அச்சுப்பிழை

நகைச்சுவை

அச்சுப்பிழை என்றால் என்ன? ‘மொழியில் அமைந்த ஒரு ஆக்கத்தைத் தட்டச்சுசெய்யும்பொதோ, அச்சுப் போடும்போதோ, அல்லது கடைசியில் பிழைதிருத்தும்போதோ, கவனக்குறைவாகவோ அல்லது மிதமிஞ்சிய கவனம் காரணமாகவோ, மொழியறிவு இன்மையினாலோ அல்லது மிதமிஞ்சிய மொழியறிவினாலோ எழுத்துக்கள் மாறுவதன் மூலமும் அல்லது மாற்றப்படுவதன் மூலமும், எழுத்துக்கள் விடுபடுவதன் மூலமும் மற்றும் சேர்வதன் மூலமும், உருவாகும் சொற்களின் மாற்றுச்சாத்தியங்கள்’ என இதை சுருக்கமாக வரையறைசெய்யலாம். தமிழிலக்கியத்தில் இது ஒரு வலிமையான இணைச் சக்தியாக திகழ்ந்து வருகிறது.

அச்சுப்பிழையின் முறையை அவற்றின் உருவாக்கம் சார்ந்து இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். அ. கட்டை அச்சு முறை உருவாக்கிய பிழை. ஆ. கணினி அச்சுமுறை உருவாக்கும் பிழை. முந்தையதன் இடத்தை பிந்தையது எடுத்து விரிவாக்கம்செய்தது. இலக்கியக் கோட்பாட்டு முறைமையின்படி முந்தையதை கட்டைப்பிழைக் காலகட்டம் என்றும் பிந்தையதை பின்-கட்டைப்பிழைக் காலகட்டம் என்றும் சொல்லலாம். பிந்தையதில் கட்டை எங்கே வந்தது என்ற கேள்வி பொருத்தப்பாடு இல்லாதது. அதையொட்டி கணினியை பின்கட்டை என்று சொல்லப்புகுவதும் பிழை..

முந்தையதில் கம்பாசிட்டர்களின் கைகள் பழக்கம் காரணமாக இயங்கின. பிந்தையதில் கணிப்பொறியின் விசைப்பலகை பழக்கம் காரணமாக இயங்குகிறது. இவ்விரு முறைகளும் நம் மொழியையும் அதன் வழியாக நம் கலாச்சாரத்தையும் பல எதிர்பாராத திசைகள் நோக்கி விரிவாக்கம்செய்பவை. பொதுவாக மொழி போன்ற அகவடிவங்களை இயந்திரங்கள் போன்ற புறவடிவங்கள் சந்திக்கும்போது உருவாகும் சாத்தியங்கள் எல்லையற்றவை. பனையோலை நாலுவரி எழுதுமளவுக்குக் குறுகலாக இருந்ததனால்தானே வெண்பா விருத்தப்பா போன்ற நம்முடைய செய்யுள் வடிவங்கள் உருவாயின?

உதாரணமாக, கணினி மூலம் கண்கள் பரிசோதனைசெய்துகொடுக்கப்படும் என்ற அறிவிப்பு விசைப்பலகையின் விசை மூலம் ‘கண்ணனி’ என்றாகி தமிழறிஞரான  பிழை திருத்துநரால் ‘கண்ணணி’ என்று திருத்தப்பட்டபோது மூக்குக்கண்ணாடிக்கு ஒரு அழகிய தமிழ்ச்சொல் கிடைக்கப்பெற்றது. ‘கண்ணகி’ மூலம் கண்கள் பரிசோதனை செய்து கொடுக்கப்படும் என்று அதை அந்தப் பிழைதிருத்துநர் மாற்றியிருக்க அதேயளவு வாய்ப்பு இருந்தது என்பதை நோக்குங்கால் தமிழுடன் விதி எப்படி இனிய விளையாட்டுகளை நிகழ்த்துகிறதென்பது புரிகிறது.

இருவகை அச்சுமுறைகளையும் அச்சுப்பிழைமூலமே ஒப்பிட்டு ஆய்ந்து ஒரு முனைவர் பட்டத்துக்கு முனைய வாய்ப்பிருக்கிறது. கட்டை அச்சில் தலைகீழாக அல்லது பக்கவாட்டில் பார்த்தால் ஒரேபோலத் தோன்றும் எழுத்துக்கள் மாறிவந்து பொருளை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்கின்றன. உதாரணம், ‘புதுமை மய்தியவர்கள் கொமுப்பை தயிர்க்க வேண்டும்’ ‘நீங்கள் சூவலுடன் காத்திருந்த நிகழ்ச்சி இதோ நொடங்கவிருக்கிறது’ ‘கன்யாடுமரியில் வரம் நடு விழா’.

ஆனால் கணியச்சில் தட்டச்சுப்பலகையில் அருகருகே இருக்கும் எழுத்துக்கள் இடம்மாறுகின்றன. உதாரணமாக ‘ஆட்கார் விருதுக்கு தமிழ் எனிமா’ .அல்லது தப்பான இடத்தில் வார்த்தை பிரிந்துவிடுகிறது.’பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவா ரணம் வழங்க முதல்வர் ஆணையிட்டார்’ சமீபகால கணியச்சில் சொற்களுக்கிடையே இடைவெளி விடாமல் அச்சிடுவதும் வழக்கமாக உள்ளது. ‘அமைப்பியல்விவாதங்களின்சிறப்புவிகுதிச்சொற்களைகவனித்தோமென்றால்நடைமுறைச்சிக்கல்களைக்கொண்டுஇலக்கியத்தைஅணுகுவதைக்கைவிட்டிருப்பதைக்காணமுடிகிறது’ என்று ஒரு வார்த்தையை சமீபத்தில் படித்தேன்.

கணியச்சில் உள்ள வேறு பல சிக்கல்களையும் கோடிகாட்டவேண்டும். பல கோடி காட்ட முடியும். எழுத்துரு மாற்றம் நிகழும்போது ஆ இ போன்ற எழுத்துக்கள் விடுபட்டுவிடுவது சாதாரணம்.  ‘காயத்தில் பறக்கும் யிரக்கணக்கான பறவைகளை னந்தமாக டிப்பாடுகின்றனவா என்று அவன் ச்சரியப்பட்டான்” என்றவரியை ச்சரியப்படாமல் படிக்க இணையவாசகர்கள் பழகிவிட்டிருக்கிறார்கள். சொற்களுக்கு அருகே தாந்த்ரீக மந்திரங்கள் அடைப்புக்குள் இருப்பதும் அவர்களை துணுக்குறச்செய்வதில்லை. ‘நம் நாட்டில் நாட்டாரியல் [ஊழுகூடூல்ச்] ஆய்வுமுறை 1987ல்தான் அறிமுகமாகியது’ யூனிகோடு வந்தபின்னர் ‘¡ரமாசமியிடம் க§ட்டபோது ச¦¡ல்ல ¡மட்ட§ன் என்று அவன் ச¦¡ன்¡னன்’ என்ற சொற்றொடரைக்கூட ஜனங்கள் இன்பமாக வாசித்துச்செல்கிறார்கள்.

அச்சுப்பிழைக்கு நமக்கு நெடிய மரபுண்டு. பழைய சினிமா இதழ் ஒன்றில்  தடிகை சாவித்ரி என்று அச்சிடப்பட்டிருந்ததாக சொல்வார்கள். ‘நீங்கள் முத்தக் காட்சியில் கடிப்பீர்களா?’ என்று ஒரு நடிகையிடம் கேட்கப்பட்டபோது  அந்த அம்மையார் ‘கதைக்குத் தேவைப்பட்டால் சூதில் தவமில்லை’ என்று சொன்னார்.

ஆரம்ப நாட்களில் கல்யாண அழைப்பிதழ்களில் பிழை என்பது கண்ணேறுபடாமல் இருப்பதற்கான கரும்புள்ளிதான் என்று மங்கலமாகக் கருதப்பட்டது. அச்சகக்காரர்களால் உருவாக்கப்பட்ட நம்பிக்கை. ஊர்ப்பெயர்களைக் குத்துமதிப்பாகவே புரிந்துகொள்வார்கள். அச்சு அல்ல அச்சுக்குப்பின் உள்ள அச்சுகோப்பவனின் நோக்கமே முக்கியமானது என்பது இதன் கொள்கையடிப்படை, மநுரை, விடுதுநகர், சோயில்பட்டி, திருதெல்வேலி, பாளையங்கேட்டை போன்ற ஊர்களை நீங்கள் சரியாகத்தானே படித்தீர்கள்? ஆனால் சவகாசி என்று அச்சிட்டிருந்தால் அடிவிழும். சவகுமார்களும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

மணமக்கள் சுற்றத்தார் பெயர்களும் தெரிந்தவர்களால் இயல்பாகவே வாசிக்கப்படும். மீசையை எடுத்து விட்டு வந்தால் புருஷன் கொழுந்தனாகிவிடுவானா என்ன? கவைவாணி, குப்ரமணியம்,சூத்தாலிங்கம்பிள்ளை போன்ற பெயர்களை நாம் பொருளை ஊகிக்கும் விபரீதத்துக்கு முயல்வதில்லை.  இதற்கு அக்கால அச்சுமுறையும் ஒருகாரணம். சாணித்தாளில் மை ஊறிய எழுத்துக்களை தொல்தமிழ் மரபில் உள்ள சுவடி வாசிக்கும் பயிற்சிமூலமே பலரும் வாசிக்கிறார்கள். கம்பன் என்ற சொல் கட்டுரை முழுக்க சும்பன் என்று அச்சாகியிருந்தும்கூட ஒரு சிற்றிதழில் எவருமே கவனிக்காமல் போனமைக்குக் காரணம் இதுவே.

ஆகவே குழந்தைகளுக்கு விசித்திரமான பெயர்களை கற்பனையின் எல்லைக்கோட்டுக்கே சென்று போட்டு வைப்பவர்கள் அரைக்கணம் அச்சகத்தாரையும் எண்ணிப்பார்க்க வேண்டும். கார்க்கி என்ற பெயர் எப்போதுமே கார்க் என்று திருத்தியமைக்கபப்டுகிறது. லூஷுன் என்று இலக்கிய கொந்தளிப்பால் பிள்ளைகளுக்குப் பெயரிட்டு பள்ளியில் அவர்களை லூசு என்று அழைக்கவைப்பது கொடுமை. என் நண்பர் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு பண்ணன், தண்ணன், பணிமொழி என்று பெயரிட்டார். மூன்றுபெயரும் ஓர் அழைப்பிதழில் சரியாக அச்சாகிவரும்நாளை அச்சகதினம் ஆக அரசு அறிவித்துக் கொண்டாட வேண்டும் என்று அவர் சொல்வதுண்டு. தண்ணன் கண்ணனாக மாறுவது சரிதான். பணிமொழி மணிமொழியாக ஆவதும் பரவாயில்லை. ஆனால் பண்ணன் பெரும்பாலும் மண்ணன் தான். சிலசமயம் பண்ணல் ஆக ஆவதும் உண்டு.

இவ்வகைப் பிழைகள் அச்சுக்கோப்பவரின் கையால் செய்யப்பட்டு கண்ணால் புறக்கணிக்கப்பட்டவை. இரண்டாம் வகைப்பிழைகள் அச்சகத்தில் உள்ளவர்கள் தங்கள் தமிழறிவால் உருவாக்குபவை. சர்வதாரி ஆண்டு சகோதரி ஆண்டு என்று சமீபத்தில் ஓர் அழைப்பிதழில் ‘அதென்ன சர்வதாரி? சனியன்களுக்கும் தமிழும் தெரியாதா?’என்று தலையலடித்துக்கொண்டபடி அச்சுநிபுணரால் மாற்றியமைக்கபட்டது. சுந்தர ராமசாமி எப்போதுமே தினத்தந்தியில் [திருமதி ] சுந்தரராமசாமியாகவே அச்சிடப்பட்டார்– அஞ்சலிச்செய்திவரை. தமிழண்ணல் தமிழண்ணன் ஆக தந்தியில் வருவதுண்டு.

இதேபோல வாசகர் தரப்பிலும் அச்சுப்பிழைகள் நிகழ்வதுண்டு. குமரிமாவட்டத்தில் அறிவிப்பை பாட்டாக்கள் அரிவைப்பு என்றுதான் நெடுங்காலம் புரிந்துகொண்டிருந்தார்கள். திருநெல்வேலிப்பக்கம் ஆட்சியர் என்பது ஆச்சியின் ஆண்பால் என்ற நம்பிக்கை நிலவியது. மாவாட்ட கலைக்குழு அனுப்பபடுவதை மரபுக்கலைகளின் மீட்சிக்கான முறை என்று நம்பிய பெண்கள் உண்டு.

இவ்விருவகை பிழைகளை செய்பிழைகள் செய்யாப்பிழைகள் என பிரிக்கலாம். செய்யவேண்டாதவற்றை செய்வதனாலும் செய்யவேண்டியவற்றை செய்யாமையாலும் வரும் இப்பிழைகளையே வள்ளுவப்பெருந்தகை

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமையானும் கெடும்

என்று சொல்லியிருக்கிறார்.

சிற்றிதழ்கள் அச்சுப்பிழைகளுக்காகவே நடத்தப்படுபவை என்ற எண்ணம் அவற்றை எப்போதாவது வாசித்துத் திகிலுறுபவர் நடுவே உண்டு. அச்சுப்பிழை சிற்றிதழ்சார் இலக்கியத்தின் சாத்தியங்களை அதிகரிக்கிறது. சிற்றிதழ் வாசகர்கள் பொதுவாக எதையும் இலக்கியமாக வாசிக்கும் பயிற்சி கொண்டவர்கள். இப்பயிற்சியைத் தமிழுக்கு அளித்தவர்களில் பிரம்மராஜனுக்குப் பெரும்பங்கு உண்டு.

கண்ணாடி மாற்றும் இடத்தில் எழுதப்பட்டுள்ள ‘வலசுடமு கடசழஉ இபஅழசன கிலவடுசில’  போன்ற எழுத்துக்களைக்கூட

வலசுடமு
கடசழஉ?

இபஅழசன
கிலவடுமல!

என்று அதி நவீனக்கவிதையாக வாசிக்கும் மனம் கொண்ட சிற்றிதழ் வாசகர்களுக்கு அச்சுப்பிழைகள் என்பவை வாசிப்புக்கு புதிய வாசல்களைத் திறப்பவை.

இயற்கையில் நிகழ்ந்த ஒரு குரோமோசோம் அச்சுப்பிழை மூலம் மனிதன் உருவானான் என்பது அறிவியல். புதுக்கவிதையும் அப்படி உருவானதே. பிச்சமூர்த்தி எழுதிய பெட்டிக்கடை நாராணன் என்ற கதையின் அச்சுக்கட்டையை செல்லப்பா கீழே போட்டு அவசரமாகத் திருப்பி அள்ளி அச்சுக்கோப்பாளர் பார்ப்பதற்கு முன்னர் அடுக்கியமையால் தமிழில் நவீனகவிதை வடிவம் உருவானது என்ற நம்பிக்கை உண்டு.

தமிழ் உரைநடையில் அச்சுப்பிழையின் சாதனை என கோணங்கியைச் சொல்லலாம். உண்மையில் அவர் ஒழுங்காக எழுதிய ஒரு கதையை அன்னம்-அகரம் அச்சகத்து அச்சுக்கோப்பாளர் கைபோன போக்கில் அச்சுவைத்துப் பிரசுரிக்க அதை விமரிசகர் நாகார்ச்சுனன் ‘நவீனக் கதைசொல்லியின் வருகை ‘ என்று கொண்டாட அதிலிருந்து கோணங்கி அந்தச் சாத்தியங்களைக் கண்டுகொண்டு அவரது தனித்துவம் கொண்ட நடையையே உருவாக்கிக் கொண்டார். பின்னாட்களில் அவர் படைப்புகளை பல மாதங்கள் எடுத்துக்கொண்டு ‘புரூஃப்’ பார்ப்பார். பிழைகளை உருவாக்குவதையே அப்படிச் சொல்கிறார் என்பது இலக்கிய மர்மம். ‘இருள்வ மௌத்திகம்’ என்ற அவரது சமீபத்திய நாவலின் பிழைதிருத்தத்துக்கு முந்தைய தலைப்பு  ‘இருள்வரும் திசை’ என்பதைக் கேள்விப்பட்டேன்

புதுக்கவிதையை அனுப்பும் இளம்கவிஞர்கள் அதில் ஆழ்பிரதியை நிகழ்த்தும் பொறுப்பை இதழின் அச்சுக்கோர்ப்பாளருக்கே விட்டுவிடுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். தமிழ்க்கவிதையின் இருண்மை மற்றும் பொருட்செறிவுக்குத் தட்டச்சு முக்கியமான காரணம் என்பார் இலக்கியவரலாற்றாசிரியர்.

நிறக்கும் பண்ணில் சீர்
விழியும் இந்நேரம்
அறியாத பொற்களம்
என்னை மூத்திரம்
நனைத்தாய் நீ!

என்ற புகழ்பெற்ற பின்நவீன- ஆபாசக்கவிதை பலநூறு நுண்வாசிப்புகளுக்கு ஆளானது என்பதை நாடறியும் .உண்மையில்  அது அச்சுப்பிழையால் உருவானது. அக்கவிதைமூலம் அழியாப்புகழ்பெற்ற இளங்கவிஞர்  பேருருவன் உண்மையில் எழுதிய எளிய காதல் கவிதை கீழ்க்கண்டது.
திறக்கும் கண்ணில் நீர்
வழியும் இந்நேரம்
அழியாத சொற்களால்
என்னை மாத்திரம்
நினைத்தாய் நீ
காவ்யா பிரசுரம் அச்சுப்பிழைகளில் தமிழில் சாதனை புரிந்தது. முதல்பதிப்பில் வந்த அச்சுப்பிழைகளை இரா.நடராஜன் என்பவர் திருத்திக்கொடுத்தபோது அதை இன்னொரு புத்தகமாகத் தனியாக வெளியிட்டது காவ்யா என்று ஒரு அவதூறு சொல்லப்படுகிறது. இரண்டுமே இப்போது அச்சில் கிடைக்கின்றனவாம். மூன்றாம் பிழைதிருத்தம் வழியாக மேலுமொரு நூலை உருவாக்க இரா.நடராஜன் முனையவில்லை

ஆனால் பாளையங்கோட்டை சரோஜினி- பாக்கியமுத்து தம்பதியினர் [பெரும்பாலும் பாக்கிமுத்து என்றே இவர் அச்சாகிவந்தார்] நடத்திய ‘நண்பர் வட்டம்’ சிற்றிதழ் அச்சுப்பிழையை உலகத்தரத்துக்குக் கொண்டுசென்றது. ‘சுப்ர பாரதி மணியன், இவர் தொலைதொடர்புத்துறையில் பணிபுரிந்து வழிகிறார்’ போன்ற சொற்றொடர்கள் இலக்கிய வரலாற்றில் இடம்பெறுபவை. ‘காலணியாதிக்க காலம்’ என்ற ஒன்றை இந்தியவரலாற்றில் கண்டுபிடித்து தேசிய வரலாற்றுக்கும் சேவையாற்றியிருக்கிறது இவ்விதழ். ‘நவீன இலக்கிய கலாகட்டம்’ என்ற சொல்லாட்சியும் புகழ்பெற்றது.

‘ஜெயமோகன் ஒரு மாலையாளி’ என்று எண்பதுகளில் மாலைசூடா இளைஞனாகிய இவ்வாசிரியர் குறிப்பிடப்பட்டதுண்டு. பின்னர் விஷ்ணுபுரம் வந்தபோது அதில் விஷ்ணு முரண்டு படுக்கிறார் என்று அச்சாகியது. அவர் அப்படிச்செய்யாமல் சும்மாதான் படுத்திருந்தார் என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும். பின் தொடரும் நிழலின் குறள் என்ற பெருநூலை குறளின் உரையாக எண்ணி சிற்றிதழ் ஒன்றில் மதிப்புரை வந்துள்ளது

சிற்றிதழ்க் கவிதைகளின் விபரீதமொழி அச்சகங்களை கலங்கச்செய்திருக்கிறது. படிமம் என்ற சொல்லை சரியாக அடிக்கும் அச்சகசாலையே தமிழ்நாட்டில் இல்லை . படிவம் என்று திருத்துவது சரி. பழமம் கூட பரவாயில்லை. புதிய ஒரு கலைச்சொல்லுக்கான வாய்ப்பு  என்று ஆறுதல் அடையலாம். மடிமம் என்னும் சொல்லை பெண்களின் இடையழகை குறிக்க எடுத்தாளலாம். ஆனால் பெரும்பாலும் ‘கடினம்’ என்றுதான் அது அச்சாகும்.  ‘படிமவியல்’ என்ற சொல் ‘பதுமையிவள்’ என்று கவிநயத்துடன் திருத்தியமைக்கப்பட்டதுண்டு. ஆனால் மொத்தச் சொற்றொடரில் அதன்மூலம் சற்றே சிருங்காரச்சுவை மிக நேரிட்டது .[பதுமையிவளை தழுவி உருவாக்கப்பட்ட படைப்புகள்]

சிற்றிதழ்களின் புகழ்பெற்ற சொற்களான பிரக்ஞை, உள்ளொளி போன்ற சொற்கள் அச்சக வட்டாரங்களில் கெட்டவார்த்தைகளாகப் புழங்கியிருக்கின்றன. ”ஒரு மாதிரி உள்ளோளித்தனம் காட்டப்பிடாது கேட்டேளா? நான் இதுமாதிரி பலதும் கண்டவன்…எனக்க கிட்ட வேண்டாம் , சொல்லிப்போட்டேன்” என்று கொல்லிப்பாவை அச்சகத்தில்  முனைவர் எம்.வேதசகாயகுமார் வசைபாடப்பட்டிருக்கிறார். ‘தெரிதா’ என்ற சொல்லை ‘தெரியுதா’ என்றுதான் அச்சுகோர்ப்பேன் என்று பாளையங்கோட்டையில் ஒரு கம்பாசிட்டர் அடம்பிடித்த காரணத்தால்தான் எம்.டி.முத்துக்குமாரசாமி சென்னைக்கு இடம்பெயர்ந்தார் என்று சொல்கிறார்கள்.

சிற்றிதழ்களில் எழுத்தாளர்களின் பெயர்களைத் தனியாக இருமுறை மெய்ப்பு பார்க்கவேண்டும். க.நா.சுப்ரமணியம் கானா பாடகராக ஆகக்கூடும். செல்லப்பா சிசுவாவதும் சாதாரணமென்றாலும் பிரமிளா என்ற பெயரில் தன் கவிதை வெளிவாவதை பிரமிள் விரும்புவதில்லை. தேவதச்சன் எப்போதுமே தேவநேசனாக மாற்றப்பட்டுவிடும். வேதசகாயகுமார் தேவசகாயகுமாராக மாற்றபப்டாவிட்டால் வேறசகாயகுமாராக  எழுத்து வேறாக அச்சாகியிருக்கும்.

க.பஞ்சபகேசன் என்ற பழம்பெரும் எழுத்தாளர் அவர் பெயர் பஞ்சாப் கேசன் என்றும், சரித்திரபோதமுள்ள பிழை திருத்துநர் கண்ணில் பட்டால் பஞ்சாப் கேசரி என்றும் அச்சாவதை சொல்லியிருக்கிறார். மதுரையில் ‘சொல் புதிது’ அச்சான நாட்களில் எம்.யுவன் பெயரை சம்புவன் என்று மாற்ற ஒரு பிழைதிருத்துநர் விசேஷ கவனம் எடுத்துக்கொண்டார். ஒருமுறை அட்டையே சொல் புதிதா என்று ஐயமாக அச்சாகவிருந்தது.

சொல்புதிது தமிழில் அச்சுப்பிழைகளைப் படைப்பூக்கம் கொண்ட அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோன இதழ். எழுத்தாளர்களையே அது தமிழைப்பற்றி ஆழமாகச் சிந்திக்கச் செய்தது. பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’ என்ற நாவலுக்கு நான் எழுதிய மதிப்புரைக்குறிப்பினை அன்றைய ஆசிரியராக இருந்த சரவணன்78 ‘கடமைதவறி’ என்று தெளிவாகத் திருத்தியிருந்தார். அவர் முறைப்படி தமிழ் கற்றவர் என்பதே காரணம். நான் பெருமாள்முருகன் அடுத்த நாவலையும் எழுதிவிட்டாரா என்று வாசிக்கையில் என்னுடைய மொழிநடையைக் கண்டு நான் எழுத்துவெறியில் தூக்கத்திலும் நூல் மதிப்புரை எழுதுகிறேனா என்று நானே வியந்துகொண்டேன்.

ரோஜர் பென்ரோஸின் பெயர் ‘ரோஜா என் ரோஸ்’ என்று மாறி அச்சானதைக் கடைசி நிமிடத்தில் வயிறு பதைக்க மாற்றியமைத்தோம். ஆனால் மென்மை என்பது பெண்மை என்று மாறிவந்து நித்ய சைதன்ய யதியின் கட்டுரையை மேலும் நுட்பமாக ஆக்கியதை சரஸ்வதியின் திருவிளையாடல் என்றே எடுத்துக்கொண்டோம். சைதன்யா யதி சைதன்யா யாதி சைதன்யா வாதி சைதன்யதி என்றெல்லாம் இடத்துக்கு ஒன்றாக அவர் பெயர் அச்சாகும். அவற்றை ஒரே குருவின் பல அவதாரங்களாக எடுத்துக்கொண்டோம். ஆட்சி ஆச்சியாக மாறியிருக்கிறது. அதேபோல ஆட்சியர் குரவை என்ற புதிய கலை தோன்றுவது மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. கனவு களவு ஆக மாறியதை அப்படி விடமுடியவில்லை. இலட்சியக்களவு என்ற புதுக்கருத்தியல் உருவானால் நாடுதாங்குமா என்ன?

‘சதங்கை’யும் அச்சுப்பிழைகளில் சிறப்பாக ஈடுபட்டது.  ஒருமுறை சு. சமுத்திரத்தின் பெயரில் நெடில் மிகுந்துவிட்டதென அவரே கண்டுபிடித்து விடுதிஅறை அதிர வெடித்துச் சிரித்தார். சென்னையிலிருந்து பொன் விஜயன் நடத்திய ‘புதிய நம்பிக்கை’ இதழில் அச்சுப்பிழைகளுடன் என்னுடைய கதைகள் அச்சாகியிருந்தன. நல்லவேளையாக சாதாரணமாக பேசும்போது அவர் ‘அச்சுக்குப் போற நேரத்திலதான் சார் தலைப்பே தப்பா இருக்கது கண்ணுல பட்டுது. மாடர்ன் மோட்சத்திலே ர் விட்டுப்போயி அச்சாகியிருக்கு. உங்க மேனுஸ்கிருப்டிலேகூட நீங்க ர் இல்லாமல்தான் எழுதியிருக்கீங்க.” ”சார்!”என்று கதறினேன். ”ஓடிப்போயி மாத்துங்க….அது மாடன்மோட்சமேதான். ர் கெடையாது’

டார்த்தீனியம் கதையை பார்த்தீனியம் என்று திருத்தக்கூடாது என ஒரு ஃபத்வா விடுக்கும் எண்ணமே இருந்தது எனக்கு. ஒரு சிற்றிதழில் ‘இரப்பர்’ என்று என் நாவலை அவர்களே திருத்தி விமரிசனம் செய்திருந்தார்கள். இரப்பர்களைப்பற்றி ஏழாம் உலகம் என்று வேறு நாவல் எழுதியிருக்கிறேனே என்று கவலையுடன் கேட்டேன். ‘பரவால்ல சார்…’ என்றார்கள்.

இப்போதெல்லாம் நான் அச்சுப்பிழைகளுக்குப் பழகிவிட்டேன். வரலாறு தமிழுக்கு அளித்த ஒரு தனித்தன்மையாக ஏன் நாம் அச்சுப்பிழைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது? ஒரு கட்டுரைக்கு அச்சுப்பிழை திருத்தும் நேரத்தில் நாம் இன்னொரு கட்டுரையை எழுதிவிடமுடிகிறதே? ஆகவே இந்தக்கட்டுரைகளில் உள்ள அச்சுப்பிழைகளைப் படைப்பின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கிறேன்.

[மறுப்பிரசுரம் முதல்பிரசுரம் 2010]

முந்தைய கட்டுரைமகாபாரத கதைகள் -தொகுப்பு (முந்தையவை)
அடுத்த கட்டுரைவியாசனின் பாதங்களில்…