‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52

51. குருதிக்கடல்

flowerசம்பவன் விழித்தெழுந்தபோது எங்கிருக்கிறான் என்பதை அறியாது ஒருகணம் திகைத்தான். புரண்டு கையூன்றியதும் அருகே ஒழிந்த ஈச்சம்பாயைக் கண்டு அனைத்தையும் உணர்ந்து எழுந்து நின்றான். “மேகரே… மேகரே” என்று அழைத்தான். மேகன் அஸ்வகனுடன் அப்பால் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அவன் எழுந்து அருகே வந்து “அதற்குள் விழித்துக்கொண்டுவிட்டீர்களா?” என்றான்.

“ஆசிரியர் எங்கே?” என்றான் சம்பவன். “இங்கே…” என்றபின் நோக்கிய மேகன் “இல்லை… சென்றுவிட்டார்… நாங்கள் வெளியேதான் பேசிக்கொண்டிருந்தோம்” என்றான். சம்பவன் ஒழிந்த பாயை சிலகணங்கள் பார்த்துவிட்டு “அவர் குரங்குகளுடன் சென்றிருப்பார்” என்றான். “காட்டுக்குள்ளா?” என்றான் மேகன். “அவருக்கு எதுவும் தடையல்ல…” என்றான் சம்பவன். வெளியே சென்று நிலவொளியில் இலைசுடர நின்ற காட்டை பார்த்தான். மெல்லிய ஏப்பம் வந்தது. திரும்பி மேகனிடம் “அந்த யவன மது இருக்கிறதா?” என்றான். “ஆம், கொண்டுவரவா?” அவன் ஆம் என தலையசைத்தான்.

மேகன் மதுக்குடுவை ஒரு கையிலும் குவளை மற்றொரு கையிலுமாக ஓடிவந்தான். அப்பால் அஸ்வகன் வெடித்துச் சிரித்து “அவனுக்கு மோகினிப்பீடை… ஆம், மோகினி” என்றான். மேகன் “நாலைந்து குவளை அருந்திவிட்டார். இத்தனை பொழுதுவரை ஒரே பேச்சு… திரும்பத் திரும்ப” என்றான். சம்பவன் அருந்திமுடித்து குவளையை மீண்டும் நீட்டினான். மூன்றுமுறை குடித்தபோது ஏப்பம் வந்து மூச்சில் மதுவின் எரியும் இன்மணம் நிறைந்தது. செல்க என அவன் மேகனுக்கு கைகாட்டினான். “தாங்கள் வேண்டுமென்றால் வேறு குடிலில் துயிலலாம். நல்ல மரவுரிப் படுக்கைகள் உள்ளன…” அவன் கையசைத்துவிட்டு காட்டை நோக்கி நடந்தான்.

“சம்பவரே…” என மேகன் பின்னால் வந்தான். “என்ன செய்கிறீர்கள்? உள்ளே செல்வது கழுவிலேற்றப்படும் குற்றம்.” அவன் செல்க என்று கையசைத்தபடி நடந்துகொண்டே இருந்தான். “சம்பவரே, வேண்டாம்…” அவன் திரும்பி நோக்கி “என்னிடமும் குரங்குகள் பேசுகின்றன” என்றான். நெஞ்சில் கைவைத்து “அஞ்சனையின் மைந்தனால் காக்கப்படுபவன்… எங்களை வெல்ல இப்புவியில் எவருமில்லை” என்றான். அவன் உடலில் மது மெல்ல பரவிக்கொண்டிருந்தது. “ஏன்?” என்று அவன் மேகனிடம் கேட்டான். “ஏன்?” என அவன் திரும்பிக்கேட்டான்.

“ஏனென்றால் நாங்கள் இப்புவியையே அள்ளி அளக்கும் ஆற்றல்கொண்டவர்கள். எண்ணிய எதையும் அடைபவர்கள். ஆனால் எதையும் எடுத்துக்கொள்பவர்கள் அல்ல.” அவன் சுட்டுவிரலைக் காட்டி “அஞ்சனையின் மைந்தன் அளித்தான். ராகவனுக்கு, அவன் துணைவி சீதைக்கு, விபீஷணனுக்கு, அங்கதனுக்கு… இப்புவியிலுள்ளோர் அனைவருக்கும். வானளாவ எழுபவன் எப்போதும் பணிந்திருந்தான். இங்கே…” அவனுக்கு சொற்கள் சிக்கவில்லை. கையால் காற்றைத் துழாவி “ஆம், இவர்…” என்றான். அவன் புன்னகைத்தான். “இவர் யார்? இவரைப்பற்றி நீ என்ன அறிவாய்?”

மேகன் தலையசைத்தான். சம்பவன் மந்தணம் சொல்லும் முகத்துடன் அவனை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்து “தனக்கென்று ஒன்றும் கோராதவனால்தான் அளவில்லாமல் கொடுக்க இயலும். அவன் கையில் விண்ணுருவன் உந்தியில் என உலகங்கள் ஊறிப்பெருகும்…” என்றான். தலையசைத்து அதை அவனே ஒப்புக்கொண்டு தனக்குள் என “ஆம்” என்றான். இன்னொருமுறை ஏப்பம் விட்டு “எங்கே மது?” என்றான். “முன்னரே நிறைய குடித்துவிட்டீர்கள், சம்பவரே” என்றான் மேகன். “வந்து படுங்கள்… துயில் தேவைப்படுகிறது உங்களுக்கு.” சம்பவன் “ஆம், துயிலவேண்டியதுதான். என் கால்கள் தளர்கின்றன” என்றபின் “நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?” என்றான்.

அவன் என்ன சொன்னான் என நினைவுகூர முடியாமல் மேகன் வெறுமனே நோக்கினான். “அந்த முட்டாள் ஏன் அப்படி நகைக்கிறான்? அறிவிலி” என்றபின் சம்பவன் “நான் என்ன சொன்னேன்? இவர் யார்? அதுதானே நீ கேட்டது? நான் சொல்லப்போவதில்லை. இவர் யார்? இவரைப் பார்த்தாலே தெரியாத மூடனிடம் என்னவென்று சொல்ல?” என்றான். அவன் நகைத்தான். கண்ணிமைகள் சரியத் தொடங்கின. சுட்டுவிரலை நீட்டி “இவர் உலகங்களை படைப்பவர். அஞ்சனையின் மைந்தருக்கு இளையவர். ஆம், உயிரையும் உடலையும் ஆத்மாவையும் அள்ளிச் சமைப்பவர். ஆயிரம்கோடி சுவைகளை ஆக்குபவர். பெருங்கருணையுடன் விளம்புபவர். அள்ளி ஊட்டி விழிகனிந்து நோக்கி நின்றிருப்பவர். அன்னைப்பேருருவர். ஆகவே அவர் கொல்லலாம்” என்றான். அவன் கூர்ந்து நோக்கி “என்ன செய்யலாம்?” என்றான்.

“கொல்லலாம்” என்றான் மேகன். “ஆம், கொல்லலாம்… உன்னையும் என்னையும் தலையிலடித்து பிளக்கலாம். நெஞ்சை உடைத்து குருதியள்ளி குடிக்கலாம்… இனிய செம்மதுவைப்போல குருதியை அள்ளி…” அவன் திரும்பி அஸ்வகனைப் பார்த்து “அந்த மூடனிடம் சிரித்தால் அவனை நான் கொல்வேன் என்று சொல்” என்றான். “வந்து படுங்கள், சம்பவரே” என்றான் மேகன். “நான் படுக்கமாட்டேன்… ஏனென்றால்…” என்ற சம்பவன் காட்டை சுட்டிக்காட்டி “அங்கே…” என்றான். சிலகணங்கள் அக்கை நீண்டு நிற்க காட்டை நோக்கி அசைவில்லாது நின்றபின் சிரித்தபடி திரும்பினான்.

“அங்கே அவர் தன் பல்லாயிரம் உருவுடன் இறப்பற்றவராக பெருகியிருக்கிறார். விண்கனியைக் கவ்வியவர். மலைகளைச் சுமந்தவர். ஆழிகளைக் கடந்தவர். அவர் அங்கிருக்கிறார்.” இரு விரல்களை கிள்ளிக்காட்டி “இத்தனை சிறிய அளவில்கூட. கருங்கால்வேங்கைப் பெருமரத்தில் சின்னஞ்சிறு மலர் எழுவது போல… குருதிநிற மலர்… அங்கே” என்றான். ‘செல்க’ என மேகனிடம் கைகாட்டிவிட்டு காட்டை நோக்கி சென்றான். “சம்பவரே…” என மேகன் அழைத்ததை அவன் கேட்டான். ஆனால் அது இறந்தகாலத்திலிருந்து நினைவில் எழுவதுபோலத் தோன்றியது.

நிறைய பேசிவிட்டோம் என அவன் உணர்ந்தான். ஆனால் என்ன பேசினோம்? எதை பேசியிருக்கமுடியும்? அடுமனையைப்பற்றித்தான். வேறென்ன? அடுமனையில் என்ன நிகழ்ந்தது? இன்று நான் சமைத்தேன். என் கையில் எழுந்தது உபாசனைக்குரிய என் தெய்வம். என்னை ஆள்வது. என்னுடன் மண்புகுந்து விண்ணிலெழுவது. நான் சமைத்த சுவைகள் மரங்களாக செடிகளாக கொடிகளாகச் செறிந்த காட்டில் மலர்களாகவும் புட்களாகவும் நிறைவது. ஆனால் அதற்கு ஏன் அஸ்வகன் சிரித்தான்? ஆசிரியரை நான் தேடிச்செல்கிறேன். ஆம். ஆசிரியரைத்தான்.

காட்டின் நுழைவுப்பாதையில் இரு வீரர்கள் வேல்களுடன் துயின்றனர். அவன் உள்ளே நுழைந்ததும் ர்ரீச் என்று ஒரு குரல் கேட்டது. ஒரு குட்டிக்குரங்கு அவனுக்குமேல் வந்து கிளையில் ஊசலாடி “நீயா?” என்றது. “ஆம், நீ இங்கிருக்கிறாயா?” அது ஒற்றைக்கையில் தொங்கி வாலை நீட்டி நுனிநெளித்தபடி “என் காடு இது. என் பெயர் அப்லுதன்… நீதான் என் காட்டுக்கு வந்திருக்கிறாய்” என்றது. சம்பவன் “ஆம்” என்றான். “வெல்லத்தை உண்டுவிட்டாயா?” அப்லுதன் விலாவைச் சொறிந்து இருமுறை சுழன்று ஒரு கிளையில் சென்று அமர்ந்து “நான் அதற்குப் பின்னர் நான்குமுறை அந்த அறைக்குள் சென்று அந்த நார்ப்பெட்டியில் இருந்து வெல்லத்தை எடுத்துக்கொண்டு வந்தேனே” என்றது.

அவன் நின்று “அடப்பாவி” என்று சிரித்தான். “அத்தனைபேரும் வெல்லம் உண்டார்கள். அதன் பின்னர்தான் நான் வாழைப்பழங்களை எடுக்கத் தொடங்கினேன்” என்றது அப்லுதன். அவன் சிரித்து “அங்கே எவருமில்லையா?” என்றான். “ஒருவன் துயின்றுகொண்டிருந்தான். என் மூத்தவர் இருவர் கலங்களை ஆட்டி ஓசை எழுப்பினர்.” சம்பவன் “ஏன்?” என்றான். அப்லுதன் “கலங்களின் ஓசைகேட்டால்தான் அவர்கள் நன்றாகத் துயில்கிறார்கள். எங்கள் கால்கள் பட்டு வேறுகலங்கள் புரண்டாலும் தெரிவதில்லை” என்றது.

அவன் “மற்றவர்களெல்லாம் எங்கே?” என்றான். “அத்தனை பேரும் மரச்சுரண்டலை நக்கினார்கள். சிறியவர்களிடம் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். முதியவர்கள் விழுந்துவிட்டார்கள். இளையவர்கள் உச்சிக்கிளைகளுக்குச் சென்று நிலவாடுகிறார்கள்” என்று சொன்ன அப்லுதன் கீழே வந்து அவனுக்கிணையாக புதர்கள்மேல் தாவியது.

அவன் “என்ன செய்வார்கள்?” என்றான். “கிளைகளில் தாவுவார்கள்.” சம்பவன் “அதை இங்கேயே செய்கிறார்களே?” என்றான். “உடல்புணர்ந்தபடி செய்வார்கள்… என் அக்காவைக்கூட நால்வர் தூக்கிச்சென்றுவிட்டார்கள். அவர்களில் மூவர் கீழே உதிர்ந்தனர்.” அவன் நடந்தபடி “நன்று” என்றான். அப்லுதன் தாவி கிளையில் ஏறி அவன் தலைக்குமேல் வந்தபடி “நான் பெரியவனாகும்போது நான்கு பெண்களை மேலே கொண்டுசெல்வேன்” என்றது. “ஏன் நான்கு?” அப்லுதன் தலைசரித்து கண்களைச் சிமிட்டி எண்ணிநோக்கியபின் “நான்கு கைகள்” என்றது. அவன் “வால்?” என்றான். அது அப்படியே அமர்ந்துவிட்டது. அவன் மேலும் செல்ல அது தலைக்குமேல் பாய்ந்து வந்து “வால் இல்லையேல் விழுந்துவிடுவேனே?” என்றது.

அவன் காற்றிலாத காட்டுக்குள் மரங்கள் அசைவற்று நிற்க நிலாநிழல்கள் ஆடுவதிலிருந்த விந்தையை அப்போதுதான் கண்டான். அக்கணமே அந்நிழல்களனைத்தும் உடல்களென்றாயின. மானுட உடல்களென ஏதும் அங்கிருக்கவில்லை. மானுடமில்லாத உடல்களும் இருக்கவில்லை. அனைவரும் இணைதழுவி உறுமியும் பிளிறியும் கூவியும் உடல்மயங்கினர். சிம்மத்தலைகொண்ட வியாக்ரர்கள், எருமைக்கொம்புகளுடன் மகிஷர்கள், பன்றிமூக்கும் செண்பக இலைக்காதுகளும் கொண்ட வராகர்கள், வெண்தந்தங்களும் சேம்பிலைக்காதுகளும் கொண்ட குஞ்சரர்கள். அவர்களுக்குமேல் குளம்போசையுடன் அஸ்வர்களும் குரகர்களும் பாய்ந்தனர். தழைந்த காதுகளுடன் அஜர்களும் திமில்பெருத்து எழுந்த ரிஷபர்களும் கருமயிர் சூழ்ந்த நீளுகிர் கைகளுடன் பாலுகர்களும் விழிதிருப்பும் திசையெல்லாம் நிறைந்திருந்தனர். அவர்களை நோக்கியபோது அவர்களின் குரலென்றும் விழிவிலக பெருகிச்சூழ்ந்த இசையொன்றின் துளியென்றும் செவிமயக்கியது அங்கு நிறைந்திருந்த ஓசை.

அவன் அப்பால் ஒருவன் தெளிநீர்ச்சுனையருகே குனிந்து அமர்ந்திருப்பதை கண்டான். அவன் பின்னுடலும் கால்களும் கரியபுரவியென்று தோன்றின. நீர் அருந்துபவன்போல குனிந்தான். நீருக்குள் வெண்புரவி ஒன்று தெரிந்தது. அவன் நீருக்குள் பாய்ந்து மூழ்கிய அக்கணம் நீருக்குள் இருந்து வெண்புரவி வெளியே பாய்ந்தது. நீரை உதறி உடல்சிலிர்த்தபோது அது மானுடமுகம் கொண்டது. நீருள் பாய்ந்தவனின் அதேமுகம் வெண்ணிறத்தில். நீருக்குள் இருந்து கரும்புரவியன் வெளியே பாய்ந்தபோது வெண்புரவியன் நீருக்குள் பாய்ந்தான். பின் இருவரும் முகமொடு முகம் நோக்கி மூக்கு நுனி தொட்டு பிடரிமயிர்சிலிர்க்க அசையாது நின்றனர். அவர்களின் உடல்தசைகள் சிலிர்த்தன. மூச்சுபட்டு நீர் அலைவளைந்தது.

“வந்ததுமுதல் இதையே செய்கிறான்” என்றது அப்லுதன். சம்பவன் அவனை நோக்கியபடி நின்று “அவனை எங்கோ கண்டிருக்கிறேன்” என்றான். “கரிய குதிரையுடன் வந்தவன்” என்றது அப்லுதன். “இங்கே வேறெவரேனும் வந்ததை நீ பார்த்தாயா? பேருருவர். உங்களைப் போன்றவர்.” அப்லுதன் கண்கள் சிமிட்டி மின்ன தலைசரித்தபின் உவகையுடன் துள்ளி எழுந்து சுழன்றமைந்து “பெரியவர்?” என்றது. “ஆம்” என்றான் சம்பவன். “மிகப் பெரியவர்?” சம்பவன் “ஆம், அவரேதான்” என்றான். “அவரை நான் கூட்டிச்சென்றேன், காட்டுக்குள்.” சம்பவன் “எங்கே?” என்றான். “அங்கே, அங்கே ஓர் இடத்திற்கு…”

“வா” என்றபடி அப்லுதன் முன்னால் பாய்ந்துசெல்ல அவன் தொடர்ந்து ஓடினான். காட்டுக்குள் ஒளியின் அலைகள் கண்கூசச் செய்தன. “அங்கே” என்று அப்லுதன் சுட்டிக்காட்டியது. அங்கே ஒரு பெரிய குடிலுக்கு முன்னாலிருந்த முற்றத்தில் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. உணவுக்குடுவைகளும் மதுக்கலங்களும் சிதறிக்கிடந்தன. பாம்புக்கொத்துபோல பெண்ணுடல்கள் நெளிய உள்ளே கீசகனின் உடல் தெரிந்தது. அப்பால் இருவர் தூபக்கலத்தில் அனலிட்டு புகையை விசிறிக்கொண்டிருந்தனர். “அவர் இங்குவரை வந்தார். என்னிடம் செல்க என்றார். நான் சென்றுவிட்டேன்” என்றது அப்லுதன்.

சில கணங்களுக்குள் அந்தக் காமக்குமிழிகளுக்கு விழிசலித்தது. காமம் என்பது பிறிதொன்றை எய்த மானுடன் உடலால் செய்யும் ஒரு வீண்முயற்சி போலும். வழுக்கில் மேலேறத் தவிக்கும் புழுவென நெளிந்து தவித்து துவண்டு எழுந்து தன் உடலின் அத்தனை குறைவுகளையும் அப்போது அவன் உணர்கிறான். உடலென்றிருப்பதன் தவிர்க்கமுடியாத குறைபாட்டை. உடலை உதறி உதறி எழுந்தமைதல். உடலினூடாக உடலை கடத்தலாகுமா? உடல் அல்லாத ஒன்றை உடலால் அறியலாகுமா? வெறுந்தவிப்புதான் இது. தவிப்பின் உச்சியில் தவிப்பு அறுபட்டு உதிர்வதன் வெறுமையின் இன்பம் மட்டுமே. எனில் உடலில்லாமைகள் உடல்கொண்டு வந்து இங்கு அறிவது எதை?

மூச்சுக்களும் வியர்வை மிளிர்வுகளும் கூந்தல்கலைவுகளும் விழிசொக்கும் அரைத்துயில்களுமாக விலகிய பெண்களின் நடுவே எழுந்து நின்ற கீசகன் தன் பெரிய உடலை மண்ணை உதிர்க்கும் களிறு என உலுக்கிக் கொண்டான். தோள்தசைகள் புடைக்க இரு கைகளையும் விரித்து வெட்டவெளியில் எதையோ அள்ள விழைபவன்போல நின்றான். அவன் நிழல் சரிந்து விழுந்து கைவிரித்ததை ஓரக்கண்ணால் திரும்பிப்பார்த்தான். திடுக்கிட்டு விலகி பின்னர் சிலகணங்கள் நின்று வெளியேறி புதர்களினூடாக ஊடுருவிச்சென்றான்.

flowerகுடில்களின் முற்றத்தில் புகைக்கப்பட்ட தூபக்கலங்களில் எல்லாம் அகிபீனா கலந்திருந்தார்கள் என்று முக்தனுக்குத் தோன்றியது. அவன் உடல் இனிய தினவொன்றால் நிறைந்திருந்தது. எண்ணிய சொல் சொட்டாமல் சித்தமுனையில் துளித்து ஒளிர்ந்து அப்படியே நின்றிருந்தது. அதை உணர்ந்ததுமே ‘அழகு’ என்று சொட்டியது. எவர் என்றது சித்தம். ‘இலைகள்’ என பக்கவாட்டில் விரிந்தது. ‘காகங்கள்’ என பின்னோக்கிச் சென்றது. ‘முகம்’ என முன்னோக்கி எதிலோ சென்று முட்டிக்கொண்டது. ‘என்ன இது?’ என பிரிந்து நின்று வியந்துகொண்டது. ‘ஆம்’ என மீண்டும் விலகி நின்று ஒப்புக்கொண்டது. அப்பால் ஒரு சொல்லோடை ‘இனி’ என ஓடிக்கொண்டிருந்தது.

மின்னலில் இலைகள் பளபளத்து அசைந்தன. நூற்றுக்கணக்கான மின்மினிகள் ஒளிசூடி இலைகளுக்குள் பறந்தன. மிகப் பெரியவை. அவன் அதை உணர்ந்ததும் கூர்ந்து நோக்கினான். அவை இரட்டைமின் கொண்டிருந்தன. இரண்டு மின்மினிகளின் இணைவுடல். செஞ்சிறகுகள் படபடக்க சென்றன பட்டாம்பூச்சிகள். அவற்றின் சிறகுகள் இருளுக்குள் அருமணி பதிக்கப்பட்ட செவிக்குழைகள் என மின்கொண்டிருந்தன. பொன்வண்டுகள், குருதிப்பூச்சிகள். மலர்களில் அமர்ந்தும் எழுந்தும் சுழன்ற தேனீக்களின் வெள்ளிச்சிறகுகளில் நிலவொளி.

இரவில் இத்தனை பூச்சிகளா? இது காடல்ல. இக்காடு வேறெங்கோ உள்ளது. இது அக்காட்டில் வாழும் உயிர்களின் கனவுக்காடு. அவை அக்காட்டில் இப்போது துயின்றுகொண்டிருக்கின்றன. அங்கு விழித்திருப்பவை மட்டுமே இப்போது இங்கு துயின்றுகொண்டிருக்கக்கூடும். யார் சொன்ன வரி இது? இது ஏதோ சூதர்பாடலில் கேட்டது. இக்காட்டின் ஒவ்வொரு மரபும் முன்பு ஏதேனும் ஒரு கவிஞனின் சொல்லில் இருந்திருக்கும். இவை ஒவ்வொன்றும் சொல்லில் இருந்து சிறகு கொண்டெழுந்தவை. சொல்லில் இவற்றை சந்திப்பது மிக எளிது. சேற்றுப்பாறைப்பரப்பில் படிந்த பறவைச்சிறகுக் கற்தடங்கள் அவை. பறப்பவை எனத் தோன்றினாலும் காலத்தில் அழுந்த நிலைத்தவை. இவை உயிர்கொண்டவை. சொல்லில் வாழ்பவை உயிர்கொண்டால் முதலில் அச்சொல்லையே உடைத்தெழுகின்றன. கூட்டை உடைக்கும் திறனே புழுவின் சிறகென்றாகிறது. இவை பறக்கின்றன. விழியிமைகள். பேசும் உதடுகள். கைமுத்திரைகள். சிலிர்ப்புகள், மெய்ப்புகள், விதிர்ப்புகள். கூசிச்சுருங்கி விரிந்து எழுகையில் உடலறிகிறது தான் பிறிதொன்று என. எரிந்தழிவதற்கான விருப்பில்லாத உயிர்ப்பொருள் இல்லை.

அவன் நிழல்குவையெனச் செறிந்த இலையடர்வுக்கு அப்பால் சென்றவனைக் கண்டு அசைவழிந்து நின்றான். நன்கறிந்தவன் என அவன் நிழலுருத் தோற்றமே சொன்னது. வெண்ணொளியில் எழுந்தபோது முற்றிலும் அறியாதவன் என்றிருந்தான். நாணிழுத்த வில்லென கரிய சிற்றுடல். கூரிய மீசை. தோளில் பரந்திருந்த காகச்சிறகுக் குழலில் ஓரிரு நரைக்கற்றைகள். இறுகிய சிறுதோள்களிலிருந்து இழிந்த கருநாகக் கைகள். அவன் முக்தனை காணவில்லை, அங்குள்ள எதையுமே நோக்கவில்லை. விட்டில் என விழுந்த மரங்கள் மேலும் சிறு பாறைகள் மேலும் இயல்பாக தொற்றிச் சென்றான்.

அவனைத் தொடர்ந்து சென்ற முக்தன் தொலைவில் வண்ண ஆடையின் அசைவைக் கண்டு நின்றான். உத்தரை இரு கைகளையும் விரித்தபோது சிறகு அகல ஒற்றைக்காலில் நிற்கும் செங்கால்சிறுநாரை எனத் தோன்றினாள். அவனை அவள் முன்பு அறிந்திருந்தாள். அவனுக்காகக் காத்திருந்து அவன் காலடியோசை கேட்டு எழுந்து வந்திருந்தாள். அப்பால் அவளுடைய குடில்முற்றத்தில் விறலியரின் பாடல் அப்போதும் கேட்டுக்கொண்டிருந்தது. “பூமுள் எந்த நாகத்தின் பல்? பூவிதழ் என எழுந்தது எந்த அரவத்தின் படம்? புல்லியெனச் சிலிர்த்தது எந்தப் பாம்பின் நா?”

அவர்கள் அணுகி தழுவிக்கொண்டனர். ஒருகணம் ஒருவரை ஒருவர் உணர்ந்து அசைவற்று நின்றபின்னர் விலகி சுழன்று இணைந்து நடமிடத் தொடங்கினர். இரு புகைச்சுருள்கள் என, இரு பொன்வண்டுகள் என. அவர்களின் கால்கள் காற்றில் எழுந்தன. இலைநுனிகளை மிதித்தபடி வானில் மிதந்தனர். ஆடைகள் விலகிய இரு உடல்களும் ஒன்றைப்பிறிதொன்றென நிரப்பின. நிழலுருமேல் கவிந்தது பருவுரு. பருவுருவை ஒக்கலில் வைத்துச் சுழன்றது நிழல். அவன் அவர்களுக்குக் கீழே ஓடினான். சிறகு கொண்டவர்களாக அவர்கள் செல்ல நிழல் அவன் முன் விழுந்து விழுந்து சென்றது.

நீரில் விழுந்து கடந்த அவன் நிழலைக் கண்டு கூச்சலிட்டான். அக்கணமே நீரில் பாய்ந்து அவளை அள்ளி எடுக்கமுயன்றான். அவள் வண்ணமீனென நீந்தி அகல துரத்தி கைசோர்ந்தான். மறுகரையில் நீர் சொட்ட எழுந்தபோது மூச்சிரைத்துக்கொண்டிருந்தான். சேற்றில் கால்சிக்க எழுந்து நின்றான். அங்கிருந்த அத்தனை மரங்களும் பூத்திருந்தன. மரங்களுக்கு நடுவே மான்கள் உடலெங்கும் பலநூறு விழிகள் இமைக்க பூக்கள் விரிந்த கவைக்கொம்புகளுடன் அவனை அறியாமல் நின்றிருந்தன. வெண்முயல்கள் துள்ளி புதர்களுக்குள் மறைந்து வால் துடித்தன. அவன் எங்கு செல்கிறோம் என்றறியாமல் சென்றுகொண்டிருந்தான். எதிர்பாராக் கணத்தில் முன்னில் அவளை கண்டான்.

சுபாஷிணி அவனைக் கண்டு திகைத்து பின் நெஞ்சில் கைவைத்து “நீங்களா? நான் அஞ்சிவிட்டேன்” என்றாள். “எங்கு செல்கிறாய்?” என்றான். “இளவரசியிடம்… என்னை அங்கிருக்கும்படி தேவி ஆணையிட்டார்” என்றாள் சுபாஷிணி. “அங்கே அவர் இல்லை” என்றான் முக்தன். “ஏன்?” என்றாள். “அவர் ஒரு கந்தர்வனுடன் செல்வதை கண்டேன்.” அவள் அஞ்சி “நாகமா?” என்றாள். “ஏன்?” என்றான். “நான் தேவியை நாகத்துடன் ஆடக்கண்டேன்.” அவன் “நீ திரும்பிச்செல்… அரசியின் அருகிலேயே இரு” என்றான். “இங்கு என்ன நிகழ்கிறது?” என்றாள். “ஒன்றும் நிகழவில்லை. இங்கே காடெங்கும் அகிபீனா புகை… மதுக்களியாட்டு. அனைவரும் துயின்றுகொண்டிருக்கிறார்கள்.” அவள் “நாம்?” என்றாள். “நாமும்தான்… இக்காடு நம் கனவு.” அவள் அவனை நோக்கி எண்ணி தயங்கி பின் “எவருடைய கனவு?” என்றாள்.

அவன் சிரித்து “நான் என் கனவில். நீ உன் கனவில். இக்காடு அனைவரின் கனவுகளையும் கலந்துவிடுகிறது” என்றான். அவள் பெருமூச்சுவிட்டாள். அவன் தன்னருகே பாம்பின் அசைவை உணர்ந்து திடுக்கிட்டு நோக்கி அது தன் கை என அறிந்தான். அது நீண்டு சென்று அவள் கையை பற்றியது. அவன் அதை இழுத்துக்கொள்ள எண்ணியது அதை அடையவில்லை. அவன் தொடுகையில் அவள் விழிகளில் மெல்லிய திகைப்பும் கூச்சமும் தோன்றின. ஆனால் அவள் உடல் குழைந்து அவன் கையை ஏற்றுக்கொண்டது. அவன் கை அவளை இழுத்து அவன் உடலுடன் சேர்த்துக்கொண்டது. அவள் நீள்மூச்சுடன் அவனுடன் ஒட்டிக்கொண்டாள்.

“நான் உங்களை அறிவேன்” என்று அவள் சொன்னாள். “எப்போது?” என்றான். “அறியேன்… மிகமிக இளமையிலிருந்தே. பிறந்ததுமுதல் எப்போதும் அறிந்திருந்தேன் என்று உணர்கிறேன்.” காமம் முன்பு அறிந்ததாக இருந்தது. அதிலிருந்த அத்தனை புதுமையும் மிகப் பழைமையானவை. தொன்மையான சடங்குகளைப்போல எவரும் எதையும் மாற்றிவிடமுடியாதவை. காமம் துணையளிப்பதில்லை, அது பெருந்தனிமையையே சூழப்பரப்புகிறது. காமத்தில் இருப்பது குருதி ஒன்றே. மண்ணைச் சூழ்ந்திருக்கிறது குருதி. கோடிக்கணக்கான உயிர்களின் உடல்களினூடாக பரவியிருக்கும் ஒற்றைப்பெருங்கடல். புயலெழுகிறது, அலைபுரள்கிறது, எல்லைகளில் அறைந்து வெறிக்கூச்சலிடுகிறது.

அவள் இதழ்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. சிறியமுலைக்கண்கள் விரைத்து எழுந்திருந்தன. “என் கால்கள் வியர்த்து வழுக்குகின்றன” என்றாள். தன் கைகளால் அவனை இறுக அணைத்துக்கொண்டாள். அவள் இதழ்களின் வெம்மையை நாவின் தவிப்பை மூச்சின் ஊன்மணத்தை நெஞ்சத்துடிப்பை குருதியின் ஓசையை அறிந்தான். அவள் குழல் நீண்டு பறந்துகொண்டிருந்தது. நெடுந்தொலைவுக்கு. “பொன்னிற நாகம், பொன்னென பூண் என எழுவது பெண்ணென எழுந்த நாகம்.” யாரோ எங்கோ முழவுமீட்டி பாடிக்கொண்டிருந்தார்கள். அவள் உடலுக்குள் இருந்து அப்பாடல் எழுந்தது. அவள் உடல் நீண்டு நாகமென்றாகியது. கைகளில் வழுக்கி விலகுவதுபோலவும் முழுதுடலாலும் அவனைக் கவ்வி இறுக்கிக்கொள்வதுபோலவும்.

அவன் அவளை உடலால் இறுக்கியபடி கட்டைவிரலால் மண்ணை மிதித்தான். நீரில் மிதப்பதுபோல எளிதாக காற்றில் எழுந்துவிட்டான். சூழ வீசிய காற்றில் அவர்களின் உடல் ததும்பியது. அக்காற்றிலிருந்த ஓசைகளுக்கெல்லாம் அலைபாய்ந்தது. எழுந்து மேலே மிதந்தபடி கீழே பார்த்தபோது அந்தச் சிற்றோடை வெள்ளியொளியுடன் வளைந்து சென்றது. அதற்கு அப்பால் அவன் இருவரை கண்டான்.  பிருகந்நளையுடன் உடல்தழுவி திளைத்துக்கொண்டிருந்த இளைஞனை அவன் முன்னர் அறிந்திருந்தான். உத்தரனின் சாயல் அவனுக்கிருந்தது.

அவ்வியப்பு அவனை இரண்டென பிளக்கச் செய்தது. அவன் தோளுக்குப்பின் முளைத்த இரு விழிகள் அவர்களை அருகே சென்று நோக்கின. உடல்கள் ஒன்றென்று இணைந்து இழைந்து நெளிய பிருகந்நளையுடன் கூடியிருந்தவனை அவன் அருகணைந்து கண்டான். பின்னர் கீழே அந்தப் பெருநதியின் வளைவில் கரையோரத்தில் பாறை ஒன்றில் தன்னந்தனிமையில் அமர்ந்து நிலவை நோக்கிக்கொண்டிருந்த உத்தரனையும் கண்டான். அவன் அங்கிருந்த எதையும் அறிந்திருக்கவில்லை என்று தெரிந்தது.

முந்தைய கட்டுரைஎங்கெங்கு காணினும் சக்தியடா..
அடுத்த கட்டுரைஅட்டை -கடிதம்