என் வலக்கையின் மணிக்கட்டு ஓரமாக ஒரு சிவந்தபுள்ளி. அது அரித்துக்கொண்டே இருக்கிறது. இனியதோர் இருப்புணர்த்தல். அதுதான் மழைப்பயணம் முடிந்து வந்த நினைவு. அட்டை கடித்த தடங்கள் சில அரித்து சிவந்து தடித்து புள்ளியாகி கொஞ்சநாள் நீடிக்கும்.
ஆனால் இம்முறை அட்டைக்கடி மிகக்குறைவு. ஏன் என்று தெரியவில்லை. அட்டைகள் பெருகிக்கிடக்கவேண்டிய ஈரச்சதுப்புகள் பலவற்றை தாண்டிக்கடந்தோம்,. சென்றமுறை கால்களெல்லாம் ஒட்டிக்கொண்டு நெளிந்த மேற்குமலையின் உரிமையாளர்களை பெரும்பாலும் காணமுடியவில்லை. இத்தனைக்கும் சென்றமுறை போல உப்புக்கரைசலுடன் நாங்கள் செல்லவுமில்லை. உப்பு வாங்கி காரிலேயே மறந்துவைத்துவிட்டார்கள்.
முப்பதாம்தேதி நான் நாகர்கோயிலில் இருந்து சென்னை ரயிலில் கிளம்பினேன். நெல்லையில் இருந்து ஜான் பிரதாப் குமாரும் வந்து சேர்ந்துகொண்டார். அவர் நெல்லையிலிருந்து ஏறுவார் என எண்ணினேன். என்னுடன் வருவதற்காக நெல்லையில் இருந்து நாகர்கோயில் வந்திருந்தார்.
அவருடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டே சென்றேன். அவர் கொண்டுவந்திருந்த சப்பாத்தி –வெங்காயக்கூட்டை சாப்பிட்டேன். இரவு 10.30 க்கு திண்டுக்கல்லில் இறங்கினோம். கிருஷ்ணன், ஏ.வி.மணிகண்டன், ராஜமாணிக்கம், ஈஸ்வரமூர்த்தி மணவாளன் ஆகியோர் ஈரோட்டிலிருந்து வந்து எங்களை சந்தித்தனர். திருச்சியில் இருந்து சக்தி கிருஷ்ணன்.
ஓர் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் சென்னை கோஷ்டி வந்துசேர்ந்தது. ஜானகிராமன், அனந்தமுருகன் ஆகியோருடன் மயிலாடுதுறை யோகீஸ்வரன். கோவையில் இருந்து நரேன் அவர் காரில் விக்ரம்,பாரி , தாமரைக்கண்ணன் ஆகியோர் சூழ வந்தார். மொத்தம் 15 பேர்.
நாங்கள் காலை எட்டுமணிக்குத்தான் பீர்மேட்டில் அறை எடுத்திருந்தோம். 11 மணிக்கே திண்டுக்கல்லில் ஒருங்குகூடிவிட்டோம். அப்போதுதான் என் அறிவிப்பைப் பார்த்துவிட்டு சின்னமனூரில் இருந்து சிவக்குமார் மின்னஞ்சல் செய்திருந்தார். என் வாசகர், சின்னமனூரில் சந்திக்கமுடியுமா என்று கேட்டார்.
அவர் அப்போதுதான் அறிமுகம். அவரை அழைத்தேன், சின்னமனூருக்கு நள்ளிரவில்தான் வருவேன், பரவாயில்லையா என்றேன். நல்வரவு என்றார். ஆகவே ஒரு பெருங்கூட்டமாக அவர் இல்லத்தை இரவு 12 மணிக்குச் சென்றடைந்தோம்.
சிவக்குமார் வீடு மிகப்பெரியது. அனைவருக்கும் இடமிருந்தது. அவர் மனைவி ஆசிரியை. இரு மகள்கள், நிவேதா, தர்ஷினி. சிவக்குமார் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர். சின்னமனூரிலெயே பிறந்து அங்கேயே வாழ்பவர். நள்ளிரவானாலும் எங்களை உபசரித்தார்.
அந்த நள்ளிரவிலும் இரு பெண்குழந்தைகளும் நல்ல உடையணிந்து எங்களை வரவேற்பதற்காக ஒருங்கி நின்றிருந்தனர். அவர்களின் குடும்பமே எங்களை உபசரித்தது. அவர்களுக்கு அந்தக் கஷ்டத்தைக்கொடுக்க கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. ஆனால் அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டபோது பரவாயில்லை என்று தோன்றியது.
இரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு அங்கேயே படுத்து கொஞ்சம் தூங்கினோம்.நான் உடனே தூங்கிவிட்டேன் ரயிலில் அமர்ந்து வந்த முதுகுவலி இல்லாமலானது.
நண்பர்கள் இரண்டுமணிவரைக்கும் ஊஞ்சலிலும் கூடத்திலுமாக அமர்ந்து சிரித்துக்கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தார்கள். சக்தி கிருஷ்ணன் நல்ல ‘ஸ்டேண்டப் காமெடியன்’ ஆக வரவேண்டியவர். வழக்கறிஞராக இருக்கிறார் [அல்லது இரண்டும் ஒன்றே தானோ?]
காலை இளவெயிலில் பீர்மேட்டைச் சென்றடைந்தோம். சற்றுமுன்னர்தான் மழை விட்டிருந்தது. சாலையில் பொழியும் அந்த அருவி கொட்டியது. மலைச்சரிவுகள் ஈரப்பசுமையுடன் ஒளிகொண்டிருந்தன. முகில்கள் கரைந்து நீண்டு வந்து மூடி மீண்டும் விலக பசுமையே குவிந்தெழுந்து கூர் கொண்ட மலைகள் வானில் நீந்துவன போலத் தெரிந்தன
முதல்முறை பீர்மேடு கிருஷ்ணன்கோயில் விடுதிக்குச் சென்றபோது இருந்த அதே நண்பர். அதே சூழல். பத்தாண்டுகள் கடந்துவிட்டன என்பது இழப்புணர்வு கலந்த மகிழ்ச்சியை அளித்தது. மழைச்சட்டைகளைப் போட்டுக்கொண்டு பொடித்தூறலில் உணவகத்திற்குச் சென்றோம்.
முதல்முறை நாங்கள் வந்தபோது பீர்மேட்டில் அருமையான குழாய்ப்புட்டு கிடைத்தது. அடுத்தமுறை ‘சார் புட்டெல்லாம் பழைய கதை. இப்ப பரோட்டாதான் இருக்கு’ என்றார். பரோட்டா போய் ‘சார் பர்கர்தான் இருக்கு’ என்று சொல்லிவிடுவார்களோ என அஞ்சினேன். பரோட்டா இருந்தது.
உச்சிவேளையில்தான் வாகைமண் சென்றோம். ஆனால் வானம் இருண்டு அதிகாலை போலிருந்தது. செல்லும்போதே தரையிறங்கிய ஒரு மேகத்தைக் கடந்துசென்றோம். மேகம் உண்மையில் இனிய வெக்கையுடன் இருந்தது. வெக்கை குளிர் கொள்வதை உணரமுடிந்தது. அடுத்த வளைவில் மழைக்குள் புகுந்துவிட்டோம்
வாகமண் புல்வெளி ராணுவத்திற்குச் சொந்தமானது. அதில் சாலை அமைத்து கட்டிடங்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இதை தடுக்கவே முடியாது. அங்கே ஒரு கட்டிடத்தைக் கட்டுவது அங்கிருக்கும் அபாரமான பசுமையின் ஒளியை அழிப்பது என உணரத்தெரிந்த அதிகாரிகள் பல்லாயிரம்பேரில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். மிகப்பெரும்பாலானவர்கள் புளிச்சேப்பம் விடும் படித்த முட்டாள்கள்.
வாகமண் புல்வெளிக்கு இப்போது ஓரளவு சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கிவிட்டார்கள். வாசலில் நுழைவுச்சீட்டும் உண்டு. முன்பு நாங்கள் கேட்பாரில்லாமல் நுழைந்த வாசல். சுற்றுலாப்பயணிகளுக்காகத்தான் அந்த கட்டுமானங்கள் என நினைக்கிறேன். கொஞ்சநாளில் பர்கர் கிடைக்க ஆரம்பித்துவிடும்.
சாலையில் இருந்து விலகிச்சென்று புல்வெளியின் பசுமைக்குள் அமிழ்ந்தோம். இளவெயில் பரவிய பச்சை அலைகள். ஒளிகொண்டு அமைந்த தொடுவானம். குளிர்ந்த காற்றில் ஏறிவந்து சூழ்ந்து பின் விலகிச்சென்றன முகில்குவைகள்.
பின்னர் இடியுடன் மழை. நீர்ச்சரடுகள் பெருகி அறைந்து அறைந்து தள்ளின. மழைச்சட்டைக்கு உள்ளே மழை நுழையும் அளவுக்கு வேகம். நடக்க நடக்க தள்ளாடி விழப்போனோம். அங்கே வாயிலில் ஒருவர் ஐஸ்கிரீம் விற்றார். குளிர்மழைக்குள் நுன்று நடுநடுங்கியபடி ஐஸ்கிரீம் சாப்பிட்டோம். பாதி ஐஸ்கிரீம் கரைந்து மழையில் சென்றுவிட்டது என்று கிருஷ்ணன் மனக்கஷ்டப்பட்டார்
மீண்டும் வாகமண் சாலைச்சந்திப்புக்கு வந்தோம். அங்கிருந்து இரண்டு மகேந்திரா ஜீப்புகளில் ஏறி உடுக்குமுடி சென்றோம். சாலையே இல்லாத மலைச்சரிவில் முன்னர் சென்றதடமே சாலை என்று சென்றன வண்டிகள். நினைத்துப்பார்க்க முடியாத ஒரு மலையேற்றம். நீர் வழிந்து ஓடி உருவான பள்ளங்கள் வழியாக விழுந்தும் தவழ்ந்தும் சென்று உச்சியை அடைந்தோம்
உடுக்குமுடி ஒரு மலையுச்சி. அங்கிருந்து சுற்றிலும் உள்ள இடுக்கி மாவட்டத்தைப் பார்க்கமுடியும். ஆனால் அப்போது எல்லா பக்கமும் வெண்முகில்கள்தான். முகில்கள் வெண்பட்டென ஒளிகொண்டிருக்கையிலேயே இருளத்தொடங்கி புகைபோல ஆகி குளிர்ந்தன. மழை கடந்துசென்றுகொண்டிருந்தது.
திரும்பும் வழியில் இரு ஆறுகள் முட்டிக்கொள்ளும் சந்திப்பை சென்று பார்த்தோம். ஓர் ஆறு செயற்கையானது. மலையைக் குடைந்து நீரை இடுக்கி அணைக்குக் கொண்டுசெல்கிறார்கல். ஓன்றரை கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாக ஆறு பீரிட்டு வந்து இணையாக பாறைகளில் அருவியாக விழுந்து வந்த காட்டாறுடன் கலந்து ஒன்றாகிச் செல்கிறது.
மழைபெய்துகொண்டே இருந்தது. பாரி, ஈஸ்வரமூர்த்தி இருவரும் இறங்கி நீராடினார்கள். வானில் ஓசை நிறைய மழைபெய்யும்போது சுற்றிலும் ஓலமிடும் நீரை பார்ப்பது மிச்சமில்லாமல் நீரால் நிறைக்கப்படுதல்
ஏழுமணிக்கு விடுதிக்குத் திரும்பிவந்தோம். சிவக்குமார் ஏகப்பட்ட பிஸ்கட், பேரீச்சம்பழம் ஆப்பிள் கொடுத்தனுப்பியிருந்தார். நண்பர்கள் சுற்றிவளைத்துக் கட்டியதுபோக எஞ்சியதை இரவுணவாக சாப்பிட்டேன்
விடுதியில் நான்கு மெத்தைகள். எட்டுபேர் அதில் படுத்தோம். எஞ்சிய ஏழுபேரும் தரையில் படுக்கவேண்டும். கிருஷ்ணனிடம் தரை குளிருமே என்று சொல்லியிருந்தேன். ’போர்வை விரித்து படுக்கலாம் சார், குளிராது’ என ஆணித்தரமாகச் சொல்லியிருந்தார். ஆனால் தரை ஜில்லிட்டிருந்தது
அங்கிருந்த சூரல்நாற்காலிகளில் போடப்பட்டிருந்த குஷன் சிறிய மெத்தைகள்போலிருந்தது. அதை விரித்து நான் எழுவருக்கும் படுக்கை தயாரித்திருந்தேன். அது குளிரை தடுத்தது. கிருஷ்ணன் “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என்று தரையில் போர்வை விரித்துப்படுத்தார். காலையில் அவர் நான்கு நாற்காலிகளிலாக படுத்திருந்தார். இரவில் தரையிலிருந்து வந்த குளிர் அவரை நடுநடுங்கச்செய்ததாகச் சொன்னார்.
அன்றுகாலை இரண்டே கழிப்பறைகளில் அத்தனைபேரும் சென்று தயாராகி கிளம்ப ஒன்பது மணி. எங்கள் திட்டம் பருந்துப்பாறையில் காலை உதயம் பார்ப்பது. காலைச்சாப்பாடு முடித்து அங்கே சென்றபோது ஒன்பது மணி. ஆனால் அப்போதுதான் உதயம்போலத் தெரிந்தது
பருந்துப்பாறை உச்சி கேரளத்தின் மிக உயரமான இடம். அங்கிருந்து சூழ்ந்திருக்கும் மலையுச்சிகளைப் பார்ப்பது ஒருவகை ஊழ்கநிலை. முன்பு நாங்கள் தனியாக மூடுபனிக்குள் நின்றிருப்போம். ஒருமுறை சரிவிறங்கி அருவியெனக்கொட்டும் நீரோடை வரைச் சென்றதும் உண்டு. அது சுற்றுலாமையமாக ஆகிவிட்டிருந்தது
அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. ஆகவே நல்ல கூட்டம். டீ காப்பி சுண்டல் மாங்காய் வியாபாரம். இன்னும் சிலநாட்களில் அதை கொடைக்கானல் போல ஒரு சந்தைமையமாக ஆக்கிவிடுவார்கள். மலைமேல் இருந்து கீழே பொழியும் அருவிகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
உச்சிவேளை ராமக்கல்மெட்டு சென்றோம். ஏற்கனவே சென்ற இடம். மூணார் அருகே நெடுங்கண்டம் என்னும் இடத்திற்கு அருகே உள்ள குன்று இது. கடல்மட்டத்தில் இருந்து 1100 மீட்டர் உயரம். தமிழ்நாட்டு எல்லையில் தமிழ்நிலத்தை நோக்கி அமைந்துள்ள இந்த மலையுச்சி கடுமையான காற்றுக்கு புகழ்பெற்றது. சாதாரணமாகவே எழுபது கீமீ வேகத்தில் மலைகாற்று வீசும், உச்சமாக நூறுகிமீ வேகம்.
2005ல் இந்த இடத்தை ஒரு சுற்றுலாத்தலமாக ஆக்க நெடுங்கண்டம் பஞ்சாயத்தார் முடிவுசெய்து இங்கே சங்கப்பாடல்களை நினைவுறுத்தும்வகையில் குறவன் குறத்தி சிலை ஒன்றை அமைத்தனர். புகழ்பெற்ற சிற்பி சி.பி.ஜினன் அமைத்த அந்த இருபதடி உயரமான கான்கிரீட் சிலை மலையுச்சியில் அமைந்துள்ளது.
பெரிய அளவுடையதென்றாலும் அழகான நவீனச் சிலை. ஆனால் பன்னிரண்டு ஆண்டுகள் ஆவதற்குள் பல இடங்களில் விரிசல்கள் தோன்றிவிட்டன.
ராமக்கல் மெட்டில் மழையே இல்லை. மழையை மேற்குத்தொடர்ச்சிமலை தடுத்து நிறுத்தி வெறும் குளிர்காற்றை தமிழகம் நோக்கி அனுப்புவதை அங்கே கண்கூடாகவே காணலாம்.
மறுபக்கம் அரைப்பாலைநிலம் போல தமிழ்ச்சமநிலம் விரிந்து கிடந்தது. மழையில் இருந்து அங்கே வந்தமையால் அந்த குளிர்காற்றை ரசிக்கமுடியவில்லை. உடனே மீண்டும் மழைக்குள் நுழையவேண்டுமென்றே தோன்றிக்கொண்டிருந்தது.
பின்மாலையில் கிளம்பி தேவிகுளம் சென்றோம். செல்லும் வழியே ஒரு கனவில் சுழன்றுகொண்டிருப்பதுபோல. லா.ச.ராவின் பச்சைக்கனவு நினைவுக்கு வந்தது. பச்சைவெளியை பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் அக்கணத்தில் மின்னல்தாக்கி பார்வையிழக்கிறான். கண்ணுக்குள் பச்சை நிறம் எஞ்சிவிடுகிறது. பின்னர் அவன் பச்சை நிறமாக மட்டுமே அனைத்து காட்சிகளையும் நினைவில்கொண்டு பச்சை நிற உலகில் வாழ்ந்து மடிகிறான்
பச்சை மட்டுமேயான உலகு. ஒளியும் நிழலும் பச்சை. பச்சை என்பது நீரின் ஓர் அழகுத்தோற்றம். மலைமடிப்புகள் அனைத்திலும் வெண்ணிற அருவிகள் பெய்துகொண்டிருந்தன. ஆழங்கள் அனைத்திலும் நீரோடைகள் நெளிந்து கிடந்தன
மாலை ஓர் ஊரில் வண்டியை நிறுத்திவிட்டு மழையில் இறங்கி இரண்டு கிமீ நடந்தோம். உடல்மேல் மழை அறைய சூழ்ந்திருக்கும் மரங்கள் நீர்ச்சரடுகளால் நெளிய நீர்விசைக்கு உடலைக்குனிந்தபடி நடந்தோம்
மாலையில் ராஜாக்காடு. அங்கே வியாபாரிகள் கூட்டமைப்பின் விடுதியில் தங்கினோம். இரவு அங்குள்ள விடுதியில் மலையாளப்பாணியில் கஞ்சியும் வறுத்தமீனும் அவியலும் சட்டினியும் சாப்பிட்டேன். நான்மட்டும்தான், மற்றவர்கள் மலையாள உணவுக்கு வரவில்லை.
திங்களன்று காலையில் இரவிகுளம் சென்றோம். நாங்கள் செல்லும்போதே மழை தூறிக்கொண்டிருந்தது. இரவிகுளம் குறிஞ்சிபூக்கும் மலையுச்சி. அதைப்பார்க்க வந்ததைப்பற்றி சங்கசித்திரங்களில் ஒரு கட்டுரை இருக்கும் [பூவிடைப்படுதல்]
அன்றை விட இன்று சுற்றுலாமையமாக ஆகியிருந்தது. உள்ளே செல்ல கட்டணம் உண்டு. முன்பு கண்ணன் தேவன் நிறுவனத்தின் வேட்டைநிலமாக இருந்தது 1971ல்தான் அரசால் கைப்பற்றப்பட்டு வரையாடு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
பேருந்தில் ஏற்றிக்கொண்டு மலையுச்சியில் விட்டுவிடுவார்கள். முகில்களுக்குள் ஊடுருவி நின்ற மொட்டைப்பாறை மலையுச்சி. மேலே மலையில் ஓர் அருவி கொட்டுவதைக் கண்டேன். அதை அருவி எனக்கொண்டால் இந்தியாவிலேயே உயரமான அருவி. ஏன் உலகிலேயே உயரமான சிலவற்றுள் ஒன்று.
மலை உச்சியில் இருந்து வளைந்த பாறைவழியாக வழிந்திறங்கும் காட்டு ஆறு அது. _ உயரம். ஆனால் மழைநின்றதும் தானும் நின்றுவிடும். ‘தேனருவி அலையெழுந்து வானின்வழி ஒழுகும்’ என்னும் வரிக்கு அப்போது பொருள் கிடைத்தது. “செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுக்கும்’ என்றே தோன்றியது. நீர்ப்பிசிறுகளே முகிலாகி வானைமூடி சூரியனை முழுமையாக மூடியிருந்தன
மலை உச்சி நோக்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்துசெல்லவேண்டும். மழை பெய்துகொண்டே இருந்தது. கைகள் விரைக்கும் குளிர். இரவிகுளம் காடு வரையாடுகளுக்குச் சரணாலயம். மக்களுக்குப் பழகிய வரையாடுகள் அருகிலேயே மேய்ந்துகொண்டிருக்கும். நாங்கள் மழைப்பெருக்கில் உடல்குறுக்கி நின்றுகொண்டிருந்த ஒரே ஒரு வரையாட்டை பார்த்தோம்
மலைச்சரிவுகளில் அருவிகள் இறங்கிச்சென்றன. நாங்கள் பார்த்திருக்கையிலேயே அருவி ஒன்று புதிதாக உருவாகியிருந்தது. மழை வலுக்க மேலும் சிறிய அருவிகள் தோன்றின. அவையனைத்தும் ஓசையுடன் கீழே சென்று ஓடையாகி காட்டுக்குள் மறைந்தன
மழையின் மீது பயணம்செய்வதுபோல உணர்ந்தோம். மழை ஒரு வெள்ளிப் பறக்கும் கம்பளம். கீழே பசுமையின் அலைகள். வானத்தின் ஒளி. ஒளியே அத்தனை குளிராகச் சூழ்ந்திருந்தது எனத் தோன்றியது.
மதியம் ஒரு மணிக்குத் திரும்பினோம். இரவிகுளத்திலேயே இருதரப்பாக பிரிந்தோம். நானும் சக்திகிருஷ்ணனும் அனந்தமுருகனும் ஜானகிராகமும் ஜான் பிரதாப்பும் மூணார் வழியாக தேனி இறங்கி திண்டுக்கல் வந்தோம். திண்டுக்கல்லில் இருந்து எனக்கும் ஜானுக்கும் எட்டுமணிக்கு ரயில்.
ரயிலில் எட்டுமணிக்கே தூங்கும்பொருட்டு படுத்துவிட்டேன். அலர்ஜிக்காக ஒரு மாத்திரை போட்டிருந்தமையால் நல்ல தூக்கம். அரைவிழிப்பில் பச்சைவெளிகளினூடாகவே சென்றுகொண்டிருந்தேன்.
இரவு இரண்டரை மணிக்கு நாகர்கோயில். விடிகாலையில் அருண்மொழியை எழுப்பக்கூடாது. ஆகவே ரயில் நிலையத்தில் அமர்ந்து இரண்டு மணிநேரத்தைப் போக்கிவிட்டு ஐந்தரை மணிக்கு வீட்டுக்குச் சென்றேன்.
நாகர்கோயிலில் ஓரிரு நாட்களாக மழை இல்லை. சாலை உலர்ந்திருந்தது. தேனி சமவெளிக்கு இறங்கியதுமே அதுவரை இருந்த ஈரப்பசுமை வெறும் கனவாக ஆகிவிட்டிருந்தது. நீரற்ற வெறும் முகில்கள். மெல்லிய சாரல் அவ்வப்போது. மற்றபடி புழுதி மூடிய செம்மண்நிலம். நாகர்கோயிலில் அமர்ந்து அந்த கனவை திரும்ப மீட்டெடுக்க ஆரம்பித்தேன்.
படங்கள் ஏ வி மணிகண்டன்