பச்சைக்கனவு கடிதங்கள் 2

Monsoon_Trip_Day_01-1200367

வணக்கம்

உங்களின் மழை அனுபவப்பதிவை நேற்று வாசித்தேன். வழக்கம் போலவே எங்களையும் உடன் அழைத்துச்சென்றிருக்கிறீர்கள். பல வருடங்களாக இதை தொடருகிறீர்கள் எனபது எப்போதும் போலவே பொறாமையை தருகிறது. Comfort zone என்ற பெயரில் நாங்களெல்லாம் உண்மையில் சிறையில் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டேன், அதுவும் குறிப்பாய் மழையில் நனைந்து கொண்டே சாப்பிட்ட அந்த ஐஸ்கிரீம்!! இது இன்னும் ஆண்கள் உலகுதான் இல்லையா சார்?

வக்கீலை stand up comedian உடன் ஒப்பிட்டது உங்களின் signature பகடி.

நல்ல வேளையாக எங்களுக்கேல்லாம் வாசிக்கும் பழக்கமும் அதற்கு அனுமதியும் இருப்பதால் உங்கள் உலகை வெளியிலிருந்து பார்க்கவாவது முடிகிறது.

இங்கு ஒரு புத்தாக்கப்பயிற்சியின் பொருட்டு கோவை பாரதியார் பல்கலையில் 1 மாதத்திற்கு வந்திருக்கிறேன். முதல் நாளான நேற்று என்னுடன் இது போன்ற ஒரு பயிற்சிக்கு முன்பு திருவனந்தபுரம் வந்திருந்த ஒரு திருநெல்வேலி கிருத்துவ பேராசிரியை என்னைக்கண்டதும் முகம் மலரந்து என் கைகளை பிடித்துக்கொண்டு ‘’ அப்புறம் சும்மா இருக்கியளா?’’என்றதும் நான் திடுக்கிட்டு ’’இல்லைங்க காலேஜ் போயிட்டுதான் இருக்கேன்’’ என்றேன் அவர் அதை கடந்து ‘’சார் பிள்ளைக எல்லாம் சும்மா இருக்காங்களா ‘’ என்றதும் தான் அவர் நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறார் என்பதை அறிந்தேன்.

 

Monsoon_Trip_Day_01-1200299

பிறகே உங்களின் மழை அனுபவங்களை வாசித்ததும் இப்படி பொள்ளாசி கோவையிலேயே குதிரை ஓட்டிக்கொண்டிருந்தால் பக்கத்து ஊரின் பேச்சு வழக்கு கூட தெரியாமல்தான் இருக்கும் என் நினைத்து இன்னும் வருத்தப்பபட்டேன்,

இடி விழுந்த பின்னரான பச்சைக்கண்ணின் காட்சிகள் என்னவோ வருத்தமளிப்பதற்கு பதில் மகிழ்வாகவே இருந்தது. இனி அழிந்த பின்னர் பார்க்கவே முடியா பச்சையை எப்போதும் கண்ணில் நிறுத்துமல்லவா இப்படி ஒரு இடி!

புட்டு பரோட்டா ஆகி இனி பீட்சாவாகவும் ஆகிவிடும் விரைவில். பின் காடுகளையெல்லம் அழித்து சுற்றுலா விடுதி கட்டி அதையே வேடிக்கை பார்க்க வருவார்களாய் இருக்கும், இந்த இடத்தில் முன்பு ஒரு காடும் மழையும் மலையும் ஆறும் இருந்தது என பிள்ளைகளுக்கு காட்டித்தர. வயிற்றைப்பிசைந்தது வாசிக்கையில்

இந்த புட்டிலிருந்து பீட்சா succession நீங்கள் வேடிக்கையாக எழுதவில்லை என்பதே இன்னும் வருத்தமாக இருக்கிறது.

நன்றியுடன்

லோகமாதேவி

 

Monsoon_Trip_Day_01-1200390

அன்புள்ள ஜெ.,

மழைப்பயணம் முடித்த என் மழைச்சட்டை இன்னும் ஈரம் காயவில்லை. பாலக்காட்டிலேயே பிழிந்து அனுப்பப்பட்ட காற்று கோவையின் ஈரத் துணிகளை உலர்த்த போதுமானதாக இல்லை போலும். அடுத்த மழை வரும் வரை இடுக்கியின் ஈரம் கொஞ்சம் இருக்கட்டும் என்று நானும் விட்டு வைத்திருக்கிறேன். அவ்வளவு பெரிய திறந்த புல்வெளிகளில் மழையில் நின்றிருப்பது கடற்கரையில் மழையில் நனையும் ப்ரம்மாண்டத்திற்க்கு ஒப்பானது. வாகமன்னிலும் பச்சை கடல் அலைகளின் மேல் நின்று கொண்டிருப்பதைப் போலத்தான் இருந்தது.
மூன்று நாட்களுமே மழையில் நடை. அருகிருப்பவர் பேசுவது கூட கேட்காதளவு மழை, மண் இனங்களோடு சேர்ந்தெழுப்பிய பேரிரைச்சல். மழைக்கு பச்சையடித்த புற்களைப் போல இம்மழைப் பயணத்தை நிலைத்திருக்கும் இனிய நினைவாக மாற்றியது நீங்களும் நண்பர்களும்.

பருந்துப்பாறையின் உச்சியில் அமர்ந்துக்கொண்டிருந்தோம். தூரத்து சிகரங்களில் அருவி கொட்டிக்கொண்டிருந்தது. கண் முன்னே சற்று நின்று மயக்கி அடுத்த மேடுகளுக்கு கடந்து சென்றது அரேபிய கடற் மேகங்கள். இடமிருந்து வலமாக கண்ணில் தென்படும் அத்தனை காட்சிகளையும் எப்படி உள்வாங்கி நிலைப்படுத்திக்கொள்வது என்று குரு நித்யா சொன்னதாக நீங்கள் வெகுகாலம் முன்பு எழுதியதிலிருந்து நான் எப்போதும் பின்பற்றுவது அது. அத்தனை காட்சிகளையும் சிறு மர அசைவு முதற்கொண்டு கவனத்தில் வாங்கிக்கொள்வது. விலகிப்போகும் மனதை அதன் போக்கிலேயே சென்று மீண்டும் கண்களில் நிகழும் காட்சிக்கு கொண்டு வருவது. இதை நீங்களே நினைவுகூர்ந்து அங்கே அதை செய்து பார்க்க சொன்னது என்னை உற்சாகம் கொள்ளச் செய்தது.

மலையருவி, மலை மேகங்கள், பச்சை புற்கள் இவற்றை பார்க்கும்போது உங்கள் நினைவில் எழும் கவிதை வரிகளையோ குறைந்தபட்சம் சினிமா பாடல் வரிகளையோ கூறுங்கள் என நீங்கள் கேட்டபோதுதான் தூரத்து அருவி என் தலையில் கொட்டியது. சட்டென சூழலுக்கு ஏற்ற ஒரு கவிதையையோ, கதைச் சம்பவத்தையோ, பாடலையோ கூட திருப்பி எழுப்ப இயலவில்லை. பக்கம் பக்கமாக படித்தவைதான். கறுத்து திரண்டு கொழுத்த மேகங்கள் கொட்டியதெல்லாம் எந்தப் பள்ளத்தில் விழுந்தது என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் இதை அவ்வபோது செய்பவன்தான் நான்.

 

Monsoon_Trip_Day_01-1200441

3 கி.மீ.

அந்த ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ. எனக் காட்டிக்கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்திற்கு
அவ்வூரை பார்க்கும்
ஆசை வந்துவிட்டது ஒரு நாள்

வாஞ்சை கொண்டு
கிளம்பிய மரம்
நடையாய் நடந்துகொண்டிருக்க

3 கி.மீ. 3 கி.மீ எனத்
தன்னை பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர்.

இசையின் இந்த கவிதையை காரில் போகையில் மைல் கல்லை காணும்போதெல்லாம் உடன்வருபவர்களிடம் சொல்லுவேன். இலக்கிய பரிச்சயமே சுத்தமாக இல்லாதவர்களோடு கூட இது கவிதையா வெறும் ஜோக்கா என்ற ரீதியிலாவது கவிதையை நோக்கி ஒரு பேச்சு தொடங்கும். அதற்க்கு பிறகு மூன்று என்ற எண்ணிட்ட மைல்கல்லும் அதற்கு பின்னால் சிறிது சிறிதாக கூடி பெருகி பிரியும் ஊரும் முன்பு பார்த்ததை போல இருக்காது.

ஊட்டி முகாமில் கவிதைகளை மேலும் மெருகூட்டுவதும் நினைவு கூர்வதற்கும் இன்றைய காட்சி ஊடங்கங்கள் எவ்வாறு உதவுகின்றன என்ற விவாதத்திற்குப் பிறகான பேச்சில், உண்மையில் நேரில் காணும் காட்சிகளினூடேதான் கவிதை வரிகளை ஒரு அதிர்வுடன் அகம் எதிர்கொள்கிறது என்று கூறியிருந்தீர்கள்.

மிகச் சாதாரண ஒரு நிகழ்வை அதற்கு தோதான ஒரு இலக்கிய வரியை அப்படியே நினைவில் கொண்டு வருவதன் மூலம் மேன்மையானதாக ஆக்க கூடுமென்றும் ஆன்மிகமான ஒரு சூழலில் பொருந்தி வரும் ஒரு சாதாரண சினிமா பாடல் கூட ஒரு உச்சத்தை நெருங்கக் கூடுமென்றும் நீங்கள் சொன்னதை ‘இலக்கியத்தின் பயன்மதிப்பு” என்ற தலைப்பில் மலேசியாவில் நீங்கள் விளாசிய உரையின் பிற்சேர்க்கையாகவே சேர்த்துக் கொள்ளவேண்டும். ரசித்து லயித்து வாசித்தவற்றை சரியான நேரத்தில் எழுப்பி கொண்டு வருவதையும் இலக்கிய பயிற்சியாகவே புரிந்துக்கொள்கிறேன்.

இப்போதைக்கு என் அறையில் மழைக் கவிதைகளையும் கதைகளின் மழை சம்பவங்களையும் சேகரித்து சுற்றி வைத்து வாசித்துக்கொண்டே நம் மூன்று நாள் மழையை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

அன்புடன்,
நரேன்

 

பச்சைக்கனவு

பச்சைக்கனவு கடிதங்கள் 1

 

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 45
அடுத்த கட்டுரைகலையை கையாளுதல் பற்றி …