கேள்வி பதில் – 37, 38, 39

ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்தும் ஒவ்வொன்றைப் பெற்று எழுதுவதாகச் சொல்லும் நீங்கள் அதே எழுத்தாளர்கள் உங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்லும், “நான் இன்னும் படிக்கவில்லை“, “என்னால் 14 பக்கம் தாண்ட முடியவில்லை” போன்ற வார்த்தைகளை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

அது என் சிக்கல் அல்ல, அவர்களின் சிக்கல் இல்லையா? பொதுவாக, படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்ட காலம் [தூரம்] தாண்டியதும் தங்கள் மொழி, நோக்கு, வடிவம் சார்ந்த தனித்தன்மைகளை உறுதியாகத் தங்களுக்குள் நிலைநாட்டிக்கொள்கிறார்கள். அதற்கு மாறான விஷயங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. சிலசமயம் அவர்களின் தேடல்ஒரு குறிப்பிட்ட திசையில் வாசல்களைத் திறந்து சென்றபடியே இருக்கும். பிற திசைகளில் ஆர்வம் இருக்காது. சிலசமயம் அவர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டே இருப்பவர்களாக இருக்கலாம். ஜெயகாந்தன்போல. அப்போது அவ்வுரையாடலைப் பிரதிபலிக்காத எதிலும் அவர்கள் மனம் பதியாமல் போகலாம். மேலும் அடுத்த தலைமுறையின் ஆக்கம் என்பது ஒரு மூத்த படைப்பாளியைத் தாண்டிச்செல்லக் கூடிய ஒன்று. அவனைப் பின்தள்ளக் கூடிய ஒன்று. அதைத் தன் இடத்திலிருந்து முன்னகர்ந்து படிக்கப் பெரும்பாலான மூத்த படைப்பாளிகளால் முடிவதில்லை. ஒன்று படிப்பதில்லை, ஜெயகாந்தன் போல. அல்லது தங்களை நோக்கி இழுத்துக் கொண்டு பொருள்கொள்ள முயல்வார்கள், சுந்தர ராமசாமியைப்போல. உலகமெங்கும் இப்படித்தான்.

-*-

வாழும்காலத்தில் எழுத்துலகின் பிதாமகன் எனப்படுவதற்கான [காதோர நரை தவிரவும் :-)] தகுதிகள் என்ன? யார் தீர்மானிக்கிறார்கள்?

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

பெரும்பாலும் அந்த எழுத்தாளன்தான் தீர்மானிக்கிறான். சம்ஸ்கிருதத்தில் “ஸ்வயமேவ ம்ருகேத்ரதா” என்ற சொல்லாட்சி உண்டு. காட்டில் சிங்கம் தன் சுயவல்லமையால் தலைவனாகிறது, பிறர் முடிசூட்டுவதனால் அல்ல. தன் ஆக்கங்களினால், கருத்துகளின் நேர்மையினால், சமரசமின்மையினால் ஒருவன் முதன்மைப் படைப்பாளி ஆகிறான்.

-*-

எழுத்தாளர்களுக்கான ஒரு தளம் நாங்கள் வைத்திருப்பது போல், வாசகர்களுகான தளத்தை எப்படிப் பிரிக்கிறீர்கள்? இலக்கிய உலகில் இருப்பவர்கள் தவிர சாதாரண வாசகன் எப்படி உங்களைப் பார்க்கிறான்? குடும்பத்தலைவிகள் தொலைக்காட்சிப்பெட்டியை மூடிவிட்டு உங்களை எவ்வளவு தூரம் விரும்பிப் படிக்கிறார்கள்? நாவல்களை ஜனரஞ்சகப்(!) பத்திரிகைகளில் தொடர்களாக எழுதினால் ரீச் அதிகமாகும் என்று நினைக்கவில்லையா? நான் உங்களைப் படிக்கவில்லை என்று நீங்கள் என்னைக் குற்றம் சொல்வதற்குமுன் நீங்கள் என்னை ரீச் ஆகவில்லை என்று நான் சுட்டலாமா? நமக்குள் எது தடை?

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தன் வாசகர்கள் இன்னார் என்ற ஒரு புரிதல் அல்லது ஊகம் இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். ‘எல்லாருக்குமாக‘ எழுதுவது சாத்தியமே அல்ல. என் வாசகன் நான் சொல்லும் சொற்கள்வழியாக என் படைப்பு நிகழ்ந்த மனநிலைவரை வரக்கூடியவன் என்ற எண்ணம் எனக்கு உண்டு. என் வாசகர்களில் அறிவியலாளர், அரசியல்வாதிகள், திரைப்படக்காரர்கள் முதல் ஆட்டோ ஓட்டுநர், ஆலைத்தொழிலாளர் வரை பலர் உண்டு.

பொதுவான தகுதிகள்:

அ] இலக்கியம் மூலம் வாழ்க்கையை அறிவதற்கான யத்தனம்.

ஆ] மொழியைக் கொண்டு கற்பனை செய்வதற்கான திறன்.

இ] இலக்கியம் என்பது அன்றாடக் கருத்துகக்ளை அல்லது சிந்தனை நுட்பங்களை சொல்வதற்கான முயற்சி அல்ல, அது மொழி மூலம் மொழிக்கு அடியில் உள்ள படிமத்தொகையை பயன்படுத்தி ஆழ்ந்து செல்லும் ஒரு தேடல் என்ற புரிதல்.

இவை, திறந்தமனமும் அடிப்படை ரசனையும் கொண்ட ஒருவருக்கு படிக்கப் படிக்க இயல்பாக வாய்க்கும். சாதாரண வாசகன் என்றால் யார்? இலக்கியம் பொழுதுபோக்கு என நம்புகிறவன். நல்லுபதேசங்களையும் சீர்திருத்தக் கருத்துகளையும் அரசியல் நிலைபாடுகளையும் தேடுபவன். அப்படிப்பட்டவர்களுக்கு நான் புரிந்துகொள்ளமுடியாத சிக்கலான எழுத்தாளன். எதையும் திட்டவட்டமாகச் சொல்லி ‘வழிகாட்டாமல்’ சென்றபடியே இருக்கும் குழப்பவாதி.

தொலைக்காட்சி யுகத்திலும் ஏராளமான குடும்பத்தலைவிகள் என் நூல்களைப் படிக்கிறார்கள். பலநூறுபேரை நான் கடிதங்கள்மூலம் அறிவேன். பொதுரசனை இதழ்களில் சராசரியான ஒரு தளம் உள்ளது. அத்தளத்தில்தான் எழுத முடியும், அதுவே நியாயம். அவர்கள் சிலவற்றையே வெளியிடுவார்கள். அவர்களுக்குத் திட்டவட்டமான அளவுகோல் உள்ளது.

இலக்கியத்துக்கு, சுதந்திரமான தேடலுக்கான வாய்ப்பு தேவை. படைப்பியக்கத்தை அது நிகழும்போது கட்டுப்படுத்துவது கூடாது. அப்போது அது படைப்பாக இருக்காது ஆகவே இன்றைய நிலையில் நல்ல படைப்புகளை பிரபல இதழ்களில் எழுத இயலாது. ஓரளவு சமரசம் செய்துகொண்ட ஆக்கங்கள் மூலம் தன்னை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளலாம். தன் நூல்கள் குறித்த தகவல்களைக் கொண்டு சேர்க்கலாம். நான், எஸ்.ராமகிருஷ்ணன் எல்லாம் செய்வது இதையே.

வாசகனுக்குத் தகவல் தெரியவேண்டும், நல்ல வாசகன் அதைப் படிப்பான். என் வீட்டுக்கு வந்து கதவைத்தட்டி எனக்குப் பிடித்ததைப் பேசும் ஆக்கங்களையே படிப்பேன் என்பவர்களைப் படிக்கவைக்க முயலாமலிருப்பதே நல்லது. இலக்கியம் வணிகமும் அல்ல, பிரசாரமும் அல்ல. பகிர்தல். அதற்கு வாடிக்கையாளரோ ஏற்பாளனோ தேவையில்லை. சகமனமே தேவை. அது மறுமுனையில் சமமான தேடலுடன் காத்திருக்கும்.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 36
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 40, 41, 42