இந்திய வரைபடத்தின் இதிகாசம்

 

kadaisi

இனிய ஜெயம்,

இத்துடன் மூன்று நெருங்கிய நண்பர்கள் கேட்டு விட்டார்கள். உங்களுக்கு ஒண்ணுமே பண்ணாதா? அடப்பாவிகளா என்றிருந்தது. இந்திய நிலப்பரப்பில் எங்கெங்கோ சுற்றுகிறேன். ஆனால் பெரும்பாலும் நான் கடையில் கிடைக்கும் பாட்டில் குடிநீருக்காக காத்திருப்பதில்லை அங்கே அந்த நிலத்தில் குடிநீருக்கான பயன்பாட்டில் என்ன நீர் கிடைக்கிறதோ அதையே அருந்துவேன். பெரும்பாலான நதி நீர்களை, கடந்த பயணத்து சௌபர்ணிகா நதி நீர் வரை, அதில் குளிக்கையில் மூழ்கி எழும் சாக்கில் ருசி பார்த்து விடுவேன். கிடைத்த இடத்தில், கிடைத்த உணவை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி விடுவேன். நண்பர் சொன்னார் குடிநீர் விஷயத்தில் மட்டுமாவது ஜாக்கிரதையாக இருங்கள் என. முயற்சிக்க வேண்டும்.

மேலும் பல்லாண்டுகளாக என் உடலை நான் ”எனக்காக ”இவ்விதம் பழக்கி இருக்கிறேன். இது சொப்லாங்கி உடல். இரண்டு நாள் ஒரு சிறிய சொகுசை அதற்கு அளித்து விட்டால். மூன்றாம் நாள் அந்த சொகுசிலிருந்து இந்த உடலை விடுவிப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம். பசித்து உணவு, [பற்களின் போதாமையால் எந்த உணவையும் நன்கு வாய்க்குள் கூழான பின்பே உள்ளே அனுப்ப வேண்டும் இல்லையேல் செரிமான கோளாறு வரும் ] , வாத்துக்கால் போதும் என்று சொல்லும் வரை நடை, [சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து கிலோமீட்டர் நடக்காத நாளொன்று எனக்கில்லை ] கிடைத்த இடத்தில் எந்த வசதியும் உடலுக்கு அளிக்காத இடம் எனினும் உறக்கம்.

இதுதான் இதுவரை என்னை இந்த உடலை தாக்குப்பிடித்து இருத்தி வைத்திருக்கிறது. இன்னும் சில வருடங்கள் தாக்குப்பிடிப்பேன் என நினைக்கிறேன். மற்றொரு நண்பர் தமாஷாக சொன்னார் ”அலெக்சாண்டாரே இந்தியா வந்து கழிச்சல்ல போய்ட்டாரு நீ இன்னமும் லாந்திக்கிட்டு கிடக்கியே” என்றார். விதிதான் வேறென்ன. கடந்த மாதம் எதிரில் இருந்த மரவாடி நில கேஸ் முடிந்து ,ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்தது. அனைத்தையும் இடித்து முடித்து பார்த்தால் பின்னால் மூன்று கல்லறை. ஆயிரத்து எண்ணூற்று என்பதில் , இங்கு பரவிய காய்ச்சல் ஒன்றினில் பலியான வெள்ளைக்காரர் குடும்பம். முதல் கணம் கண்டதும் விவரிக்க இயலா துயரம் உள்ளே எழுந்தது.

ramanan
ரமணன்

ஜான் கே எனும் எழுத்தாளர் ஒரு சிறு குறிப்பை அடிப்படையாக கொண்டு இந்தியா வந்து தேடி ,நாக்பூர் அருகே ஹன்காட் எனும் சிற்றூரில் முகமதியர்கள் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டிருந்த வில்லியம் லாம்ப்டன் கல்லறையை கண்டு பிடிக்கிறார். வில்லியம் லாம்ப்டன் உண்மையாகவே இந்தியாவை நூறடி நூறடியாக அளந்து ட்ரிக்நாமன்றி முறையில் முதல் முழுமையான பிழையற்ற இந்திய வரைபடத்துக்கான சர்வேயை செய்தவர். லாம்ப்டன் பதின்வயதில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து , அன்றைய அமெரிக்க பிரிட்டன் போரில் பங்கு கொண்டு ,போர் கைதியாக அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகள் சிறையில் கழிக்கிறார். அமைதி ஒப்பந்தத்துக்குப் பிறகு விடுதலை அடைந்து இன்றைய கனடாவின் பகுதியாக இருக்கும் நியூ இங்கிலாந்து நிலத்தில் சர்வேயர் பணிக்கு நியமனம் பெறுகிறார்.

ஆயிரத்து எண்ணூறுகளை எட்டப்போகும் நூற்றாண்டு. பூமி உருண்டை என அறியப்பட்டு, ஒவ்வொரு நிலமும் எங்கெங்கு அமைந்திருக்கிறது என அறிய கற்பனை அட்ச ரேகை தீர்க்க ரேகை கோடுகள் , வானில் விண் மீன்களின் இருப்பு இரண்டையும் கொண்டு அந்தந்த நாட்டின் சர்வேயர் இடையே அறிவார்ந்த உரையாடலும் தேட்டமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம். இந்த இயலின் மேதையாக இந்த இயலின் அறிஞர்களால் அன்று மதிக்கப்பட்டவர் பிரான்ஸை சேர்ந்த வில்லியம் ரே. அவரை அவர் அளித்த வகைமைகளை கல்வியாகக் கொண்டு ,இந்த இயலில் தனது ஈடுபாட்டை வளர்த்துக் கொள்கிறார் லாம்ப்டன். பணியில் இருக்கும் லாம்ப்டனுக்கு இந்தியாவுக்கு திப்புவுக்கு எதிரான போரில் இருக்கும் ஆர்தர் வெஸ்லிக்கு உதவியாளராக செல்லும் பணி வழங்கப் படுகிறது. லாம்ப்டனின் திறமையும் .வேட்கையையும் அறிந்த வெஸ்லி கல்கத்தா தலைமை அகத்துக்கு கடிதம் எழுதி [ எங்கெங்கே எவ்வளவு வரி வசூல் செய்யலாம் என வசதி எனும் அடிப்படையில் ] லாம்ப்டன் இந்திய சர்வே செய்ய பரிந்துரை செய்கிறார். முதல்கட்டமாக சென்னை ராஜதானியை அடிப்படையாகக் கொண்ட தென் இந்தியாவை அளக்கும் பனி லாம்ப்டனுக்கு வழங்கப்படுகிறது. ஆயிரத்து எண்ணூற்று இரண்டில் துவங்கிய பணி , ஆயிரத்து எண்ணூற்று அறுபத்து இரண்டில் இங்கிலாந்தில் மேப் தயாரிக்கும் நிறுவனமான ஜான் வாக்கர் நிறுவனம் தயாரித்து அளிக்கும் முதல் இந்திய மேப் வெளியாகும்போது நிறைகிறது.

suvey

இந்திய மேப் தயாராகும் இந்த வரலாற்று நிகழ்வை ஒரு கதையாக சொல்கிறது ரமணன் எழுதி கவிதா வெளியீடாக ஐந்து வருடங்கள் முன்பு வெளியான கடைசிக் கோடு கதை. பொது வாசகர்களுக்காக எழுதப்பட்ட கதை. இந்தப் பணிக்கு தேவையான கருவி தியோடோ லைட் அன்று அது உலகிலேயே நான்குதான் இருக்கிறது. அதில் ஒன்றினை இங்கிலாந்திலிருந்து வரவழைக்கிறார் லாம்ப்டன். கருவி வரும் கப்பல் பிரெஞ்சு காரர்களால் சிறைபிடிக்கப் படுகிறது. அதன் சரக்குக்கள் சோதனையில் இக்கருவி வில்லியம் ரேவின் எப்படி பயன்படுத்துவது எனும் குறிப்புடன் காணக் கிடைக்க, ரே எனும் அந்த நாட்டின் மேதையை மதிக்கும் அந்த நாட்டின் அரசு ,அரசியல் காரணங்களுக்கு வெளியே அந்த கருவியை பத்திரமாக லாம்ப்டனுக்கு அனுப்புகிறது.

வேலையாட்கள் பிழையால் அரை டன் எடை கொண்ட அக்கருவி தஞ்சை கோவில் முதல் தள உச்சியில் இருந்து விழுந்து உடைந்து விடுகிறது. நஷ்டத்தை லாம்ப்டன் தானே ஏற்றுக்கொண்டு அரசுக்கு பிழையீடு அளிக்கிறார். திருச்சி பொன்மலை கருமார்களை கொண்டு கருவியை மீண்டும் சீரமைக்கிறார். அவர்க்கு பதவி உயர்வு கிடைக்கிறது. இந்தியா முழுவதையும் துல்லியமாக சர்வே எடுக்கும் பணி அவருக்கு கிடைக்கிறது. தென்னிந்தியாவை சேர்ந்த பெண் ஒருவரை மணந்து கொள்கிறார்.

William_Lambton
லாம்ப்டன்

இந்த தியோடோ லைட் கருவியை சிறிய அளவாக மாற்ற பெண்டுலத்தை கண்டுபிடித்த ஹென்றி கேட்டர் இவருடன் இணைந்து கொள்கிறார். கனி வளங்களை கண்டுபிடிக்கும் நிபுணர் ,மருத்துவர் ,வேலையாட்கள் என நாற்பது பேருடன் இருபது வருடங்கள் பணி புரிந்து ,பணியின் மத்தியில் நாக்பூர் அருகே ஆயிரத்து எண்ணூற்று இருபத்து மூன்றில் ஹான்காட் எனும் கிராமத்தில் [இன்னும் அங்கே ஆங்கிலேயர் செல்வாக்கு நுழையாத எல்லை] நோய்வாய்ப்பட்டு கவனிப்பாரற்று இறக்கிறார்.

அவரது பணி அவரது உதவியாளர் எவரெஸ்டுக்கு அளிக்கப்படுகிறது. எவரெஸ்டின் சீடர் ஆண்ட்ரு ஸ்காட் வாக். எவரெஸ்டுடன் முடிந்த சர்வே பணியின் மேஜைப் பணிகளை ராதாநாத் சிக்கந்தர் என்பவருடன் இணைந்து பூர்த்தி செய்கிறார். அந்த இருத்திக்கட்ட பணியில் டார்ஜிலிங்கில் டைகர் ஹில் இல் இருந்து கணக்கிடப்பட்டு கண்டு பிடிக்க பட்டதே எக்ஸ் இன் சிகர உயரம். இந்த சர்வே பணியின் தலைவரும், அதை கண்டுபிடத்தவருமான ஆண்ட்ரு ஸ்காட் வாக்குக்கே அதற்க்கு பெயரிடும் உரிமை உண்டு என பிரிட்டன் ராயல் சொசைட்டி தெரிவிக்க , ஆண்ட்ரு அந்த சிகரத்துக்கு தனது குருவின் பெயரை இடுகிறார் . எவரெஸ்ட் .

பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள், வண்ணமயமான காட்சிகள். தனது தியோ லைட் கருவி கொண்டு நோக்கும் எல்லைக்குள் இடைஞ்சலாக ஏதோ தூண் நீட்டிக்கொண்டிருக்க அதை உடைக்க ஆணை இடுகிறார் எவரெஸ்ட். உடைக்கிறார்கள். கலவரம் வெடிக்கிறது. அது அவ்ரங்கசீப் நிறுவிய வெற்றி ஸ்தூபி. பிறகென்ன அதை புனர்நிர்மாணம் செய்து தந்த பிறகே எவரெஸ்ட் குழுவினர் விடுவிக்கப் படுகிறார்கள். இருபதாண்டுகள் நீண்ட இப் பணியில் ,இக் குழுவின் பணியாளர்கள் இதன் மூலவர் லாம்ப்டன் உட்பட பலியானோர் அறுபது பேர். லாம்ப்டன், எவர்ஸ்ட் எழுதிய அத்தனை குறிப்புகளும், இன்று மிசௌரி இந்திய சர்வே அலுவலகத்திலும் தியோ லைட் கருவியும் இன்று டேரா டூன் அருங்காட்சியகத்திலும் இருப்பதாக அந்த கதை சொல்கிறது.

GeorgeEverest
ஜார்ஜ் எவெரெஸ்ட்

இக் கதை எழுத உதவிய நூல்களும் குறிப்புகளும் நூலடைவில் இணைக்கப்பட்டிருக்கிறது. இப் பனியின் லாம்ப்டன், எவரெஸ்ட் இரண்டு நாயகர்களும் பசி நோக்காத ,மெய்வருத்தம் பாராத கர்ம வீரர்களாகவே கதையில் வருகிறார்கள். பொது வாசகரை நோக்கி எழுதப்பட்ட கதை ஆகையால் , இந்திய நிலப்பரப்பின் லாம்ப்டன் கடந்து சென்ற அன்றைய நிலக்காட்சி, அரசியல் சமூக சித்திரம், எதுவும் விரிவாக அன்றி செயல்பாட்டு இடர்களை மட்டும் சுட்டி செல்கிறது கதை.

ஒரு வாசகனாக கையில் கிடைக்கும் எதையும் வாசித்து தள்ளும் பலபட்டறை நான். ஆனால் ரசிகனாக ஆகசிறந்தவற்றை மட்டுமே நண்பர்களுக்கு பரிந்துரைப்பேன். இந்த கடைசி கோடு தான் எடுத்துக்கொண்ட கருப்பொருள் அடிப்படையில் [இந்திய வரைபடம் உருவான வரலாறு] தனித்துவமான ஒன்று. இந்த எல்லையில் இதுதான் தமிழில் முதல் நூல். தீவிர தளத்தில் வேறு நூல்களும் ,மொழிபெயர்ப்புகளும் வரும் வரையில் இந்த எல்லையில் இதுவே ஒரே நூல்.

இந்தியாவை அடி அடியாக அளந்து பார்த்த ஆட்கள் ,இங்கே கிடந்தது மரித்திருக்கிறார்கள் , எனக்கென்ன இங்கே வாழ்வதும் .மரிப்பதும் ,காட்டிலும் இனிய வாழ்வு வேறு இருக்கிறதா என்ன?

கடலூர் சீனு

 

https://www.youtube.com/watch?v=0Cgrt0_SvgI

இனிய ஜெயம்,

இந்த கடைசி கோடு நூல் குறித்து இங்கே கடலூர் நண்பர்கள் வசம் பேசிக்கொண்டு இருந்தேன். ஒரு நண்பர் இது பத்தி முன்னமே எஸ்ரா எழுதிட்டாரே.என்றார்.

அவரது மறுப்பு சந்தோசம் அளித்து . ஒரு போதும் உங்களுக்கான கடிதங்களை நான் பிரசுர நோக்கம் கொண்டு எழுதுவதில்லை. நான் எழுதுகிறேன்.அதை நீங்கள் வாசிக்கிறீர்கள் அந்த தொடர்பு தரும் மகிழ்வுக்காகவே எழுதுகிறேன். ஆனால் கடைசிக்கோடு பதிவு பிரசுரம் ஆனால் நிச்சயம் இப்படி ஒரு பதிவும் வரும்.

நண்பருக்கு பதிலளித்தேன் ஆம். எஸ்ரா எழுதி இருக்கிறார். இந்த சர்வே குறித்து ஜான் கே எழுதிய தி கிரேட் ஆர்க் நூல் குறித்து விகடனில் அறிமுகம் செய்திருக்கிறார். சென்னையில் துவங்கப்பட்ட சர்வே பணிகள் குறித்து யாமம் நாவலில் எழுதி இருக்கிறார். நான் சொன்னது கடைசிக்கோட்டின் கருப்பொருள் இந்திய வரைபடம் உருவான வரலாறு, யாமம் நாவலின் கரு அத்தர் குறித்தது. நாவலின் மையம் ”இது ”அல்ல.

அந்த க்ரேட் ஆர்க் மொழிபெயர்க்கப்பட்டால் அது தீவிர தளத்தில் இந்த இயலின் முதல் நூலாக இருக்கும். அல்லது இந்த கருப்பொருளை வைத்து தீவிர இலக்கியத்தில் ஒரு முழுமையான புதினம் வந்தால் ,அதற்கு முன்பாக ரமணனின் இந்த கதை பொது வாசக தளம் எனினும் முதல் நூலாக இருக்கும்.

கடைசி கோடு கதையின் லாம்ப்டன் அனைவரையும் அணைத்து வேலை வாங்குபவராக இருக்கிறார். தென் இந்திய பெண்ணை மணம் செய்து கொள்கிறார். பெரும்பாலும் பிரென்ச் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுவையில் வசிப்பதை விரும்புகிறார். தனது பன்னிரண்டு வயது மகனை தனது பணிகளுக்கு ஒத்தாசையாக அழைத்து செல்கிறார். உடல்நலம் பற்றி கவலை இன்றி பணிசெய்தவாரே நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்.

எவரெஸ்ட் நேரெதிர் குணம் தியோடோலைட் கருவியை இழுக்கும் மட்டக்குதிரை மெதுவாக நடைபோடுவது கண்டு பொறுக்காமல் அதை சுட்டு கொள்ளுகிறார். கிருஷ்ணா நதிக்கரையில் அந்தக் கருவி இருக்கும் வண்டியை யானையைக் கொண்டு இழுத்து செல்கிறார். மூர்க்கமாக அந்த வண்டியுடன் யானையைக் கொண்டு கிருஷ்ணா நதியை கடக்க முனைகிறார். மழையோ வெயிலோ முன்னேறிக் கொண்டே இருக்கிறார். கலக்கம் செய்யும் வேலையாட்களை சுடுகிறார். தான் நோய் வாய்ப்படும்போது விடுப்பு கொண்டு சொந்த நிலம் செல்கிறார். பூரண நலத்துடன் திரும்பி அதே மூர்க்கத்துடன் இந்திய நிலத்தை அளக்கிறார்.

ஒரு தீவிர இலக்கிய கர்த்தா கையாள அனைத்து சவால்களையும் தன்னுள் கொண்டுள்ள களம் . பிற ஆங்கிலேயர்கள் எல்லாம் ”பயன்பாட்டுக்கு ” இங்கே பெண்களை சேர்த்துக்கொள்ளும் போது லாம்ப்டன் திருமணம் செய்து கொள்கிறார்.

அன்றைய இந்திய சமூக சூழல், அரசியல், உலக நாடுகளின் வேட்கைகள் , முகிழ்த்து வரும் அறிவியல், இந்த சர்வேக்கு பெரிதும் துணை செய்யும் லாகிருதம் கணக்குகளின் வளர்ச்சி, இதனை பெரிய கேன்வாஸில் வரைந்து பார்க்க மானுட நாடகம் என தீவிர இலக்கியகர்த்தாவுக்கான தனித்துவமான களம் ஒன்று இன்னும் இங்கே தொடப்படாமலே இருக்கிறது என்றேன்.

கடலூர் சீனு

ரமணன் இணையதளம்

ரமணன் நூல்கள்

 

முந்தைய கட்டுரைஅறம் -ராம்குமார்
அடுத்த கட்டுரைதிரும்புதல்