அ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி

நாகர்கோவிலில் இன்று எல்லா இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் அனேகமாக பொன்னீலன் தான் தலைமை. இப்பகுதியில் மூத்தஇலக்கியவாதியாகவும், அனைவராலும் மதிக்கபப்டுபவராகவும், குழு-சாதி-கோட்பாட்டு எல்லைகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவராகவும் இருகும் பெரியவர் அவர் ஒருவர்தான். 30-11-2008 அன்று நடைபெற்ற முனைவர்.அ.கா.பெருமாள் அவர்களின் விழாவுக்கும் அவரே தலைமை.

ஆறுமணிக்குத்தொடங்கிய நிகழ்ச்சியில் பொன்னீலன் அவர்கள் அ.கா.பெருமாள் அவர்களின் தனிப்பட்ட பண்புநலன்களைப் பாராட்டி விரிவாகப்பேசினார். இலக்கியம் என்பதே உழைப்பு அதிகமாகத்தேவைபப்டும் ஒரு துறை, அதற்கேற்ற அங்கீகாரம் இல்லாதது. ஆய்வு என்பது இன்னும் பலமடங்கு உழைப்பு தேவைபப்டக்கூடிய, இன்னும் குறைவான அங்கீகாரம் கொண்ட அறிவுத்தளம். எவ்விதமான சுயமுனைப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக முப்பதாண்டுகளுக்கும் மேலாக அ.கா.பெருமாள் அவர்கள் நாட்டாரியல் தமிழிலக்கிய வரலாறு போன்ற தளங்களில் பெரும்பணியாற்றி வருகிறார் என்பது பெரிதும் மதிப்பிற்குரியது என்றார் பொன்னீலன்.

பொன்னீலன்.

கடந்த காலங்களில் அ.கா.பெருமாள் அவர்களின் சில ஆய்வுநூல்களை எதிர்மறையாகவும் நான் விமரிசித்ததுண்டு. அவற்றில் விடுபட்ட தகவல்களைச் சுட்டிக்காட்டியும் அவற்றின் கோணத்துக்கு மாற்றுக்கோணத்தை முன்வைத்தும் பேசியதுண்டு. அவற்றை ஆக்கபூர்வமான விமரிசனமாக, ஆய்வை வளர்க்கும் விவாதமாக மட்டுமே அ.கா.பெருமாள் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது ஆய்வுமுறை என்பது தகவல்களை விரிவாகத்தொகுத்தளிப்பது என்ற முறையில் முக்கியமானது என்றார் பொன்னீலன்.

பெர்னாட் சந்திரா

அறிமுக உரையாற்றிய பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி பேராசிரியர் பெர்னாட் சந்திரா பெருமாள் அவர்களை விரிவாக அறிமுகம்செய்தார். 19 வயதில் தாய்தந்தையை இழந்த அ.கா.பெருமாள் சிறிதுகாலம் தினத்தந்தியில் பணியாற்றினார். பின்னர் கோழிக்கோடு பல்கலைக்கழகத்துக்குச் சென்று தமிழில் முதுகலைப்படிப்பை முடித்தார். ஆரல்வாய் மொழி அண்ணா கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி இரண்டுவருடம் முன்பு ஓய்வுபெற்றார். மொத்தம் 56 நூல்களை அ.கா.பெருமாள் அவர்கள் வெளியிட்டிருக்கிறார். 18 நூல்கள் தொகுப்பாசிரியராக வெளிவந்தவை. 38 நூல்கள் அவரது ஆக்கங்கள். இவ்வருடம் அவரது நான்குநூல்கள் வெளிவரவுள்ளன. இருநூல்கள் தமிழினி வெளியீடாகவும் ஒருநூல் காலச்சுவடு வெளியீடாகவும் வரவுள்ளது.

அ.கா.பெருமாள் அவர்கள் தமிழிலக்கிய ஆய்வில்தான் தன் அறிவுலகப்பயணத்தை ஆரம்பித்தார். எஸ்.வையாபுரிப்பிள்ளையைப்பற்றிய சுருக்கமான வரலாற்றுநூல்தான் அவரது முதல் நூல். அதைத்தொடர்ந்து அவர் நாட்டாரியலுக்கு வந்தார். தோல்பாவைக்கூத்து அவருக்கு நெடுங்காலம் ஆர்வமுள்ள ஆய்வுத்தளமாக இருந்திருக்கிறது. அவரது முனைவர் பட்ட ஆய்வு தோல்பாவைக்கூத்து பற்றியதே. அதன்பின் மத்திய அரசின் நிதியுதவியுடன் அவர் குமரிமாவட்ட நீர்நிலைகள் பற்றிய விரிவான களஆய்வைமேற்கொண்டார். அந்தக் களஆய்வு அவருக்கு குமரிமாவட்ட வரலாற்றில் ஆர்வத்தை உருவாக்கியது. விளைவாக குமரிமாவட்ட கோயில்கள் மற்றும் தொல்பொருள்தடங்கள் குறித்து குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்தார். கோயில்களைப்பற்றிய ஆய்வில் இருந்து சிற்பக்கலை அவருக்கு விருப்பமான துறையாக உள்ளது. இன்று அத்தளத்தில் முக்கியமான ஆய்வுகளைச் செய்துவருகிறார்.

அ.கா.பெருமாள் அவர்களை எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் வழிவந்தவராகக் கொள்ளலாம். சுயவிருப்புகளை முற்றாக ஒதுக்கி முழுக்க முழுக்க தரவுகளை மட்டுமே சார்ந்து புறவயமான ஆய்வுகளைச் செய்வதும், முடிவுகள் சங்கடமானவையாக இருந்தாலும் அவற்றை தெளிவுடன் முன்வைப்பதும் வையாபுரிப்பிள்ளை பாணி ஆய்வின் இயல்புகள். ஆய்வுக்கு பிறதுறைகளை துணைசேர்ப்பதும் , ஒவ்வொரு சிறு விஷயத்துக்கும் மிகவிரிவான நூலாதாரங்களைக் காட்டுவதும் வையாபுரிப்பிள்ளை அவர்களின் வழக்கம். அம்மரபு பேராசிரியர் ஜேசுதாசன்,வி.எஸ்.சுப்ரமணியம் போன்றவர்களின் வடிவில் இலக்கியம் தமிழாய்வு என்னும் இருதளங்களில் பெரிய வளர்ச்சி அடைந்தது. அ.கா.பெருமாள் அம்மரபைச்சேர்ந்தவர். இலக்கிய ஆய்வை அவர் நாட்டாரியலாய்வுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். இலக்கிய நாட்டாரியலாய்வுப் புலத்தை வரலாற்றாய்வுக்கு பயன்படுத்திக்கொள்கிறார் என்றார் பெர்னாட் சந்திரா.

அ.கா.பெருமாள் வேளாளர்களுக்கே உரிய சுய பரிகாச போக்கு கொண்டவர் என்று சொன்ன  பெர்னாட் சந்திரா ஒரு உதாரணம் சொன்னார். ஒருமுறை அவர் தாகூர் குறித்து ஏதோ சொன்னபோது அ.கா.பெருமாள் ”தாகூர் நாகர்கோயிலுக்கு வந்திருக்கிறார் தெரியுமா?” என்று கேட்டார். அப்படியா? என்று கேட்டபோது அ.கா.பெருமாள் விளக்கினார். தாகூர் நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக்கல்லூரியில்றுரையாற்றியிருக்கிறார். அந்த உரையைக்கேட்டு அப்போது அங்கே மாணவராக இருந்த ராமச்சந்திரன் அப்போதே படிப்பைவிட்டுவிட்டு சாந்தி நிகேதனுக்குப் பயணமானார். அவர்தான் மதுரை காந்திகிராம் பல்கலையை நிறுவியவர்.

ராமச்சந்திரன் ஒரு தகவலைச்சொன்னார் என்றார் அ.கா.பெருமாள். அப்போது தாகூருக்கு நாகர்கோயில் வேளாளர் அமைப்பினர் 1000 ரூ நிதி திரட்டி அளித்தார்கள். அந்த உறைக்குள் 900 ரூபாய்தான் இருந்தது என்றாராம் தாகூர். அ.கா.பெருமாள் ஊரில் விசாரித்தபோது ”நடுவால யாரோ வெள்ளாளப்புத்தியக் காட்டிட்டாங்க தம்பி, எழுதி மானத்த வாங்கிடாதெ” என்று தலைவர் சொன்னாராம்

பொன்னீலன் அவர்கள் அ.கா.பெருமாள் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார். எம்.எஸ்.அவர்கள் மலர்மாலை அணிவித்தார். பெர்னாட் சந்திரா, நாஞ்சில்நாடன், கவிஞர் தாமஸ், மற்றும் வாசகர்கள் அவருக்குச் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்கள்.

ராமச்சந்திரன்

தொடர்ந்து பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் ராமச்சந்திரன் அ.கா.பெருமாள் அவர்களின் ‘திருவட்டார் ஆதிகேசவன் ஆலயம்’ என்ற நூலைப்பற்றி விரிவாக ஆராய்ந்துபேசினார். ஒரு கோயில் என்பது ஒரு பண்பாட்டின் மையம். அப்பண்பாட்டை கோயில்வழியாக ஆராயும் முயற்சிகள் இன்னும் நம்நாட்டில் விரிவாக உருவாகவில்லை. சுசீந்திரம் கோயில் பற்றி முனைவர் கெ.கெ.பிள்ளை எழுதிய விரிவான ஆராய்ச்சி நூல் அ.கா.பெருமாள் அவர்களுக்கு அவ்ழிகாட்டிநூலாக இருந்துள்ளது . பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயிலைப்பற்றி அவர் ஒரு ஆய்வுநூலை ஏற்கனவே எழுதியிருக்கிறார். அவ்வகையில் தமிழில் வந்த முக்கியமான ஆய்வுநூல் என பேரா. தொ.பரமசிவனின் ‘அழகர்கோயில்’ என்ற நூலைச் சொல்லலாம். சி.ஜெ.·ப்யுல்லரின் ‘தேவியின் திருப்பணியாளர்’களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்க நூல்.

பொன்னீலன், அ.கா.பெருமாள் மேடையில்

அ.கா.பெருமாள் எழுதிய திருவட்டார் ஆதிகேசவன் ஆலயம் ஒரு பக்திநூல் அல்ல. கோயிலை வரலாற்றுமையமாகக் காணும் ஆய்வு நூல். அதில் முதலில் திருவட்டார் கோயிலைப்பற்றிய தொல் இலக்கியச் சான்றுகளை விரிவாகத்தொகுத்தளிக்கிறார் அ.கா.பெருமாள். ‘வளநீர் வாட்டாறு’ என்று பண்டை இலக்கியங்களில் குறிப்பிட்ப்படும் திருவட்டார் ஆலயம் பின்னர் விரிவாக வளர்ந்த வரலாற்றை கூறுகிறார். கோயிலின் அமைப்பு, அங்குள்ள ஐதீகங்கள், அங்கு நிகழும் பூசை முறைகள், அங்குள்ள திருவிழாக்கள், கோயிலைச் சார்ந்துள்ள சாதி -நிர்வாக அமைப்பு, கோயிலின் சிற்பங்கள் என விரிவாக தரவுகள் அளிக்கப்படுகின்றன. இந்நூலின் முக்கியமான பகுதி கோயிலின் சிற்பங்களைப்பற்றி அவர் எழுதியிருக்கும் குறிப்புகள்.

ஆய்வாளருக்கு இருவகை தகுதிகள் தேவை. ஒன்று, சொல்லும் அனைத்துக்கும் திட்டவட்டமான ஆதாரங்களை அளிப்பது. இரண்டு தான் சொன்ன ஒன்று மாறாக நிரூபிக்கபப்ட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மை. தன்னுடைய கருத்தை தன்முனைப்பு காரணமாகவே பிடிவாதமாக சார்ந்திருக்கக் கூடாது. அ.கா.பெருமாள் அவர்கள் இந்நூலில் ஒவ்வொன்றுக்கும் அளிக்கும் சான்றுகள் எண்ணற்றவை. இதுவரை கவனிக்கப்படாத பல கல்வெட்டுகள் அவரால் எடுத்து அளிக்கப்படுகின்றன.

அ.கா.பெருமாள் அவர்கள் தன் முன்னோடிகளைப்போலன்றி இந்நூலில் கல்வெட்டு மற்றும் நூல் ஆதாரங்களுக்கு இணையாகவே வாய்மொழி ஆதாரங்களையும் எடுத்து அளிக்கிறார். அவரது நாட்டாரியல் பயிற்சியே இதற்குக் காரணம். வாய்மொழி ஆதாரங்களை எந்த அளவுக்கு நம்புவதென்பது நாட்டாரியலில் ஒரு அடிப்படைப்பயிற்சி உள்ள களப்பணியாளர்களுக்கே சாத்தியம். பொதுவாக விதந்து கூறும் மனநிலை தகவலாளிகளிடம் உண்டு. அந்த கூற்றிலிருந்து சாரத்தை மட்டும் பிரித்தெடுக்கவேண்டும். பிற ஆய்வுகளுடன் ஒத்துபோவது ஒரு அளவுகோல் என்றால் சொல்பவர்களின் குணச்சிறப்பை மதிப்பிட்டு அதனடிப்படையில் முடிவுசெய்வது இன்னொரு வழிமுறை. அ.கா.பெருமாள் அதை இந்நூலில் சிறப்பாகச்செய்து வழிகாட்டியிருக்கிறார்.

வாய்மொழிப்பதிவுகள் பலசமயம் அதிகாரபூர்வ வரலாறால் விடுபட்டுப்போனவையாக, அவற்றுக்கு மாறானவையாக இருக்கும். அவை புதிய வாசல்களைத் திறக்கும். உதாரணமாக இந்நூலில் திருவட்டாறு கோயிலில் உள்ள ஒரு மண்டபம் அல்லாஹ¥மண்டபம் என்று அழைக்கப்பட்ட தகவலை அ.கா.பெருமாள் வாய்மொழி ஆதாரம் சார்ந்து சொல்கிறார். அதை மீண்டும் உறுதியும் செய்கிறார். ஆனால் அந்தத் தகவலே பின்னர் திருவிதாங்கூர் அரசாங்க ஆதரவுடன் வெளியிடப்பட்ட எந்த வரலாற்றிலும் இல்லை. இது இந்த ஆலயத்தில் இஸ்லாமியருக்கு இருந்த பங்களிப்பை குறிக்கிறது. கிட்டத்தட்ட நூறு வருடங்கள் திருவிதாங்கூர் நேரடியாக இஸ்லாமியர் ஆட்சியில் இருந்துள்ளது என்னும்போது இந்தத் தகவல் முக்கியமானது. ஒரு நாட்டாரியலாளர் வரலாற்றாய்வுக்கு வந்ததன் தனிச்சிறப்பு இது என்றார் ராமச்சந்திரன்

நாஞ்சில்நாடன் அ.கா.பெருமாள் அவர்களை தனக்கு மாணவப்பருவத்திலேயே தெரியும் என்று சொன்னார். அவரும் தானும் வேதசகாயகுமாரும் தென்திருவிதாங்கூர் இந்து கல்லூரி மாணவர்கள். அதாவது ஒருசாலை மாணாக்கர்கள். பின்னர் பலவருடம் கழித்து சுந்தர ராமசாமியின் இல்லத்தில்தான் அவரை நேரில் சந்திக்கவும் பழகவும் முடிந்தது. அ.கா.பெருமாள் ஓர் ஆய்வாளராக எப்போதும் திறந்த வீடு போன்றவர். தான் சேகரித்த எந்தத் தகவலையும் கேட்கும் எவருக்கும் அவர் அளிக்கத்தயங்கியதில்லை. தன்னுடைய இலக்கிய வாழ்க்கையில் ஐயங்கள் எழும்போது உடனடியாக அ.கா.பெருமாள் அவர்களை தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக்கொண்டிருப்பதாக நாஞ்சில்நாடன் சொன்னார்.

நாஞ்சில்நாடன்

அ.கா.பெருமாள் அவர்களின் ‘சுண்ணாம்பு பேட்ட இசக்கி’ என்ற நூல் மிக மிக ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மை கொண்டது. நல்லவேளை அ.கா.பெருமாள் இலக்கியத்துக்குவரவில்லை, ஒரு பெரிய போட்டியாளர் இல்லாமலானார் என்றுகூட தோன்றியது என்று நாஞ்சில்நாடன் வேடிக்கையாகச் சொன்னார். அந்நூலில் மண்டிகர் சாதியின் இயல்புகள் பழக்கவழக்கங்கள் பற்றியெல்லாம் அவர் சொல்லியிருக்கும் தகவல்கள் சமூகவியலாய்வுக்கான பெரும்திறப்புகள். உதாரணமாக மண்டிகரில் மனைவியை அடகுவைக்கும் வழக்கம் உள்ளது என்று அ.கா.பெருமாள் சொல்கிறார். அந்த தகவலில் இருந்து அவ்வழக்கம் தொன்று தொட்டே நம் நாட்டில் இருந்ததா, அதனால்தான் தருமன் பாஞ்சாலியைஅ டகுவைத்தானா என்ற எண்னம் ஏற்பட்டது என்றார் நாஞ்சில். முற்றிலும் வழக்கம் இல்லாத ஒன்றை ஒரு மன்னன் செய்யமுடியாதல்லவா?

காட்டுநாயக்கர் சாதியினரைப்பற்றிய விரிவான களஆய்வும் சரி, முத்தாலம்மன் கோயில்கள் போன்ற நாட்டார் தெய்வங்களைப்பற்றிய ஆய்வும் சரி, ஆய்வுக்குள்ளும் வெளியிலும் மிக விரிவான தகவல்களுடன் அமைந்துள்ளன. அடிக்குறிப்பில் உள்ள தகவல்களே தனி ஆய்வேட்டுக்குரிய அளவுக்கு விரிவானவை. நாஞ்சில்நாட்டுச் சமூகவாழ்க்கையைப்பற்றி அறிவதற்கு அவை மிகமிக முக்கியமானவை என்று சொன்ன நாஞ்சிநாடன் அந்த அளவுக்கு விரிவாக தமிழ்நாட்டின் எப்பகுதியும் விரிவாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றார். அதற்காக அ.கா.பெருமாள் அவர்கள் எத்தனை இரவுகள் கண்விழித்திருப்பார், எத்தனை தூரம் பயணம் செய்திருப்பார் என்பது பிரமிப்பூட்டுகிறது என்றார். சுடுகாட்டில் சுடலைமாட பூசை முடிந்தபின்னர் அங்கேயே ஒரு ஓலையைப் போட்டு படுத்துத் தூங்கும் அ.கா.பெருமாள் அவர்களின் காட்சி கண்முன் எழுகிறது. ஒரு கல்லூரிப்பேராசிரியர் என்ற முகம் கூட இல்லாமல் சாதாரண மக்களிடையே புழங்க முடியும் அவரது தனித்தன்மையே அவரை முக்கியமான ஆய்வாளராக ஆக்கியிருக்கிறது என்றார் நாஞ்சில்நாடன்.

கடைசியாகப்பேசவந்த விமரிசகரான எம்.வேதசகாயகுமார் அ.கா.பெருமாள் அவர்களுக்கும் தனக்குமான முப்பதாண்டுக்கால நெருக்கமான தொடர்பை நினைவு கூர்ந்தார். பல இடங்களுக்குப் பயணம்செய்திருக்கிறோம், பல விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். சொந்த வாழ்க்கையில் பல அந்தரங்கமான தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம். இக்கட்டான தருணங்களில் எனக்கு அ.கா.பெருமாள் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

அ.கா.பெருமாள் அவர்களின் முதலியார் ஆவணங்கள் முக்கியமான ஒரு வரலாற்றுக் கருவூலம் என்றார் வேத சகாயகுமார். கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையால் 1920களில் கண்டெடுக்கப்பட்டு கேரளா சொசைட்டி பேப்பர்ஸ்-ல்  அறிமுகம் செய்யபப்ட்டவை அவை. அழகியபாண்டியபுரம் என்ற ஊரில் இருந்த ஒரு வேளாள நிலப்பிரபுக் குடும்பம்தான் அழகியபாண்டியபுரம் முதலியார்கள். 16 ஆம் நூற்றாண்டு முதல் இருக்கும் இவர்கள் குடும்பத்தில் பல விஷயங்கள் சார்ந்த சுவடிகள் முறையாகத்தொகுத்து சேமிக்கப்பட்டிருந்தன. அவை திருவிதாங்கூர்-குமரிமாவட்ட வரலாற்றை அறிவதற்கான முக்கியமான சான்றுகள். அவற்றில் கேரள அரசு கொண்டுபோன சுவடிகள் இன்னும் அங்கே ஆய்வுக்கே உட்படுத்தப்படவில்லை. அ.கா.பெருமாள் அவர்கள் முதலியார் ஆவனங்களின் சிறிய தொகுப்பு ஒன்றை முன்னர் வெளியிட்டிருக்கிறார். இந்நூல் மேலும் விரிவான தகவல்கள் கொண்ட முக்கியமான தொகை.

கவிமணி அவர்களுடைய காலத்தை வைத்து முதலியார் பற்றிய சில முடிவுகளுக்கு வருகிறார். அந்தமுடிவையே அ.கா.பெருமாள் அவர்களும் பின் தொடர்கிறார். பிடாகைகள் என்ற வேளாளர்கூட்டமைப்புகள் நாஞ்சில்நாட்டில் இருந்தன. அவற்றின் தலைவராக இருந்தவர் முதலியார். அவர் வேளாளரின் ஜனநாயக அதிகாரத்துக்குக் கட்டுபப்ட்டவர். மன்னருக்கும் வேளாளர்களுக்குமான தொடர்பு ஊடகமாக இருந்தவர். ஆனால் முதலியார் உண்மையில் ரெண்டர் என்ற பதவியைச்சேர்ந்தவர். இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் உருவாக்கிய ஒரு பதவி அது. ஒரு இடத்தை வென்றதும் அங்கே முழுமையாகக் கொள்ளையடித்தபின் அப்பகுதியை அங்குள்ள ஒரு செல்வாக்கான நபருக்குக் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து மேலும் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கான வரியை முன்பணமாக வசூலித்துவிட்டுச் செல்வது அவர்களின் வழக்கம். அழகப்பமுதலி, ரங்கப்ப முதலி போன்றவர்களெல்லாம் இம்மாதிரியான ரெண்டர்களே. அதாவது கொள்ளையடிப்பதற்கான ஏஜெண்டுகள் இவர்கள். நிகழ்காலத்துக் கொள்ளைக்குப்பின் எதிர்காலத்திலும் கொள்ளையடிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள்.

ரெண்டர்கள் அன்னியப்படையெடுப்பாளர்களுக்கு பெரும்பணம் முன்னரே கொடுத்திருப்பதனால் அதற்கு மும்ம்மடங்குத் தொகையை வரிவசூலாகச் செய்ய முனைவார்கள். அதற்காக பெரிய படை வைத்திருப்பார்கள். சித்திரவதை செய்து கொள்ளையடித்து வரிவசூல் செய்வார்கள். காலனிய ஆட்சி ஏதேனும் நன்மை செய்தது என்றால் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட இந்த ரெண்டர்களை ஒழித்தது மட்டுமே. அதனால்தான் அவர்களுக்கு அத்தனை பெரிய மக்கள்செல்வாக்கு உருவானது. அழகியபாண்டியபுரம் முதலியாரும் ஒரு ரெண்டர்தான். ஆனால் பின்னர் திருவிதாங்கூர் அரசு அவருக்கு வரிவசூல் உரிமையை அளித்து சட்டபூர்வமாக ஆக்கியது. அவர் ஒரு வரிவசூல் ஏஜெண்டாக செயல்பட்டார்.

ஆய்வாளர்களில் இரண்டுவகை உண்டு. தகவல்களைக் கொண்டு கருத்துக்களை தொகுத்து உருவாக்குபவர்கள். தகவல்களை வைத்து ஒங்கிவிடுபவர்கள். அ.கா.பெருமாள் இரண்டாம் வகையானவர். முதலியார் ஓலைகள் அவையே பேசுகின்றன. முதலியாரின் ஓலைகளை மூன்றுவகையாகப் பிரிக்கலாம். ஒன்று நில ஆவணங்கள். இரண்டு அடிமைவணிகம் மற்றும் இலவச உழைப்பு அதாவது ஊழியம் சம்பந்தமானவை. மூன்று போர் சம்பந்தமானவை. நில ஆவணங்கள் அக்காலத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டமைக்கான சான்றுகளாக உள்ளன. நமக்கு மிக ஆர்வமூட்டுபவை அடிமை வணிகம் சார்ந்தவை. குமரிமாவட்டத்தில் எங்கெல்லாம் அடிமைச்சந்தைகள் இருந்தன என்ற தகவலை நாம் இங்கே காணமுடிகிறது.

வேதசகாயகுமார்

இந்த ஓலைகளில் காணப்படும் அடிமை ஓலைகளில் அடிமைகளின் உழைப்பு மட்டுமே அடிமையாக்கப்பட்டது. தன் வீட்டுக்குச் சென்றுவிட்டு தாமதமாக வந்த அடிமையைத்தண்டிப்பது பற்றிய ஒரு ஓலை இங்கே உள்ளது. அதாவது அடிமைக்கு தனியாக குடும்பமும் வாழ்க்கையும் இருந்திருக்கிறது. ஆனால் கேரளத்தில் கிடைக்கும் மலையாள ஆவணங்களில் அடிமையை அவனுடைய குடும்பம் குட்டிகளுடன் விற்பதைப்பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. 1880களில் மூன்று கட்டங்களிலாக திருவிதாங்கூர் ரீஜண்ட் ராணி வெளியிட்ட ஆணைகளில் அடிமைகளை விடுதலைசெய்வது பற்றிக் குறிப்பிடும்போது அவர்களின் குழந்தைகளை அடிமையாகக் கொள்ளக்கூடாது என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

1880களில் கிறித்தவ மிஷனரிகள் திருவிதாங்கூர் ராணிக்கு அளித்த மனுவில் திருவிதாங்கூரில் அடிமையாக இருந்த சாதியினரைப்பற்றிய விரிவான சென்ஸஸ் கணக்கும் அவர்களின் நிலைமையைப்பற்றிய சித்தரிப்பும் உள்ளது. அதிலும் அவர்கள் விலங்குகள் போல அடிமையாக இருந்தார்கள் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. முதலியார் ஆவணங்களில் இருக்கும் இந்த மாற்றுச்சித்திரம் எப்படிபப்ட்டது, எந்த ஊரில் இருந்தது என்பது விரிவாக ஆராயத்தக்கது.

இன்னொரு ஆர்வமூட்டும் முரண்பாடு, ஊழியம் குறித்தது. எண்ணூறுகளின் இறுதியிலேயே  திருவிதாங்கூர் அரசாணைமூலம் தாழ்ந்த சாதிகளுக்கு கட்டாய உழைப்பு ஒழிக்கப்பட்டுவிட்டது.ஆனால் வேளாளர் அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டிய இலவச உழைப்பு மற்றும் கொடைகளைப்பற்றிய குறிப்புகள் அதற்குப் பின்னரும் முதலியார் ஆவணங்களில் உள்ளன. அவற்றைக் கொடுக்கமுடியாது என வேளாளர் மறுக்க அரசாங்கம் அவர்களை கட்டாயப்படுத்தி ஆணையிட்டிருக்கிறது. அதாவது கட்டாய உழைப்பு வேளாளர்களுக்கும் இருந்தது, அது நீடித்தது. இது நாடார் உள்ளிட்ட சாதிகள் விலக்கப்பட்ட இடத்தில் புதிதாக உருவாக்கப்பட்டதா என்றும் நாம் ஆராயவேண்டியிருக்கிறது.

வேளாளரும் அடிமைகளாக விற்கப்பட்டதாக முதலியார் ஆவணங்கள் சொல்கின்றன. வெள்ளாட்டிகள் என்ற சொல் வேளாளப்பெண்களைக் குறிக்கிறது என்று அ.கா.பெருமாள் எடுத்துக்கொள்கிறார். அது பணிப்பெண்கள் என்ற பொருளின் கையாளப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிரேன் என்றார் வேதசகாயகுமார். அக்காலத்தில் உயர்சாதிவீடுகளில் வேலைசெய்ய உயர்சாதியைச்சேர்ந்த அடிமைகள் தேவைபப்ட்டார்கள். அதற்கு சாதிவிலக்கம்செய்யப்பட்ட வேளாளர்கள் அடிமைகளாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டார்கள். ஒழுக்கக் கேட்டுக்கான தண்டனையாகிய கைமுக்கு போன்றவற்றுக்கு உள்ளான உயர்சாதிப் பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டமை திருவிதாங்கூர் ஆவணங்களில் இருந்து காணக்கிடைக்கிறது.

இவ்வாறு ஏராளமான தகவல்களை நாம் வரலாற்றில் பொருத்தி விரிவாக ஆராய இந்நூலில் இடமிருக்கிறது. இந்நூலில் மிகமுக்கியமான பகுதி என்பது போர்களைப்பற்றிய சித்தரிப்பே. போர்கள் என்பவை ஏதோ மன்னர்களின் வீரவிளையாட்டுகக்ள் வெற்றி தோல்விகள் என நாம் நினைத்திருப்போம். அப்படி அல்ல, அவை மக்கள் வாழ்க்கையை சூறையாடும் நிகழ்வுகள் என இந்த ஆவணங்கள் காட்டுகின்றன. போர் இருவகையில் மக்களுக்கு இழப்பாகிறது. அன்னியப்படைகள் நேரடியாகவே கொள்ளையடிக்கின்றன. தன் தேசத்துப்படைகள் போருக்கான செலவுக்காக வரிவசூல் என்ற பேரில் கொள்ளையடிக்கின்றன. முஸ்லீம், நாயக்கர் படையெடுப்புகளின்போது குமரிமண் பெற்ற அளவில்லாத துன்பங்களை நாம் இந்தச் சுவடிகளில் காண்கிறோம். வேறு  எந்த நூலுக்காக இல்லாவிட்டாலும் இந்நூலுக்காக அ.கா.பெருமாள் எந்நாளும் நினைக்கப்படுவார் என்றார் வேத சகாயகுமார்

அ.கா.பெருமாள் தன் ஏற்புரையில் தன்னுடைய கல்வியைப்பற்றிச் சொன்னார். தமிழ் முதுகலைப்படிப்புக்கு கோழிக்கோடு பல்கலையில் சேர்ந்தபோது அங்கே தொல்காப்பியமும் யாப்பெருங்கலமும் கற்பிக்க ஆள் இல்லை. ஆகவே துறை ஆலோசகராக இருந்த பேராசிரியர் ஜேசுதாசன் ஒன்று செய்தார், இந்திய தத்துவம் இந்தியவரலாறு ஆகியவற்றை பாடமாக வைத்தார். அவை ஆங்கிலத்தில் அத்துறை ஆசிரியர்களால் நடத்தபப்ட்டன. தேர்வை தமிழில் எழுதலாமெனச் சொன்னதனால் நல்ல மதிப்பெண் பெற்று வெல்லமுடிந்தது. ஆனால் பிறகு தமிழ்நாட்டில் வேலைக்கு முயன்றபோது அது தடையாக இருந்தது. பாதி ஆங்கிலமும் பாதித் தமிழுமாக ஒரு பட்டம். தொல்காப்பியம் படிக்கவும் இல்லை

ஆனால் பின்னர் தன் சான்றிதழ்களைச் சரிபார்த்த பேரா. முத்துசண்முகன் ‘அந்த கல்வி உனக்கு ஒரு வரம்’ என்றார். ‘பிற துறைகள் சார்ந்து உனக்கு ஒரு அடிபப்டைப் பயிற்சி கிடைத்திருக்கிறது. இந்தியவரலாறும் தத்துவமும் உனக்கு கடைசிவரை கைகொடுக்கும், நீ ஒரு ஆராய்ச்சியாளன் ஆவாய்’ என்றார். அதை அப்போது நான் நம்பவில்லை, ஆனால் அவர் சொன்னதுபோலவே எனக்கு ஆராய்ச்சியில் ஈடுபாடு வந்தது. அதற்கு அந்தக் கல்விதான் காரணம் என்றார் அ.கா.பெருமாள்

தன் வாழ்க்கையில் வழிகாட்டியாக அமைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டாரியல்துறைத்தலைவராக இருந்த ·பாதர் ஜெயபதி, இப்போது ஆய்வில் வழிகாட்டியாக உள்ள செந்தீ நடராஜன் ஆகியோரை நன்றியுடன் நினைவுகூர்ந்தார் அ.கா.பெருமாள். தன் தனிவாழ்வில் துணையாக இருக்கும் தன் தம்பிக்கும் , தன் மாணவரான தெ.வே.ஜெகதீசனுக்கும் நன்றி சொன்னார்.

அ.கா.பெருமாள்

கரகாட்டம் ஆடும் பெண் பதினேழு வயதில் ஆட ஆரம்பிப்பார். முப்பது வயதுக்கு மேல் ஆட முடியாது. ஆகவே சமீபத்தில் தமிழ் இயலிசை நாடகமன்றத்துக்கு அளித்த ஒரு பரிந்துரையில் கரகாட்டக்கலைஞருக்கு முப்பது வயது முதல் ஓய்வூதியம் கொடுக்கவேண்டுமென தான் அறிவுறுத்தியதைச் சொன்ன அ.கா.பெருமாள் அதேபோலத்தான் கள ஆய்வும் என்றார். நாட்டாரியல் கள ஆய்வாளன் ஐம்பது அறுபது வயதுக்குமேல் பயணங்கள் செய்வதும் கண்ட இடத்தில் தூங்குவதும் முடியாது. அதற்கொரு எல்லை உண்டு. அவ்வெல்லையை தாண்டிவிட்டேன் என்று சொல்லி ஆகவே இப்போது சிற்பவியல் மற்றும் வரலாறு சார்ந்து ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகச் சொன்னார்

விழா ஒன்பதுமணிக்கு முடிவுற்றது.

முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாள் கருத்தரங்கு, உரிய முன்பதற்றங்கள்
அடுத்த கட்டுரைமேயோகிளினிக் :உடல்நலக்கையேடு