எதையுமே படைக்காமல், கர்நாடக இசைக்கு சுப்புடு போல், தமிழ் இலக்கியத்தில், விமர்சகர்களாக மட்டும் அறியப்பட்டு எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியவர்கள், எழுத்தாளர்களால் பெரிதும் பயப்படப்படுகிறவர்கள்/மதிக்கப்படுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
வெங்கட் சாமிநாதன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் முழுமையாகவே திறனாய்வாளர்களாகச் செயல்பட்டவர்களில் முக்கியமானவர்கள். ஞானி சில கவிதைகள் எழுதிப்பார்த்த முக்கியமான திறனாய்வாளர்.
இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதனூடாக உன்னதத்தை [sublime] உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்பட்டவர் வெங்கட் சாமிநாதன். இப்போது அவரது எல்லா ஆக்கங்களும் கவிதா, காவ்யா, அமுதசுரபி பதிப்பக வெளியீடுகளாகக கிடைக்கின்றன. இவ்வருடத்தைய இயல் [கனடா] விருது அவருக்குக் கிடைத்துள்ளது. அவரைப்பற்றி எம்.வேதசகாயகுமார் எழுதிய கட்டுரையைத் திண்ணையில் காணலாம். உலகத்தமிழ் இணையதளத்தில் அவர் கலைகள் குறித்து எழுதிவருகிறார்.
துல்லியமான அந்தரங்க ரசனை கொண்ட சாமிநாதன் நீலபத்மநாபனின் ‘தலைமுறைகள்‘ பூமணியின் ‘பிறகு‘ போன்ற பல ஆக்கங்கள் சத்தமின்றி வந்தபோதே, கவனித்து முன்னிறுத்தியவர். அவரது கோணங்கள் பலவாறாக விவாதிக்கப்பட்டாலும் அவர் முன்னிறுத்திய ஆக்கங்கள் பொதுவான அங்கீகாரம் பெற்றன என்பது வரலாறு. நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீனநாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிறகலைகளுடன் இருக்கவேண்டிய உறவை ஐம்பதுகளிலேயே வலியுறுத்தியவர் அவர்.
சாமிநாதன் தனிப்பட்டமுறையில் மிக உற்சாகமானவர் என்றாலும் பரவலாக அஞ்சப்படுபவர். காரணம் அவர் இலக்கியவாதியின் சமரசமற்ற தன்மையையும் ஓர் அளவுகோலாகக் கொள்ளும் சமரசமற்ற சண்டைக்காரர் அவர்.
தமிழில் மார்க்ஸியத் திறனாய்வு உருவாக அடிப்படை அமைத்தவர்களில் ஜீவா, நா.வானமாமலை, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் முன்னோடிகள். ஈழத்து இரட்டைத் திறனாய்வாளர்களான கைலாசபதி-சிவத்தம்பி சாதனையாளர்கள். இருவருக்கும் கல்வித்துறைச் சார்பு உண்டு. கைலாசபதி இலக்கியத்தை சமூகமாற்றத்துக்கான கருவியாகக் காணும் நடைமுறை மார்க்ஸியநோக்கு கொண்டவர். பிற்பாடு இலக்கியம் அழகியல்சார்ந்த சமூகஆய்வு என்ற கோணத்தை முன்வைத்தார். இலக்கியத்தை இக்கோணத்தில் ஒட்டுமொத்த ஆய்வு செய்தவர் கைலாசபதி என்றால் கல்வித்துறையின் ஆய்வுமுறைமையைக் கையாண்டு பகுப்பாய்வு செய்பவர் சிவத்தம்பி.
இலக்கியத்தை தூயகலையாகக் காணும் நோக்கை எதிர்த்து அதன் அறம் சார்ந்த, சமூகப்பிடிப்பு சார்ந்த, மனிதாபிமானம் சார்ந்த அடிப்படையை வலியுறுத்தியமை இவர்களின் சாதனை. ஆனால் இலக்கியத்தின் நுண்ணிய அகச்செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதன் கருத்துக் கட்டுமானங்களுக்கு மட்டுமே முக்கியத்துவமளித்தமையால் இவர்கள் முன்னிறுத்திய செ.கணேசலிங்கன் போன்ற எழுத்தாளர்கள் முக்கியத்துவம் பெறவேயில்லை.