கலையை கையாளுதல் பற்றி …

aaAndy Warhol – Marilyn Monroe

1a Banksy’s appropriation of Andy Warhol’s appropriation of a Marilyn Monroe photograph.

ஜெ,

வேதா நாயக் குறித்த உங்கள் குறிப்பை படித்தேன். அவர் உபயோகப்படுத்தி இருக்கும் பெரும்பாலான புகைப்படங்கள் மற்றும் ஒவியங்கள் அவருடையது அல்ல. அவற்றின் உண்மையான படைப்பாளிகளின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப் படவில்லை. இந்த படங்கள் அவருடையது என்று அவர் எங்கும் குறிப்பிடவில்லையெனினும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர் எடுத்ததாகவோ, வரைந்ததாகவோதான் தோன்றும். அந்தக் கடிதத்தை எழுதிய வாசகர் கூட அப்படித்தான் எண்ணியிருக்க வேண்டும். தமிழ் படைப்புகளின் பெயர்களையும், இந்த படங்களையும் இணைப்பதே வேதா நாயக்கின் பங்களிப்பு.[அப்படி ஏதும் இருக்குமெனில்.]

கலையில் appropriation க்கு தனி இடம் உண்டு. Appropriation art என்ற தனி வகையே கூட உண்டு. Originality குறித்து Walter benjamin துவங்கி Richard prince வரை விரிவாகவே விவாதிக்கப்பட்டிருக்கின்றது. அவையெல்லாம் அந்த துறையின் உள்ளே நிகழ்பவை. ஒரு விவாதத்தில் முன்பு சொல்லப் பட்ட ஒன்றை மேற்கோள் காட்டப்படுவதைப் போல. புதிய கவிஞன் சங்க கவிதையின் வரிகளை எடுத்தாள்வதை போல.அதன் உத்தேச வாசகன் இலக்கிய வாசிப்புக்கு உள்ளே உள்ளவன், எடுத்தாளப்படுவதன் நுட்பமும், அதன் மூலமும் அறிந்தவன்.

அட்டை வடிவமைப்பு போன்ற, அந்த குறிப்பிட்ட கலைக்கு வெளியே இருக்க கூடிய, வடிவமைப்பு துறையில் எடுத்தாளும் பொழுது ஒரு புகைப்படம் புகைப்பட உலகில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு “உபயோக படுத்தபடுகிறது”. எனவே குறைந்த பட்சம் அது எடுக்கப்பட்ட இடத்தையும் மூல கலைஞரின் பெயரும் குறிப்பிடப்பட வேண்டும், அவர்களின் அனுமதியும் பெற வேண்டும். இல்லையெனில் அது ஒரு வகை திருட்டே. இதை சொல்லப் போனால், அது நான் உருவாக்கியது என்று எங்குமே குறிப்பிடவே இல்லையே என்று பதில் வரும். நன்றாக இருக்கிறது என்றால் நன்றி என்பார்கள்.

ஷண்முகவேலின் ஒவியம் ஒரு மஹாபாரத நாவலுக்கு பொருத்தமாக இருந்த ஒரே காரணத்தால் “சிறப்பாக” எடுத்து உபயோகப்படுத்தப் பட்டு, அதற்கு பெயரும் பணமும் வாங்கிக் கொண்ட “மகத்தான கலைஞனுக்கு” எதிராக, நம்முடைய “கலையறியா” நான்கு நண்பர்கள் [என்னையும் சேர்த்து] இரண்டு மாதமாக அமேசானுடன் போராடிக்கொண்டிருக்கிறோம். அதையும் அமேசான் கற்பனை சுதந்திரம் என்றே கூறி வருகிறது. இப்பொழுதுதான் ஒரு வழியாக உடனே மாற்றக் கூடிய digital edition களில் ஷண்முகவேலுக்கு credit ம், இனி வரக் கூடிய பதிப்புகளில் இந்த ஒவியத்தை நீக்கி விட்டு புதிதாக ஒரு ஒவியத்தை உருவாக்கி சேர்ப்பதாக உறுதியும் அளித்திருக்கிறார்கள். நிகழ்ந்த தவறுக்காக கௌரவ தொகையும் தர முன் வந்திருக்கிறார்கள். இப்படித்தான் இது நிகழ வேண்டும். இதுவே உலக நடைமுறை. இது ஒரு நிகழ்வே, தமிழிலேயே ஷண்முகவேலின் ஒவியங்களை எந்த வகையான அனுமதியும் இன்றி பல்வேறு பதிப்பகங்கள் பயன்படுத்தியதை பார்க்க கிடைக்கிறது.

ஏற்கனவே இங்கு புகைப்படமும் ஒவியமும் பெயர் குறிப்பிட கூட தகுதி அற்ற கலை வடிவமாக கருதப்படுகிறது. இந்த சூழலில் நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. நீலத்திற்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கும் படம் K.M. Asad என்பவரால் எடுக்கபட்டு National Geographic நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப் பட்டது. ரப்பருக்கு என்று குறிப்பிட்டிருக்கும் படம் Johnson Tsang எனும் சிற்பியுடையது. வேதா நாயக் உபயோகப்படுத்தி இருக்கும் எல்லா புகைப்படங்களும் அப்படி எடுத்தாளப்பட்டதே. உலகெங்கும் சிற்பிகளும் ஒவியர்களும் தங்கள் படைப்பை காட்சிப் படுத்தும் பொழுது “தங்கள் சிற்பத்தை / ஒவியத்தை” புகைப்படமாக எடுத்தவருக்கு கூட creative credit தர வேண்டும். Johnson tsang கே அவருடைய சிற்பத்தை புகைப்படம் எடுத்தவருக்கு கூட credit கொடுத்திருப்பார்.

வாழ்நாளெல்லாம் கொடுத்து ஒரு கலையில் தேர்ச்சி அடையும் ஒருவனின் படைப்பை எடுத்து, இதை பார்க்கும் பொழுது எனக்கு இந்த நாவல் நினைவுக்கு வருகிறது என்று போட்டுக் கொண்டு “கலைஞனாக” அறியப்பட்டு வலம் வர முடிவதே முக நூலின் தனிச் சிறப்பு. தமிழுக்கே உரிய பெருமையும் கூட. உண்மையில் படமெடுத்த புகைப்பட கலைஞனையும், அந்த சிற்பியையும் எண்ணி கொஞ்சம் பாவமாக இருக்கிறது.

இந்தக் கடிதத்துக்கே உன்மையான கலைஞனை அவமதித்து விட்டேன் என்றும் கலை என்றால் என்ன என்று தெரியுமா உனக்கு என்றும் வசைகள் வரக் கூடும் பாருங்கள். முக நூல் ஒரு “பொன்னகரம்”.

http://yourshot.nationalgeographic.com/photos/4248402/

https://www.designswan.com/archives/surreal-porcelain-sculptures-by-johnson-tsang.html

https://www.theguardian.com/environment/2014/jun/26/-sp-atkins-ciwem-environmental-photographer-of-the-year-2014-winners-in-pictures

ஏ.வி.மணிகண்டன்

www.manikandanav.com

***

அன்புள்ள மணி

நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் அவர் அதை ஒரு கலைவெளிப்பாடாக, தொழிலாகச் செய்திருந்தால் அவ்வாறு சொல்லலாம். அவர் ஒரு விளையாட்டாக தன் இணையதளத்தில் அதைச்செய்திருக்கிறார். சுவாரசியமாக இருக்கிறதே, இலக்கியம் குறித்த எந்த உரையாடலும் நல்லதுதானே என்னும் கோணத்தில் நான் அதை கவனித்தேன். அவ்வளவுதான்.

ஜெ

***

முந்தைய கட்டுரைபச்சைக்கனவு கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைநம் நாயகர்களின் கதைகள்