லங்காதகனம் –கடிதம்

hanuman-ramesh-gorjala-

Hanuman Painting by Ramesh Gorjala

மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன்  அவர்களுக்கு 

சிவப்பு நிறம் முழுமையாக  உயிர்பெற்ற அறை , அதில் பச்சை , சிவப்பு , கருமை , நீளம் , என்று  பல்வேறு நிறத்திலான வேஷ  முகங்கள் , அவற்றுள்  உயிர்கொண்டு திரும்பும் ஒரு மனித முகம் ,என்று , நிகரற்ற கலையான கதகளியின் தீவிரத்தையும்  , அதன் அழகியலையும் , அதில் ஒன்றற கலந்த ஒரு உன்னத கலைஞனின் இருப்பையும் , அழுத்தமாக  நம் மனதில் பதிவு செய்து , தொடங்குகின்றது கதை .

 

லட்சியவாதம் உச்சம் பெற்ற காலகட்டத்தில் , ஆற்றல்மிக்க  கதகளி கலையின்  அணைத்து நுட்பங்களையும் , வித்தையையும், அக்காலத்தின் உன்னத கதகளி கலைஞர்களிடம் கற்று தேர்ந்த கலைமைந்தன்  லங்காதகனம்  திரு.அனந்தன் நாயர் . அதே லட்சியவாதம்  கிட்ட தட்ட  முழுமையாக  வீழ்ச்சியடைந்த  இச்சமகாலத்தில் தானும் , தன் கலையும் , இச்சமூகத்தாரால்  அடையும் , அவமானம் , நிராகரிப்பு , வலி , கோபம் , போன்றவற்றை  ராமன்குட்டியிடம் மனவலியுடன் பகிர்ந்துகொள்கிறார் .

 

ஆசான்  40  ஆண்டுகளாய் அனுமனை  உபாசனை  செய்து வருகிறார்.

ஆசான் அவரை அக்கலைக்கும் , அதன்மூலமாக அம்மூர்த்திக்கும்  முழுமையாக  அர்ப்பணித்து , அம்மூர்த்தியை தன் உயிரில் , உடலில்  முழுமையாக ஆட்கொள்ள செய்து விட்டார் . அவர் இன்று இவ்வுலகில் வாழ்த்து கொண்டிருப்பது , கதகளி யில்  அனுமனுக்கு போடப்படும் 2 வேஷம் மூலமாக தான். ஒன்று  கோமாளியாகவும் , பக்தனாகவும்  வரும்  கரிவேஷம், மற்றொன்று  அனுமன் உக்கிரரூபியாக , அனுமன் தூதில் வரும் லங்காதகனம் காட்சி வேஷம் .

 

உக்கிரரூப  அனுமன் தான்  அனந்தன்  நாயரின்  இஷ்டதெய்வம் , அப்படிப்பட்ட உக்கிரமூர்த்தியாகவே  வாழ தீர ஆசை கொள்கிறார் , அது கதகளி மேடைகளில்  தான் சாத்தியப்படுகிறது , அதனால் தான்  உக்கிரரூபியாக  அவர் உருவெடுக்கும்  லங்காதகனக்  காட்சி  மேடைகளிலேயே  அவர்  உயிர்த்தெழுகிறார் . அந்த மேடை தான் அவர்  வாழும் இடம் , அந்த க்ஷணம்  தான் அவர் பிறப்பு  அர்த்தம் கொள்ளும் இடம் , அந்த உக்கிரரூபி வேஷத்திலேயே அவர் ஒரு மனிதனாக  உச்சம் பெறுவதை உணர்கிறார் .

 

அனால் அது அவர் அறிந்து போடும் வேஷம் , அதனாலேயே  ஆந்த உக்கிரரூபி வேஷத்தில்  அவர் அவரை அவராகவே உணர்கிறார் , அந்த உணர்வு அவர் மனதில் நீஙகா வெற்றிடத்தையும் , ஏமாற்றத்தையும் , தன் மூர்த்தி தன்னை இன்னும் ஆசிர்வதிக்கவில்லை  என்ற பெரும் மனக் குறையை   உருவாக்குகிறது , ஆசான் மனநிம்மதியற்று  உழல்கிறார் . அந்நிலையிலும் ஆசான்  காத்துகொண்டுஇருக்கிறார் ,என்றோ ஒரு நாள்  முழுமனதுடன் , முழுஆற்றலுடன் , தன் மூர்த்தியின் அனுக்ரகம் பெற , பூரணம் பெற்ற உக்கிரரூப அனுமனாக மாற காத்துகொண்டுஇருக்கிறார் .

 

அனால் நிஜவாழ்வில் , சமகால வாழ்க்கையில் , அனந்தன் நாயர், ஒரு சம்பிரதாய மனிதனாக வாழவில்லை , இங்கு அவர்  கரிவேஷ அனுமனாக வாழ்கிறார் , உடல் அசைவுகளையே  வேஷமாக கொள்கிறார் , அசைவுகளற்று  எப்படி  ஒரு பிறவிக்கு கதகளி கலைஞனால் வாழ முடியும் ,அதுவும் ஆசானால் எப்படி வாழ முடியும் .

ஆனால் அவ்வசைவுகளாலேயே  ஆசான் கேலி செய்யப்படுகிறார் , ஆழமான சீண்டலுக்கு ஆளாகிறார் , குரங்கு என்று ஏளனம் செய்யப்படுகிறார் .

 

அவரை அறியாமலேயே  கரிவேஷ அனுமனாக  வாழும் அவரை , அனைவரும் மரியாதையற்றே  நடத்துகின்றனர் , அவருக்கே அவர் மீது  வெறுப்பும் , கீழ்மையும்  உண்டாகிறது .  ஆனால் தன்னை அறியாமலேயே , தன்  உடல்மொழியாகிபோன  கதகளியின் ஆதாரமான  அசைவுகள் மூலம் , குரங்கு கடவுளின்  அனுக்ரகம்   பெற்றவராய்  நம்மை உணர வைக்கிறார் , ஆசான் .

 

மடத்தில் உள்ள  அனைவராலும்  ஆசான் ஏளனமாகவே  நடத்த படுகிறார் , குறிப்பாக இரவு உணவுக்காக  கையில் வாழை இலையுடன்  ஆசான் நின்றிருக்கும் காட்சி எவரையும் சலனப்படுத்தும் இடம் ,

 

உண்மையில் ஆசானுக்கு  அவர்  இப்படி நடத்த படுவது குறித்து வருத்தமும் , வலியும்  இருந்திருக்கலாம் , ஆனால் அவர் ஒருபோதும் அதை  மனதின் சோகமாக சேர்த்து வைப்பவர் இல்லை . அவர் இந்த கீழ்மை  மனிதர்களின் குணங்களை எல்லாம் என்றோ  தாண்டிவந்தவர் , அவருக்கு தெரியும் , அவர் கலைத்திறனுக்கு  முன் , இந்த காரியஸ்தனோ ,சுந்தரையரோ , சாம்பசிவனோ , இன்னும் எவரெவரோ , ஒரு பொருட்டே  இல்லை என்று, அதனால் தான் இத்தனை சீண்டல்களுக்கு பிறகும் ,அவர் அவராகவே வாழ்கிறார் , கரிவேஷதாரியாகவே வாழ்கிறார் , ஆம் ஆசானாகவே வாழ்கிறார் . அந்த சுய உணர்வு இருப்பதாலேயே,  திருவாதிரை  கதகளி ஆட்டத்திற்கு  அவர் வெறிகொண்டு தயாராகிறார் , ஊரார் கேலிக்கு , வெற்று பேச்சுக்கும்  செவிகொடுக்காமல் தன் கலையை  மேலும்  மகத்துவப்படுத்த  தவமேற்று   தயாராகிறார் , கரிவேஷ  அனுமன்  உக்கிரரூபியாக உருமாற  தயாராகிறார் , சிறு ஆட்டக்குறையும் அவரை அண்டாமல்  தயாராகிறார் , எவரையும் நம்பாமல் தன்னை தானே  சரிசெய்து  உன்னதத்திற்காக  தயாராகிறார் .

 

 

தன்னை உக்கிரரூப மூர்த்தியாக அவர் உணர்ந்த  நொடியில் , வானத்திற்கும் , நிலத்திற்கும்  பாய்ந்தபடி வாயுபுத்திரனாக  மேடையை அடைகிறார் , மேடையின் முன் யாரும் இல்லை , இருக்க வேண்டிய அவசியமும் இல்லை , அதை அவர் கவனிக்க போவதும் இல்லை , அங்கு

நிகழப்போவது , பூரணம் தவறாமல்  , தன் மூர்த்தியின்  அனுக்ரகம் வேண்டி  ஒரு மகா கலைஞன்  நிகழ்த்தும் , தாண்டவம் , பூர்ணசமர்பணம் .

 

மேடையை அடைந்ததும், தான் வாழ்வனைத்தும்  எண்ணற்ற களியரங்கங்களில்  ஆடிய லங்காதகனத்தை  அதன் முழு  தீவிரத்துடன்  ஆடிக்கொண்டிருக்கிறார் , மேடை முழுவது தாவி , குதித்து ,பாய்ந்து ,,,ஓடி,,, அம்மேடையையே   பரவசம் கொள்ள வைக்கிறார் , அப்படி ஒரு உச்ச தருணத்தில் , ஆசானின்  ஆடையின்  ஒரு நுனியில் நெருப்பு பற்றிவிடுகிறது , அந்நெருப்பு அவர் ஆடும் தீவிரத்தில் ,பக்கத்திலுள்ள ,பந்தல்கள் ,அதை தொடர்ந்து  வைகோல் போர் ,மடம் என்று பெரும் ஜுவாலை ஆக அக்னி பேருருவம் கொள்கிறது , அது லங்காதகனத்தின்  முழுமைபெற்ற காட்சி. ஆசான் அந்த அக்கினிஜுவாலையை பேரின்பத்துடன்  காண்கிறார் , அந்த பிரளயாகினியில் , செந்தழல் கிரீடமும் ,கதையும் ,ஜுவலிக்கும்  கவசமும் கொண்ட  அவர் மூர்த்தியின் உக்கிர திருவுருவத்தை காண்கிறார் ,அடுத்த நொடி , பூமியில் இருந்து விண்ணுக்கு தாவுவது போல , ஒரே தாவில் ,அந்த அக்னி மூர்த்தியிடம்  ஐக்கியமாகிறார் , அத்துணை வருடமாக ஆசானின் மனதில் சூழ்ந்திருந்த  சூனியத்தை செந்தழல் நெருப்பால்  இட்டு நிரப்பி , அவ் உக்கிரமூர்த்தி ஆசானுக்கு அனுக்ரகம்  அருள்கிறார் ,அஜ் ஜுவாலையிலேயே ஆசான் முக்தி அடைந்து ,  பூரணத்திற்கு உதாரணமாய் , சாகாவரம்  பெற்ற எண்ணற்ற கதகளி மேடைகளில் இனி ஏற்றப்படும் தூங்கா விளக்கின்  தீபஒளியில்  உயிர்கொள்கிறார் ,செந்தழல் மூர்த்தியாக ,லங்காதகனம் அனந்தன் நாயராக  , ஆசானாக ..

 

 

*

 

லங்காதகனம் கதையில் , ஆசான் மேடையை நோக்கி வருவதுடன் கதை முடியும் , அங்கு   இருந்து, ஒரு வாசகனின் கற்பனையும் , சிந்தனை வெளியும் கட்டற்று விரியும் , விஷ்ணுபுரத்தின் ஸ்ரீசக்கரம் போல , கொற்றவையில் தீராப்பசியுடன் பொங்கிவரும் ,தென் குமரி கடலலை போல.

 

அது போல  , லங்காதகனத்தின்  முடிவு ,ஆசான் இறந்தாரா , இல்லையா ,ஏன் இறக்க வேண்டும் , என பல்வேறு யூகங்கள் இருக்கலாம் ,,, அனால் உண்மையான கற்பனையும் ,யூகமும் விரிய வேண்டிய இடம் , அவர் இறந்தபின் உருவாகும்  சூழ்நிலைகள்  பற்றியதாக  இருக்க வேண்டும் .

 

 

நன்றி

வே .அழகு மணிகண்டன்

 

 

 

முந்தைய கட்டுரைஎன் மலையாள நூல்கள்
அடுத்த கட்டுரைஅட்டைப்படங்களின் வரலாறு