பனிமனிதன் -கடிதங்கள்

pani-manidhan-38363

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். இந்த வாரம், அமெரிக்காவின் சுதந்திர தினத்தைமுன்னிட்டு (ஜூலை 4), தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. இப்படிப்பட்ட நாட்களில்தான் உங்களின் நாவலில் ஒன்றைப் படித்துவிடுவேன். நேற்று ‘பனி மனிதன்’ படித்தேன்.

“ஒளியைக் குறைத்துக்காட்டும் கறுப்புக் கண்ணாடிகள் போட்டிருந்தார்கள்” என்று அழகு தமிழில் கதையோடு கதையாக அறிவியலைக் கற்பிக்கும் நாவல். குழந்தைகளுக்கான நாவல் என்றாலும், நீங்கள் முன்னுரையில் கூறியிருப்பதுபோல, பெரியவர்களும் அறிந்துகொள்ளும் அளவு நிறைய விஷயங்கள் பொதிந்துள்ள நாவல். தமிழில் இருக்கும் ஆளுமை அல்லாமல், சொல்லும் விஷயத்தை பிசகு இல்லாமல் சொல்வது. நல்ல அழுத்தத்துடன் சொல்லுவது என்பது தங்களின் தனித்தன்மை., இமையமலை கடலுக்குள் இருந்ததையும், அது நிலத்தைப் பிளந்து உயர்ந்த காரணத்தையும், ஷிவாலிக் கால கட்டத்தையும், ஜுராசிக் கால கட்டத்தையும், தாங்கள் அவைகளை விளக்கும் புலமையை, ஜியாலஜி படித்தவன் மற்றும் அதை மூன்று வருடங்கள் போதித்தவன் என்ற முறையில் ஆமோதிக்கிறேன். ஜியாலஜி அல்லாமல் குளிரில் உடம்பும் உடம்பில் இருக்கும் உறுப்புக்களும் எப்படி மாறும் என்று விளக்குவது, பனி மனிதனைத் தேடிச் செல்லும் கிம், பாண்டியன், டாக்டர் எப்படி ஐஸ்க்ரீம் கொட்டிவைத்ததை போல் இருக்கும் மலைகளில் நடக்கும் முறையை விளக்குவது என்று ஒவ்வொன்றிலும் அப்படி ஒரு தெளிவு. ஞானம்.

தங்களின் படிமங்களையும், கதாப்பாத்திரங்களின் உருவ அமைப்புகளை விளக்குவதையும் வெகுவாக ரசிப்பவன். அவைகளுக்குள் லயிப்பவன். இது குழந்தைகளுக்கான நாவல் என்ற மனநிலையில் படித்து, குழந்தையின் மனநிலையில் லயிக்கவேண்டியதில் கொஞ்சம் இயல்பாக இருக்கமுடியவில்லை (அது நாவலின் குறைபாடு இல்லை, என்னுடைய குறைபாடு). குழந்தைகள் இந்த நாவலைப் படித்தால், இதில் வரும் தத்துவார்த்தமான கருத்துக்களை எப்படி எடுத்துக்கொள்ளும் என்று தெரியவில்லை. அதுவும் நான் என்ற நிலையற்று இருப்பது என்பதெல்லாம் குழந்தைகளுக்கு கொஞ்சம் அலுப்புத் தட்டாதா?.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகத்தைத்தான் நான் படித்தேன். படங்கள் மிக அருமை. படங்கள் வண்ணத்தில் இருந்தால், பொன்னிறமான தாமரை மலருடன் நிற்கும் கிம்மும், ஆர்கியோடெரிகிஸ்ஸும் குழந்தைகள் வாங்கிப் படிக்க மேலும் தூண்டுதல் ஏற்படுத்தும். படங்கள் வண்ணத்தில் இல்லாததற்கான காரணத்தை ஒரு புத்தக ஆர்வலனாக அறிந்துகொள்ள விரும்புகிறேன். நான் என்றாவது ஒரு நாள் உங்களைச் சந்திக்க நேர்ந்தால் இந்தக் கேள்வி நிச்சயம் உண்டு.

நான் எங்கள் குடும்பத்தைச் சார்ந்த இரு குழந்தைகளுக்கு, ஆளுக்கு ஒன்றாக இந்தப் புத்தகத்தை பரிசளிக்கலாம் என்று உள்ளேன். அவர்களுக்கு தங்களை அறிமுகம் செய்தது போலவும் இருக்கும். நாவலில் பொதிந்துள்ள அறிவியல் விஷயங்களை அவர்கள் கற்றது மாதிரியும் இருக்கும். தத்துவார்த்தமான கருத்துக்களை பற்றி அவர்களின் எண்ணத்தை நான் அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

ஆஸ்டின்

 

soun

அன்புள்ள ஜெ

பனிமனிதன் நாவலை இப்போதுதான் வாசித்தேன். மிகவும் பிந்தி. என் மகளுக்கு தமிழ் சரியாக வாசிக்க வராது. வாசிப்போம் என்று வாங்கினேன். எனக்கே மிகவும் ஆர்வம் வந்துவிட்டது. என் இளையவளுக்கும் ஆர்வம் வந்து அவளும் கேட்டாள். இரண்டுமுறை வாசித்தோம்.

இமையமலையின் காட்சிகள் அற்புதம். கூடவே அடிக்கடி வந்துகொண்டிருக்கும் சாகசங்களும்தான். ஆனால் தொடர்ச்சியாக பரிணாம அறிவியலின் எளிமையான விளக்கம் ஒன்று ஓடுவதுதான் இந்நாவலின் சிறப்பு.

இது சுற்றுச்சூழல் பற்றிய மிகப்பெரிய ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்கும் நாவல். சந்தேகமே இல்லை

விஸ்வநாதன்

***

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54
அடுத்த கட்டுரைகோவை புத்தகக் கண்காட்சி, விருது, சொற்பொழிவு