“கெரகம்!”

sura

உயிர் எழுத்து ஜூலை 2017 இதழில் நஞ்சுண்டன் பிழைதிருத்தல், பிரதிமேம்படுத்துதல் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  ‘கால்திருத்தி’ என்னும் தலைப்பில்.

பொதுவாக இந்த க்ரியா வகை ‘பிரதிமேம்படுத்தல்’ பற்றி எனக்கு ஆழமான சந்தேகம் உண்டு. வாழ்க்கையையோ இலக்கியத்தையோ அறியாமல், மொழியின் விதிகளை இயந்திரத்தனமாகப்போட்டுச் செய்யப்படும் இத்தகைய ’மேம்படுத்தல்கள்’ ஒரு இலக்கியப்பிரதியை சித்திரவதை செய்பவை. மொழியின் சாவி தங்களிடம் இருப்பதாகவும் இமையம், பூமணி போன்ற நாட்டுப்புற கலைஞர்களை தங்கள் மெய்ஞானம் மூலம் தாங்கள் உயர்கலைஞர்களாக ஆக்குவதாகவும் ஒரு பாவனை இவர்களிடம் இருக்கும்.

உதாரணமாக, இமையத்தின் ஆறுமுகம் நாவலுக்கு க்ரியா எழுதிய பதிப்பாளர் குறிப்பில் க்ரியாவின் மொழிக்கொள்கைக்கு ஏற்ப அந்நூல் செம்மை செய்யப்பட்டது எனகூறப்பட்டிருந்தது.. திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அத்தனை ஆசிரியர்களின் நடையையும் தனித்தமிழுக்கு மாற்றி வெளியிடும். அதை உலகின் எந்தப்பதிப்பகமும் அதற்கு முன் செய்ததில்லை. அதற்கு நிகரான் கீழ்மை அச்செயல். அன்று என்னிடம் உருவான ஒவ்வாமை இன்றுவரை அப்பதிப்பகம் மீது குறைந்ததில்லை.

மொழி என்பது இவர்கள் அறிந்த விதிகளும் சொற்களும் அல்ல, அது பண்பாட்டின் வடிவம். பண்பாட்டை அறியாமல் மொழியை அறிய எவராலும் இயலாது. பண்பாட்டுக்கு அன்னியமாகி அறைக்குள் இருப்பவர்களின் மொழி என்பது ஒரு பயனற்ற இயந்திரம்.

புனைவுமொழி என்பது அந்த ஆசிரியனின் ஆழ்மனம் வெளிப்படும் ஒரு கட்டற்ற பீரிடல். அது முடிவிலாத வண்ண வேறுபாடுகள் கொண்டது. மீறல்கள் கொண்டது. அறிந்தும் அறியாமலும் விரிவு கொள்ளும் பண்பாட்டு உட்குறிப்புகளின் பெருந்தொகை அது.அதிலுள்ள பிழைகளும் கூட சிலசமயம் படைப்பூக்கவெளிப்பாட்டின் பகுதிகளாக அமையமுடியும். [தன் எழுத்தை பிழைதிருத்த முயன்ற தம்பியிடம் வைக்கம் முகமது பஷீர் சொன்னது நினைவுக்கு வருகிறது] இவர்களுக்கு அது பிடிகிடைப்பதில்லை

இங்குள்ள எழுத்தாளர்கள் நூலை ’எடிட்’ செய்ய ஒப்புவதில்லை என பரவலாகச் சொல்லப்படுவதுண்டு. நம் ‘எடிட்டர்’களின் தரம் அத்தகையது. புனைவுமொழியின் முன் கொள்ளவேண்டிய தன்னடக்கமோ நுண்ணுணர்வோ இல்லாத இலக்கண இயந்திரங்கள் அவர்கள். எம்.எஸ் போன்ற மிகச்சிலரிடமே அந்த பண்புகளை நான் கண்டிருக்கிறேன்.

இவர்கள் ஒருவகை சராசரிகள். அந்த சராசரி நோக்கி அவர்கள் கலைஞனை இழுக்கிறார்கள். புனைவுமொழி என்பது எப்போதும் சராசரியிலிருந்து மீறி எழுவது. நல்லவேளை லா.ச.ராவோ, கி ராஜநாராயணனோ ப.சிங்காரமோ, இவர்களின் கைகளுக்குச் சிக்கவில்லை

நஞ்சுண்டன் ஜே ஜே சிலகுறிப்புகளில் ஒரு பத்தியைப்பற்றிச் சொல்கிறார்.  “செம்மையாக்கத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த காலம் அடிக்கடி என் நினைவுக்கு வந்த வார்த்தை ‘கால்திருத்தி’. ஜே ஜே சிலகுறிப்புகளில் வரும் அந்த சொல்லாட்சியைப்பற்றி அவர் நிறைய ‘உழைத்திருக்கிறார்’

’ ஒரு வயோதிக அறிஞர் சோடைதட்டாத குரலில் பேசிக்கொண்டிருந்தார். இவரை எனக்கு மிக நன்றாகத்தெரியும். இந்துமதத்தையும் அக்டோபர் புரட்சியையும் கால்திருத்தி சம்மேளிக்கச் செய்தவர்”

என்ற வரியில் வரும் கால்திருத்தி என்ற சொல்லுக்கு என்ன பொருள் என தெரியாமல் நெடுங்காலம் உழன்றபின் இவரே ஒருபொருளை கொள்கிறார். தமிழில் உள்ள கால் [நெடில் அடையாளம்] என்று. அதாவது,வணாக்கம்  என்பதை  வணக்கம் என்று திருத்துவதுபோல. அந்த அறிஞர் இந்துமதத்துக்கும் அக்டோபர் புரட்சிக்கும் உள்ள மேம்போக்கான வேறுபாடுகளை திருத்தி அல்லது களைந்து அவற்றை திறம்பட ஒப்பிட்டவர் என்று சுரா சொல்வதாக புரிந்துகொள்கிறார் நஞ்சுண்டன்

கடைசியில்—ஆம்,கட்டக்கடைசியில் – அதைப் பதிப்பித்தவரான க்ரியா ராமகிருஷ்ணனிடமே கேட்கிறார். ’தமிழில் மிகவிரிவான செம்மையாக்கத்துக்கு உட்பட்ட நாவல் இது’ என்பதனால் அந்த செம்மையாக்கத்தைச் செய்த க்ரியா ராமகிருஷ்ணனிடமே அவ்விளக்கத்தைக் கேட்கிறாராம்.அவர் விளக்கினாராம்

ஜேஜே சிலகுறிப்புகளில் இதுபோன்று ஏராளமான வாக்கியங்கள் இருப்பதாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் கால்களை இணைத்துவிட்டால் அவர்களுக்குள் உடல்சேர்க்கை சாத்தியம் என்னும் நோக்கில் இந்த வாக்கியத்தைப்புரிந்துகொள்ளவேண்டும் என்றும் குறிப்பளித்தார்” என்கிறார் நஞ்சுண்டன்.

அவர் சொன்ன நோக்கில் [கண்களை மேலே சொருகி] நஞ்சுண்டன் கற்பனை செய்கிறார். “திரைப்படங்களில் வன்புணர்ச்சிக் காட்சிகளில் ஆண் பெண்ணின் கால்கள் பின்னிக்கொள்வதாகக் காட்டி அவர்களுக்குள் உடலுறவு நிகழ்ந்து விட்டதாக காட்டுவது சாதாரணம். இப்போது கால்திருத்தியை புரிந்துகொள்ள முடிந்தது

நஞ்சுண்டன் ‘ராம் அவர்களுக்கு நன்றி. இதுபோன்ற விளக்கங்களை வேண்டும் ஏராளமான வாக்கியங்கள் ஜே.ஜே. சிலகுறிப்புகளில் உண்டு” என்கிறார். அதோடு நில்லாமல் தீவிர மேம்படுத்தலார்வத்துடன் மொழியாக்கம் செய்த .இரா.வேங்கடாசலபதியை உசாவுகிறார்.  He was the one effected a marriage between Hinduism and October Revolution என அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  “மூலத்திற்கு எந்த பங்கமும் இல்லை’ என நஞ்சுண்டன் மகிழ்கிறார். ஆ.இரா வெங்கடாசலபதியும் க்ரியா ராமகிருஷ்ணனிடம் கலந்தாலோசித்திருக்கலாம்

எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. இதையெல்லாம் இவர்கள் ’சீரியஸா’கத்தான் செய்துகொண்டிருக்கிறார்களா? இல்லை நீயும் மொக்கை நானும் மொக்கை என கும்மிகொட்டி  விளையாடுகிறார்களா?

சுந்தர ராமசாமியின் ‘நோவெடுத்து சிரமிறங்கும் வேளை கால்கள் பிணைத்துக்கட்ட கயிறுண்டு உன் கையில்’ என்ற வரியில் இருந்து இந்த பொருளை ‘கொண்டுகூட்டி’ எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். இங்கே தழுவுதல்,கட்டுதல் என்றெல்லாம் இல்லையே, திருத்துதல் என்று இருக்கிறதே, அதையாவது யோசித்துப்பார்த்திருக்கலாம் அல்லவா?

இருவரை வலுக்கட்டாயமாக உடலுறவுகொள்ளச் செய்ய அவர்களின் கால்களை சேர்த்து கட்டுவார்களாம். அதை கால்களை திருத்துவது என்பார்களாம்.ஆணையும் பெண்ணையும் ஒன்றாகக் காலைக்கட்டி போட்டால் உடலுறவு கொண்டே ஆகவேண்டுமாம். புதுவிதமான சித்திரவதை!ஹாலிவுட் கதையாக சொன்னால் காசுதேறும்.

நாகர்கோயிலில் எந்த ஒரு சாதாரண வழிப்போக்கரிடம் கேட்டிருந்தால்கூட கால்திருத்துவது என்றால் வயலுக்கு வாய்க்கால் வெட்டி நீரைக் கொண்டுவருவது என்று பொருள் சொல்லியிருப்பாரே. விவசாயவேலைகளில் கால்திருத்துவது முக்கியமான பணி.கால் என்றால் வாய்க்கால். அல்லது சிற்றோடை. திருத்துவது என்றால் வெட்டிக்கொண்டுசெல்வது, கால் ஒருக்குவது என்றால் கரையின் புல்லைச் செதுக்குவது.புல்லும் வளரியும் நிறைந்து நீர்வழி அடைந்து கிடக்கும் கால்வாயை திருத்துவது அது. குமரிமாவட்டத்தில் கால் என்றாலே கால்வாய்தான். தேரேகால்புதூர், கன்னடியன்கால் என பல பெயர்களை இங்கு காணலாம்

அட, வையாபுரிப்பிள்ளை அகராராதியையாவது பார்த்திருக்கலாமே? கால் என்றால் வழி என்ற அர்த்தமாவது வந்திருக்கும். வழிதிருத்தி என்ற பொருளையாவது எடுத்திருக்கலாம்.

இங்கே சு.ரா கிண்டலாக சொல்கிறார் என்பதுகூட இவர்களுக்குப் புரியவில்லை.சம்பந்தமில்லாதவற்றை நெடுந்தொலைவுக்கு வழிதிருப்பி கொண்டுசென்று இணைப்பது என்று இங்கே பொருள். சம்மேளிப்பது என்னும் மலையாளச் சொல்லையும் அந்த நக்கலுடன்தான் சொல்கிறார். நாகர்கோயில் பேச்சுவழக்கிலேயே ஒரு பேச்சை சம்பந்தமில்லாத இடத்துக்குக் கொண்டுசெல்வதௌ ‘கால்திருத்தி கொண்டுட்டு போறான்’ என்பதுண்டு.

சொல்லப்போனால் கால்திருத்துவது என்பது அன்னியநிலம் வழியாக வாய்க்கால் வெட்டி தன் வயலுக்குத் தண்ணீர்கொண்டு வருவதைக் குறிக்கும் உள்ளூர் அர்த்தமும் கூடியது. சு.ரா இந்தமாதிரியான நக்கல்களை எல்லாம் பதிவுசெய்துகொள்ளும் செவிகொண்டவர்.

”கெரகம்” என்று சொல்லி தலையிலடித்துக்கொள்ளலாம். அதற்கும் அச்சமாக இருக்கிறது. அது செவ்வாய்க்கிரகத்தைக் குறிக்கிறது, செவ்வாய் தோஷத்தை சுட்டுகிறது என ஆரம்பித்துவிட்டால் என்ன செய்ய?

மொழியாக்கச் சிக்கல்களும் தமிழும்
முந்தைய கட்டுரைகலையின் உலை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48