கடைத்தெருவை கதையாக்குதல்…

A.Madhavan

 

1962 நான் பிறந்த அதேவருடம் மலையாள எழுத்தாளர் எஸ்.கெ.பொற்றேகாட் ஒருநாவல் எழுதிவெளியிட்டார். ’ஒரு தெருவின் கதை’. கோழிக்கோடு நகரத்தின் முக்கியமான கடைவீதியான மிட்டாய்த்தெருவின் கதை அது. உண்மையில் தெருவின் கதை அல்ல, தெருவாழ் மக்களின் கதை. தெருவில் வாழும் பிச்சைக்காரர்கள், தினக்கூலிகள், அனாதைப்பையன்கள், வேசிகள் ஆகியோரின் கதை. கூடவே கடைவணிகர்களின் கதை. அவர்கள் எழுச்சிகளின் வீழ்ச்சிகளின் சரித்திரம். கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்ற அந்நாவல் இன்றும் மலையாள இலக்கியத்தில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்பட்டு வருகிறது.

கேரளநிலத்தின் இரு தெருக்கள்தான் இலக்கியத்தில் அழியா இடம்பெற்றவை. மிட்டாய்த்தெருவும் சாலைத்தெருவும்.மிட்டாய்த்தெருவின் வரலாறும் நீளமானதே. கோழிக்கோடு அருகே உள்ள போப்பூர் சேரன்செங்குட்டுவன் காலம் முதலே முக்கியமான துறைமுகம். அது மணலால் மூடப்பட்டபோது கோழிக்கோடு ஒரு துறைமுகப்பட்டணமாக பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் உருவம் கொண்டது.

சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சீனி மிட்டாய்கள் அக்காலத்தில் கேரளத்தில் மிக விரும்பப்பட்டிருந்தன. அரேபியாவில் இருந்து வந்த பேரீச்சைப்பழங்களும். அவற்றை விற்கும் இடமாக ஆரம்பித்த மிட்டாய்த்தெரு போப்பூர் செல்வாக்கிழந்தபோது பலமடங்கு வளர்ந்து இன்று கோழிக்கோட்டின் முக்கியமான வணிகமையமாக உள்ளது. இவ்விரு தெருக்களைத்தவிர கேரளநிலத்தின் தெருக்கள் ஏதும் இலக்கியப்பதிவுபெறவில்லை. தமிழ்நாட்டின் எந்த தெருவும் இவ்வாரு இலக்கியக்களமாக ஆனதில்லை.

கோழிக்கோடு மிட்டாய்த்தெரு

ஒரு தெரு என்பது என்ன? அது ஒரு நதி. மதுரைக்காஞ்சியில் மதுரையின் மாடத்தெருக்கள் மிகச்சரியாகவே நதியுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றன. அது ஓடிக்கொண்டே இருக்கிறது. எங்கெங்கெல்லாம் இருந்தோ துளித்துளியாக ஊறி வரும் மக்கள் ஒன்றாகச்சேர்ந்து தெருவழியாக பிரவகிக்கிறார்கள். அவர்களுக்கிடையேயான உறவு கூட ஒரு ஓட்டத்தில் மிதக்கும் இரு பொருட்களுக்கு இடையேயான தொட்டு தொட்டு விலகும் உறவுதான்.

ஆனால் அங்கேயே தங்கிவிடுபவர்களும் உண்டு. தெருவின்மக்களை நதியின் வண்டல்கள் எனலாம். அவர்கள் ஓட்டத்தில் செல்ல வலுவில்லாமல், சென்று சேரும் இடமில்லாமல் அந்த நதியின் அடியிலும் ஓரத்திலும் படிந்துவிட்டவர்கள். ஆ.மாதவனின் கதைகளில் இந்த தெருவின் மக்களை நாம் கூர்ந்து கவனித்தால் அனைவருமே ‘ஓட்டம் இழந்த’ மானுடர்கள் என்பதைக் காணலாம். அவர்களுக்கு வென்றெடுக்க ஏதும் இல்லை. கனவுகளே இல்லை. அவர்கள் தற்செயலாக ஒரு வாழ்க்கை ஒழுங்குக்குள் வந்து படிந்துவிடுகிறார்கள். பிறகு அதையே செய்கிறார்கள். சாதாரணமாகச் செத்துப்போகிறார்கள்.

ஜெயகாந்தன்

இந்த தெருவை உருவாக்கும் வணிகர்களை நதியின் கரைகள் எனலாம். உறுதியான வன்கரைகள் உண்டு. அவை எப்போதும் இருப்பவை. வண்டலாகப் படிந்து கரைகளானவை உண்டு. நதி என்றால் கரையும் சேர்த்துத்தான், ஆனாலும் நதியின் பகுதிகளல்ல கரைகள். அவை நதியை தீர்மானிக்கின்றன. நதியை வகுத்து கட்டுப்படுத்தி கொண்டுசெல்கின்றன. நதியை நுகர்ந்து வளர்கின்றன. நதியின் சாட்சிகளாக நின்றுகொண்டிருக்கின்றன. ஆம், அவற்றின் முக்கியமான உணவு என்பதுந் அதியின் வண்டலே

ஆ.மாதவனின் கதைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் அவை ஒரு கரையின் கோணத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. நதியையே தீர்மானிக்கும் பெருங்கரை அல்ல. கரையின் ஒரு சிறுபகுதிமட்டுமே .ஆகவே பதற்றமில்லாத, கோபதாபங்கள் இல்லாத வெற்று சாட்சியாக நதியைப்பார்க்கிறது இந்தக் கரை. மாதவனின் கடைத்தெருக்கதைகள் அனைத்துமே ஒரு விசித்திரமான இரட்டைநிலையில் நின்று எழுதப்பட்டுள்ளன. எழுதுபவர் தன்னை தன் கதைமாந்தரின் உலகுக்குள்வைத்தே காண்கிறார். பிச்சைக்காரர்கள் பொறுக்கிகள் வேசிகள் தரகர்கள் சிறுவணிகர்கள் என்ற திரளில் ஒரு பகுதியாகவே அவரது இடம் அவரால் அறியப்படுகிறது. ஆனால் அவர் அவர்களில் ஒருவருமல்ல. ஆகவெதான் அவர்களை அவரால் பார்க்க முடிகிறது.

ஜி.நாகராஜன்

தமிழில் அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதிய படைப்பாளிகள் என ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், வரிசையில் ஐயமின்றி ஆ.மாதவனும் வருவார். ஜெயகாந்தனின் உலகத்தைவிட, ஜி.நாகராஜனின் உலகத்தை விட , மௌனம் மிக்கது ஆ.மாதவனின் புனைவுலகம். அவர்கள் இருவரின் படைப்புக்களைவிட கலைநேர்த்தி கூடியது. ஆனால் தமிழில் அவர்கள் அடைந்த இலக்கிய இடம் ஆ.மாதவனுக்கு பொதுவாசகர்களால் அளிக்கப்படவில்லை.

அது போகட்டும். தமிழ்ச்சூழலில் உள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் எவரையுமே ஆ.மாதவன் அளவுக்கு அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதியவர் என்று சொல்லிவிடமுடியாது. ஓரளவு அவருடன் ஒப்பிட்டு விவாதிக்கத்தக்கவர் பூமணி மட்டுமே. ஆனால் நம்முடைய முற்போக்கு இலக்கியத்தளத்தில் ஆ.மாதவன் இன்று வரை கவனிக்கப்படவில்லை.

இந்த புறக்கணிப்புக்கான காரணம் என்ன என்பதை ஆ.மாதவனின் படைப்புகளிலேயே காணவேண்டும். ஏற்கனவே சொன்ன இரட்டைநிலையைத்தான் காரணமாகச் சொல்வேன். வழக்கமாக நம்முடைய இலக்கிய எழுத்துக்கள் எழுதப்படும் மக்களிடமிருந்து மிக விலகி நின்று உருவாக்கப்படுபவை. அந்த மக்களை ஆராயவும் மதிப்பிடவும்கூடிய பிரக்ஞை கைகூடியவை. அந்த மக்களின் வாழ்க்கையை குறியீடாகக் கொண்டு ஒட்டுமொத்த வாழ்க்கையைப்பற்றிப் பேசும் தன்மை கொண்டவை.அதற்கு தோதாக அந்த வாழ்க்கையை கத்தரித்துச் சித்தரித்துக்கொண்டவை.

 

எஸ்.கெ..பொற்றேகாட்
எஸ்.கெ..பொற்றேகாட்

உதாரணம், ஜெயகாந்தன், ஜி நாகராஜன் இருவருமே. இருவகைகளில். ஜெயகாந்தன் அடித்தள மக்களை மார்க்ஸிய-மனிதாபிமான ஆய்வுக்கோணத்தில் ஆராய்பவர். அந்த மக்களின் வாழ்க்கை அவருக்கு அவரது கருத்துக்களுக்கான விளைநிலமும் உரைகல்லுமேயாகும். அக்கருத்துக்களுக்காக உருமாற்றம் செய்யப்பட்ட, சமையல் செய்யப்பட்ட, வாழ்க்கையையே அவரிடம் நாம் காண்கிறோம். அவரது கதைகளின் வழியாக நாம் அடித்தள மக்களின் வாழ்க்கைக்குள் செல்வதில்லை. அந்த வாழ்க்கையை ஒரு உதாரணமாக வைத்துக்கொண்டு ஜெயகாந்தனின் கருத்துக்களை விவாதிக்கவே முயல்கிறோம்.

ஜி.நாகராஜன் அடித்தள மக்களை முற்றிலும் வேறுநோக்கில் ஆராயும் அறிவுஜீவி. ஜெயகாந்தன் அரசியல் கற்பனாவாத எழுத்தாளர். நாகராஜன் நவீனத்துவர். ஜெயகாந்தன் நேரடி யதார்த்தவாதத்தை முன்வைத்தவர். நாகராஜன் நவீனத்துவத்தின் யதார்த்தவாதத்தை. இருவருக்குமே அடித்தள மக்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக நோக்கும் அக்கறை இல்லை. தங்கள் கோணத்துக்குள் சிக்க நேரும் அடித்தளமக்களின் வாழ்க்கையைப்பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.

உதாரணமாக, ஜி.நாகராஜன் அடித்தள மக்களின் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அம்சமாகிய பசியைப்பற்றி பேசுவதேயில்லை. சேரிகளின் குழந்தைகளை, நோயுற்ற முதியவர்களை ஜி.நாகராஜன் பார்ப்பதேயில்லை. அவர் பார்ப்பது வேசிகளை மட்டுமே. அதுவும் இளம் வேசிகளை. கைவிடப்பட்டு நோயில் புழுத்த ஒரு வேசியை அவரது புனைவுலகில் நாம் காணமுடியாது. குறத்தி முடுக்கின் தங்கமும், நாளைமற்றுமொரு நாளே நாவலின் எல்லாம் அழகிகளும்கூட

ஏனென்றால் ஜி.நாகராஜனின் பிரச்சினை ஒழுக்கம் சார்ந்தது என்பதே. பாரம்பரியமான பாலியல் ஒழுக்க நோக்கை தாண்டி ஒரு நவீனத்துவ ஒழுக்கவியலை தேடிய கலைஞன் அவர். [வேறு ஒரு கோணத்தில் சுந்தர ராமசாமியின் பிரச்சினையும் அதுவே என்பதனால் ஒரு புள்ளியை இரு பக்கத்தில் இருந்து நெருங்கிய கலைஞர்களாக, ஒருவரை ஒருவர் நிரப்புபவர்களாக அவர்கள் இருந்தார்கள். தனிவாழ்க்கையிலும் அந்த நட்பும்புரிதலும் நீடித்தது] நாகராஜனை அலைக்கழித்த அந்த பிரச்சினையை சீண்டும் கதைமாந்தர்களை, வாழ்க்கைச்சூழலை மட்டுமே அவரது புனைவுலகம் கண்டுகொண்டது.

ஆ.மாதவனின் உலகம் அப்படிப்பட்டதல்ல. அவர் அந்த மக்களில் ஒருவராக தன்னை உணர்பவர். ஆகவே அவர் காட்டும் அடித்தள மக்களின் உலகம் அறிவார்ந்த மறு ஆக்கம் செய்யப்படாதது. நேரடியானது. குவிக்கப்படாதது, தன்னிச்சையாக விரிந்து பரந்துசெல்வது. ‘ஆழ்ந்தபொருள்’ தேடும் இலக்கியவாதிகளால் சிலசமயம் வெறும் சித்தரிப்பாக மட்டும் கொள்ளப்பட்டது. அவ்வாழ்க்கையின் இயல்பாகவெ உள்ளுறைந்த ஆழ்ந்த பொருள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

ஆரியசாலை, திருவனந்தபுரம்
ஆரியசாலை, திருவனந்தபுரம்

காமமும்,வன்முறையும், பசியும், அவநம்பிக்கையும், வெறுமையும், ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளும் தீவிரமான உறவுகளும் கொண்ட ஆ.மாதவனின் புனைவுலகமே அடித்தளமக்களின் வாழ்க்கையின் பெரும்பாலும் முழுமையான சித்திரத்தை அளிக்கக் கூடியது எனலாம். அதன்பொருட்டே அவர் இயல்புவாத [நாச்சுரலிசம்] அழகியலை மேற்கொண்டார். மேற்கொண்டது என்று சொல்லமுடியாது. அந்த தேவையின்பொருட்டு இயல்பாக அது அமைந்தது.

தமிழிலக்கியத்தில் இயல்புவாதம் என்றுமே பெரிதாக கவனிக்கப்பட்டதில்லை. அதை வாசிப்பதற்கான மனப்பயிற்சி நம் வாசகர்களிடம் இல்லை. பாரம்பரியமாக நாம் அறிந்தது கற்பனாவாதமும் புராண அழகியலுமே. நவீன இலக்கியம் வழியாக யதார்த்தவாதம் வந்து அதற்கு மெல்லமெல்ல பழகினோம். ஐமப்துகளிலேயே தமிழில் இயல்புவாதம் அறிமுகமாகிவிட்டது. ஆர்.ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் தமிழின் முதல் இயல்புவாத ஆக்கம். இயல்புவாதத்துக்காக வாதிட்ட க.நாசு அதை வலுவாக முன்னிறுத்தினார். அதன்பின் நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ முக்கியமான இயல்புவாத ஆக்கம்.

இவை எவையுமே பரவலான வாசிப்பைப் பெறவில்லை. பிற அழகியல்கள் மெல்லமெல்ல வணிக இலக்கியத்துக்குள் இடம்பெற்றபோதுகூட இயல்புவாதம் அங்கே செல்ல முடியவில்லை. தேர்ந்த இலக்கிய வாசகர்களுக்குக் கூட இயல்புவாதம் கவற்சியாக இருக்கவில்லை. ஆ.மாதவனும், பூமணியும் எல்லாம் இலக்கியகவனம்பெறாது போனது இதனாலேயே.

இயல்புவாதம் சாதாரண வாசகனுக்குரியதல்ல. ஏனென்றால் அது வாழ்க்கையை நாடகப்படுத்துவதில்லை. ஆசிரியர் நோக்கில் தொகுத்துக்காட்டுவதில்லை. ‘உள்ளது உள்ளபடி’ என்ற அதன் புனைவுப்பாவனை உத்வேகமான கதையோட்டத்தை உருவாக்கவும் தடையக அமையக்கூடியது. ஆகவே வாசகன் பற்றிக்கொண்டு முன்செல்ல அதில் மையச்சரடுகள் இருப்பதில்லை. அவன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள நாயகர்களும் இருப்பதில்லை. அப்பட்டமான யதார்த்தம்போலவே மையமற்ற குறிக்கோளற்ற ஒன்றாக அது விரிந்து கிடக்கிறது. வாழ்க்கையை உணர்ந்த, அதை இலக்கியத்துடன் ஒப்பிட்டுக்கொண்டு வாசிக்கும் பொறுமைகொண்ட நல்ல வாசகன் மட்டுமே இயல்புவாதத்தை ரசிக்க முடியும்

தமிழில் பின்னர் இயல்புவாதத்துக்கு ஒரு இரண்டாம் கட்டம் நிகழ்ந்தது. தலித் இலக்கியத்துக்கான அறைகூவல் இங்கே உருவானது. பின்நவீனத்துவ தலித்திலக்கியம் தேவை என்றார்கள் விமர்சகர்கள். ஆனால் தலித்துக்களும் அடித்தளவாழ்க்கையில் இருந்து வந்த பிற எழுத்தாளர்களும் எழுத வந்தபோது அவர்கள் தன்னிச்சையாக இயல்புவாதத்தையே நாடினர். பாமா, இமயம், சோ.தருமன் போன்றவர்களால் இயல்புவாதம் வலுவாக முன்வைக்கப்பட்டபோது அவை பேசிய தலித்வாழ்க்கைமேல் இருந்த ஆர்வம் காரணமாக அது கவனிக்கப்பட்டது.

இந்த அலையில்தான் எம்.கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன் போன்ற முக்கியமான இயல்புவாத படைப்பாளிகள் உருவாகி வந்தனர். இன்றைய தமிழின் முக்கியமான அழகியல்போக்கு என்பது இயல்புவாதமே. சு.வேணுகோபாலை அதன் கடைசிப்பெரும்படைப்பாளி என்று சொல்லலாம். வெண்ணிலை என்ற சிறுகதைத்தொகுதியையும் மணல்கடிகை [எம்கோபாலகிருஷ்ணன்] அஞ்சலை [கண்மணி குணசேகரன்] என்ற நாவல்களையும் தமிழின் சமகால இயல்புவாதத்தின் சாதனைகள் என்பேன்.

மறுபக்கம் முற்போக்குவாதம். முற்போக்குவாதம் பொருட்படுத்திய ஆக்கங்களில் அவர்களின் கட்சிசார்ந்து மேலே இருந்து அடித்தள மக்களை பார்த்த ஆக்கங்கள் முதல்வகை. அடித்தள மக்களே எழுதிய நேரடியான எளிய ஆக்கங்கள் இரண்டாம் வகை. முதல்வகைக்கு டி.செல்வராஜ், கெ.முத்தையா வகைகளைச் சொல்லலாம். இரண்டாம் வகைக்கு தேனி சீருடையான் போன்றவர்களின் எழுத்தைச் சுட்டிக்காட்டலாம். அடித்தள மக்களில் ஒருவராக முழுமையாக இருந்து எழுதப்பட்டிருந்தால் ஆ.மாதவனின் எழுத்துக்களுக்கு முற்போக்கு கௌரவம் கிடைத்திருக்கும். ஆனால் அங்கே அவரது விலகல்,சாட்சியின் கண்கள் தடையாக அமைகின்றன.

ஆரியசாலை திருவனந்தபுரம் பழைய சித்திரம்
ஆரியசாலை திருவனந்தபுரம் பழைய சித்திரம்

ஆ.மாதவனின் ஆக்கங்கள் அடித்தள மக்களின் குமுறல்களையும் கொந்தளிப்புகளையும் சொல்லக்கூடியவை அல்ல. அவற்றில் முற்போக்கினர் எதிர்பார்க்கும் ‘அன; அல்லது ‘கண்ணீர்’ இல்லை. அவை பற்றற்ற சாட்சியால் சொல்லப்பட்டவை போலிருக்கின்றன. உக்கிரமான பசியின் சித்தரிப்புகூட ஒரு அமைதியுடன் உணர்வு வரட்சியுடன் நிதானமாகச் சொல்லப்படுகிறது.

இவ்வாறாக இருதரப்புக்கும் எட்டாத தனி உலகில் ஆ.மாதவனின் இயக்கம் நிகழ்தது. மிகக்குறைவாகவே தமிழில் அவர் வாசிக்கப்பட்டிருக்கிறார். அதே சமயம் தமிழில் அவரது கலையின் முக்கியத்துவத்தை முக்கியமான விமர்சகர்கள் எப்போதும் குறிப்பிட்டபடியே இருந்திருக்கிறார்கள். சுந்தர ராமசாமி, வேதசகாயகுமார் இருவருமே அவரை தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியராக சொல்லிவந்திருக்கிறார்கள்.

நவீனத்துவமும் முற்போக்கும் தங்கள் கொடிகளை தாழ்த்திவிட்ட இன்று அவற்றின் சமகாலத்தன்மை உருவாக்கிய தடைகள் இல்லாமல் தமிழ் வாசகன் ஆ.மாதவனின் உலகுக்குள் செல்ல முடியும். அது அடித்தள மக்களின் வாழ்க்கையையும் அதன் பண்பாட்டுச் சிக்கல்களையும் அறிவதற்கான முக்கியமான பயணமாக அமையும்.

அப்படி இன்றைய களத்தில் வைத்து ஆ.மாதவனை வாசிக்கையில் அவரது அந்த பிளவுண்ட தன்மை, அல்லது இரட்டைத்தன்மை மிக முக்கியமான ஒரு கலைச்சிறப்பு என்பதைக் காணலாம். நடுத்தர வற்கமும் அடித்தள வர்க்கமும் விளிம்புகள் உரசிக்கொள்ளும் ஒரு ரகசியமான புள்ளியில் நிகழ்கின்றது ஆ.மாதவனின் புனைவுலகம். அடித்தளமக்களை கூர்ந்து அவதானித்து மானசீகமாக அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து, அடிக்கடி தான் நடுத்தர வர்க்கத்தவன் அல்லவா என்ற தன்னுணர்வு கொண்டு விலகி அலைபாயும் ஒரு மனதால் உருவாக்கப்பட்ட புனைவுலகம் இது.

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 10, 2010

=================================================

ஆ.மாதவன் விக்கி

ஆ மாதவன் அழியாச்சுடர்கள்

தமிழ்நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு

ஆ.மாதவனை வகைப்படுத்துவது எப்படி?


ஆ.மாதவனின் கதைகள்

கிருஷ்ணப்பருந்து பற்றி

ஆ.மாதவன் பற்றி பாவண்ணன்

முந்தைய கட்டுரைகட்டண உரை -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51