50. பொன்னும் இரும்பும்
நிலையழிந்து கிளையிலிருந்து விழப்போய் அள்ளிப்பற்றிக்கொண்டு விழித்தெழுந்தபோதுதான் தான் துயின்றுவிட்டிருந்ததை கஜன் உணர்ந்தான். எப்படி துயின்றோம் என்றே அவனுக்குத் தெரியவில்லை. அத்தனை அச்சமூட்டும் காட்சிகளைக் கண்டு நடுங்கி உடலொடுக்கி ஒளிந்திருந்தபோதும் துயில் வந்து சூழ்ந்துகொண்டிருக்கிறது. காலைமுதல் கடுமையான உடற்பணி. முந்தைய நாள் இரவுக்காவல். ஆனாலும் துயின்றதில் ஏதோ ஒரு விந்தை இருக்கிறதென்றே தோன்றியது.
உண்மையில் துயின்றானா? வேறெங்கோ இருந்தான். அங்கே இருண்ட வானில் மின்னல்கள் இடியோசையுடன் வெட்டி வெட்டி அதிர காகங்கள் ஓசையற்ற சிறகுகளுடன் மின்னும் விழிகளுடன் பறந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு காகமும் அவனை அறிந்திருந்தது. வாய் உலர்ந்திருந்தது. ஏதேனும் குடிக்கவேண்டும் என்று தோன்றியது. உதடுகள் தடித்து வீங்கி தொங்கியிருப்பவைபோலவும் முகம் வீங்கி பெரிய பூசணிக்காய்போல ஆகியிருப்பதாகவும் தோன்றியது.
கீழே இறங்கிச்செல்வது இறப்பை அழைப்பது. ஆனால் எண்ணிய கணம் முதல் விடாய் எரிந்து எழுந்து உடலெங்கும் பரவியது. உடல் பலமடங்கு பெரிதாக உப்பியிருந்தது. கால்கள் குளிர்ந்து நீர்நிறைந்த தோற்பைகள் என தொங்கின. அவன் இருமுறை குமட்டினான். மூக்கு எரிந்தது. என்ன ஆயிற்று? என்ன உண்டேன்? இல்லை ஏதேனும் பூச்சிகள் என்னை கடித்துவிட்டனவா? உடலுக்குள் நஞ்சு புகுந்துள்ளது என்ற எண்ணம் அழுத்தமாகவே எழுந்தது. ஆனால் எதையும் உண்ணவில்லையே என சித்தம் வழக்காடியது.
விடாயில் தசைகள் அதிரத்தொடங்கின. நீர் அருந்தாமல் இருக்கமுடியாது. விடாய் எழுந்ததுமே அருகே நீரோசையை கேட்டுவிட்டிருந்தான். வலப்பக்கமாக புதருக்குள் சிறிய காட்டு ஓடை பாறையில் முட்டி சுழித்துச்சென்றது. கிளையைப் பற்றியபடி மெல்ல காலிறக்கினான். அவன் கால் அரக்குவிழுதுபோல இழுபட்டு நீண்டு நிலத்தைத் தொட உடல் மேலேயே இருந்தது. என்ன இது என அவன் கைகளை விட்டான். நிலைக்கோள் பிறழ சற்று அசைந்து பின் ஒரு மரத்தை பிடித்துக்கொண்டான். அவன் மரக்கிளைகள் அளவுக்கே உயரமாக இருந்தான். அந்த உயரத்தாலேயே தள்ளாடியபடி நடந்தான்.
அந்தி நிழல்போல நீளம். ஓடைநீரில் பாவை என அலைவு. என்ன ஆயிற்று என் உடலுக்கு? இரு கைகளையும் தூக்கிப் பார்த்தான். சாம்பல்பூசணம் படிந்திருந்தது. திரும்பி அந்த மரத்தை பார்த்தான். அதன் அடிமரத்திலும் பெருங்கிளையிலும் பூசணம் பரவியிருந்தது. அடுத்த மரங்கள் எவற்றிலும் அந்தப் பூசணம் இல்லை. அந்த மரம் மட்டும் பிறமரங்களுடன் சேராமல் தனித்து நின்றிருந்தது.
கானகக் காவலர்கள் ஒரு பூசணத்தை இலையால் சுரண்டிக்கொண்டுவந்து மூக்குச்சவ்வில் போட்டுக்கொள்வதை அவன் கண்டிருந்தான். கூகரிடம் “அது என்ன?” என்று அவன் கேட்டபோது “நஸ்யம்… மூக்கு சிவுசிவு என்று ஆகும். உள்ளே படிந்திருக்கும் ஒட்டடைகள் எல்லாம் அகலும். உடலின் எல்லா சாளரங்களையும் திறந்து புதிய குளிர்காற்று புகுந்து நிறையும். மிதக்கமுடியும்” என்றார். மெல்ல உடலை நிமிர்த்தி கால்களை நீட்டி “இந்தச் சுமை” என்றார்.
“எனக்கும் சிறிது கொடுங்கள்” என்றான். “இது காலம் கெட்டிப்பட்டு கருங்கல்லாக ஆனவர்களுக்கு மட்டும் உரியது” என்றார் கூகர். “உன் காலம் முகில்போல மிதக்கிறது… நான் இதை முகர்வதே உன்னைப்போல ஆவதற்காகத்தான்.” அவர் மீண்டும் ஒருமுறை அந்தச் சாம்பல்பொடியை மூக்கில் இழுத்தபின் மூக்கைப் பிடித்துக்கொண்டு கண்களை மூடி அசையாமல் அமர்ந்திருந்தார். பின்னர் விட்டுவிட்டு சிவந்த கண்களுடன் நோக்கி சிரித்தார்.
அவன் மீண்டும் அந்த மரத்தை அணுகி அதன் பூசணப்பூச்சை நோக்கினான். அதுதானா? அந்த மரத்தில் ஏறும்போது ஒரு மெல்லிய நினைவுத்தீற்றலாக கூகர் வந்துசென்றதை எண்ணிக்கொண்டான். அதை கையால் தொட்டுச் சுரண்டி முகர்ந்து பார்த்தான். பூசணத்தின் மணம். பிழையாக எண்ணுகிறேனா? இல்லை, அந்தப் பூசணமேதான். ஓர் இலையைப் பறித்து அதைச் சுரண்டி எடுத்து மடித்து மடியில் வைத்துக்கொண்டான்.
நீரோடையை அணுகி குனிந்தபோது மிகப் பெரிய மூங்கில்போல தன் உடல் வளைவதாகத் தோன்றியது. நீரோடை மிக ஆழத்தில் ஓட அதனருகே அவனுடைய கால்கள் பதிந்திருந்தன. கிணற்றுக்குள் என கைகளை நீட்டி நீரை அள்ளி மேலே மொண்டு வந்து குடித்தான். நீர் அவன் உடலுக்குள் ஆழத்தில் விழும் ஓசை கேட்டது. அப்பால் ர்ர்ர்ச் என்னும் ஒலி. ஒரு காட்டு ஆடு அங்கே நீர் அருந்தி நிமிர்ந்து நின்றது. அதன் தாடையிலிருந்து நீர் வழிந்தது. அவன் அதை நோக்கி புன்னகை செய்தான். அதனிடம் ஏதோ சொல்லவேண்டும் என்று எண்ணி கைநீட்டினான். அது செவிகளை அடித்துக்கொண்டு புதருக்குள் மறைந்தது.
அவன் மீண்டும் வந்தபோது அந்த மரத்தில் ஏராளமான குரங்குகள் மொய்த்திருப்பதை கண்டான். அவன் இறங்குவதற்காகக் காத்து அவை ஒளிந்து அமர்ந்திருந்திருக்கின்றன. அவை அந்தப் பூசணத்தை கைகளால் சுரண்டி வாய்க்குள் போட்டன. அவை அதை உண்ணவில்லை, ஈறுகளில் பூசிக்கொள்கின்றன என்பதை அவன் கண்டான். ஒரு குரங்கு மூக்கில் வைத்து இழுத்தது. சில குரங்குகள் அதை தங்கள் கழிவுத்துளையில் பூசிக்கொண்டன.
ஒரு குரங்கு தேங்காய்போல நிலத்தில் உதிர்ந்தது. அப்படியே ஒருக்களித்து படுத்தபின் எழுந்து இரு கைகளையும் ஊன்றி நடந்து தள்ளாடி பக்கவாட்டில் விழுந்து நான்கு கால்களையும் மேலே தூக்கியது. அதனருகே இன்னொரு குரங்கு விழுந்தது. அது எழுந்து இளித்து இடையைச் சொறிந்தபின் பின்னால் மல்லாந்து விழுந்தது. பிறிதொரு குரங்கு அதனருகே உதிர்ந்தது. அவன் திரும்பி நடந்தபோது அவனுக்குப் பின்னால் இன்னொரு குரங்கு விழும் ஒலி கேட்டது. ஏனோ அந்த ஒலி அவனுக்கு சிரிப்பை மூட்டியது. திரும்பி விழுந்துகிடந்த குரங்குகளை நோக்கி கைசுட்டி சிரித்தான். சிரிப்பு அவனுக்குள் உவகையை நிறைத்தது. அச்சம் முழுமையாக அகன்றது.
சிரித்தபடியே அவன் காட்டுக்குள் நடந்தான். ஒரு மரம் வளைந்து அவனை நோக்கி வந்தபோது அதைச் சுட்டி சிரித்தான். அப்போதுதான் அவன் உடல் மிகச் சிறுத்து அந்த மரத்தின் வேர்ப்புடைப்பு அளவுக்கே இருப்பது தெரிந்தது. உடலை மேலே இழுக்கும் பொருட்டு அவன் எம்பி எம்பி குதித்தான். குதிக்கும்தோறும் சிறிதாகிக்கொண்டே சென்றான். அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்தபடியே கைகளை விரித்துச் சுழன்று நடனமாடினான். அவனுக்குமேல் ஈஈ என ஓர் ஒலி எழுந்தது. அவன் நிமிர்ந்து நோக்கியபோது பொன்னிற உடல்கொண்ட பெரிய வண்டு ஒன்று பறந்துசெல்வதைக் கண்டான். அதைத் தொடர்ந்து இன்னொன்று. அவை ஒன்றையொன்று துரத்தியபடி சுழன்றன.
அவன் இலை ஒன்றின் மறைவுக்குள் சென்று அமர்ந்து அந்த வண்டுகளை நோக்கினான். அவை மானுட முகம் கொண்டிருந்தன. ஆண்வண்டு நிலத்தை அணுகியதும் கால்கொண்டு மானுட உருவாகி நின்றது. அதன் சிறகு மெல்லிய ஆடையென்றாகி அவன் உடலில் படிந்தது. பொன்னொளிகொண்ட உடல். அவன் ஆணுறுப்பு எழுந்து நின்றது. அப்பால் அந்தப் பெண்வண்டு சிறகு மடித்து இறங்கினாள். பொன்மின்னும் முலைகள் எழுந்தமைய கைதூக்கி அனலென தோளில் விரிந்த குழல்கற்றைகளை அள்ளிக்கட்டினாள். அவன் அவளை துரத்த அவள் துள்ளி ஓடினாள். கைவிரித்து எழுந்தபோது சிறகு கொண்டாள். மண்ணில் தொட்டபோது கால்கள் பெற்றாள். தாவிச்சென்றபோது அவற்றில் மான்குளம்புகள் எழுந்தன. அவள் சிரிக்க அவன் உறுமியபடி அவளை துரத்தினான்.
கஜன் தனக்குப் பின்னால் இன்னொரு சிரிப்பொலியை கேட்டான். உடன் யாழும் குழலும் இணைந்ததுபோன்ற இசை. அது கொப்பளித்தது, சுழன்றது, குமிழிகளாக வெடித்தது. இளஞ்சிவப்பு நிறமான ஒருவன் இரு பக்கமும் தட்டாம்பூச்சியின் இரட்டைச்சிறகுகள் புகைப்படலமென அசைய வந்திறங்கினான். அவன் உடலுடன் அதேபோன்ற இன்னொருத்தி இணைந்திருந்தாள். அவர்கள் உதடுகள் சேர்த்து முத்தமிட்டனர். உடல்பிணைத்து கைகால்கள் நாகங்கள் என உரசித்தழுவி விலகி இழைந்து முறுகிப்பின்னி இறுகி மீண்டும் விலக ஆழ்மூச்சுகளுடன் நின்றுகொண்டே சுழன்றனர். இசை அவர்களை அள்ளிச்சுழற்றியது. இசையில் அத்தனை மரங்களும் உடல் நெகிழ இலைநுனிகள் அசைந்தன.
கஜன் “ஓ” என்னும் பெண்குரலைக் கேட்டுத் திரும்ப பொன்னிறத்தான் அவளை பிடித்துவிட்டிருப்பதை கண்டான். புலி மானை என அவன் அவளை தூக்கிச்சென்றான். அவளை தன் உடலால் நின்றிருந்த வேங்கை மரத்தோடு மோதி அதே விசையில் அவளுக்குள் நுழைந்து உறவுகொண்டான். அவன் கைகளில் புலியுகிர்கள் எழுந்தன. வாயில் கோட்டெயிறுகள். நீண்ட சிம்மவால் எழுந்து சுழன்றது. அவள் அலறித்துடித்து அவனிடமிருந்து விடுபட முயன்றாள். அவள் கழுத்தை அவன் கவ்விக்கொண்டான். அவள் கைகளை உகிர்புதையப் பற்றினான். சிலந்தியிடம் சிக்கிய சிற்றுயிர் என அவள் அவன் புகுத்திய நஞ்சில் மெல்ல மயங்கித் துவள அவன் அவளைக் கடித்து குருதி தெறிக்க தசைகளை இழுத்து உண்டான்.
மறுபக்கம் அவர்கள் சுழற்சியில் இரு செந்நிற மலர்கள்போல ஆயினர். அவன் உடல் அல்லிவட்டமாக அவள் நடுவே புல்லிவட்டமென எழுந்திருந்தாள். இசை அவர்களைச் சூழ்ந்து இளநீலநிறச் சுழியாக இருந்தது. அதில் நீர்த்துளிகள் விழுந்து விழுந்து நீலமணிகளாக வெடித்தன. மலரிதழ் ஒன்று அலையிலாடியது. சிலந்திவலை காற்றில் ஆட சுழன்று சுழன்று ஒற்றைச்சிறுபுழு அதில் நெளிந்தேறியது. நீர் எழுந்து அலையாகி படமெடுத்து மணிவிழிகள்கொண்டு பறக்கும் நாக்கு எழ சீறியது. இசையென்று மாறியிருந்தன காட்டுமரங்கள். தாளமென்று ஆகியிருந்தது நிலம். மெல்லிய நறுமணம். உருகும் நெய். மெல்லக் கருகும் மயிர். மயிர் கருகும் மணம் ஏன் அத்தனை கிளர்ச்சியூட்டுகிறது? குருதியும் முலைப்பாலும் மணத்தன. இல்லை அது வாய்நீர் மணம். இல்லை பிறிதொன்று.
அப்பால் பச்சையொளி கொண்ட இருவர். அதற்கும் அப்பால் இருவர் இளநீல ஒளியுடன். வெண்ணிற ஒளியுடன் இருவர் தழுவிச்சீறி மெல்ல உடல் உருகி நீண்டு நாகமென்றாகி முறுகி ஒற்றைவடமென நெளிந்தனர். அவன் தன் விழிகள் மட்டும் இரு மணிகளாக உந்தி நிற்க உடல் எறும்புபோல சிறிதாகிவிட்டதை உணர்ந்தான். எவரும் அவனை பார்க்கவில்லை. அவன் நோக்கிய திசையெல்லாம் உறவுகொண்டனர் சிறகோர். காட்டுமரங்களின் இடைவெளிகளில் எல்லாம் பிணைந்தன உடல்கள்.
வளைந்த பெருங்கொம்புகளுடன் காளைதலையும் புள்ளிருக்கை எழுந்த பிடரியும் கொண்ட ஒருவனுடன் இணைந்திருந்தவளுக்கு கலைமானின் கவர்கொம்புகள் இருந்தன. சிம்மப்பிடரி கொண்டிருந்தவன் மான் வடிவில் ஒருத்தியை கிழித்து உண்டான். மரங்களை மோதி நாணலென அலையெழுப்பியபடி களிறும் பிடியுமென இருவர் ஒருவரை ஒருவர் மத்தகம் முட்டி பிளிறினர். அருவியோசை என எங்கோ பேரிசை. குருதி ஆறு ஒன்று குமிழிவெடிக்கும் மணத்துடன் கண்காணாது ஓடியது.
மரங்களுக்கு அப்பால் முழவுகள் ஒலித்துக்கொண்டிருந்தன. உறுமி உறுமி கார்வையை நிரப்பியது முரசு. பொன்னிற நாகங்கள் புணர்ந்து சுருண்ட பந்துகள் காலடியில் உருண்டன. நாகவிழுதுப் பின்னல்கள் தொங்கி நெளிந்தன. நீரோடைகள் என இரு மலைப்பாம்புகள் பின்னி வழிந்தன. சிரிக்கும் வாய்களும் மணிவிழிகளும் அதிரும் சிறகுகளும் கொண்ட வண்டுகள் இணைந்து பறந்தன. ஒன்றன்மேல் ஒன்றென அமர்ந்து சுழன்றன பட்டாம்பூச்சிகள். அவன் கண்ட அனைத்து உயிர்களும் புணர்ந்துகொண்டிருந்தன. இலைநிழல் செறிவின் அனைத்து இடைவெளிகளிலும் அசையும் உடல்கள்.
புணர்வின் தாளம். புணர்வென அங்கு நிகழந்த காற்றின் அலைவு. தன்னை உரித்து இட்டு தன்னிலிருந்து வெளியேறும் தவிப்பு. பிறிதொன்றாகி திரும்பிவரும் திகைப்பு. ஒளி ஊடுருவும் உடல்கொண்டிருந்த இருவர் ஒருவருக்கொருவர் புகுந்துகொண்டனர். கூந்தல் சிறகெனப் பறக்க இரு பெண்கள் காற்றில் புகைச்சுருள்போல் அலைபாய்ந்து மிதந்து நின்றனர். இருளில் ஊறித்துளித்துச் சொட்டி நிலத்தில் விழுந்து எழுந்தனர் ஒளியுடல்கொண்ட இரு பெண்கள். அவர்களுக்குமேல் பாய்ந்தனர் பருந்துச்சிறகுகள் கொண்ட இருவர். அவர்களின் சிறகுகள் விரிந்து அனலென்றாயின. அவ்வனல் பற்றி எரிந்தன பசுந்தளிர்கள்.
கஜனின் விழிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்த இரு சிறுகருவண்டுகள் என்றாகி அப்புணர்ச்சிகளினூடாக சுற்றிப்பறந்தன. உடல்குளிர்ந்து பாறையென்றாகி மரத்தடியில் அவன் கிடந்தான். அவன்மேல் வழுக்கி ஊர்ந்துசென்றன நாகங்கள். அவன் நெஞ்சில் ஒற்றைக்குளம்பு உதைத்து தாவின மான்கள். அவன் இடையிலிருந்து எழுந்தது சிறிய முளை. செந்நிறக்குருத்து வளர்ந்து வாழைக்கன்றுக் கூம்பென்றாகியது. இலைவிரித்தது. மரமென்று எழுந்து கிளைபரப்பியது. அதன்மேல் காகங்கள் வந்து சிறகுமடித்து அமர்ந்தன. கரிய உடல்கள் காயெனச் செறிந்து கிளைகள் தொய்ந்தன. வானில் மின்னல்கள் கிழிபட்டுக்கொண்டே இருந்தன. கீழ்வானிலெங்கோ முரசொன்று ஒன்றையே சொல்லிக்கொண்டிருந்தது. தத்த தய தம! தத்த தய தம!
தேவி எழுந்து நின்று கையால் வாய்பொத்தி மெல்லிய ஏப்பம் விட்டு சுபாஷிணியை அருகே அழைத்தாள். அவள் அருகே சென்றதும் தாழ்ந்த குரலில் “உன்னை நான் உத்தரையிடம் செல்லச் சொன்னேன்” என்றாள். “ஆம், தேவி” என்றாள். “செல்க!” அவள் அரசியை நோக்கி “ஆனால்…” என்றாள். “ம்” என்றாள் தேவி. “ஆணை” என அவள் தலைவணங்கினாள். விழிதாழ்த்திய அக்கணமே அவள் தேவியின் கண்களை உணர்ந்து ஏறிட்டு நோக்கினாள். அவை நாகவிழிகளாக மாறிவிட்டிருந்தன. “தேவி… நீங்கள்…” என்றாள். சீறும் குரலில் “ம்ம்ம்” என்றாள் தேவி. அவள் வாய்க்குள் இரு வளைந்த நச்சுப்பற்களை சுபாஷிணி கண்டாள்.
அச்சத்துடன் பின்னடைந்து கைகூப்பி “தேவி!” என்றாள். அவ்வொலி அவளுக்குள்ளேயே ஒலித்தது. திரும்பி அரசியை நோக்கினாள். அரசி அழுதுகொண்டிருந்தாள். அவள் அமர்ந்திருந்த பாறை உருகி அதில் அவள் இடைவரை புதைந்திருந்தாள். மேலும் மேலுமென அவள் உடல் உருகிக்கொண்டிருந்தது. வலதுகை கரைந்து வடிவிழந்து பதிந்து விரல்கள் மறைந்துகொண்டிருந்தன. சுபாஷிணி திகைப்புடன் வாய் திறந்து சேடியரை பார்த்தாள். அனைவருமே கற்சிலைகளாக மாறியிருந்தனர். அருகே இருந்தவளின் தலையில் அவள் கையை வைத்தாள். கல்லின் பருமை.
விறலியர் யாழிலும் முழவிலும் விரல்கள் ஓட இசைத்துக்கொண்டிருந்தனர்.
“பொன்னிற நாகம் அவள்.
அறிக, புவியாள்பவை நாகங்களே.
தட்சன் வாசுகி கார்க்கோடகன்
ஆயிரம் நாவுள்ள அனந்தன்
அவர்களை ஆள்பவர்கள் அன்னைநாகங்கள்
கத்ரு வினதை குரோதவசை!”
இன்னொரு விறலியின் குரல் வெறியாட்டுகொண்ட பூசகியின் வீரிடலென வந்து இணைந்துகொண்டது.
“புவியாள்பவள், சொல்மகளும் திருமகளும்
சினம்கொண்டு கொற்றவை என்றானவள்
நாகம் அவள் இடைக்கச்சை
நாகம் அவள் கங்கணம்
அறிக! நாகமே அவள் கால்களில் கழல்
விரல்கள் நாகக்குழவிகள்
நா ஒரு நெளியும் நாகக்குழவி
அவள் ஒரு பொன்னிற நாகம்!
ஆம், பொன்னிற நாகம்…”
விறலியருக்குப் பின்னால் அவர்களின் உடல்கள் நாகமென நீண்டு மெல்ல நெளிந்துகொண்டிருந்தன. அருகே இன்மையை உணர்ந்து அவள் திரும்பிப்பார்க்கையில் தேவி பாறைக்குக் கீழே சென்றுவிட்டிருந்தாள். “தேவி” என அழைத்துக்கொண்டு அவள் பின்னால் ஓடினாள். கால் நிலத்தில் பதிகின்றதா என அவளுக்குத் தெரியவில்லை. மிகத் தொலைவில் என இருந்தது அடிக்காடு. அங்கே அத்தனை மரங்களும் ஒளிகொண்டிருந்தன. காலடியில் நிழல் சூடியிருந்தன. தேவி மெல்ல உருக்குலைந்து நிழலும் ஒளியுமெனப் பரவி நெளிந்து அக்காட்டில் கரைந்தழிந்தாள்.
முதல் விறலி யாழ் மீட்டி சீர்நடையில் பாட முழவு மீட்டிய இன்னொரு விறலி வெறிகொண்டு வந்து அதை மோதி உடைத்துச்சிதறி நின்றுவெறியாட மெல்ல அமிழ்ந்த அமைதியிலிருந்து மீண்டும் இரண்டாவது விறலியின் ஓசை எழுந்தது.
“எளிய நிஷாதன். கரியவன், அழகன்
அவள் அகத்தளத்தை அறிந்திருந்தான்
அறிந்திருக்கவில்லை அவள் அகத்தை
காமத்தில் அனல்கொள்கையில்
அவள் உருகி நீண்டு நாகமென்றாவதை
ஒருநாள் கண்டான்
நஞ்சுகொண்டாள் நாபறந்தாள்
நதியெனச் சூழ்ந்தாள்
அஞ்சி எழுந்தோடினான்
தன் கைகளை நாகங்களென்று கண்டான்
தன் கால்களை நாகங்களென அறிந்தான்
தன்னுடலில் இருந்தே தப்பி
காடுகளுக்குள் புகுந்துகொண்டான்”
வெறிகொண்ட முழவு நின்று துடிக்க இரண்டாவது விறலியின் குரல் பீரிட்டு எழுந்து ஒலித்தது.
“பொன்னிற நாகம்! பொன்னிற நாகம்!
பொன்னென்பது நாகம்! பொன்னெல்லாம் நாகம்!
மின்னுவதெல்லாம் நாகம்
மின்னி நெளிகிறது நாகம்
இப்புவியாளும் பெருநாகம்!”
அவள் கீழே வந்துவிட்டிருந்தாள். அவளுடைய மேலாடை நுனி மட்டும் அவள் கிளம்பிய இடத்திலேயே பறந்துகொண்டிருந்தது. அவள் நடந்த வழிகளில் பாறை உருகி கால்தடம் பதிந்திருந்தது. காட்டிலிருந்து முழவும் யாழும் விம்மின. காட்டுக்குமேல் கவிந்த வானில் மாபெரும் பளிங்குமாளிகை ஒன்றின் கூரைக்குடைவுபோல நிலவு நின்றிருந்தது. அவள் அதை அண்ணாந்து நோக்கியபோது விரியத் தொடங்கியது. விளிம்புகள் வளர்ந்து அகன்று முழுவானமும் நிலவென்றாகியது. அதன் நிழல்கள் கருமுகில்கள் என்று மெல்ல பிரிந்தன.
“கிராதன், கரியவன், தனியன்
ஒருநாள் அவள் சாளரத்தில் நோக்கினான்
உள்ளே காருருவப் பெருநாகம் ஒன்று
அவளைப் புணர்ந்திருக்கக் கண்டான்
அதன் சீறலோசையில் நெளிந்தன சுவர்கள்
அவ்வனலில் கூரை உருகியது
இரும்புடன் இழைந்தது பொன்
இருளிலெழுந்த புலரியைப்போல”
அவள் தரையில் வந்து நின்று தன் ஆடையை இழுத்து எடுத்துக்கொண்டாள். அது நாகம்போல நெளிந்து வந்து அவள் உடலில் சுற்றி ஏறிக்கொண்டது. காடு முழுக்க மின்மினிபோல் உடல்சுடரும் பெரிய பூச்சிகள் மலரிதழ்ச் சிறகுகள் கொண்டு பறந்துகொண்டிருந்தன. அவற்றின் ரீங்காரமே ஒன்றுகலந்து இசையென்று பெருகிக்கொண்டிருந்தது.
“தன் கைகளை சவுக்கென்றாக்கி
மாறிமாறி அறைந்து ஓட்டி
காட்டுக்குள் ஓடி களைத்து வீழ்ந்தான்
அவன்முன் நூறுபடம் விரியும் தலைகளுடன்
நச்சுவேல்முனை என விழிகளுடன்
காட்டெரியென நாவனல்களுடன்
தோன்றிய காருருவன் சொன்னான்
நான் கார்க்கோடகன்
விழைவின் பேரரசன்
விண்சுமந்து விரிந்திருக்கும்
ஆழுலகை ஆள்பவன்
வெறிக்குரலெடுத்து பல்லாயிரம் மரங்கள் கைகளை விரித்து கூத்தாடின. “கார்க்கோடகன்! காரிருளின் அரசன்! கார்க்கோடகன்! காரிருளின் அரசன்!” இடியோசைபோல வானமும் அதையே முழங்கியது. தொலைவுகள் பெருகி நகைத்தன. “கார்க்கோடகன்! காரிருளின் அரசன்! கார்க்கோடகன் காணாதவற்றை ஆள்பவன்!”
அவள் காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தாள். அனைத்தும் நீர்ப்பாவை என நின்றாடின. தரையெங்கும் பொன்னிற நிலவொளி. அவற்றில் நெளியும் நிழல்களில் அவள் பொன்னிற நாகங்களை கருநாகங்கள் சுற்றிப்புணர்ந்து துவள்வதைக் கண்டாள். அப்பாலிருந்து அவளை அணுகிய ஒருவன் கரிய நிமிர்ந்த பேருடல் கொண்டிருந்தான். இரு கைகளும் இரு நெடுநாகங்கள். தோளில் சரிந்த சுரிகுழல். எதையும் நோக்காதவை என ஆழ்ந்திருந்த விழிகள். அவன் அவளை புகைப்படலத்தை என கடந்துசென்றான். அவனுடைய காலடியோசை காட்டுக்குள் ஆழ்ந்த தாளமென ஒலிப்பதை அவள் கேட்டாள்.
அவள் உடல் தித்தித்துக்கொண்டிருந்தது. தோள்களிலிருந்து தொடங்கிய அவ்வினிமை நெஞ்சில் பரவி முலைக்கண்களை கூர்கொள்ளச் செய்தது. இடை துவள மூச்செறிய இனிமை இனிமை என அவள் நடந்தாள். மூச்சும் உமிழ்நீரும் இனித்தன. உடலுக்குள் ஓடிய குருதியும் இனித்தது. இனிக்கும் அனல் அவள் உட்தசைகளை எரித்து உருகி வழியச் செய்தது. இரு குமிழிகளென முலைகள். இரு குமிழிகளென விழிகள். துயில் கலைந்து இமை விரிந்து நோக்குகொண்ட கருவிழி ஒன்று. கசிந்து ஆழ்நினைவு சூடியது நீள்விழி. தொலைவில் விம்மிக்கொண்டிருந்தது முரசு. மூங்கில்கள் உரசி பொறி எழுந்தன. கொடிகள் மரங்களின்மேல் சுற்றி இறுகி நெட்டுயிர்த்தன. அலைகொண்ட வான்விளிம்பில் ஒரு விண்மீன் எனச் சிறுத்து உதிர்ந்தது நிலவு. யானைகள் மெல்லப் பறந்து திரும்பின. வெள்ளாட்டுச் செச்சை அசைவிழந்து வியந்தது. கவரிகள் உலைந்தன. நீள்பட்டு திசைதிசையென நெளிந்தது.
அவள் அப்புணர்ச்சியை கண்டாள். வால்வளைவை மண்ணிலூன்றி எழுந்து கரியகடலலை என எழுந்த படம் விரித்து நின்றிருந்த மாநாகம் ஒன்றின் உடற்சுருளுக்குள் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தாள் தேவி. வால்முனை ஆண்மைகொண்டு அவள் உடல்நுழைந்து துடிக்கவைக்க தழுவி வழுவி எழுந்து வெறிகொண்டு மீண்டும் தழுவி மூழ்கி மூச்சுக்கு வாய்திறந்து எழுந்து மீண்டும் அமிழ்ந்து அவள் தவிக்க குனிந்த நாகத்தின் செவ்விழிகள் எரிந்து நிலைத்திருந்தன. நாக்கதிர்கள் மின்னெனச் சுழன்றன. அவர்களைச் சூழ்ந்திருந்த காடு வெம்மைகொண்டு பொசுங்கிச் சுருண்டு புகைந்து எரியத்தொடங்கியது. அனலொளியில் நாகனின் உடல் மேலும் கருமை கொள்ள அவள் உருகும் பொன்னென சிவந்த வழிவென்றானாள்.
நோக்கி நோக்கி விதிர்த்த உடலுடன் மெல்ல நகர்ந்து பின்னிருந்த மரத்தில் முட்டி அவள் நின்றாள். மரத்தின் கைகள் தழைந்திறங்கி வந்து அவளை தழுவிக்கொண்டன. வலிய மெல்லிய கைகள் இரண்டு விரல்குவளைகொண்டு முலைக்குவைகளை அள்ளின. புறங்கழுத்தில் ஒரு ஈரஇதழ் பதித்த முத்தம் அழுந்தியது. அவள் மேலாடை பற்றிக்கொண்டது. கால்கள் உருகி மண்ணில் ஒட்டின. வெம்மையை அறிந்ததும் அவள் அப்பிடியை உதறித் திரும்பினாள். அவள் குழல் அனல்கொழுந்தெனப் பறந்தது. ஆடை பொசுங்கி அருகணைந்தது. காட்டுக்குள் அவள் ஓடியபோது குழலென்றாகி தழல் படபடக்கும் ஓசையுடன் அவளைத் தொடர்ந்தது.