யதா யதாய: கடிதங்கள்

வணக்கம் குரு.,
              விகடனில், அங்காடித்தெரு பற்றிய பேட்டியின் போது வசந்தபாலன் உங்களை “எழுத்து அசுரன்” என்று குறிப்பிட்டிருந்தார், அது மீண்டும் “யதா யதாய” மூலம் நிரூபனமாகிவிட்டது.
              கீதையின் சாராம்சத்தை இதற்க்குமேல் எப்படி எளிமைப்படுத்த முடியும்!!? கோழி அர்ச்சுனனின் மகத்தான மனத் தடுமாற்றத்தை,உருண்டை கிருஷ்ணன் எவ்வளவு சாதுர்யமாக, மாயையிலிருந்து விடுவிக்கிறார்!? குருஷேத்ர போர் காலத்தில் “டாஸ்மாக்” இல்லாதது எவ்வளவு பெரிய சரித்திர பின்னடைவு?!
               கடந்த ஒருவாரமாக வேலை அழுத்தத்தினால் மிகவும் சோர்வடைந்திருந்த நான், இன்று காலையிலிருந்து “யதா யதாய” மூலம் உற்சாகமடைந்துவிட்டேன்,நன்றி.
இன்று நீங்கள் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு இனிதாக அமைய வேண்டும்.  
                                              அன்புடன்  மகிழவன்.  
அன்புள்ள ஜயமோகன்

நீங்கள் மக்கள் பேச்சு மொழியை அப்படியே தருவது சுவாரசியமாக உள்ளது. ஒரு வேண்டுகோள் என்ன வென்றால், நீங்கள் பல இலக்கியவாதிகளுடனும், மற்ற அதிகாரம் மிக்க தமிழ் ஆர்வலர்களுடனும் பழகுகிறீர்கள். அவர்கள் பேச்சையும் , டேப்ரெகார்ட் எடுத்தார்போல் அப்படியே எழுதினால் நல்ல பாடமாய் இருக்கும். இலக்கியத்திற்கும் பேச்சு மொழிக்கும் உள்ள தூரம் சரியாக புலனாகும்.

மதிப்புடன்


விஜயராகவன்

அன்புள்ள விஜயரகவன்
நான் கமண்டலநதி [நாஞ்சில்நாடன் பற்றிய நினைவுகள்] சு.ரா நினைவின் நதியில் [ சுந்தர ராமசாமி] நூல்களில் அதற்காக ஓரளவுக்கு முயன்றிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்
நன்றி
ஜெ
**
அன்புள்ள ஜெ
யதா யதாய வாசித்து வயிறு குலுங்கச் சிரித்தேன். கடமையச்செய்லே கட்டேலே போறவனே என்ற வரி உங்களால் கீதா சாரமாக அமரத்துவம் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறு மனம் விட்டுச்சிரிக்கும்போது உலகத்தில் உள்ள எல்லாமே எளிமையானவையாக ஆகிவிடுகின்றன ஜெ. தத்துவமும் அரசியலும் எல்லாமே ஜாலியாக மாறிவிடுகின்றன
நன்றி
சுதாகர்
**
அன்புள்ள ஜெயமோகன்
எங்கே கீதை உரையை கொஞ்சநாளாகக் காணவில்லையே என்று நினைத்திருக்கும்போது யதா யதாய வந்தது வாசித்து சிரித்து மகிழ்ந்தேன். என்ன ஒரு நுட்பம் அடிநரம்பில் தொடக்கூடிய கூர்மை. இப்படி நாம் ‘புனித’ங்களையெல்லாம் சிரித்தபடியே படிக்க ஆரம்பித்தால் அடிப்படைவாதம் போன்றவற்றுக்கு இடமே இருககது என்று நினைக்கிறே
சிவகுமார்
கோவை                 
**
அன்புள்ள எழுத்தாளருக்கு
கீதையை நீங்கள் நக்கல் செய்து எழுதியிருந்ததை ரசிக்க முடியவில்லை. இதை நீங்கள் எழுதுவதற்கு என்ன காரணம்? இந்துக்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள், ஆகவே என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதுதானே? பிற மதங்களைப்பற்றி இப்படி எவராவது எழுத அவர்கள் விடுவார்களா? குரான் பற்றி ஒரு கட்டுரை எழுத முடியுமா உங்களால்? [முழுக்கடிதம் அல்ல]
சேவற்கொடியோன்
அன்புள்ள சேவற்கொடியோன்
உங்கள் பெயர் இயற்பெயர் இல்லை என நினைக்கிறேன். அப்படி இருந்திருந்தால் பள்ளியில் உங்களை எப்படி அழைத்திருப்பார்கள் என்று எண்ணிக்கொள்கிறேன். நீங்கள் சொன்னது சரி. இந்துக்கள்  அப்படி இருப்பதனால்தான் எழுதுகிறேன். குர் ஆன் பற்றி எழுத மாட்டேன். என்னைப்பொறுத்தவரை இந்து மரபின் சிறப்பே இதுதான்.
ஜெ                          
முந்தைய கட்டுரைஇதழாளர்கள்:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅ.கா.பெருமாள் விழா:கடிதங்கள்