந்தெழுகிறது” என்றான் நகர்மன்றில் பாடிய சூதன் ஒருவன். “மணநாளுக்கு முந்தைய இரவின் மணப்பெண் இந்நகரம். நாணிச் சிவக்கிறது. உடல்பொலிந்து ஒளிகொள்கிறது” என்றான் அவனருகே நின்ற சூதன். கூடிநின்ற நகர்மக்கள் கூவிச்சிரித்து வெள்ளி நாணயங்களை அவனுக்கு அளித்தனர். “பலிகொண்டு நிறைந்த தெய்வத்தின் அமைதி இந்நகர்மேல் பரவுகிறது. நிறைந்த பெருங்குளத்தின் மெல்லிய அலையோசை மட்டும் எழுந்துகொண்டிருக்கிறது.”
ஒவ்வொன்றும் முன்னரே திட்டமிட்டு வகுக்கப்பட்டன. கருணாகரரும் நாகசேனரும் இரவும்பகலும் துயில்நீத்து அப்பணிகளை ஒருங்கிணைத்தார்கள். கலியின் ஆலயத்திலும் இந்திரனின் கோட்டத்திலும் வழிபட்டு வேள்விமாடத்திற்கு வந்தமர்வாள் பேரரசி. அங்கே வந்துசேர்ந்திருக்கும் வேள்விப்புரவிக்கு பூசனைகள் செய்வாள். கோல்கொண்டு அரியணை அமர்ந்து வேள்விக்காவல் செய்வாள். சடங்குகள் அனைத்தும் முடிந்தபின் வேள்வியிலமர்ந்த அந்தணர்களுக்கு அடிவணக்கம் புரிந்து காணிக்கையளித்து வாழ்த்து பெறுவாள். குடிவாழ்த்து பெற்றபின் வாழ்த்தொலிகள் சூழ கிளம்புவாள்.
வேள்விப்பந்தலில் இருந்து பேரரசியை குடிமூத்தார் எழுவர் வழிநடத்தி அரண்மனைக்குள் அரசமண்டபத்திற்கு கொண்டுசெல்வார்கள். அங்கே வேள்வித்தலைவராகிய சுப்ரப கஸ்யபரும் ஐந்து நிலங்களைச்சேர்ந்த தலைமை வைதிகர்களான கௌதம பிரீதரும், சாண்டில்ய சப்தமரும், வசிஷ்ட சம்விரதரும், விஸ்வாமித்ர உபகுப்தரும், பார்க்கவ சுப்ரரும் சேர்ந்து அவளை எதிர்கொண்டழைத்து அரசமேடைக்கு கொண்டுசெல்வார்கள். கங்கைநீர் தெளித்து வேதம் சொல்லி தூய்மைசெய்யப்பட்ட அரியணையில் அவளை அமரச்செய்வார்கள். அரசநிரை சான்றாக, குடிப்பெருக்கு சூழ்ந்து வாழ்த்த அவள் முடிசூடிக்கொள்வாள்.
ஒன்றுமட்டும் அவர்களுக்கு ஐயத்தை அளித்துக்கொண்டே இருந்தது. புஷ்கரனும் காளகக்குடியினரும் பிற குலங்களில் புஷ்கரனை ஆதரிக்கும் குடித்தலைவர்களும் எவ்விழவிலும் கலந்துகொள்ளவில்லை. வேள்விப்புரவி விஜயபுரியை கடந்துசென்றபோது புஷ்கரன் தன் படைத்தலைவன் ஜம்புகன் தலைமையில் ஒரு படையை உடன் அனுப்பினான். வெற்றிகள் அனைத்துக்கும் விஜயபுரியிலிருந்து வாழ்த்துச்செய்தி வந்தது. ஆனால் வெற்றிக்குரிய செந்நிறக்கொடி விஜயபுரியில் பறக்கவிடப்படவில்லை.
புஷ்கரன் முடிச்சூட்டுவிழாவிற்கு வந்தாகவேண்டும் என்று தமயந்தி சொன்னாள். நாகசேனர் முதலில் சென்றழைத்தபோது உடனே வருவதாக புஷ்கரன் சொன்னான். அவன் வராதபோது கருணாகரர் நேரில் சென்றழைத்தார். “வேள்விதொடங்கும் நாளில் இளவரசர் அங்கிருப்பார். அவருக்கு இப்போது உடல்நிலை நன்றல்ல. ஓய்விலிருக்கிறார்” என்றான் ரிஷபன். வேள்விதொடங்கிய அன்று “இளவரசர் மேலும் சில நாட்களில் அங்கே இருப்பார். விழாவன்று வாளேந்தி உடனிருப்பார்” என்று செய்தி வந்தது. ஒவ்வொருநாளும் என நிஷதபுரி புஷ்கரனுக்காக காத்திருந்தது.
புஷ்கரன் தனிமையில் தன் அறையில் இருந்தான். நெடுநாட்களாகவே அவன் தனிமையிலிருப்பதை பழகிவிட்டிருந்தான். உடனிருப்பவர் எவராக இருந்தாலும் சற்றுநேரத்திலேயே எரிச்சலூட்டி தாங்கமுடியாதவர்களாக ஆனார்கள். அவன் எப்போதும் சினமும் எரிச்சலுமாக பேசுவதை உணர்ந்து அமைச்சர்கள் உட்பட அனைவருமே அவனிடமிருந்து விலகிக்கொண்டார்கள். ஆனால் அணுக்கர்களிடமும் சேடிகளிடமும் அவன் சினம்கொண்டான். அவர்கள்மேல் எச்சில் துப்பினான். வசைபாடினான். சில தருணங்களில் அடிக்கப் பாய்ந்தான்.
மெல்ல தன் தனியறைக்குள்ளேயே பெரும்பாலும் அவன் நாளை கழித்தான். புலரியில் எழுந்து உடற்பயிற்சிக்காக களமுற்றத்திற்குச் சென்று, அங்கிருந்து நீராட்டு முடித்து கலிதேவனின் ஆலயத்திற்கும் சென்று, முதற்கதிரொளிக்கு முன்னரே அவன் தன் அறைக்குள் மீண்டான். பின்னர் அந்திசாய்ந்தபின் இருளில் தோட்டத்தில் தன்னந்தனிமையில் உலவிவந்தான். விண்மீன்களை நோக்கியபடி அங்குள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தான். பகல் முழுக்க அறைக்குள் நூல்களை படித்துக்கொண்டிருந்தான்.
அவை அரசுசூழ்தலின் நெறிகளைக் குறித்த எளிய நூல்கள். அவற்றை அவன் உள்ளம் வாங்கிக்கொள்ளவில்லை. எனவே மீண்டும் மீண்டும் அவற்றை வாசித்தான். சொற்கள்மேல் அவன் உள்ளம் தொடாமல் ஒழுகிச்சென்றுகொண்டிருக்க நெடுநேரம் அமர்ந்திருப்பான். அப்படியே துயில்கொண்டு மஞ்சத்தில் சரிவான். அவன் உணவருந்துவது மிகமிகக் குறைந்தது. மதுவருந்துவது மிகுந்து வந்தது. அரசியை அவன் எப்போதேனும் அவளே அவனைத் தேடிவந்தால் மட்டும் சந்தித்தான். அவள் பேசப்பேச அதை செவிகொள்ளாமல் அலையும் விழிகளுடன் அமர்ந்திருந்தான். அவள் அவனிடம் அரசுசூழ்தலின் புதிய திட்டங்களை சொன்னாள். தமயந்தியை இறுதியாக தளைப்பதற்குரிய வழிகளை ஒவ்வொருநாளும் புதிதாக சமைத்துக்கொண்டிருந்தாள்.
பல நாட்களில் சில கணங்களிலேயே அவள் சலிப்புற்று குரலெழுப்பத் தொடங்கினாள். “என் விழிகளைப் பார்த்து பேசுங்கள். நான் என்ன சொல்கிறேன் என்று தெரிகிறதா?” என்று கூவினாள். “ஆம், கேட்கிறேன். சொல்” என அவன் முனகினான். “சதகர்ணிகளிடம் இருக்கிறது இறுதிச்சொல்… அவர்கள் ஓர் உறுதி அளித்தால் நாம் வென்றோம்.” அவன் அச்சொற்களை விழிகளால் நோக்கி அமர்ந்திருந்தான். “என்ன நினைக்கிறீர்கள்?” அவள் அதை பலமுறை கேட்டபின் அவன் விழித்துக்கொண்டு அவன் “யார் நானா?” என்றான். “இல்லை, இந்தத் தூண்” என்று அவள் பல்லைக் கடித்தபடி சொன்னாள். அவள் எழுந்துசெல்வதுவரை பதறும் உடலும் நடுங்கும் விரல்களுமாக அமர்ந்திருந்தான். பின் உடல்தளர்ந்து பெருமூச்சுவிட்டான்.
அவர்கள் சந்திப்பதே அரிதாயிற்று. ஒவ்வொருமுறையும் சலிப்புற்று அவள் எழுந்து விலகிச்சென்றாள். எப்போதேனும் அவள் அவனருகே அணுகி அவன் குழலை கைவிரல்களால் அளைந்து தலையை தன் முலைகளுடன் சேர்த்துக்கொண்டு “என்ன ஆயிற்று உங்களுக்கு? என்னை வெறுக்கிறீர்களா?” என்றாள். “இல்லை” என்று அவன் சொன்னான். “பின் என்ன?” அவன் பெருமூச்சுவிட்டு “ஒன்றுமில்லை, நான் நலமாக இருக்கிறேன்” என்றான். “இல்லை, நீங்கள் இயல்பாக இல்லை. இந்த அறையிலேயே இருக்கிறீர்கள். அவைநுழைவதே இல்லை. வெளியே செல்வதில்லை.”
அவன் “நான் அவையை வெறுக்கிறேன். அங்கே மீண்டும் மீண்டும் ஒரே சொற்கள். சலிப்பூட்டும் சடங்குகள்” என்றான். “மனிதர்களை வெறுக்கிறீர்கள். எவரையும் விழிநோக்கிப் பேசுவதில்லை. விழிகள் தொட்டுக்கொண்டாலே சினம்கொண்டு கூச்சலிடத் தொடங்குகிறீர்கள் என்றார்கள்.” அவன் “எவர் சொன்னது இதையெல்லாம்? சுநீதரா? ரிஷபனா?” என்றான். “எவர் சொன்னால் என்ன? நீங்கள் இருக்கும் நிலை இயல்பல்ல. அரசர்கள் இப்படி அறைக்குள் முடங்கக்கூடாது.” அவன் “நான் இங்கே நூல் நவில்கிறேன்” என்றான். “என்ன நூல்கள்? ஆறு மாதங்களுக்கும் மேலாக இரண்டே நூல்கள்…” என்றாள். அவன் மெல்ல முனகினான்.
“எப்படி இருக்கிறீர்கள் தெரியுமா? நேற்று முன்னாள் அமைச்சர் ஓர் ஓலையை கொண்டுவந்தார். அதில் நீங்கள் கைச்சாத்திடவேண்டும். ஒவ்வொருநாளும் மும்முறை வந்து மன்றாடினார். கைச்சாத்திடுகிறேன் என்று சொன்னீர்கள். கண்ணெதிரே ஓலை இருந்தது. ஆனால் செய்யவே இல்லை. இறுதியில் அவர் உங்கள் கையில் ஓலையை எடுத்துக்கொடுத்து கணையாழியையும் அளித்தார். அதன்பின்னரே கைச்சாத்திட்டீர்கள்.” அவள் அவன் முகத்தை குனிந்து நோக்கி “நீங்கள் கைச்சாத்திட மறுத்திருந்தால் அது வேறு. உங்களால் அச்சிறிய செயலைச்செய்ய உளம்குவிக்க முடியவில்லை. அதுதான் சிக்கல்” என்றாள்.
அவன் “விடு என்னை” என்றபடி எழுந்தான். அவள் “நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஒரு சொல்லும் உங்களுக்குள் நுழையவில்லை” என்றாள். “நீயே சொல்லிக்கொண்டிருக்கிறாய். நீ என்னை பித்தன் என்றும் பயனற்றவன் என்றும் நிறுவ விழைகிறாய். நீ திட்டமிட்டு உருவாக்குவது இந்த சித்திரம்.” அவள் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “போ இங்கிருந்து, நான் நூல் பயிலவேண்டும்.” அவள் சீற்றத்துடன் “நான் கேட்பதற்கு மறுமொழி சொல்லுங்கள்” என்றாள். “என்னை எரிச்சலூட்டாதே. செல்!” அவள் “நான் கேட்டதற்கு மறுமொழி சொல்லுங்கள்” என்றாள்.
அவன் அந்த நெருக்குதலால் சீற்றமுற்றுத் திரும்பி “உனக்கு என்ன வேண்டும்? நான் சாகவேண்டும், அவ்வளவுதானே? என்னைக் கொல்லத்தானே வந்தாய்? நான் சோர்ந்திருக்கிறேன் என்றால் நீதான் ஏதாவது செய்திருப்பாய். என் உணவை மருத்துவர்களிடம் காட்டவேண்டும். மென்நச்சு அதில் கலந்திருக்கும்… நீதான் அதை கலந்தாய்… ஆம், நீதான்” என்று கூச்சலிட்டான் அந்தக் கூச்சல் அவனுக்கு ஆற்றலையும் இலக்கையும் அளித்தது. “நான் என்னை பாதுகாத்துக்கொண்டிருக்கிறேன். இந்த அறைக்குள் என் உயிருக்கு அஞ்சி ஒளிந்திருக்கிறேன். நீ என்னை கொல்லமுடியாது.”
அவள் சினத்துடன் “வாயை மூடுங்கள்…” என்று கூவினாள். அவன் கைநீட்டி அருகணைந்து “நீ எவரிடம் பேசுகிறாய் என்று தெரிகிறதா? நிஷத இளவரசனிடம், உன் அணுக்கனிடம் அல்ல. வாளை உருவினால் உன் தலை விழும்” என்றான். “எங்கே உருவுங்கள் பார்ப்போம்… உருவுங்கள்” என அவள் அவனை நோக்கி வந்தாள். வெறுப்பில் அவள் முகம் இழுபட்டு வஞ்சமும் கீழ்மையும் கொண்டதாக ஆகியது. வாய்க்குள் இருந்து பற்கள் வெளிவந்து ஓநாய்களின் சீறல் தோன்றியது. “கோழை… நீ ஆண் என்றால் எடு அந்த வாளை… வாள் உன் கையில் நிற்கிறதா என்று பார்க்கிறேன். எடு வாளை!”
அவன் கைகால்கள் வலிப்பு வந்ததுபோல உதறிக்கொள்ள “போ போ… போய்விடு” என்று கூச்சலிட்டான். எழுந்து அறையின் மறு எல்லைக்குச் சென்று “கொன்றுவிடுவேன்… செல்… சென்றுவிடு” என்று உடைந்த குரலில் வீரிட்டான். அணுக்கன் உள்ளே வந்து “அரசி” என்றான். அவள் இளிப்பதுபோல வாயை நீட்டி “இழிமகன்” என்றபின் குழலை அள்ளி பின்னாலிட்டு ஆடையை இழுத்து தோளில் அமைத்து திரும்பிச்சென்றாள். கால் தளர்ந்தவனாக அவன் மஞ்சத்தில் விழுந்தான்.
அவ்வறையை அவ்வாறு சொன்னது வாய்நிகழ்வுதான் என்றாலும் அது அவனுக்கு மெல்ல மெல்ல காப்பென்றும் கவசமென்றும் ஆகியது. அறைக்குள் கதவை உள்ளே தாழிட்டுக்கொண்டான். காற்றுக்காக சாளரத்தை திறந்து வைத்தாலும் அதனருகே செல்வதையே தவிர்த்தான். ஒருமுறை தன் ஆடிப்பாவையைக் கண்டு திகைத்தபின் ஆடிகள் அனைத்தையும் அகற்ற ஆணையிட்டான். பின்னர் பாவை தெரியும் உலோகக் கலங்களைக்கூட அறைக்குள் கொண்டுவரலாகாதென்று ஆணையிட்டான்.
ஆனால் அறைக்குள் உடனிருந்த அவன் நிழல் அவனுக்கு உவகையூட்டியது. அகல்விளக்கின் முன் நின்று தன் நிழல் எதிர்ச்சுவரில் பெருந்தோற்றமாக எழுவதை நோக்கிக்கொண்டிருந்தான். கைகால்களை வீசி அதன்முன் நடித்தான். அதனுடன் போரிட்டு நகைத்தான். விரல்களால் புலியையும் நரியையும் காகத்தையும் நிழலுருவெனக் காட்டி விளையாடினான். பெரும்பாலான தருணங்களில் மஞ்சத்தில் படுத்தபடி சுவரிலும் கூரையிலும் உள்ள வெடிப்புகளையும் கறைவடிவங்களையும் நோக்கிக்கொண்டிருந்தான். அவை புலியென்றும் பன்றியென்றும் பறவைகளென்றும் உருக்கொண்டன. ஒவ்வொரு தடமும் நன்கறிந்தவையென்றாயின. ஒவ்வொன்றுக்கும் அவன் பெயரும் இயல்பும் அளித்தான். அவற்றுடன் உரையாடினான்.
எப்போதேனும் அமைச்சர் அல்லது குடித்தலைவர் சுநீதர் அவனைப் பார்க்க வந்தனர். நாளில் மும்முறை ஏவலர் வந்தனர். கதவு தட்டப்படும்போது அவன் விழித்துக்கொண்டான். கதவையே நோக்கிக்கொண்டு படுத்திருந்தான். எழுந்துசென்று கதவை திறக்கவேண்டுமென எண்ணினாலும் எழும்செயலென தன்னை ஆக்கிக்கொள்ளமுடியவில்லை. ஒருநாள் பலமுறை தட்டி பகலெல்லாம் காத்து பின்னர் அச்சம்கொண்டு கதவை உடைத்து உள்ளே வந்த சுநீதர் அதற்குப்பின் கதவுக்கு புதுத்தாழ் ஒன்றை அமைத்தார். அதை அவன் போட்டுக்கொள்ள முடியும். ஆனால் அதை வெளியே இருந்தும் திறக்கமுடியும்.
கதவை உடைத்து அவர்கள் உள்ளே சென்றபோது அவன் மஞ்சத்தில் வெறித்த விழிகளுடன் கிடந்தான். ஓசையில் அவன் உடல் விதிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தது. அவனை நோக்கிய மருத்துவர் அவனுக்கு நோய் என ஏதுமில்லை என்றனர். நிமித்திகர் அவனிடம் மூதேவி கூடியிருக்கலாம் என்றனர். “அக்கை நம்மை எப்போதும் நிழலுருவாகத் தொடர்பவள். நின்று சோர்ந்தால் நம்மை வந்து பற்றிக்கொள்பவள். கடமை, கல்வி, கலை, கனவு, காமம் என்னும் ஐந்தும் அவளிடமிருந்து நம்மைக் காக்கும் அமுதுகள். வஞ்சம், சினம் என்னும் இரண்டும் அவளிடமிருந்து நம்மை அகற்றும் நஞ்சுகள். ஏழுமில்லாத நிலை ஒருகணம் அமைந்தாலும் அவளுக்கு அடிமையாகிவிடுவோம்.”
அவன் மென்மையான இனிய புதைசேற்றில் மூழ்கிக்கொண்டிருப்பதை அவனே அறிந்திருந்தான். எப்போதேனும் அத்தன்னுணர்வு வலுவாக எழும்போது உளம்பதறி எழுந்து நிற்பான். கதவைத்திறந்து வெளியே ஓடவேண்டும் என துடிப்பான். ஏவலரை அழைத்து புதிய ஆடைகள் கொண்டுவர ஆணையிடுவான். சமையப்பெண்டிரிடம் அணிசெய்ய பணிப்பான். முழுதணிக்கோலத்தில் எவரும் எதிர்பாராதபடி அவைக்கு வருவான். அரியணையில் அமர்ந்து அத்தனை செய்திகளும் உடனே தன் முன் வந்தாகவேண்டும் என கூச்சலிடுவான்.
அமைச்சர்களும் படைத்தலைவர்களும் வெந்நீர் விழுந்த எறும்புப்புற்று என தவித்து அங்குமிங்கும் ஓடுவார்கள். ஓலைகளும் தோற்சுருள்களும் வந்து அவன்முன் நிறையும். ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஆணைகள் பிறப்பிக்கப்படும். மன்றாட்டுடன் அன்று வந்தவர்கள் அனைவரும் உசாவப்படுவார்கள். அன்று மாலை அறைமீள்கையில் உள்ளம் நிறைந்து உடல்தளர்ந்திருக்கும். “ஆம், மீண்டுவிட்டேன். மீட்சிதான் இது. மீள்வது இத்தனை எளிதுதான்” என்று சொல்லிக்கொள்வான்.
ஆனால் மறுநாள் காலையில் கைகால்கள் இனிய குடைச்சலுடன் சோர்ந்துகிடக்கும். கண்கள் ஒளியை நோக்க உளைச்சல்கொள்ளும். உள்ளம் மிகப் பெரிய புழு என தன்னுடலுக்குள் தானே அசைந்தபடி அங்கேயே கிடக்கும். உச்சிப்பொழுதுக்குப் பின்னரே எழுந்து உணவுண்பான். மேலும் வெறியுடன் தமக்கை அவனை வந்து அணைத்து தன் இருண்ட குழிக்குள் கொண்டுசென்றிருப்பாள்.
ஆனால் அது அப்படி முடியாது என்றும் ஏதோ ஒன்று நிகழும் என்றும் அவன் எதிர்பார்த்திருந்தான். “ஒருவேளை அவர் தன் ஆழம் தயங்கும் எதையோ செய்யவிருக்கலாம். அத்திசை நோக்கி அவர் செல்வதை அவருள் வாழும் தெய்வங்கள் பின்னிழுக்கின்றன. ஆகவேதான் இந்தச் செயலின்மை” என்றார் நிமித்திகர். “என்ன ஆகும்?” என்று சுநீதர் கேட்டார். “தயங்கப்பட்ட நன்மை செய்யப்படுவதில்லை. தயங்கப்பட்ட தீமை தவிர்க்கப்பட்டதே இல்லை” என்று நிமித்திகர் சொன்னார்.