அன்புள்ள ஜெ,
உங்கள் பதில் பார்த்தேன். [மேற்கோள்திரிபு,அம்பேத்கர், அரவிந்தன் நீலகண்டன் ]
// அந்த அம்சத்தை அவர் இந்துத்துவ அரசியலுக்கும் சாதகமானவர் என நீட்டிக்கொள்வதற்கான மேற்கோள்பயிற்சியே அரவிந்தனின் முதற்கட்டுரை. அதை மேற்கோள்களால் குகா மறுக்கையில் மேலும் மேற்கோள்களால் அதை நிறுவ மீண்டும் முயல்கிறது மேலதிகக் கட்டுரை. //
என்பது சரியல்ல. உண்மையில் அம்பேத்கர் இந்துத்துவ இணைப்பு என்பது வெறும் மேற்கோள்களுடன் நின்றுவிடுவதல்ல. அதற்கு விரிவான பின்னணி உண்டு. அதையும் அ.நீ தனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆரிய சமாஜம், இந்து மகாசபா, ஆர் எஸ் எஸ் ஆகிய இந்துத்துவ இயக்கங்களைச் சார்ந்தவர்களில் பலர் (உதா: ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், N.B.கரே என்கிற நாராயண் பாஸ்கர் கரே, பாலாசாகிப் தேவரஸ்) சாதிய ஒழிப்பு என்ற கொள்கை ரீதியாகவும் தனிப்பட்ட அளவிலும் அம்பேத்கருடன் நெருங்கிய நட்பு பூண்டவர்களாக இருந்தனர். ஆர்.எஸ்.எஸ், அம்பேத்கரிய இயக்கம் இரண்டும் நாகபுரி நகரையே மையம் கொண்டு வளர்ந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். வீர சாவர்க்கரின் சமுதாய சமத்துவ நடவடிக்கைகளைப் பாராட்டி அம்பேத்கர் ‘புத்தருக்கு ஒப்பான பெரியவர்’ என்று தனது ஜனதா பத்திரிகையில் அவரைக் குறித்து எழுதினார். அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவியதை இந்துத்துவ இயக்கங்கள் கண்டிக்கவில்லை, மாறாக வரவேற்றன. “அம்பேத்கர் இப்போது உறுதியாக இந்து அரவணைப்புக்குள் தாவியிருக்கிறார்’ என்று வீரசாவர்க்கர் எழுதினார். அம்பேத்கர், சாவர்க்கர் இருவரது அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாறுகளையும் எழுதியிருக்கும் தனஞ்சய் கீர் இந்துத்துவ சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர் தான். இருவரும் வாழும் காலத்திலேயே அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கான அனுமதியையும் பெற்றவர். இந்துத்துவ இயக்கங்களை (ஆர் எஸ் எஸ், இந்துமகாசபை) ராம்ராஜ்ய பரிஷத் போன்ற இந்து ‘சனாதனி’களின் கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வந்ததை அம்பேத்கர் கவனிக்க மறக்கவில்லை. எனவே, முன்னவற்றை இந்துமதத்திற்குள்ளேயே செயல்படும் சாதிய ஒழிப்பு, சமூக சீர்திருத்த அணியாகவே அவர் கருதினார். அந்த அணி வெற்றி பெறுமா என்பது குறித்துத் தான் அவரது சந்தேகங்கள் இருந்தனவே ஒழிய, அந்த அணியின் சமத்துவ கொள்கைகளைக் குறித்து அல்ல. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் தலித் சமுதாயத்தினர் எந்த பாகுபாடுகளுமின்றி அனைவருடனும் கலந்து பழகுவதையும் உணவுண்பதையும் அம்பேத்கர் ஏற்கனவே நேரில் கண்டு, அதைப் பாராட்டியுமிருந்தார்.
தமிழ்நாட்டின் தலித் கட்சிகளும் இயக்கங்களும் கடும் இந்துமத, இந்துத்துவ வெறுப்பை உமிழ்ந்து வருவது தெரியும். ஆனால், அம்பேத்கரிய சிந்தனைகளை நேரடியாகவ கற்றுணர்ந்த நாம்தேவ் தஷால், சாந்தாராம் நந்தகாவ்கர் போன்ற பிரபல மகாராஷ்டிர தலித் தலைவர்கள் ஆர் எஸ் எஸ் நிகச்சிகளில் கலந்து கொண்டு இந்துத்துவ அமைப்புகளுடன் உரையாடியும் வருகிறார்கள். இது ஏன் என்று யோசிக்க வேண்டும்.
இவை குறித்த பல தரவுகள் மராத்தியிலும் ஹிந்தியிலும் ஏற்கனவே எழுதப் பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இந்துத்துவ இயக்கங்கள் அவற்றை ஆங்கிலத்திலும் மற்ற இந்திய மொழிகளிலும் இன்னும் கொண்டுவரவில்லை. உண்மையில், மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் ரமேஷ் பதங்கே அவர்களது நூலை வாசித்து, பின்பு அவரை 2013ல் சந்தித்து உரையாடிய பின்பு தான் எனக்கே இது பற்றிய ஒரு முழுமையான புரிதல் ஏற்பட்டது. ‘ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர்’ என்ற கட்டுரையில் அது குறித்து எழுதியிருக்கிறேன் – http://www.tamilhindu.com/ 2013/12/rssambed/
உண்மையில், காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் 1991ல் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவிற்குப் பின்னர் தான் அவரைப் பெரிய அளவில் முன்னெடுக்கத் தொடங்கினர். ஆனால் இந்துத்துவ இயக்கங்கள் அதற்கும் முன்பிருந்தே அவரைத் தங்களது ஆதர்சங்களில் ஒன்றாக ஏற்றிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தின் முதல் வடிவத்திலேயே நாராயணகுருவுடன் சேர்த்து ‘பீமராவஸ்ச’என்று அவர் பெயர் இடம்பெற்று விட்டிருந்தது.
அன்புடன்,
ஜடாயு