பச்சைக்கனவு –கடிதங்கள் 3

3

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு அன்புடன் நான்…

பச்சைக்கனவு என்று தலைப்பைப் பார்த்ததுமே லா.ச.ராவின் கதையில் சென்றது என் எண்ணம். திருக்குறள் உரையில் “விசும்பின் துளி’ என்ற குறளை விளக்கும்போது வாகமனைப்பற்றியும் உங்கள் மழைப்பயணம் பற்றியும் கூறியிருப்பீர்கள். அப்போதிருந்தே அதன் பசுமை மனதில் குடிகொள்ளத்தொடங்கியது. உங்களின் பயணக்கட்டுரை என் இந்த நாளை பலமணி நேரம் பசுமையோடு தேக்கி என்னைத் தன்னுள் வைத்துக்கொண்டிருக்கிறது. அந்த மகத்தான அனுபவம் தந்தமைக்கு நன்றி.
அன்புடன்
நா. சந்திரசேகரன்

***

அன்புள்ள சந்திரசேகரன்

பச்சைக்கனவு ஒரு அருமையான கதை.சிக்கலாக ஒன்றுக்குள் ஒன்றெனச் செல்லும் நிகழ்வுகள். கதையாகவும் வெறும் உருவகமாகவும். பச்சை என்னும் சொல்லைக்கொண்டு லா.ச.ரா விளையாடியிருக்கிறார்

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன் அவா்களுக்கு,

வணக்கம். நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். ஏனென்றால் அது தேவையில்லை என்று எண்ணுபவள், காரணம் வாசிப்பின் வழியாக அடையும் நெருக்கம் கலைய நான் விரும்புவதில்லை. உங்களை நான் எப்படி உணா்கிறேன் என்பதை உங்களிடமே கூட என்னால் முழுமையாக சொல்லிவிட முடியாது. இதுவரை நோிடையாக சந்திக்கவோ, பேசவோ, அவ்வளவு ஏன் இப்படி ஒருத்தி இருக்கிறேன் என்றே தொியாத ஒருவா் மேல் அன்பும், மதிப்பும் வரக்கூடும் என்பதே ஆச்சாியமாக தான் உள்ளது. அன்பும் மதிப்பும் பலரிடம் இருந்தாலும் பொறாமையை வரவழைத்தது நீங்கள் தான் சாா். கட்டுரைகள், கதைகள் என தொடர்ந்து வாசித்தாலும் எழுத துணிந்ததில்லை ஆனால் இப்போது நீங்கள் சென்று வந்த மழைபயணம் எல்லாவற்றையும் உடைத்துவிட்டது. அந்த கட்டுரையை வாசித்த போது ” சே…என்ன மாதிாி ஒரு ஆசிா்வதிக்கபட்ட வாழ்க்கை” என்று தான் சத்தியமாக தோன்றியது. உங்களின் மற்ற செயல்பாடுகளை விட நீங்கள் மேற்கொள்ளும் பயணமே நான் ஆா்வமுடன் கவனிப்பது. சைக்கிளிலோ, பேருந்தோ, இரயிலிலோ போயிட்டே இருப்பது எப்போதுமே உவகையளிக்க கூடியது. ஆனால் நிஜத்தில் அதிகம் பயணம் செய்யாதவள், அதற்கான வாய்ப்பு மிக குறைவு எனக்கு. அதனால் தான் உங்கள் மேல் பொறாமை அதுவும் இந்த மழையில் நனைந்துக்கொண்டே செல்லுவதை பாத்தவுடன் பல மடங்கு அதிகமாகிவிட்டது. அந்த குழுவில் ஒரு பெண் கூட இல்லையே?

நீங்களும் பெண்களை பாரமாக நினைக்கீறீர்களா சாா்? இல்லை தொல்லையா?. மழை எனக்கு எப்பவுமே நெருக்கமானதாக இருக்கிறது அது கொண்டு வரும் மகிழ்ச்சியை அளவிட முடியாது அது எப்போதும் நினைவுகளை கிளா்த்துவதாகவே இருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும் நினனவுகள். ஆச்சாிய நிகழ்வாக இதை எழுதும் இத்தருணத்திலும் வெளியே மழை. மழை ஒா் ஆசிா்வாதம் அது உங்களுக்கு நிறையவே வாய்த்திருக்கிறது. நான் வேறு என்ன சொல்ல? நல்லா இருக்கனும் சாா் நீங்க ரொம்ப…….ரொம்ப காலத்துக்கு.

“மழையின் மேற்கூரையிலிருந்து

விழும் இந்த மழைத்துளிகள்

ஏனோ எனக்கு பியோனோ

இசையை நினைவுட்டுகிறது,
மனம் தானே உன் விரல்களை

பற்றி எண்ணிக்கொள்கிறது,
வெளவால் வீச்சம் நிறைந்த

அந்த கோவிலின் உட் பிராகாரத்தில்

இருக்கும் சிலையின் விரல்களோடு

ஒப்பிட்டு சொன்னபோது நீ புன்னகைத்தாய்

இனிய சாரல் போல…”
மிக்க அன்புடன்,

தேவி. க,

***

அன்புள்ள தேவி

நேரடியாகச் சொல்லவேண்டும் என்றால் எங்களுடைய பயணங்களில் பெண்களைச் சேர்த்துக்கொள்வது மிகக்கடினம். இருமுறை முயன்றோம், கட்டுப்படியாகவில்லை. ஒன்று, மிகமிகக்குறைவான செலவில் பயணம் செய்கிறோம். 15 பேர் ஒருநாள் தங்க மொத்த வாடகை 1500 ரூபாய் என்றால் எப்படி என எண்ணிப்பாருங்கள்.

அதோடு முன்னதாக வகுக்கப்படாத பாதைகளில் பயணம் செய்கிறோம். பெண்கள் வருவார்கள் என்றால் தங்குமிடம் வசதியாக அமையவேண்டும். பயணம் முறையாகத் திட்டமிடப்படவேண்டும். திட்டமிட்டாலும்கூட சரியாக அமைவதில்லை. சென்ற கேதார் பயணத்தில் 7 மணிக்குச் சென்றடைவோம் என எண்ணிய இடத்துக்கு விடிகாலை 2 மணிக்குச் சென்று சேர்ந்தோம். மிகமிக மோசமான சாலை. எந்த வகையான மானுட நடமாட்டமும் இல்லாத மலைப்பாதை. அப்போது வண்டி ஏதேனும் பிரச்சினை ஆகிவிடக்கூடாது என்ற படபடப்பு மட்டுமே இருந்தது.பெண்கள் இப்படி ஒரு பயணம் செய்யும் அளவுக்கு இந்தியா இன்னும் முதிரவில்லை.

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் -சில குறிப்புகள்