சாதி கடிதங்கள்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெய மோகன் அவர்களே!

உங்கள் அன்பிர்குரிய பாமரன் ராம் எழுதுவது, (www.hayyram.blogspot.com)

எந்த அடையாளம்?

எந்த அடையாளம்? என்கிற தலைப்பின் கீழ் உங்களால் சாடப்பட்ட அதே ஹேராம் தான். மீண்டும் தங்களிடம் கருத்துக் கேட்க வந்திருக்கிறேன். சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த உத்தம புத்திரன் திரைப்படம் பற்றிய செய்திகளை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

http://narumugai.com/?p=18070

//உத்தம புத்திரன் விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தனுஷ், மித்ரன் R ஜவகர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் அடங்கிய ‘உத்தமபுத்திரன்’ படக்குழுவினர், சர்சைக்குள்ளான காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறியதோடு, தங்கள் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
கௌண்டர் சமூகத்தாரை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகளையும், வசனங்களையும் நீக்க வேண்டும் என கொங்குநாடு முன்னேற்ற கழகத்தினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, படத்தை தடை செய்யும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதாக நாம் முன்பே செய்தி அளித்திருந்தோம். சேலம், கோவை, திருச்சி, கரூர் உள்ளிட்ட இடங்களில் 80ற்கும் மேற்பட்ட இடங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது//
தமிழ் சினிமாவில் பிராமணர்களை தொடர்ந்து கேலிப் பொருளாகவும், கொடுமைக்காரர்கள் போலவும் காட்டி வருவருவதைப் பற்றி தங்களிடம் கேட்டமைக்காக என்னை வசை பாடினீர்கள். ஆனால் இன்று உத்தமபுத்திரன் என்ற படத்தில் கௌண்டர்களை அவமத்தித்திருக்கிறார்கள் என்று கூறி போராட்டம் நடத்தி அப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கச் சொல்லி இருக்கிறார்கள். படத்தின் இயக்குனரும் நடிகரும் சேர்ந்து அந்த ஜாதிக்காரர்களிடம் மன்னிப்பும் கோரி இருக்கிறார்கள். (குறிப்பு: இந்தப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை)
அதே வேளையில் சமீபத்தில் நான் பார்த்த மற்ற படங்களைப் பற்றியும் சில தகவல்கள். குரு ஷிஷ்யன் என்ற சத்தியராஜ் சுந்தர் சி நடித்த படத்தில் ஒரு காட்சி வருகிறது. சுந்தர் சி சத்தியராஜை ஒரு விபச்சாரி வீட்டிற்கு விஷயத்தைச் சொல்லாமல் அழைத்துப் போகிறார். அங்கே ஷகிலா பல பெண்களை சத்தியராஜிடம் காட்டி விட்டு கடைசியாக திருநெல்வேலி அக்கிரஹாரத்து பொன்னு, இவ மகுடிக்கு மயங்காத ஆம்பளைங்களே கிடையாது என்று கூறி ஒரு பெண்ணை வரவைப்பதாகக் காட்சி. வருபவள் ஷ்பஷ்டமாக மடிசார் கட்டிக்கொண்டு வருகிறாள். “கேட்டேளோ இங்கே வரமாட்டேளோ அங்கே” என்ற பழையாடலின் ரீமிக்ஸில் அத்தனை பெண்களும் மடிசார் கட்டிக்கொண்டு ஆடுகிறார்கள். பிராமணப் பெண்கள் இன்று மடிசார் கட்டிக்கொண்டு இருக்கவில்லை தான். ஆனால் மடிசார் என்றாலே ப்ராமணர்களின் உடை என்று சினிமாவினாலேயே அடையாளப்படுத்தி விட்டு அதே போன்று பெண்களை விபச்சாரிகளாகக் காட்டி ஆடவிடுவதும் ஒரு ஜாதியினரை அசிங்கப்படுத்தும் செயலாக சினிமாக்காரர்களுக்கு ஏன் தோன்றாமல் போனது ஏன் என்பது புரியவில்லை. அதே போல துரோகி என்ற படத்தில் பிராமண கதாபாத்திரமும் நெகடிவ்வாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மிகவும் மோசமான வார்த்தைகளால் வசைபாடப்பட்டிருக்கிறது.
ஜெ மோ அவர்களே, நான் உங்களிடம் குதர்க்கம் பேச வரவில்லை. சில விஷயங்கள் புரியாமல் தவிப்பதால் உங்களிடம் கேட்கிறேன்.. கௌண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது படக்காட்சிகளை நீக்கி அவர்களிடம் மன்னிப்பும் கோரும் திரையுலகம், முஸ்லீம் கதாபாத்திரத்தை நெகட்டிவாக படமாக்ககூட பயப்படும் திரையுலகம் ஏன் பிராமணர்களை மட்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமாகவும் கேலியாகவும் காட்ட முற்படுகிறார்கள்?
ப்ராமண பாலச்சந்தராலேயே தொடங்கி வைக்கப்பட்ட இந்த புண்ணிய காரியத்தை ஒரு மனிதாபிமானத்திற்கு கூட ஏன் சினிமாக்காரர்கள் இன்று வரை நிறுத்த மறுக்கிறார்கள்?
பிராமணர்களை சித்தரித்தே நாம் ஏன் கதை அமைக்க வேண்டும் என்று ஏன் ஒரு சினிமாக்காரருக்கு கூட தோன்றமாட்டேன் என்கிறது?
நடிகை ஷகிலா நீதிமன்றத்திற்கு பர்தா அனிந்து வந்ததையே முஸ்லீம்களின் உடை என்று எதிர்ப்பு தெரிவித்த முஸ்லீம்களின் பேச்சை சாடாத அரசியல் வாதிகள் சினிமாக்காரர்கள் – மடிசார் பிராமணர்களின் உடை அதை அணிந்து ஏன் ஆபாசமாக நடிக்கிறீர்கள் என்று கேட்டால் மட்டும் உன் முப்பாட்டனை பழிவாங்கறேன் என்கிற ரேஞ்சிற்கு எகத்தாளமாக பேசுவது ஏன்?
இதே ஜவஹர் இயக்கி தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் ப்ராமண கதாபாத்திரத்தை எவ்வளவு சுதந்திரமாக பயன்படுத்தினார்கள். எல்லா பிராமண மாமிகளும் ஒரு டாட்டா சுமோவில் தனுஷை அமுக்கி அவன் மீது லஜ்ஜையே இல்லாமல் விழுந்து விழுந்து பிரயாணிப்பது போல காட்டினார்களே… அப்போது ஏன் இவர்களுக்கு தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை மிகவும் அபத்தமாக காண்பிக்கிறோமே என்று தோன்றவில்லை?
// நீங்கள் பிராமணராக உணரும் வரை அந்த அம்புகள் வந்து தைத்தபடியேதான் இருக்கும். // //இந்தப்புண்படுதல் சங்கதியை நீங்கள் கொஞ்சம் அடக்கிக்கொள்ளத்தான் வேண்டும்.// என்று என்னிடம் கூறினீர்கள். ஆனால் அதே போன்று பதிலை உங்கள் சக சினிமாக்காரர்களால் கௌண்டர்களிடம் ஏன் கூற முடியவில்லை? தேவர்களும் கௌண்டர்களும் புண்படும் போது அவர்களிடம் மன்னிப்பு கோர தயாராகும் திரையுலகம் ஏன் பிராமணர்களை மட்டும் எப்படி வேண்டுமானாலும் திரையில் காட்சிப்படுத்துகிறார்கள்?
இதில் குறிப்பிடப்பட்வேண்டிய ஒரு விஷயம்…. அதாவது அந்நியன் படம் வந்த போது பார்ப்பனத் திரைப்படத்தை பார்க்காதீர்கள் என்று போஸ்டர் அடித்தே ஒட்டினார்கள். அதன் காரணம் பின்னால் தான் புரிந்தது. வழக்கமாக பிராம்ணர்களை காமெடிப்பீஸாகவும், ஆபாசமாகவும், கொடுமைக்காரர்களாகவும் மட்டுமே சித்தரித்து வெளிவரும் சினிமாக்களைப் பார்த்து பழகிப்போன பிராமண எதிர்ப்பாளர்கள் நவீன கலத்தில் பிராமணனை சமூக அக்கரை உள்ளவனாகவும் இரக்கமுள்ளவனாகவும் காட்டியது பொறுக்கவில்லை. மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் பிராமணப் பெண் பிராமண ஆணையே கல்யாணம் செய்வதாக அந்தத் திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் வைத்து விட்டார்கள். இந்த அதிர்ச்சியை பிராமண எதிர்ப்பாளர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை என்பதும் ஒரு காரணம். சினிமாவில் பிராமண துவேஷத்தை வியாபாரமாக்கியே தீருமளவிற்கு இருக்கும் இந்த நிலை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்?
பிராமணர்களுக்கு சங்கங்கள் இருந்தும் இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் போராடிக்கொண்டிருப்பதில்லை. அது நேரத்தை வீனடிக்கும் செயல் என்றும் அந்த நேரத்தில் நாம் உருப்பட ஏதாவது வழியைப்பார்க்கலாம் என்றும் இருந்து விடுகிறார்கள். இரண்டாவது இவர்களிடம் போராடி ஒன்றும் பிரயோஜனப்படாது என்கிற எண்ணமாகவும் இருக்கலாம். மூன்றாவது நாம் ஏதாவது போராடப்போய் இன்னும் அதிகமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரலாம் என்ற பயமும் காரணமாக இருக்கலாம். ஆனால் கேள்விகள் மட்டும் மனதில் எழாமல் இருப்பதில்லை. தியேட்டருக்கு முன்னே போய் படத்தை ஓடவிடமாட்டோம் என்று போராடினால் பயப்படும் திரையுலகம் தூரத்தில் இருந்து கொண்டே இப்படிச் செய்ய வேண்டாமே என்று மெதுவாகக் கேட்டால் ஏறி மிதிப்பது ஏன்?
இவைகள் எல்லாம் எவ்வளவோ யோசித்தும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அன்புள்ள ஜெ மோ அவர்களே….! இந்தக் கேள்விகள் எல்லாம் உங்களைப் பார்த்து தொடுக்கப்பட்டவை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஆனால் உங்களைப் போன்ற நடுநிலையாளர்களால் தமிழ் சினிமாவில் பிராமண காட்சிப்படுத்தல் சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது என்று ஒரு சதவீதத்திற்கு கூட உணர முடியவில்லையா என்பதை மட்டும் தெரிவியுங்கள். சினிமாவில் உண்மையில் பிராமணக் காட்சிப்படுத்தல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பற்றி தங்களது கருத்தை அறிய வேண்டியே இந்த நீண்ட கடிதம். என்னைத் திட்டினால் கூடப் பரவாயில்லை வழக்கம் போல வாங்கிகட்டிக்கொள்கிறேன். தயவு செய்து மறுமொழியுமாறு வாய் மொழிகிறேன்! உங்களால் முடிந்தால் குறைந்த பட்சம் யாரேனும் ஒரே ஒரு இயக்குனரிடமாவது பிராமணக் காட்சிப்படுத்தல் வேண்டாம் என்று எடுத்துச் சொல்லுங்களேன். திரையுலகில் ஒரே ஒருவராவது பிராமணக் காட்சிப்படுத்தலுக்கெதிராக பேசுகிறாரே என்ற சந்தோஷமாவது கிடைக்கட்டும். செய்வீர்களா?
தங்கள் அன்புள்ள பாமர ஆத்மா!
ராம்
www.hayyram.blogspot.com

அன்புள்ள ராம்

இந்தப்படத்தை நான் பார்க்கவில்லை. இம்மாதிரி விஷயங்களில் இனிமேல் கருத்தே சொல்வதில்லை என்றிருக்கிறேன். இது ஒரு நீண்ட விவாதம். எல்லாருக்கும் தனிப்பட்ட உணர்ச்சிகள். பயனற்ற விவாதங்களுக்கு மட்டுமே அவை இட்டுச்செல்லும். என்னை விட்டுவிடுங்கள். உங்கள் உணர்ச்சிகளை நீங்களும் வெளிக்காட்டுங்கள். அவ்வளவுதானே. நான் சொன்ன கருத்தை ஈடுசெய்ய இதோ உங்கள் கடிதத்தை பிரசுரிக்கிறேன்

ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஒரு எதிர்மறைக் கதாபாத்திரம் புனைவின் தேவைக்காக ஒரு சாதி/ மத அடையாளத்துடன் அமைவதற்கும் ஒரு சாதியை இழிவுசெய்யும் நோக்கத்துக்கும் இடையே வேறுபாடு பெரிது. எதிர்மறைக் கதாபாத்திரங்களுகெல்லாம் சாதி இட மத அடையாளாங்களே இருக்கலாகாது என ‘ஜனநாயக’உரிமை குரல் எழுந்தால் புனைவு செத்துவிடும்.. அதேசமயம் தம்ழி சினிமாக்களில் பலர் பிராமணர்களை திட்டமிட்டே இழிவுசெய்கிறார்கள், பிறசாதிகளை அப்படிச்செய்ய துணிவதில்லை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். அது அரசியலிலும் அப்படித்தானே?

தனிப்பட்ட முறையில் நான் ஒருசாதியுடனும் என்னை இணைத்துக்கொண்டு குரலெழுப்ப மாட்டேன் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்

ஜெ

வணக்கம்,

//இந்நிலையில் வரலாற்றை எழுதுவதற்கு சிறந்தமுறை அந்தந்தச் சமூகங்களுக்குள் இருந்தே ஆய்வாளர்கள் கிளம்பி வருவதுதான். உதாரணமாக தமிழ்நாட்டு வரலாற்றில் – குறிப்பாக தென்தமிழ்நாட்டு வரலாற்றில் – கள்ளர் மற்றும் மறவர்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது. அவர்களுக்குள் உள்ள பல்வேறு உபசாதிகள், குலக்குழுக்கள், பல்வேறு நம்பிக்கைகள், ஆசாரங்கள், அவர்களுக்குள் உள்ள குலப்பூசல்கள் ஆகியவற்றை அறிந்தாலொழிய அவர்களின் வரலாற்றுப் பாத்திரத்தை உணர முடியாது.

ஆனால் அவர்களைப் பற்றி எழுதப்பட்ட வரலாறு குறைவு – அனேகமாக இல்லை என்னும் அளவுக்கு. நான் வாசித்தவரை பொதுவாகக் குறிப்பிடப்படும் மறவர், கள்ளர் சாதியைப்பற்றிய மேல்நாட்டுப்பல்கலைக்கழக ஆய்வுகள் அனைத்துமே மேலோட்டமான ஒருசில வாய்மொழிப்பதிவுகள் மட்டுமே. தமிழகத்தில் வாழும் ஒருவனுக்கு அவற்றில் தெரியாத தகவல் எதுவுமே இருப்பதில்லை. ஆகவே தேவர்களுள் ஒருவர் வந்து தன் பாரம்பரிய அறிவின் அடிப்படையில் அவ்வரலாற்றை எதுவதே ஒரே சாத்தியமான வழியாக உள்ளது – அது இன்னமும் நிகழவில்லை.//

இந்த வரிகளில் எனக்கு ஏற்ப்படும் சந்தேகத்தை நீங்களே தீர்த்து வைக்க விரும்புகிறேன்.அது உங்களால் சாத்தியம் எனவும் நம்புகிறேன்.

தென்தமிழ்நாட்டு வரலாற்றில் – கள்ளர் மற்றும் மறவர்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது என்றே நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள்.இங்கே முக்குலத்தோர் என்ற மூன்று குலங்களில், மூன்றாவதாக உள்ள அகமுடையார்(அகம்படியர்) பற்றிய எந்த பக்களிப்பையும் நீங்கள் குறிப்பிட மறந்தததேன்…? இல்லை அகமுடையார் யாருமே எந்த பங்களிப்பையும் செய்யவில்லை என சொல்கிறீர்களா…? இதுவுமில்லை என்றால் அவர்களை நீங்கள் இங்கே சொல்ல மறுப்பதேன்…?

தென் தமிழ்நாடு என்பது மதுரை,ராமநாதபுரம்,சிவகங்கை உள்ளடக்கிய பகுதிகள் தானே…? அங்கே மறவர், கள்ளர்களை விட அகமுடையார் குலத்தவர்கள் தானே அதிகம் வாழ்ந்தும்,வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.அப்படி இருக்கும்போது அவர்களது பங்களிப்பே துளியும் இலையென்று எப்படி கருத முடியும்…?

நீங்கள் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்.உங்களிடமே இதை விட்டுவிட்டு, உங்களது பதிலுக்”காய்” அல்லது அகமுடையர் பற்றிய புது பதிவுக்”காய்” எதிர்நோக்கி இருக்கிறேன்.

காயும் கனியுமென காத்திருக்கிறேன்.

நன்றி.

தமிழனாய்…
ச.இமலாதித்தன்

அன்புள்ள நண்பருக்கு

இந்தமாதிரி விவாதங்கள் பெரும் சலிப்பை உருவாக்குகின்றன. உங்கள் சுய அடையாள உருவாக்கங்களுடன் விவாதிக்க எனக்கு நேரமில்லை.

நான் அறிந்தவரை தமிழ் வரலாற்றெழுத்தில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அதையே சொன்னேன். உங்களுக்கு தேவையான வரலாற்றை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்

தமிழில் இந்த அளவுக்கு சாதிவெறி மேலோங்கிய ஒரு காலகட்டம் முன்பு இருந்ததா என்றே சந்தேகமாக இருக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைசில கவியியல் சொற்கள்
அடுத்த கட்டுரைகவின்மலர்