கோதையின் மடியில் 1

வட இந்தியாவுக்குப் பயணம் செல்லும்போது வழியில் இருபெரும் பாலங்கள் வரும். ஒன்று கோதாவரி இன்னொன்று கிருஷ்ணா. இவ்வளவுபெரிய நதிகளா என்று மனம்பிரமித்து உறைந்து நிற்க தண்டவாளத்தின் கர்ஜனையாக அந்தக்கணங்கள் நினைவில் நீடிக்கும். தமிழகத்தில் நமக்கு பெரிய நதிகள் இல்லை. இருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் நீர் ஓடுவதில்லை. கொள்ளிடம்தான் நாம் காணும் அதிகபட்ச அகலம்கொண்ட நதி. அது ஒரு பாலைவனக்கீற்று.கேரளத்தில் பெரியாறு ஒன்றுதான் பெரிது. வேம்பநாட்டுக்காயலின் மேல் ரயில்பாலம்செல்லும்போது நீர்வெளியை காணமுடியும். ஆனாலும் அவையெதுவும் இந்த இருபெரும் நதிகள் அளிக்கும் பிரமிப்பை அளிப்பதில்லை.

‘காமிரா’
அரங்கசாமி

இத்தனைமுறை கடந்துசென்றிருந்தபோதிலும்கூட சமீபகாலம்வரை நான் அந்நதிகளில் கால்வைத்ததில்லை. நாஞ்சில்நாடன் இறங்கி குளித்திருக்கிறார். ஆகவே அவரது கதைமாந்தர்களும் கால்சட்டையை பதனமாகக் கழட்டி மணல்மேல் வைத்துவிட்டு அதில் அரைக்கவனத்தை எஞ்சச்செய்துகொண்டு நீராடியிருக்கிறார்கள். இந்த நதிகளை காணவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. நதிகளை கண்களால் மட்டுமல்ல நீராடித்திளைத்து உடலாலும் கூடத்தான் காணவேண்டும். சென்ற வட இந்தியப் பயணத்தின்போது நண்பர்களுடன் கிருஷ்ணாவில் இறங்கி குளித்தேன். கோதாவரி மிச்சமிருந்தது.

’கடைக்குட்டி’ தனசேகர்

ராமச்சந்திர ஷர்மா ஊட்டி கவிதைக்கூடலுக்கு வந்திருந்தபோது அவரது சொந்த ஊர் கோதாவரிக்கரையில் இருப்பதாகவும் ஒரு நல்ல நதிப்பயணம் ஏற்பாடுசெய்ய தன்னால் முடியும் என்றும் சொன்னார். கிருஷ்ணனும் அரங்கசாமியும் உற்சாகமாக ஆகிவிட்டார்கள். சரசரவென ஏற்பாடுகள் நடந்தன. இடமும் நேரமும் உறுதிசெய்யப்படது. நான் எதையுமே அறியவில்லை. வேறு பயணங்கள், வேறு கவனங்கள்.

‘ஆபீசர்’ ரவி

27 அக்டோபரில் நான் நாகர்கோயில் திருக்குறள் எக்ஸ்பிரஸில் ஏறியபோது எங்கே செல்கிறோம் என்பது தெரிந்திருக்கவில்லை, கோதாவரிக்கு என்று மட்டுமே மனதில் இருந்தது. திருக்குறள் எக்ஸ்பிரஸின் குளிர்சாதன முதல் வகுப்பில் என்னுடன் இருந்த ஒரே ஒரு வயதானவர் ’நீங்க ?’ என்றார். நான் ‘பிஸினஸ்’ என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். அவர் மேலும் யோசித்து ‘எங்கியோ பாத்திருக்கேனே’ என்றார்.’ரயிலிலே அடிக்கடி போவேன்’ என்று சொல்லி கண்மூடிக்கொண்டேன். கோதாவரி நினைவை அகற்ற விரும்பவில்லை.

‘பச்சப்புள்ளை’ கே.பி.வினோத்

செண்டிரல் ரயில்நிலையம் அருகே தங்கவேண்உமென்று செண்டிரல் டவர் என்ற விடுதியில் அறை போட்டிருந்தேன். காலையில் ஒன்பதரை மணிக்குச் சென்று சேர்ந்தேன். என்னைப் பார்க்க ஓர் இயக்குநரும் தயாரிப்பாளரும் வந்தனர். அவர்கள் சென்றபின் நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் கிருஷ்ணன், விஜயராகவன், க.மோகனரங்கன், கார்த்தி ஆகியோர் ஈரோட்டில் இருந்து வந்து சேர்ந்தார்கள். அதன்பின் வழக்கமான இலக்கிய உரையாடல் கூடவே ஒருவரை ஒருவர் கிண்டல்செய்வது. பொதுவாக மோகனரங்கன் இருக்கும் அவைகளில் அவரை கிண்டல்செய்வது நவீனத்தமிழிலக்கிய மரபு.

’சங்கீத சண்டைமாருதம் ’ ராமச்சந்திர ஷர்மா

மாலை தனசேகர் வந்தார். மழை கொட்ட ஆரம்பித்தது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். கீழே இரவுணவுக்காகச் சென்றபோது நகரமே மழையால் மூடப்பட்டிருந்தது. மக்கள் ஓட்டல்விளிம்புகளில் ஒண்டியிருக்க ஒண்டியிருப்பதில் முன்னனுபவம் மிக்க தெருநாய் மிகச்சிறந்த இடத்தில் ஒண்டிக்கொண்டிருந்ததைக் கண்டேன். சென்னை புவியியல் ரீதியாக ஆந்திரத்தின் பகுதிதான். ஆகவே கோதாவரியையும் மழையினூடாகவே பார்க்க முடியும் என்று பட்டது. ‘பாப்போம் …அதுவும் ஒரு அனுபவம்தானே’ என்று கிருஷ்ணன் உற்சாகப்பட்டார்.

சிரில் அல்ல – “சிறில்”, மெதுநடையாளர் மோகனரங்கன்,ஒளி ஓவியர் சந்திரகுமார்

கோவையில் இருந்து அரங்கசாமியும், சந்திரகுமாரும் நேராக ரயில்நிலையத்துக்கு வந்துவிட்டதாக தகவல். கே.பி.வினோத், ராஜகோபாலன், வசந்தகுமார், சிறில் அலெக்ஸ் போன்றவர்கள் ரயில்நிலையம் நோக்கி கிளம்பிவிட்டிருந்தனர். மழை சற்றே விட்டுவிட்டிருந்தது. ரயில் பதினொன்றரைக்கு அல்ல பதினொன்றுக்குத்தான் என்று சந்திரகுமார் எங்கோ எதையோ பார்த்து அவசரமாக கூப்பிட்டுச் சொல்ல அதை உடனே அனைவருக்கும் சொல்லி அவர்களை அவசரப்படுத்தினோம். பதினொன்றுக்கெல்லாம் எல்லாருமே கூடிவிட்டோம்.

மீண்டும் உக்கிரமான மழை. செண்டிரலின் தகரக்கூரை அதை மாபெரும் பிரளயமாக ஆக்கிக்காட்டியது.ரயில் கிளம்ப தாமதமாகியது. பெட்டிக்குவெளியே ஒட்டியிருந்த பட்டியல் மழையில் ஊறி பெயர்களை வாசிக்கமுடியாது செய்தது. மண்டியிட்டு என் பெயரை வாசித்தேன். பெட்டிக்குள் விளக்கு இல்லை. தனசேகரின் சிறிய கைவிளக்கை பெட்டிக்கூரையில் அடித்து வெளிச்சம் உருவாக்கி அமர்ந்திருந்தோம். பன்னிரண்டு மணிக்குத்தான் கிளம்பியது. அதுவரைக்கும் பெட்டிக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் உற்சாகத்தை கண்ட சகபயணிகள் எங்கள் இடங்களை மாற்றிக்கொண்டு அனைவரும் ஒரே இடத்தில் இருக்க அனுமதித்தனர்.

விஜயராகவன்,[வெண்துண்டுவேந்தர்] , “மாப்ள” கார்த்தி, சந்திரகுமார்

காலையில் ரயில் இரண்டுமணிநேரம் தாமதமாகச் செல்வது தெரிந்தது. ஆந்திராவெங்கும் மழை. ஏலூரு நிலையத்தில் காலை ஆறரை மணிக்கு ராமச்சந்திர ஷர்மாவின் தோழர் எங்களுக்கு காலையுணவு கொண்டுவந்து தருவதாக ஏற்பாடு. ஒன்பது மணிக்குத்தான் ஏலூரை அடைந்தோம். அதுவரை டீ. சாதாரண ரயில்பெட்டியில் காலையிலேயே முன்பதிவுசெய்யாதவர்கள் ஏறி கிடைத்த இடங்களில் அமர்ந்துகொண்டார்கள். ஆகவே நாங்கள் பிறரது இடங்களை ஆக்ரமித்துக்கொண்டோம். இந்த ஊடுருவலை தடுப்பதற்காக சிலர் பிடிவாதமாக பத்துமணிவரைக்கும் படுத்தே கிடந்தார்கள். மழையின் ஈரம், குளிர்.

‘ஹீரோ’ ராஜகோபாலன்

ராஜமுந்திரியில் பதினொரு மணிக்குத்தான் இறங்கினோம். திட்டப்படி ஒன்பதுக்கு அங்கே இருக்கவேண்டும். குளியல் காலைக்கடன் ஏதும் நிகழவில்லை. அவற்றை ஒரு விடுதியறை எடுத்து முடித்துக்கொண்டாலென்ன என்று நினைத்தோம். ஆனால் தாமதமாகிவிடும். படகு காத்திருந்தது. ரயில்நிலையத்தில் இருந்து இரு ஆட்டோக்களில் நேராக கோதாவரி நோக்கிச் சென்றோம். மொத்தம் 17 பேர்

ஜெயமோகன்
கே.பி.வினோத்,
ராஜகோபாலன்,
வசந்தகுமார்,
சிறில் அலெக்ஸ்
கிருஷ்ணன்,
விஜயராகவன்,
க.மோகனரங்கன்,
கார்த்தி
தனசேகர்
யுவன் சந்திரசேகர்
இளங்கோ
ரவி மதுரை
அரங்கசாமி
சந்திரகுமார்
வேணு வெட்ராயன்
ராமச்சந்திர ஷர்மா

’சாது’ டாக்டர் வேணு வெட்ராயன்

கோதாவரி அதன் அதிகபட்ச அகலத்தை அடையும்போது வரும் முதல் நகரம் ராஜமுந்திரி. ராஜமகேந்திரபுரி என்ற பேரின் மரூ. ராஜமந்திர் என்ற பேரின் மரூ என்றும் சொல்கிறார்கள். இங்கே உள்ள மூன்று மாபெரும் பாலங்கள் இந்தியாவின் பத்து நீளமான பாலங்களில் வருபவை. எங்கள் படகின்பெயர் விஹாரி . ஐம்பது பேர் வசதியாகச் செல்லத்தக்கது. லாரியின் இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. கீழ்த்தளத்தில் நீளமான பெரிய கூடம்போல ஓர் அமைப்பு. குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. அதன் வால்பக்கம் இயந்திர அறை. அதற்கு அப்பால் ஒரு சிறு படுக்கை அறை. மெத்தையுடன் கட்டில்கள்.

’பின் நவீனத்துவர்’ கிருஷ்ணன்

படுக்கையறையில் பெட்டிபைகளை வைத்துவிட்டு மாடிக்குச் சென்றோம். திறந்த வராந்தா போன்ற மாடியில் வெயிலுக்காக சன்னமான கித்தான்கூரை மட்டும்தான். தூறல் தாங்காது. ஆனால் நாங்கள் வந்தது முதல் மழை இல்லாமல் பிரகாசமாக இருந்தது. வசந்தகுமார் சிகரெட் பற்றவைத்துக்கொண்டு நாற்காலியில் சாய அவரைச்சுற்றி மற்றவர்கள் அமர்ந்துகொண்டார்கள். படகிலேயே கழிப்பறைகள் இருந்தன. குளியலை கோதாவரியிலேயே எங்காவது வைத்துக்கொள்ளலாம் என்றார்

‘குறுந்தாடிக்குயில்’ யுவன் சந்திரசேகர்

படகின் காப்டன் பெயர் சமதானி. அவரது மகன் உட்பட நான்கு பணியாட்கள். சமையல் படகிலேயே. ராமச்சந்திர ஷர்மாவின் நண்பர் ஒரு நாட்டுப்புறப்பாடகியையும் தாளக்காரரையும் ஏற்பாடுசெய்திருந்தார். அவள் பெயர் சோனி. சோனியான பெண். ஏற்கனவே படகில் அவர்கள் காத்திருந்தார்கள். இளவெயில் பரவிய கோதாவரி மழைநீர் கலங்கி பித்தளைத்தகடு போல பளபளத்தது. பிரம்மாண்டமான சருமம் போல காற்றில் புல்லரித்தது. மகத்தானோர் பட்டுப்புடவை போல சிற்றலை அடித்தது.

படகு மெல்ல அதிர்ந்து கிளம்பியது. பெரிய படகானதனால் அலைபாயவில்லை. நதியின் ஓட்டத்தை எதிர்த்து நீர்மேல் மூக்கைத்தூக்கிக்கொண்டு நீண்ட ஒளிரும் வாலுடன் சென்றது.

’டூர் கைடு’ ஜெயமோகன்

[மேலும்]

முந்தைய கட்டுரைவல்லினம்
அடுத்த கட்டுரைபழையகடிதம்