இச்சையின் சிற்றோடைகள்

raje

இனிய ஜெயம்,

அன்று பவாவின் கதை கேட்கலாம் வாங்க நிகழ்வில் இருந்தேன். ராஜேந்திர சோழன் கதைகள் அன்று பவாவின் தேர்வாக இருந்தது. ரா சோ வின் கதைகளில் உயிர்த்துடிப்பு துலங்கும் கணங்களை அழகாக தொட்டெடுத்து கதை சொன்னார். நிகழ்வின் இறுதியில் என்னை ரா சோ கதைகள் குறித்து சில வார்த்தைகள் பேச அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். காரணம் அக் கதைகளுக்குப் பிறகு நான் அதுவரை என்னுள் முகிழ்ந்திருந்த ஒரு அமைதி சிதறப்பெற்றவனாக ஆகி இருந்தேன். மிகுந்த தத்தளிப்பில் இருந்தேன். ஆம் அன்று மதியம் முதல் மாலை வரை ரமணனின் சன்னதியில் அமர்ந்திருந்தேன். அங்கிருந்து நேராக ராஜேந்திர சோழனின் உலகில் வந்து விழுந்தேன்.

ரமணன் . என் அகம் சரியும் கணங்களில் எல்லாம் இதோ இதுவும் மானுட சாத்தியமே என்று என் முன் வந்தமரும் உருவம். ரமணன் மானுட சாத்தியம். அது இறுதி. கனி..ஆனால் முதன்மையாக மானுடமாக விதையாக இங்கே வந்து முளைப்பது எது? இச்சை. கருணை,அறம் ,ஒழுக்கம் அனைத்தின் கடிவாளத்தினின்றும் உதறி விலகி திமிறி நிற்கும் சாரமான இச்சையின் கணங்களை தொட்டு நிற்பவை [ எட்டு கதைகள் வம்சி வெளியீடு தொகுதியை முன்வைத்து] ராஜேந்திர சோழனின் கதைத்தருணங்கள்.

ரா சோ போல நடுநாட்டின் மொழியை, வாழ்வை முன்வைத்த மற்ற இருவர் கண்மணி குணசேகரன் மற்றும் இமையம். கண்மணி குணசேகர்ணனின் அஞ்சலை பசிக்கு உணவு போலும் ,தனது காமத்துக்கு தீர்வைத் தேடுபவன். உறவோ நியதிகளோ ஒரு பெரிய பொருட்டில்லை. அக்காள் தங்கமணியின் கணவனை எந்த தயக்கமும் இன்றி அக்கா இருக்கும்போதே மணக்க சம்மதிக்கிறாள். அக்கா அஞ்சலையை தற்கொலை மிரட்டல் வழியே அந்த முடிவை மாற்ற வைக்கிறாள்.

இமையத்தின் கொலை சேவல் கதை. கோகிலா கணவனை இழந்தவள். கணவனின் கடையில் ஒத்தாசைக்கு இருந்த அநாதை செல்வத்துடன் பிறகு கோகிலாவுக்கு தொடர்பு ஏற்பட்டு, செல்வத்தை அவள் வீட்டுக்குள் அனுமதிக்கிறாள். மாதங்கள் செல்ல செல்வம் கோகிலாவின் முதல் மகளுடன் உறவில் விழுகிறான். தகராறுகளுக்குப் பிறகு கோகிலா முதல் மகளை அவனுக்கு கட்டி வைத்து கடையையும் தந்து விடுகிறாள். மாதங்கள் செல்ல இப்போது செல்வம் பதினைந்தே வயதான கோகிலாவின் இரண்டாம் மக்களுடன் ஓடி விடுகிறான். பழிவாங்கும் முகமாக செல்வத்துக்கு சூனியம் வைப்பது போல அய்யனாருக்கு கொலைசேவல் நேர்ந்து விட பூசாரியை சந்திக்கிறாள் கோகிலா. பூசாரி சொல்கிறான். இதோ இந்த சேவல்தான் உன் எதிரி நீ சொல்றது நியாயம்னா ,அத அய்யனார்க்கிட்ட சொல்லி இந்த சேவலை வேலில் குத்தி நிற்க வைப்பேன். இந்த சேவல் துடித்து அடங்கும் போது உன் எதிரியின் கை கால் இழுத்துக் கொள்ளும். மாறாக உன் பக்கம் நியாயம் இல்லாவிட்டால் அது பலிக்காது. அல்லது அது உன் பக்கம் திரும்பிவிடும். கோகிலாவுக்கு ஏதேதோ யோசனைகளை. நடந்தவைகளில் எதுதான் நியாயத்துக்கு உட்பட்டது. செல்வம் அவளது கணவனின் கடைக்கு வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் செல்வத்தின் அம்மா இறந்து போகிறாள். அநாதை செல்வத்துக்கு கோகிலா தம்பதிதான் அடைக்கலமாக இருக்கிறார்கள். ஒரு முடிவுடன் எழும் கோகிலா கொலைசேவலை குத்துங்க பூசாரி என்கிறாள். ”என் கையால போட்ட சோத்துக்கு நன்றி இல்லாம நடந்துக்கிட்டானே அதுக்கு ” என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறாள். [கதையில் இது மையம் இல்லை எனினும் அவளது முடிவுக்கு இந்த நினைவும் ஒரு காரணியே ] . அஞ்சலை, போன்ற கோகிலா போன்ற பெண்களை இயக்க, கட்டுப்படுத்த இருக்கும் காரணிகள் எதுவும் ரா சோ வின் பெண்களுக்கு இல்லை. எட்டு கதைகள் தொகுப்பின் ஊனம் கதையின் நாயகி ஏன் அவ்வாறு இருக்கிறாள்? அவளை இந்த லௌகீக ஒழுக்க நியதிகளுக்குள் கொண்டு வர இயலாமல் தற்கொலை செய்து கொள்கிறான் அவளது கணவன். ஏன் அவளை உதறி அவனால் வேறு வாழ்க்கை தேற இயலவில்லை? இத்தககைய நாயகி கணவன் இறந்ததும் அனைத்தையும் பறிகொடுத்தவளின் உணர்வில் கிடப்பது ஏன்? இந்த கதைக்குள் எங்கே இறங்கி உழன்றாலும் ஏன் என்ற கேள்வியில்தான் முட்டி திகைத்து நிற்க வேண்டும். விதி. ஊழ் என்றுமட்டுமே கொள்ள முடியும்.

இத் தொகுதியின் பெண்கள் தனபாக்கியம் ,பார்வதி எல்லோருமே அடி உதைக்கு தங்களை ஒப்புக்கொடுத்து புலம்புகிறார்கள். பாத்து பாத்து வடிச்சு போட்டனே, என்னை அடிச்சே கொல்றானே என ஒப்பாரி வைக்கிறார்கள். புற்றில் உறையும் பாம்புகள் கதையின் நாயகி வனமயிலுக்கு நேர் எதிரானவள் ஊனம் கதையின் நாயகி. புற்றில் உறையும் பாம்புகள் கதையில் வனமயில் கணவன் கந்த சாமி. ஊனம் கதையில் தற்கொலை செய்து கொள்ளும் கணவனுக்கு நேர் எதிர் குணநலம் கொண்டவன்.

எனது நண்பர் கிருஷ்ணகிரியில் வசிக்கும்போது அவரது அறைத்தோழன் கல்லூரி நண்பனின் கள்ளக்காதல் குறித்து சொன்னார். திருமணம் ஆகி குழந்தை உள்ள பெண்ணுடன் உறவு .காதல். அந்த பெண் மீது கொண்ட காதல் அளவே அவன் அந்த குழந்தை மீதும் பிரியத்தை வைத்திருந்தான். இந்த விசித்திரமான தனித்துவமான உளவியல் மீது நிலைகொள்கிறது எதிர்பார்ப்புகள் சிறுகதை.

இந்த தொகுதியில் வடிவ அழகில் முற்றிலும் புறம் சார்ந்த கதைகளில் ரா சோ கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களை முற்றிலும் தவிர்த்து விட்டு [புற உலக வர்ணனை கூட பெரிதாக சொல்லப்படவில்லை] கதையின் நிகழ்வு, பாத்திரங்களின் உரையாடல் வழியே முற்றிலும் அருவமான ஒன்றின் இருப்பை தொடுகிறார்.

மாறாக முற்றிலும் அகம் சார்ந்த கதைகளில் குறிப்பாக இச்சை கதையில் வரும் கனவு சித்தரிப்பில் மிக விரிவான வர்ணனைகள் இடம் பெறுகின்றன. காமம் கொண்டு அலைக்கழியும் ஒருவன். அவனது இச்சையே அவனை வழி தவறவைத்து , அபாயகரமான தற்கொலை முனைக்கு அவனை அழைத்து வருகிறது. அவனுக்கு முன்னாளல் ஒரு தாய். அவளது நிறைசூலி மகளை [ ஒழுக்கம் தவறி பெற்ற சூல் ] மல்லாந்து படுக்கவைத்து , மகளின் தலைக்கு மேலாக எடை கூடிய பெரிய கல் ஒன்றினை தூக்கி, அவளை கொல்லும் நிலையில் நிற்கிறாள்.

உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா எனும் விளம்பரம் போல இந்தக் கதையில் சோஷியலிச யதார்த்தவாதம் இருக்கிறதா? என்று முன்பெல்லாம் முற்போக்கினர் குடுமிப்பிடி நடத்துவர். அவர்களுக்கு ராஜேந்திர சோழன் எனும் மார்க்சியர் எழுதிய இந்தக் கதைகள் [ இது என்ன பண்டம் என கடித்துப் பார்த்த பின்னும் ] எந்தப் பிடியும் கொடுத்திருக்காது.

பவா. பேசுகையில் . மார்க்சியத்தின் அங்கீகார அலகுகள் எதற்கும் இந்தக் கதைகளுக்குள் இடம் இல்லை. என்றார். ஆனால் உண்மையில் இக் கதைகள் ராஜேந்திர சோழனின் ”மார்க்சிய” மெய்ஞ்ஞான தேட்டத்தின் கலா சிருஷ்டிகள்என்பேன் . விதி,அல்லது ஊழ் , துக்கம், அனைத்தும் மேல் இங்கு காணும் அனைத்துக்கும் , அது இருப்பதற்கும் , செயல்படுவதற்கும் காரணமான ”இச்சை ” இவற்றுக்கு மார்க்சியத்தில் எந்த விடையும் இல்லை. விடையற்ற அந்த விதியின் , துயரின், இச்சையின் தூல வெளிப்பாடுகளே ராஜேந்திர சோழனின் கதாபாத்திரங்கள்.

இந்த நூல் சங்க செயல்பாடுகளுக்கான பிழைப்பு வாதிகளுக்கான நூல் அல்ல. தத்துவம் அறிந்து மயிர் பிளக்கும் வாதங்களில் இறங்கி ஜெயித்து தருக்கி நிற்பவர்களுக்கு அல்ல. அநீதி கண்டு பொறுக்காத, சமநிலை சமுதாயம் நோக்கி அணையாத தீவிரமும் லட்சியமும் கொண்டு நடப்பவர்களுக்கானது என்கிறார் தனது மார்க்சிய மெய்ஞ்ஞானம் நூலின் முன்னுரையில் ராஜேந்திர சோழன்.

ஆக ஒரு கோட்பாட்டாளராக ராஜேந்திர சோழன் கட்சிக்கு தேவையற்றவர். கலைஞனாக பிடிபடாதவர். மேலாண்மை பொன்னுசாமியையும், செல்வராஜ் ஐயும் வந்து தொட்ட விருதுகள் இவரை தொடும் வகையற்ற இருளில் நின்று பேசிக்கொண்டு இருப்பவர்.

பவாவின் மைந்தன் வம்சி ராஜேந்திர சோழன் குறித்த ஆவணம் ஒன்றினை இயக்கும் பணியில் இருக்கிறார். அப்பணிகளுக்காக ரா சோ சிலநாட்கள் பவாவின் பத்தாயத்தில் தங்க வருவதாக பவா சொன்னார். வாய்ப்பு இருப்பின் ஒரு முறை அவரை சந்தித்து அவரது கைகளை பற்றிக்கொள்ள வேண்டும்.

கடலூர் சீனு

***

புற்றிலுறையும் பாம்புகள் –ராஜேந்திர சோழன்

***

முந்தைய கட்டுரைஇடங்கை இலக்கியம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்