குமரகுருபரன் -சில குறிப்புகள்

4

குமரகுருபரனின் இந்த தனிப்பட்ட குறிப்புகளை ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். வாசிக்கையில் ஒரு பெரிய தனிமையை அடைந்தேன். முப்பதாண்டுகளுக்கு முன் ஆற்றூர் சொன்னார். ‘உன்னைவிட இளையவர்கள் சென்று கொண்டிருப்பதை காண ஆரம்பிப்பாய் என்றால் முதுமை அறிவிக்கப்பட்டுவிட்டது என்று பொருள்’ அந்த துயரை இப்போது மிக அறிகிறேன். ஒருவகையான குற்றவுணர்ச்சியும் கசப்பும் சூழ்கிறது

இக்குறிப்புகளில் தெரியும் குமரகுருபரனை நான் சந்தித்ததே இல்லை. பிரியமோ மரியாதையோ கொண்ட ஓரு விலக்கம். ஓரிரு சொற்கள், புன்னகைகள். நான் அவரை இனி எங்கேனும் சந்திக்க முடியலாம். நான் நம்பவில்லை. ஆனால் என் ஆசிரியர்களென நான் கருதும் அனைவருமே அதை நம்புகிறவர்கள். காந்தி, அம்பேத்கர், நடராஜகுரு, நித்யா. மறுபடியும் ஒன்று இருக்கலாம்.

அன்று அவரிடம் நான் சொல்ல விழைவது நானும் இதே மனநிலையில்தான் என்று. மொழியினூடாகவே பேருருக் கொள்கிறேன் என்று. களம்நின்று பணியாற்றுபவர்களின் குன்றா ஊக்கத்தை அதனால்தான் பக்தியுடன் அணுகுகிறேன் என்று. யானை டாக்டரையோ கெத்தேல்சாகிபையோ பூமேடையையோ நேரில் கண்டிருந்தால் கால்தொட்டு சென்னிசூடியிருப்பேன் என்று.

வந்து சூழும் மெய்யின் இருளை கனவின் ஒளியை ஊதி ஊதிப்பெருக்கி எதிர்கொள்கிறேன் என்று.

ஜெ

***

2

எனது கனவுகள் சிதைந்த என் மனச் செதில்களில் போய் சேகரமாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த செதில்கள் நிறமற்றவை. நிஜம் அறியாதவை.அவற்றில் ஒரு செதில் கூட துணையுடனில்லை. தனித்த கழுதையின் காதுகள் போல விடைத்தபடி கனவுகளைச் சுமந்தபடி நிற்கும் அவற்றிற்கு தினமும் சாராயம் அளித்து கதகதப்பு உண்டு பண்ணுகிறேன். என் அன்பிற்குரியவர்கள் சிரமப்படும்போது அந்த செதில்களில் சிலவற்றை தீயிலிட்டு அவர்களுக்கு சேமத்தை உண்டு பண்ணுகிறேன். நான் செதிலாக மாறி இருப்பது நான் கனவாக மாறியிருப்பது நான் நிஜத்தை அறியாதது எதுவும் தனித் தனியே அல்ல என்று ஒரு குரல் கூவிக் கொண்டே இருக்கிறது. அக்குரலை நீங்கள் என் பெயரிட்டு அழைக்கிறீர்கள். உண்மையில் அக்குரல் அப் பெயரினுடையது அல்ல. தனிமையில் மடிந்த காலத்தின் அரசர்களது கடைசி விருப்பங்கள்.

என்றும் என்னுடனிருக்கும் ஜெயமோகன், சுதிர் செந்தில் மற்றும் என் ஆரம்பம் அந்திமழை இளங்கோவனுக்கு எப்போதும் என் தட்சணை உண்டு.

யார் இருந்தாலும் ஜெயமோகன் இல்லையெனில் நீங்கள் பார்க்கிற குமரகுருபரன் இல்லை.

அவரிடம் நான் கற்றுக் கொண்டது சார்ந்திருக்கலாகாது என்பதை மட்டுமே.

அதனாலேயே அவர் ஆசான்.

November 28, 2015 ·

 

3

ஜெயமோகனிடம், கலை, அரசியல், சித்தாந்த, தத்துவ விசாரங்களின் அடிப்படையில் நமக்கு அளவற்ற வேறுபாடும், அதிகபட்சமாக கொலைவெறிக் கோபமும் இருக்கலாம். ஆயினும், எழுத்தும் பேச்சுமாக, அவர் எடுத்துக்காட்டும் ஒரு இலக்கியம், அல்லது இலக்கியவாதியின் உன்னதம் இன்று வேறு யாரும் செய்யாதது. அவருடைய இலக்கிய வாசிப்பின் நுட்பம் அவருடைய எழுத்தைக் காட்டிலும் நுட்பமானது. இன்று பூமணி குறித்த அரங்கில் அவர் அளித்த வெக்கை குறித்த நுட்பம் நூறு எஸ்ரா நாவல்களுக்கு சமம். எனினும் ஜெமோ அதை இன்னமும் இலக்கிய ரீதியில் எழுதவில்லை.

அவரின் ஒவ்வொரு வரிகளும், இரண்டு வரிகள் அளவுக்காவது நம்மை புதிதாக எழுதவும், எழுத பிரயத்தனப்படவும் வைக்கின்றன என்பதே அவரை நிகழ் தமிழ் இலக்கியத்தில் உன்னதம் பெற வைக்கின்றன.

அவர் விருதுகள் அளிக்கிற இடத்தில் இன்று இருக்கிறார்.

அந்த இடத்திற்கு செல்வது தான் எனக்கான நியாயம்.

நிறுவனங்களுக்கு எதிரான வாழ்க்கையின் ஒரே முன்னோடி அவரே.

Cool.

January 11, 2015 ·

***

 

முந்தைய கட்டுரைபச்சைக்கனவு –கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைஇடங்கை இலக்கியம்