பெருஞ்சுவர் சூழ்ந்த பெண்

பெருஞ்சுவருக்கு பின்னே [சீனப்பெண்களின் வரலாறு] ஆசிரியர்: ஜெயந்தி சங்கர்
உயிர்மை பதிப்பகம். விலை120

பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவள் ஏன் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளானாள் என்று சொல்லும் சிந்தனையாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள காரணங்கள் சிலவற்றை முன்வைப்பார்கள். ஐரோப்பாவில் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்கியதில் கிறித்தவ தேவாலயத்தின் பங்கு முக்கியமாக சொல்லப்படுகிறது. அரேபியாவில் இஸ்லாமின் பங்கு இன்றும் அழுத்தமாகவே தொடர்கிறது. இந்தியாவில் மனுநீதி போன்ற மதநீதிநூல்கள் சுட்டப்படுகின்றன. ஆனால் உலகவரலாற்றை எடுத்துப்பார்த்தால் எங்கும் பெண்மீதான அடக்குமுறை ஒரே மாதிரியாகத்தான் இருந்துவந்துள்ளது என்பதைக் காணலாம். பழங்குடிச் சமூகங்களில் பெண்ணடிமைத்தனம் உச்சநிலையில் இருப்பதை இன்று ஆய்வாளர்கள் பதிவுசெய்துள்ளார்கள். அப்படியானால் பெண்ணடிமைத்தனம் என்பது சுரண்டல் போல மானுடப் பண்பாட்டின் ஒரு இயல்பான பரிணாமக்கூறா என்ன?

ஆனால் எங்கு அரசுகள் வலிமை பெறுகின்றனவோ அங்கே பெண்ணடிமைத்தனம் மேலும் இறுக்கமாகிறது.எங்கே பேரரசுகள் உருவாகின்றனவோ அங்கே அது உச்சத்துக்குச் செல்கிறது. உலக வரலாற்றில் இதற்கு விதிவிலக்கே இல்லை. உலகின் மாபெரும் பேரரசுகள் தொடர்ந்து கோலோச்சிய சீனா பெண்ணடிமைத்தனத்தின் அதி உச்சங்களைத் தொட்டிருப்பதை இயல்பாகவே காணவேண்டும்.

ஜெயந்திசங்கரின் ‘பெருஞ்சுவருக்குப் பின்னால்’ சீனப்பெண்களின் வரலாற்றையும் வாழ்க்கையையும் கூறும் முக்கியமான தமிழ் நூல். இந்தவகைப்பட்ட ஒருநூல் தமிழில் இதற்கு முன் வந்ததாகத் தெரியவில்லை. தமிழில் பல கோணங்களில் பெண்ணியம் பேசப்படும் இன்று அதற்குரிய முக்கியமான மூலநூலாக விளங்கக் கூடிய இந்நூலைப்பற்றி இன்றுவரை எந்தப்பெண்ணியவாதியும் பேசிக்கேட்கவில்லை என்பது தமிழ்ச் சூழலைவைத்துப் பார்த்தால் வியப்புக்குரியதுமல்ல.

உலக இலக்கியம், உலக அரசியல் பயின்று விவாதிக்கும் வாசகர்களுக்குக் கூட இந்நூல் முன்வைக்கும் தகவல்கள் ஆச்சரியமூட்டக் கூடும். காரணம் பொதுவாக சீனா பற்றி நாமறிந்தது மிக குறைவே. பத்து சீன எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லக்கூடியவர்கள் நம்மில் அனேகமாக யாருமிருக்கமாட்டார்கள். ஜெயந்தி சங்கர் சீனப்பெண்களைப் பற்றி சொல்லும் தகவல்கள் பெரும் புனைவுகளுக்கு நிகராக உள்ளன.

சீனப்பெண்ணை அடிமைப்படுத்தியதில் தத்துவ மேதை கன்பூஷியஸின் பங்கு முக்கியமானது என்று சொல்கிறது இந்நூல். பெண் இரண்டாம்பட்சமானவள் என்றும் பலவீனமானவள் என்றும் கட்டுப்படுத்தப்படவேண்டியவள் என்றும் கன்பூஷியஸ் சொன்னது சீன மனதை ஆழமாகப் பாதித்திருக்கிறது. பெண் ஆணின் மகிழ்ச்சிக்காக மட்டுமே படைக்கப்பட்டவள், ஆணுக்காகத் துயருறுவது மட்டுமே அவளது வாழ்க்கை என பெண்களுக்குப் போதிக்கப்பட்டது. அவள் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டது. சீனக்குடும்பம் என்பது மிக வலுவான ஓர் அமைப்பு. முற்றிலும் பெண்மீதான ஒடுக்குமுறையால் உருவாக்கி நிலைநிறுத்தப்படுவது அது

கிட்டத்தட்ட பல விஷயங்கள் இந்திய மரபை ஒட்டி உள்ளன. ஆண் ஒரு குடும்பப்பெண்ணுடன் கொள்ளும் உறவு என்பது முழுக்க முழுக்க மகப்பேறுக்காக மட்டுமே என்ற நிலை இருந்திருக்கிறது. காம நுகர்ச்சிக்காக ஆண் விலைமாதரையும் வைப்பாட்டிகளையும் நாடிச்செல்வது முற்றிலும் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆகவே பண்டைத்தமிழகம் போல சீனமும் பெண்சமூகத்தை இவ்விருவகைப்பட்ட பெண்களாக பிரித்து வைத்திருந்தது. இருசாராரும் இருவகையில் சுரண்டப்பட்டார்கள். பெண்ணுக்கு சொத்துரிமை கொடுக்கப்படவில்லை. அவள் திருமணம் முடித்து அனுப்பபடும்போது சிறிய வரதட்சிணை மட்டுமே கொடுக்கப்பட்டது. அதன் பின் அவளுக்கு பிறந்தவீட்டுடன் எவ்விதமான உறவும் இல்லை. பெண் பிறப்பது விரும்பபடவில்லை. பெண்சிசுக்கள் சாதாரணமாக கொன்றழிக்கப்பட்டு இன்று சீனாவில் பெண்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. மிகச்சிறந்த அடிமையாக ஆதல் என்பதே கற்பு என சீனமரபு குறிப்பிட்டது.

இந்நூலில் சீனப்பெண்களின் கால்கள் சிறுவயதிலேயே ஒடித்து கட்டப்பட்டு ‘தாமரைப்பாதம்’ உருவாக்கப்பட்டு அவள் நிரந்தரமாக ஊனமுற்றவளாக ஆக்கப்பட்டதன் விரிவான சித்திரம் உள்ளது. அடிபப்டையில் பெண்ணை நீண்டநேரம் நிற்கவோ ஓடவோ தன்னைக் காத்துக்கொள்ளவோ முடியாதபடி பலவீனமானவளாக ஆக்கும் நோக்கம் கொண்ட இம்முறையானது ஓர் அழகூட்டும் சடங்காக பண்பாட்டில் முன்வைக்கபப்ட்டது. உயர்குடிப்பெண்கள் அதைச் செய்துகொண்டார்கள். உயர்குடிகளாக ஆக விரும்பும் நடுத்தரகுடிகளும் அதைப் பின்பற்றினர். மொத்த சீனப்பெண்களில் முக்கால்வாசியினர் ஒருகாலத்தில் இதற்கு ஆளாயினர்.

மிக மிக கொடூரமான ஒரு சித்திரவதை இது. மிக இளம் வயதிலேயே பாதங்கள் ஒடிக்கப்பட்டு சதையை வெட்டி காலை மடக்கி பட்டுத்துணியால் இறுகக் கட்டுகிறார்கள். உள்ளே கால் வருடக்கணக்காக வலியில் அதிர்கிறது. சதைகள் அழுகி புண்ணாகி உலர்கின்றன. எலும்புகள் முறிந்து பொருந்துகின்றன. பலசமயம் விரல்கள் உதிர்ந்துபோகின்றன. இப்போது படங்களில் அக்கால்களைப் பார்த்தால் அதிர்ச்சியும் அருவருப்பும் உருவாகிறது. அன்று அது ஆண்களுக்கு காமக்கிளர்ச்சியை அளித்திருக்கிறது. ஜெயந்திசங்கர் அவ்வழக்கத்தில் தோற்றம் அதன் சடங்குமுறைகள் அது மறைந்தவிதம் ஆகியவற்றைப்பற்றிய விரிவான செய்திகளை அளிக்கிறார்.

தமிழ் வாசகர்களுக்கு மிகுந்த ஆர்வமூட்டும் விஷயம் சீனாவில் பெண்களுக்கு மட்டுமாக, பெண்கள் நடுவே ஆண்கள் அறியாமலேயே புழங்கிய ஒரு தனி மொழி இருந்திருக்கிறது என்பது. நுஷ¥ என்ற அம்மொழி பெண்களால் வழிவழியாக கைமாறப்பட்டு தங்கள் துயரங்களை பரிமாறிக்கொள்ளவும் செய்திகள் அனுப்பவும் பயன்பட்டிருக்கிறது. சீன சித்திர லிபியிலேயே அதையும் எழுதியிருக்கிறார்கள். அதில் முக்கியமான கவிதைகள் வந்திருக்கின்றன. இம்மொழிக்கு பள்ளிகளும் ஆசிரியர்களும் இல்லை. இது அனைவரும் கேட்க பேசபப்டுவதில்லை. பின்பு மெல்லமெல்ல அம்மொழி வழக்கொழிந்துபோயிருக்கிறது. அதை அறிந்திருந்த சிலரை அன்றைய கம்யூனிசக் கலாச்சாரப்புரட்சியாளர்கள் வலதுசாரிகள் என முத்திரைகுத்தி அழித்தனர். அதை மிஞ்சி எஞ்சிய தடையங்களை இன்றைய சீன அரசு சுற்றுலாக்கவற்சியாக பயன்படுத்துகிறது

ஒடுக்கபடும் பெண் இருவகையில் அதிகாரத்தை அடைகிறாள் என்பதை வரலாறு காட்டும். ஒன்று தன் காமக்கவற்சியையே தன் ஆயுதமாக்கி அவள் அதிகாரத்தை அடைகிறாள். இரண்டாவதாக தன் மதிநுட்பம் மற்றும் குரூரம் மூலம் அதிகாரத்தை அடைகிறாள். இரண்டு முகங்களுமே கொண்ட பெண்கள் வரலாற்றில் அதிகம். சீனாவின் இணைசொல்லமுடியாத பெண்ணடிமைச் சூழலில் ஆசைநாயகியராக உச்சகட்ட அதிகாரத்தை அடைந்த பெண்களின் கதைகளை ஜெயந்திசங்கர் சொல்கிறார். அரசி வூ ஹேவ் ஆசைநாயகியாக இருந்து அரசியானவள். அதேபோல பேரரசி டோவேஜர் தன் குரூரம் மூலமே அதிகாரத்தை வென்று கையாண்டாள்.

சீனாவின் பண்டைய வரலாற்றுதடயங்கள் அழிக்கபப்ட்டு சீனமக்களில் கணிசமானோர் கொல்லபப்ட்ட கொடுமையான கலாச்சாரப்புரட்சியே சீனப்பெண்களின் விடுதலைக்கும் காரணமாக அமைந்தது என்ற வரலாற்று முரண்பாட்டையும் நாம் இந்நூலில் காண்கிறோம். சீனப்பெண்களின் வரலாறு சமகாலம் வரை விரிவான தகவல்களுடன் சொல்லப்பட்டுள்ள இந்நூல் தமிழில் சமூக இயக்கத்தின் அடிப்படைகளை வரலாற்று நோக்குடன் சிந்திக்க விரும்பும் எவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

உயிர்மை இதழ், டிசம்பர் 2007 [மறுபிரசுரம் 2007]

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் – பகடி
அடுத்த கட்டுரைசராசரி