எங்கெங்கு காணினும் சக்தியடா..

energy

அன்பின் ஜெ,

மழைப்பயணம் சென்று இன்று மீள்வீர்கள் எனச் சொன்னார்கள். நாளை அழைக்கிறேன்.

கடந்த சில வருடங்களாக, மரபு சாரா எரிசக்தித் துறையின் பாய்ச்சல்களை படித்து வருகிறேன். அதன் சாத்தியக் கூறுகள் எனக்குள் பெரும் கனவுகளை உருவாக்குகின்றன.

அந்தத் தொழிலின் பாய்ச்சல், பெரும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

நான் தொழில் நுட்பன் அல்லன். ஒரு வியாபார நோக்கில், இதை அணுகுகிறேன். சூழியல் நோக்கிலும்.

இது போன்ற வாய்ப்பு, மனித குலத்துக்கு பல காலத்துக்கு ஒரு முறைதான் கிடைக்கும் எனத் தோன்றுகிறது.

எனது பேராசிரியரும், ஊரக மேலாண் கழகத்தின் முன்னாள் இயக்குநருமான துஷார் ஷா, அமுல் பிறந்த மண்ணில் ஒரு பரிசோதனையைத் துவங்கியிருக்கிறார்அதன் சாத்தியங்கள் பிரமிப்பு ஊட்டுகின்றன.

துஷார் அவர்களின் கட்டுரையை ஒட்டி, எனது எண்ணங்களையும், உணர்வெழுச்சியையும் கட்டுரையாக எழுதியிருக்கிறேன்.

உங்கள் பார்வைக்கு

பாலா

energ

எங்கெங்கு காணினும் சக்தியடா. .

வளமான கங்கை பாயும் மண்ணில், இந்தியாவின் சிறந்த எருமையினங்கள் இருக்கும் மாநிலத்தில் நிகழாத பால் தொழில் வெற்றி, ஒரு அரைப் பாலைவன மாநிலத்தில் எப்படி நிகழ்ந்தது என லால் பகதூர் சாஸ்திரிக்கு ஒரே வியப்பு. நேரில் சென்று அறிந்து கொள்ள குஜ்ராத் மாநிலத்தின் ஆனந்த் என்னும் ஊருக்குச் சென்றார். டாக்டர் குரியனும், திரிபுவன் தாஸ் படேலும் சொல்வதை மட்டும் நம்பாமல், கேடா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒரு இரவு தங்கினார். இரவு முழுதும், உழவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான், அவருக்கு அமுல் மாதிரியின் வெற்றி புரிந்தது. அது, பால் உற்பத்தியில் துவங்கி, பதப்படுத்துதல், விநியோகித்தல், விலை நிர்ணயம் செய்தல் என வியாபாரத்தின் அனைத்துக் கூறுகளையும் ஒன்றிணைத்த, விவசாயிகளின் மேலாண்மையில் இயங்கிய ஒரு முழுமையான தொழில் மாதிரி என. டாக்டர் குரியனை அழைத்து, இந்தக் கூட்டுறவுத் தொழில் மாதிரியை, நாடெங்கும் எடுத்துச் செல்ல அவருக்குக் கட்டளையிட்டார். இன்று அது சில கோடி விவசாயிகளின் பொருளாதார நிறுவனமாக, வருடம் 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வியாபாரம் செய்யும் ஒரு தொழில் மாதிரியாக உயர்ந்து நிற்கிறது. நாடெங்கும் உள்ள சிறு விவசாயிகளின் மாடுகளின் காம்புகளில் இருந்து தன் பயணத்தைத் துவங்கும் பால், கோடிக்கணக்கான நுகர்வோரின் கதவுகளை ஒவ்வொரு நாளும் தவறாமல் சென்றடைகிறது. 1950 ல், 17 மில்லியன் டன் ஆக இருந்த பால் உற்பத்தி, 2016 ல், 140 மில்லியன் டன் ஆக உயர்ந்திருக்கிறது. இது பெரும்பாலும் 2-3 எருமை / மாடுகள் வைத்திருக்கும் சிறு உழவர்களின் சாதனை. பால் விற்பனை விலையில் 80% மதிப்பு விவசாயிகளுக்குச் செல்கிறது. இடைத் தரகர்கள் இல்லை. அதனால்தான், பால் உற்பத்தி செய்து, ஒரு உழவரும் தற்கொலை செய்து கொள்வதில்லை.

சூரிய ஒளி மின்சாரத் தொழில், கடந்த பத்தாண்டுகளில், மிகப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. 2010 ல், 50 கிகா வாட்டாக இருந்த உலகின் உற்பத்திக் கொள்திறன், 2016 ல், 305 கிகா வாட்டாக உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியின் காரணமாக, சூரிய ஒளி மின்சாரத் தொழிலில், புதிய தொழில்நுட்பங்களும், உற்பத்திப் பொருளாதார அலகுகளும் உயர்ந்து, இந்தியாவில், சூரிய ஒளி மின்சாரத்தின் விலை, சில மாதங்களுக்கு முன்பு ஒரு யூனிட்டுக்கு 2. 44 ரூபாய் எனக் குறைந்திருக்கிறது. இன்றைய நிலையில், இந்தியாவில் நிலக்கரி வழியாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விடக் குறைவான விலை. இந்தியாவின் பெருமிதங்களில் ஒன்றான, தேசிய அனல் மின்சாரக் கழகம், நிலக்கரி மூலமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு, மிகக் குறைவான விலையாக, ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 3. 20 வசூலிக்கிறது.

இந்த நிகழ்வு மிகவும் அசாதாரணமானது. உலக எரிபொருள் சந்தையைப் புரட்டிப் போடக்கூடியது. உலக அரசியல் உறவுகளையும். கடந்த இரு தசாப்தங்களாகவே, ஐரோப்பிய நாடுகள், சுற்றுச் சூழல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக, நிலக்கரி / பெட்ரோலியம் போன்ற மின் உற்பத்தி வழிகளை விடுத்து. மரபு சாரா, renewable மின்சார உற்பத்தி வழிகளைப் பெரிதாக ஊக்கப்படுத்தத் துவங்கின. ஜெர்மனி அதில் முன்னத்தி ஏர் பிடித்தது. 1997 ஆம் ஆண்டு, புது மின்சாரக் கொள்கையை ஏற்படுத்தி, நாட்டின் தேவையில் 12 சதத்தை, 2010 ஆண்டுக்குள், மரபு சாரா மின் உற்பத்தி வழியாக அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்தது. அந்த இலக்கை, 2007 ஆண்டே எட்டியது.

ஜெர்மனி, டென்மார்க், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகள் மிக வேகமாக, ரினிவபிள் மின்சார உற்பத்தியை முன்னெடுக்கின்றன.  2015 ஆம் ஆண்டு, மே-16 ஆம் தேதி, ஜெர்மனியின் மொத்த மின்சாரத் தேவையை, மாற்று மின்சார உற்பத்தி வழிகள் பூர்த்தி செய்தது மனித வரலாற்றில் ஒரு பெருமித நிகழ்வு. டென்மார்க் போன்ற நாடுகள், தமது நாட்டின் முழு மின்சாரத் தேவையையும், இது போன்ற மாற்று வழிகள் மூலம் அடையும் முயற்சியில் இருக்கின்றன.

1981 ஆம் ஆண்டே, சூரிய ஒளி/ காற்று முதலியவற்றின் ஆற்றலை உணர்ந்து, அறிவியல் தொழில் நுட்பக் கழகத்தின் ஒரு பிரிவாக மரபு சாரா எரிசக்திப் பிரிவு உலகில் முதன் முறையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பின்னர், அது 1992 ஆம் ஆண்டு, அரசின் ஒரு துறையாக மாறியது. 1986 ஆம் ஆண்டு துவங்கி, காற்றாலைகள் பெருமளவில் வெற்றிகரமாக நிறுவப்பட்டன. அதற்கான வரிச்சலுகைகள், முதலீட்டாளர்களை ஈர்த்தன. இன்று 32. 17 கிகா வாட் கொள்திறன் கொண்டு, இந்தியா, உலகின் நான்காவது பெரிய காற்றாலை மின்சார உற்பத்தி நாடாகத் திகழ்கிறது. சூரிய ஒளி மின்சாரம், அதன் அதிக முதலீட்டின் காரணமாக, உற்பத்தி விலை அதிகமாக இருந்ததால், துவக்கத்தில் பெருமளவு வெற்றி பெறவில்லை

ஆனால், ஐரோப்பிய நாடுகளின் முனைப்பு காரணமாக, சூரிய ஒளித் தொழில் நுட்பம், மிக வேகமாக வளர்ந்து, மின் உற்பத்திக் கலன்களின் விலைகள் குறைந்து, இன்று சூரிய ஒளி மின்சாரம் மரபு சார்ந்த எரிபொருள்களான நிலக்கரி / பெட்ரோலிய வழிகளை விட மலிவாகி விட்டது.

இந்தியாவின் வெண்மைப் புரட்சி, குஜராத்தின் கேடா மாவட்டத்தில், சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகத் துவங்கியது. கேடா மாவட்டத்தின் தலைநகரான, ஆனந்த் என்னும் ஊரில் அமைக்கப் பட்ட பால் பதனிடும் நிலையம் தான் துவக்கம். ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் என்பதின் சுருக்கம் தான் அமுல். இன்று அதே கேடா மாவட்டத்தில், இன்னொரு கூட்டுறவு முயற்சி, ஒரு பரிசோதனையாகத் துவங்கியிருக்கிறது.

கேடா மாவட்டத்தின் டுண்டி என்னும் சிற்றூரில், ஒரு சூரிய ஒளி உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பரிசோதனையைத் துவங்கியிருப்பவர் பேராசிரியர் துஷார் ஷா. இவர், டாக்டர் குரியன், கூட்டுறவுத் துறைக்கென உருவாக்கிய ஊரக மேலாண்கழகத்தின் இயக்குநராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது, உலக நீர் மேலாண்மைக் கழகம் என்னும் தன்னார்வ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

உலக நீர் மேலாண் கழகமும், டாட்டா ட்ரஸ்ட்டும் சேர்ந்து அளித்த நிதியில், கேடா மாவட்டத்தின் டுண்டி கிராமத்தில், 6 உழவர்கள் இணைந்த, solar pump irrigators’ cooperative (SPICE) என்னும் கூட்டுறவு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 6 உழவர்கள் இணைந்து, மொத்தம் வருடம் 56. 4 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரிய ஒளித் தகடுகளை நிறுவியிருக்கிறார்கள். இவை வருடம் 85000 யூனிட்டுகள் மின்சார உற்பத்தி செய்ய வல்லவை. இதில், 40000 யூனிட்டுகள், அவர்களின் நீர்ப் பாசனத்துக்குத் தேவைப்படும். மீதி, 45000 யூனிட்டுகளை, ஒரு யூனிட் ரூபாய் 4. 63 க்கு, அவர்கள், மத்திய குஜராத் மின் விநியோக நிறுவனத்துக்கு 25 ஆண்டுகளுக்கு விற்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதற்கு மேலாக, நீர் மேலாண் கழக / டாட்டா ட்ரஸ்ட் மூலமாக, பசுமை எரிசக்தி ஊக்கத் தொகை ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 1. 25 ம், நீர் மேலாண்மை ஊக்கத் தொகையாக ருபாய் 1. 25 ம் வழங்கப்படுகின்றன. மொத்தம், உழவர் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்குக் கிடைக்கும் விலை, ஒரு யூனிட்டுக்கு 7. 13 ரூபாய்

இதற்காக, இந்த 6 உழவர்களும், அடுத்த 25 வருடங்களுக்கு, அரசிடம் இருந்து இலவச மின்சாரம் பெறும் உரிமையை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். உழவர்களின் நிலத்தில் உற்பத்தியாகும் இந்த மின்சாரப் பயிருக்கு விதை, உரம், மழை என எந்த கச்சாப்பொருளும் தேவையில்லை.

இந்த ஏற்பாட்டின் மூலமாக, தங்கள் தேவைக்கு, மின்சாரம் பயன்படுத்தியது போக, இந்த 6 உழவர்களும், வருடம் 3. 2 லட்சம் சம்பாதிப்பார்கள். பயிரே செய்ய முடியாமல் வறட்சி ஏற்பட்டால், வருடம்6 லட்சம் சம்பாதிப்பார்கள்.

இந்த 6 உழவர்களின் நிலத்தில் இருக்கும் மின் தகடுகள் உற்பத்தி செய்யும் உபரி மின்சாரத்தை, டுண்டி கூட்டுறவு நிறுவனம் சேகரித்து, ஒரே இணைப்பாக, மத்திய குஜ்ராத் மின் விநியோக நிறுவனத்தின், மின் க்ரிட்டுக்கு அளிக்கிறது. ஒவ்வொரு உழவரின் உற்பத்தியை அலகிட்டு, கூட்டுறவு நிறுவனம், அதற்கான விலையை உழவருக்குக் கொடுத்து விடுகிறது. அமுல் மாதிரியின் இன்னொரு வடிவம்.

இந்தப் பரிசோதனையின் முக்கிய அம்சங்கள் என்ன?

  1. தற்போதைய மின் உற்பத்தி, மையப்படுத்தப்பட்டது. இதன் லாபம், அரசு அல்லது பெரு முதலாளிகளுக்குப் போகிறது.
  2. உற்பத்தியாகும் மின்சாரத்தில் 23% விநியோகம் செய்யும் போது வீணடிக்கப்படுகிறது.
  3. மின் இணைப்பு உள்ள உழவர்களுக்கு, பெரும்பாலும் மின்சாரம் இரவு நேரங்களில் கிடைக்கிறது. பல இடங்களில், தொடர்ந்து கிடைப்பதில்லை. ஆனால், சூரிய ஒளி மின்சாரம் உழவர்களுக்குப் பகலில் கிடைக்கும்.
  4. இந்த 6 உழவர்களிடம் இருந்து, மின்சாரம் பெறுவதன் மூலம், மத்திய குஜராத் மின் விநியோக நிறுவனம் – இலவச மின்சாரம் அளித்தல், ஒவ்வொரு உழவரின் நிலத்துக்கும் மின் கம்பங்கள் நட்டுப் பராமரித்தல், 23% மின்சக்தி இழப்பு (விநியோக இழப்பு) போன்ற செலவுகளை மிச்சப்படுத்துகிறது. மட்டுமல்லாமல், சூரிய ஒளி சக்திக்காக, பசுமை மானியம் பெறுகிறது. இதன் மதிப்பு, இந்த ஆறு உழவர்களுக்கு மட்டும் வருடம் 8. 2 லட்சம். இது விநியோக நிறுவனம் அடையும் பலன். இதை வைத்துப் பார்த்தால், உழவர் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு ரூபாய் 18 வரை கொடுக்கலாம் என்கிறார் பேராசிரியர் துஷார் ஷா.
  5. இந்தியாவில் 1. 5 கோடி இலவச மின் இணைப்புகள் உள்ளன. உழவர்களுக்காகக் கொடுக்கப்படும் மானியம் கிட்டத்தட்ட வருடம் 70000 கோடி. இந்த மானியத்தை எந்த அரசும் விலக்கிக் கொள்ள முடியாது. சூரிய ஒளிக் கூட்டுறவு உற்பத்திச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டால், இது அரசுக்கு மிச்சம்.
  6. இது ஒரு காந்தியத் தொழில்முறை. Production by masses and not mass production.
  7. மின்சாரம் இலவசமாகக் கிடைக்கும் போது, அதன் உபயோகம், அளவில்லாமல் இருக்கும் – இது அதீத நிலத்தடி நீர் உபயோகிப்பை ஊக்குவிக்கும். ஆனால், உழவர் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு சந்தை விலை இருக்கையில், நீர் உபயோகம் தேவைக்கேற்ப இருக்கும்.
  8. தன் நிலத்தில் கிட்டத் தட்ட 800 -900 சதுர அடியில் மின்சாரம் உற்பத்தி செய்து, ஒவ்வொரு உழவரும் வருடம் 50000-60000 வரை வருமானம் ஈட்ட முடியும்.
  9. வேளாண்மைக்காக உழவர்கள் நுகரும் மின்சாரம், வருடம் 2. 6 கோடி டன் கரிம வாயுக் கழிவை வெளியேற்றுகிறது. சூரிய ஒளி மின்சாரம், இதை முழுமையாக அகற்றி, இந்தியாவின் வளர்ச்சியினால், சுற்றுச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்கும்.

பால் உற்பத்தி, உழவரின் வருமானத்தை மேம்படுத்தியது போல, இந்த சூரிய ஒளி மின் உற்பத்தியும், அவர்கள் நிலத்தில் இருந்து இன்னொரு வழியில் உபரி வருமானம் வரும் வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். மிக முக்கியமாக, மழை பொய்த்த காலங்களிலும் அவர்களுக்கு ஒரு குறைந்த பட்ச வருமானத்தை உறுதி செய்யும். மானாவாரி நிலங்களில், உழவர்கள் கூடுதல் நிலத்தை உபயோகித்து, அதிக மின் உற்பத்தி செய்ய முடியும். உழவர்களின் வாழ்க்கையை நிச்சயம் மேம்படுத்தும்.

இன்னொரு வழியும் இருக்கிறது. சூரிய ஒளியின் மகத்துவத்தைச் சொல்லி, வியாபார காந்தங்களை வரவழைத்து, ஆயிரக் கணக்கில் நிலங்களைக் கொள் முதல் செய்து, பெரும் சூரிய ஒளிப் பூங்காக்களை அமைத்து, மின் உற்பத்தி செய்வது.

இன்னொரு லால் பகதூர் சாஸ்திரி வரவேண்டும்.

மேலும் படிக்க:

http://economictimes. indiatimes. com/industry/energy/power/solar-power-tariff-drops-to-historic-low-at-rs-2-44-per-unit/articleshow/58649942. cms

https://en. wikipedia. org/wiki/Solar_power_by_country

http://www. iwmi. cgiar. org/about/who-we-are/

https://medium. com/@tushaarshah/the-promise-of-dhundi-solar-pump-irrigators-cooperative-65ef9d3e7ee0

http://www. ndtv. com/india-news/with-solar-power-a-gujarat-village-is-irrigating-its-fields-for-free-1408800

முந்தைய கட்டுரைஅட்டைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52