«

»


Print this Post

மீண்டும் ஒரு மதப்பூசல்


Nammazhvaar

அன்புள்ள ஜெ

நம்மாழ்வார் மற்றும் இயற்கை வேளாண்மை, இயற்கை மருத்துவம் ஆகியவற்றை பற்றிய இந்தக் குறிப்புகளைப் படித்தேன். இவற்றில் நம்பிக்கையுடன் செயல்பட்டுவருபவன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டது. இவற்றில் ஆர்வத்துடன் எழுதிவருபவர் என்ற முறையில் உங்கள் கருத்துக்களை அறியவிரும்புகிறேன்.

[நம்மாழ்வாரின் வானகம் அமைப்புக்கு விஷ்ணுபுரம் அமைப்பு சார்பாக நன்கொடைதிரட்டி அளிக்கப்பட்டது என்பதையும் நினைவுகூர்கிறேன்]

கே.

***

நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங்கள், அகடவிகடன் – ஆனால், அழகான ஆர்எஸ் பிரபு: சில குறிப்புகள்

ஆர் எஸ் பிரபு

அன்புள்ள கே,

இவ்விரு கட்டுரைகளிலும் உள்ள பூசல்தொனி எனக்கும் கசப்பை அளிக்கிறது. ஆனால் ஒத்திசைவு ராமசாமியை எனக்குத்தெரியும்- இது அவருடைய மாறாத உணர்வுநிலை. கசப்பு, கோபம் இல்லாமல் அவரால் எதையும் விவாதிக்க இயல்வதில்லை. ஆர்.எஸ்.பிரபு எவர் என தெரியவில்லை.

நம் சூழலில் நிகழ்ந்த வேளாண்மைப்புரட்சி மற்றும் நவீன மருத்துவத்தின் மறுபக்கம் பற்றி நான் மிக நன்றாகவே அறிவேன். அதன் சாதனைகளை வழக்கமான இயற்கைவேளாண்மை –இயற்கை மருத்துவர்களைப்போல நான் மறுப்பதில்லை. அவற்றை அங்கீகரித்தபடியேதான் என் ஐயங்களை எழுதியிருக்கிறேன். ஓர் எழுத்தாளன் என்றவகையில் பெரும்பாலும் என் சொந்த அனுபவங்களைச் சார்ந்தே இவற்றைச் சொல்கிறேன்.

இந்தியவேளாண்மையைப் புரிந்துகொள்ளாமல், வெறும் கல்விக்கூடநிபுணர்களால் கொண்டுவரப்பட்ட பசுமைப்புரட்சியின் எதிர்விளைவுகளை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். நான் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவன், விவசாயம் செய்தவன். அவ்வனுபவத்தில் சொல்கிறேன்.

இந்தியவிவசாயம் துண்டுநிலங்களில் நிகழ்கிறது. ஒவ்வொரு துண்டும் சாதியால், மதத்தால், பொருளியல்ச் சூழலால் வேறுபட்டவர்களுக்குச் சொந்தமானது ஆகவே அத்தனைபேரும் சேர்ந்து ஒன்றைச் செய்வது அனேகமாகச் சாத்தியமில்லை. அதன் விளைவான நடைமுறைச் சிக்கல்களைக் கண்டுகொள்ளாமல் மூர்க்கமாக இங்கே நவீனவேளாண்மை முன்வைக்கப்பட்டது

பூச்சிமருந்துகள் பயன்படுத்தும்போது ஒருவர் பூச்சிமருந்து தெளித்தால் பூச்சிமருந்து தெளிக்காத பக்கத்து வயல்களுக்கு பூச்சிகள் செல்லும். நான்குநாட்களுக்குப்பின் திரும்பிவரும். ஆகவே பூச்சிமருந்தை பலமடங்கு கூடுதலாகத் தெளிக்கவேண்டும். அதைமீறியும் பூச்சிகள் வாழும். அவை பூச்சிமருந்து எதிர்ப்பை வளர்த்துக்கொள்ளும்.. ஆகவே மேலும் வல்லமைவாய்ந்த பூச்சிமருந்து தேவையாகிறது. உரமும் இப்படித்தான்.இதெல்லாம் நானே செய்தவை.

இன்று வாழைக்காய்க்குள் நேரடியாக குலைக்காம்பு வழியாக யூரியாவும் பூச்சிமருந்தும் செலுத்தப்படுகின்றன. அதை நாம் உண்கிறோம். கன்யாகுமரி மாவட்டத்தில் ஒரு வயல்வழியாக காலைநடை செல்லமுடியாது. தும்மலும் மயக்கமும் வரும்.பலநோய்களுக்கு இதுதான் காரணம். அதைக்கொண்டு ஒரு மாபெரும் மருத்துவ வணிகம் கட்டி எழுப்பப் பட்டுள்ளது

இடுபொருட் செலவு மிகுந்து விவசாயம் அழிந்துவிட்டது. தமிழகத்தின் தென்பகுதியில் நீங்கள் பயணம்செய்தால் பல்லாயிரம் ஏக்கர் நிலம் சும்மா போடப்பட்டிருப்பதைக் காணலாம். பருத்தி காய்கறி விளைந்த நிலங்கள். மாற்றுத்தொழில் வந்தால் விவசாயத்தை மக்கள் விட்டுவிடுகிறார்கள். இதுதான் இந்திய யதார்த்தம். விவசாயம் பொய்க்கிறது, மறுபக்கம் விவசாயநிலத்தில் வாழ்வதனால் வரும் நோய்கள். அதன் மட்டுமீறிய செலவு. அதன் விளைவான கடன், தற்கொலை.

இந்நிலைக்கு எதிரான ஓரு விழிப்புணர்வு இயக்கம் என்றவகையில்தான் நான் இயற்கைவேளாண்மை, மாற்றுமருத்துவம் ஆகியவற்றில் ஆர்வம்கொண்டிருக்கிறேன். அது சார்ந்த அனுபவங்களை எழுதியிருக்கிறேன். ஐயங்களையும் பதிவுசெய்திருக்கிறேன். அந்தத்தரப்பு நம் சூழலில் ஒலித்தாகவேண்டியது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் மையத்தரப்பு என்பது அரசு- பெருவணிகம்- கல்விநிலையங்களால் பேணப்படுவது. இயற்கைமருத்துவம் மற்றும் இயற்கைவிவசாயத்தின் தரப்பு ஒருவகை தன்னிச்சையான எதிர்ப்புக்குரல் மட்டுமே.

எங்கே சிக்கல் எழுகிறது என்றால் இங்கே எதுவும் ஒருவகை மதமாக ஆகிவிடுகின்றது என்பதிலிருந்துதான். இயற்கைத்தரப்பினர் மிகச்சீக்கிரத்திலேயே மதநம்பிக்கைபோல அதை ஆக்கிக்கொண்டனர். மதம் என்றானதுமே புனிதபிம்பங்கள் பிறக்கின்றன. ஒற்றைவரி கோஷங்கள் எழுகின்றன. நாம் என்ற சொல் உருவாகிறது. அவர்கள் என்ற மறுசொல் எழுகிறது. அவர்கள் அயோக்கியர்கள், நம்மை அழித்தொழிப்பதை மட்டுமே செய்ய விழைபவர்கள், எந்தவிதமான நல்லியல்களும் அற்றவர்கள், எளியமுறையில் செவிசாய்க்கக்கூட தகுதியற்றவர்கள் என ஆகிவிடுகிறது.

தமிழகத்தில் கணிசமானவர்களுக்கு சிந்தனை என்றாலே வெறுப்பதும் வசைபாடுவதும்தான். எதையாவது ஒன்றைப்பற்றிக்கொண்டால் அதற்கு அப்பாலுள்ள எல்லாவற்றையும் வெறுக்கலாம், வசைபாடலாம், சூழ்ச்சிகளைக் கண்டுபிடித்து மறுசூழ்ச்சி செய்யலாம். நிலைகொள்ள ஓர் பீடம் கிடைக்கும், நாளும் கழிந்துசெல்லும். அந்தப் பெருங்கும்பல் இயற்கைவிவசாயம், இயற்கை மருத்துவத்திலும் வந்துசேர்கிறது. இயற்கைச்சார்பு என்பது ஒருவகை வசைபாடல் என இவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.பிற அனைத்து வெறுப்புகளுடனும் இவ்வெறுப்பையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒன்று. நான் இயற்கைவேளாண்மை மேல் நம்பிக்கை கொண்டவன். ஆனால் நடைமுறையில் ஒரு சிக்கல் உள்ளது. அது இயற்கைவேளாண்மை அதிகமான மானுட உடலுழைப்பைக் கோருகிறது என்பது. தமிழகம் இன்று வளர்ந்துகொண்டிருக்கிறது. வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் தேவைகளை அதிகரிக்கிறது. ஆகவே ஊதியம் கூடுதலாகத் தேவையாகிறது. அந்த ஊதியத்தை இன்றைய வேளாண்மையின் உபரியைக்கொண்டு கொடுக்கமுடியாது. சற்றேனும் லாபகரமான வேளாண்மை இயந்திரங்களைக்கொண்டே இன்றுசெய்யமுடிகிறது. இதைச் சொன்னதும் கிட்டத்தட்ட மதத்தீவிரவாதிகள் எழுதும் பாணியிலான வசைகள் எனக்கு வந்தன. என்னை துரோகி, விலைபோய்விட்டவன் என்றெல்லாம் அவை முத்திரைகுத்தின.

இங்கே உண்மையில் ஏதேனும் செய்பவர்கள் சிலர். ஒரு நம்பிக்கையாக, தரப்பாக எதையேனும் ஏற்று கூச்சலிடுபவர்கள் பலர். நம்பிக்கை உருவானதுமே அதை நிலைநிறுத்த எதையும் சொல்லலாம் என்றாகிறது. அறிவியல்முறைமை தேவையில்லை, வரலாறு தேவையில்லை. போலி அறிவியல் வாதங்கள், மிகையுணர்ச்சிகள், வழிபாட்டுப்பிம்பங்கள் மீதான தொன்ம உருவாக்கங்கள் பெருகுகின்றன.. புராணக்கதைகள் கிளைக்கின்றன. ஆராய்ச்சி, கறாரான புறவயமான விவாதம்,நடைமுறையிலிருந்து பெறும் அவதானிப்புகள், பயிற்சிகள், அவற்றை ஒருங்கிணைத்து கொள்கைகளாக ஆக்கிக்கொள்ளுதல் எதிலும் எவருக்கும் ஆர்வமில்லை

மறுபக்கம் ‘அறிவியல்நம்பிக்கை’ என்பதையும் ‘ஐரோப்பியச்சார்பு’ என்பதையும் இன்னொருசாரார் மதநம்பிக்கையாகவே கொண்டிருக்கிறார்கள்.இவர்களுக்கு அறிவியல்மேல் உண்மையான நம்பிக்கையோ அதில் பயிற்சியோ இருக்கும் என்றால் தங்கள் மறுதரப்பு என்ன சொல்லவருகிறார்கள், அவர்கள் சொல்வதில் ஏதேனும் அடிப்படை உள்ளதா என்று நிதானமாக ஆராய்வார்கள்.

நான் இதைப்பற்றி ஆராய வந்த மூன்று அமெரிக்க அறிவியலாளர்களுடன் பேசியிருக்கிறேன்.அவர்களின் வழிஎப்போதும் மறுதரப்பை கூர்ந்து நோக்கிப் புரிந்துகொள்வதாகவே இருக்கிறது. மறுதரப்பு பிழைகளுடன் முன்வைக்கப்பட்டாலும், தர்க்கபூர்வமாக இல்லை என்றாலும், குழப்பிக்கொண்ட சொற்களில் கூறப்பட்டாலும், மிகையுணர்ச்சி எளிய நம்பிக்கைகள் மற்றும் வெறுப்புகள் சார்ந்ததாக இருந்தாலும் அவர்கள் தங்கள் அறிவியல்முறைப்படி அவற்றை நீவி சீராக்கி ஒரு சரியான எதிர்வாதமாக ஆக்கிக்கொள்வதைக் கண்டு வியந்துள்ளேன். இந்தியாவில் அந்த அறிவியல்நோக்கு உருவாக இன்னும் ஒருதலைமுறை செல்லவேண்டும்.

நம் ‘அறிவியல்மத\த்தினரின் வழி வழக்கமான அடிப்படைவாதம்தான். அதன் வாதங்கள் மூன்று அடிப்படைகளில் அமைந்தவை. ஒன்று, எதிர்த்தரப்பினருக்கு அதைச்சொல்லும் தகுதி இல்லை என்று நிறுவுவது. ஒருவர் விவசாயத்தைப் பற்றிய தன் கருத்தைச் சொல்ல விவசாயம் செய்யும் தகுதியே போதுமானது. அனுபவம் சார்ந்த ஓர் அவதானிப்புக்கு அங்கே எப்போதும் இடமிருக்கும். அறிவியலாளனுக்கு அது முக்கியமானது. ஆனால் ‘நீங்கள் நான் படித்த அதே படிப்பை படித்தீர்களா? இல்லையென்றால் மூடுங்கள் வாயை’என்பதே இவர்களின் தோரணையாக இருக்கும்.

இரண்டாவதாக, எதிர்தரப்பின் எளிய பிழைகளைக் கண்டுபிடித்து அதைக்கொண்டு அவர்கள் சொல்வது முழுமுட்டாள்தனம் என நிறுவ முயல்வது. வேளாண்அறிவியலை எதிர்ப்பவர்கள் அதேவேளாண் அறிவியலைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டியதில்லை என்பதைக்கூட இவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. ஏனென்றால் அறிதல் அல்ல இவர்களின் நோக்கம், வாதிடுவது மட்டுமே

மூன்றாவதாக, தங்கள் எதிர்தரப்பு முழுமுட்டாள்களால் ஆனது, உள்நோக்கம் கொண்டது என நம்புவது. உண்மையிலேயே அவர்களுக்கு ஒருப்பிரச்சினை இருக்கலாம் என்ற எளிய அடிப்படைநம்பிக்கையை அளிக்க மறுப்பது. பூச்சிமருந்தால் எனக்கு ஒவ்வாமை வருகிறது என ஒருவன் சொன்னால் அவனிடம் ’நீ அறிவியல் அறியாத கூமுட்டை, நீ அயோக்கியன்’ என்பார்கள்

ஆக இங்கே நிகழ்வது இரு மதங்களுக்கு நடுவே நிகழும் பூசல். எல்லா மதச்சண்டைகளையும்போல நீ மிலேச்சன், நீ காஃபிர், நீ அஞ்ஞானி என்னும் வகைச் சண்டை நிகழ்கிறது.இணையமும் முகநூலும் இதற்கென்றே ஆன களங்கள். உண்மையான ஆய்வும் விவாதமும் வேறெங்கோ நிகழ்கிறது என நம்பி ஆறுதல்கொள்வோம்.

ஜெ

***

நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங்கள், அகடவிகடன் – ஆனால், அழகான ஆர்எஸ் பிரபு: சில குறிப்புகள்

ஆர் எஸ் பிரபு

***

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/100321

1 ping

  1. என்ன வேண்டும் ? வலிமை வேண்டும்!

    […] இன்றைய இந்த கட்டுரையை வாசித்தேன் (http://www.jeyamohan.in/100321#.WWWiPceCnBs), ‘சோம்பி திரியேல்’ நினைவுட்டியது. […]

Comments have been disabled.