புதுக்கோட்டை கடிதங்கள்

ஜெயமோகன் ஐயா,

வணக்கம். தங்கள் புதுக்கோட்டை பயணம் தெரிந்து, கீழ்க்கண்ட வலை இணைப்பினை தெரிவிக்கிறேன். நன்றி,

அன்புடன்,

நாஞ்சில் சுரேஷ்.
வணக்கம் ஜெயமோகன் சார்.

புதுக்கோட்டையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் நிறைய
உள்ளன.குறிப்பாக ஆவுடையார் கோயில் என்னும் திருப்பெருந்துறை ஆலயம்.
நரியைப் பரியாக்கித் திரட்டிய பணத்தில் மாணிக்கவாசகர் உருவாக்கிய
இவ்வாலயத்தின் கருவறையில் ஈசன் இல்லை. இங்குள்ள சிற்பங்களும் ஓவியங்களும் மிகச் சிறப்பானவை. ஒரே கல்லால ஆன சங்கிலி எல்லோரும் வியந்து பாராட்டக் கூடியது. மேலும் பல சிறப்புகள் கொண்டது இவ்வாலயம். ஆலய பூசகர்களும் தமிழர்கள் இல்லை. செந்தூர் ஆலயத்தில் போத்திகள் பூசை செய்வது போல
இவர்களும் நம்பூதிரி வழியைச் சேர்ந்தவர்கள்.

அடுத்தபடியாக புதுக்கோட்டை மன்னரின் அரண்மனை காண வேண்டிய ஒன்று.

கீழாநிலை எனப்பரும் கீழ நிலையும் அவசியம் காண வேண்டிய ஒன்றே!

கீழநிலை:

புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர் திருமயம்
வட்டத்திலுள்ளது. சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் போர்ப்படைகள் தங்கும் இடமாக கீழநிலை இருந்தது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டின் எல்லையாக விளங்கியது. கடைசி நாயக்க மன்னர் விஜயராகவா இவ்வூர்க் கோட்டையைக் கட்டினார். இக்கோட்டை பல்வேறு காலக் கட்டங்களில் பல அரசர்
கைகளுக்கு மாறியதால் சீரழிந்த நிலையில் உள்ளது. 1683இல் சேதுபதி அரசர் காலத்தில் போர்த்தளவாடங்கள் இக்கோட்டையில் உற்பத்தி செய்யப்பட்டன. கோட்டை 45 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து, சுற்றிலும் மதில்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. கோட்டையினுள் சிறிய அனுமான் கோவில் உள்ளது. அரியநாயகி அம்மன் கோவிலும், அம்மன் குளமும், விஷ்ணு ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோட்டையிலுள்ள சுரங்கப்பாதை ராமநாதபுரத்து சாக்கோட்டைக்குச்
செல்வதாகக் கூறப்படுகிறது. என்றாலும் சுரங்கம் அடைபட்டுள்ளது.

தேனிமலை என்ற இடமும் முக்கியமானது. சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளச் சின்னங்கள் உள்ள ஊர் இது. முருகன் ஆலயம் சிறப்பானது. குடுமியான் மலை மகேந்திரவர்மனோடு தொடர்பு கொண்ட ஊர்/ஆலயம். கல்வெட்டுச் சிறப்பு மிக்கது.

மலையக் கோயில் மிகச் சிறப்பான, தொன்மையான ஊர். டாக்டர் இரா. கலைகோவன் அவர்கள் அதுபற்றி மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். வரலாற்று ஆய்வாளர்கள் அவசியம் காண வேண்டிய ஒன்று. திருமய்யம் ஆலயக் குடைவரைச் சிற்பங்களின்
நுணுக்கம் வெகு சிறப்பானது.

http://www.varalaaru.com/Default.asp?articleid=117

திருமய்யம் பற்றிய வரலாற்றுக் கட்டுரை

http://www.varalaaru.com/Default.asp?articleid=72

குடுமியான் மலை பற்றி…

hhttp://blog.mohandoss.com/2008/01/blog-post_23.html

இன்னும் சிதிலமடைந்து பல குடைவரைகள் உள்ளன. குறிப்பாக குன்னாண்டார் கோயில், பெருங்களூர் (எழுத்தாளர் அகிலன் பிறந்த ஊர்) என பல உள்ளன.
அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்க்க சில நாட்கள் பிடிக்கும். மேலும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் குறித்து…

http://www.varalaaru.com/Default.asp?articleid=991

நேரம் இருந்தால் மேற்கண்ட இடங்களை நீங்கள் பார்க்கலாம். புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் (இங்குதான் ஞானாலயா ஆய்வு நூலகமும் உள்ளது. அவரும் உதவுவார்.) அருங்காட்சியகம் உள்ளது. அதன் இயக்குநரும் உங்களுக்கு உதவுவார். மேல் தகவல்கள் தருவார்.

நன்றி

அன்புடன்
அரவிந்த்

“புதுக்கோட்டை அருகே திருமயம் கோட்டை, சித்தன்ன வாசல். இவ்விரு பகுதிகளில் நாங்கள் தவறவிடக்கூடாத முக்கியமான வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் ஏதேனும் உண்டா?”

ஆம். உண்டு. புதுக்கோட்டையில் மாணிக்கவாசகர் எழுப்பிய ஆவுடையார் கோயிலைப் பாருங்கள். சிற்ப விசேஷமான அருமையான கோயில்.

சிவா
கோவை

அன்புள்ள ஜெயமோகன்

நிறைய வேலைப் பிரச்சினைகளினால் உங்களையோ அரங்கசாமியையோ மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வேலையில் நிறைய அழுத்தங்கள். திங்கள் அன்று வேலை விஷயமாக கலிஃபோர்னியாவின் வடக்கேயுள்ள அழகான ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகருக்குச் செல்ல வேண்டியிருந்தது. நாம் க்ரேட்டர் லேக் சென்ற அதே பாதை வழியாக விமானம் பறந்தது உங்களுடன் பயணித்த இனிய நினைவுகளைத் தூண்டியது. வரிசையாக லாசன் எரிமலை, சாஸ்தா ஏரி, சாஸ்தா மலை, க்ரேட்டர் லேக் வழியாக பறந்த பொழுது மேகமில்லாத தெளிவான வானம் இருந்த படியால் மேல்யேயிருந்து தெளிவாகக் காட்சி கிடைத்தது. மவுண்ட் சாஸ்தாவை அதற்கு மேலே பக்க வாட்டில் இருந்து பார்க்கும் பொழுது கூட அதே பிரமிப்பை அளித்தது. மலை உச்சியில் இரண்டு முகடுகள் உள்ளன. ஒன்றில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது. அனேகமாக பல மைல் சுற்றளவுக்கு அந்த பள்ளம் இருக்க வேண்டும். அதன் ஒரு பக்கத்தில் இன்னும் கறையாத தூய வெண் பனி உறைந்து, ஒரு பக்கம் மட்டும் வழியும் ஐஸ் க்ரீம் வைத்த கிண்ணம் போல வட்ட வடிவில் இருந்தது. க்ரேட்டர் ஏரியும் கூட ஏதோ நீல நிறத்தில் வரைந்து வைத்த வடிவம் போல நீல நிற பளிங்குத் தரை போல சலனமில்லாமல் கிடந்தது அருமையான காட்சி. உங்களது ஊர் புகுதலில் வரும் காட்சி போல, பணகுடி தாண்டி கணவாய் தாண்டியவுடன் வரும் அடர் பசுமை போல கலிஃபோர்னியாவின் தவிட்டு நிற மொட்டை மலைகள் தாண்டி தீடீரென்று ஓரிகானின் கடும் அடர் பசுமை எங்கும் கவிழ்ந்திருந்த காட்சி பாண்டி நாடு, நாஞ்சில் நாட்டு எல்லைப் பிரிவு போலவே இருந்தது. ஒரு இடத்தில் இருந்து கோடு போட்டு இனிமேல் இடைவெளியற்ற பசுமை பசுமை மட்டுமே என்று யாரோ கட்டளையிட்டது போல இயற்கை விரிந்து கிடந்தது. நேற்று இரவுதான் திரும்பினேன்.

உங்கள் தஞ்சை பயணம் பற்றிய பதிவு கண்டு எழுதுகிறேன். சித்தன்னவாசல் செல்வதற்கு முன்பாக ஒரு நடுகல், முதுமக்கள் தாழி இருக்கும் இடம் இருக்கும். அதற்குரிய அறிவிப்பு ஏதும் இருக்காதபடியால் நீங்கள் தவற விட்டு விடக் கூடும். சித்தன்னவாசலைத் திறந்து காண்பிக்க ஒரு தொல்பொருள் ஊழியர் இருப்பார். அவரிடம் சொல்லி திறந்து காண்பிக்கச் சொல்லி உள்ளே போகவும். நார்த்தா மலைக்கும் அது போலவே முன் கூட்டியே நீங்கள் சொன்னால்தான் திறந்து காட்ட ஆட்கள் இருப்பார்கள். இல்லாவிட்டால் அதி அற்புதமான விஷ்ணு சிலைகளை நீங்கள் கதவுக்கு வெளியே நின்று கண்டு விட்டுத் திரும்ப வேண்டி வரும். அங்கு மாடுகளை அன்றி மனித நடமாட்டத்தைக் காண முடியாது. நார்த்தா மலையிலேயே ஒரு தர்காவும் உள்ளது. உடன் நல்ல உள்ளூர் துணைவர் யாரையேனும் அழைத்துச் செல்லவும். மலையேறும் பாதை கூட சரியாகச் சொல்லப் பட்டிருக்காது. தட்டுத் தடுமாறித்தான் நாங்கள் சென்றிருந்தோம். மிகவும் அழகான முத்தரையர் காலக் கோவில்கள். தொல்பொருள் துறையினர் மீட்டு ஒட்டி கட்டியிருக்கிறார்கள். மாமல்லபுரம் கோவிலை நினைவு படுத்தும் கோபுரங்களுடன் இருக்கும். ஒரு காலத்தில் நகரத்தார் செழிப்பாக வாழ்ந்த நகரம் என்கிறார்கள். இப்பொழுது குவாரி முதலாளிகள் செழிப்பாக இருக்கிறார்கள். நீங்கள் தவற விடக் கூடாத முக்கியமானதொரு கோவில் குடுமியான் மலை. கீழே எனது குறிப்புக்களைப் படிக்கவும். அடுத்து கொடும்பாளூர் மூவர் கோவிலும் முக்கியமானதொன்று. சித்தன்னவாசலில் இருக்கும் தொல்பொருள் ஊழியர் அருகில் இருக்கும் சின்ன சின்ன ஆனால் தவற விட்டு விடக் கூடிய சாத்தியமுள்ள பல இடங்களைச் சொல்லுவார் அவரிடம் போகும் வழிகளையும் கேட்டுக் கொள்ளவும். பல சிறிய ஊர்களில் இருக்கும் சின்னங்கள் வெளியுலகிற்கு அறியப் படாமல் இருக்கும். நாங்கள் அவர் சொல்லித்தான் பல இடங்களுக்கும் சென்றிருந்தோம். மூவர் கோவிலுக்குள் ஒரு சின்ன அறையில் அங்கு கிடைத்த உடைந்த சிலைகள் பலவும் இருக்கும் அதையும் திறந்து காட்டச் சொல்லவும். முடிந்தால் சென்னையில் இருக்கும் டாக்டர் சுவாமிநாதன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும். அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வரலாற்று சின்னங்கள்/கோவில்கள் குறித்து அனைத்து தகவல்களையும் அறிந்தவர். உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் இல்லாவிட்டால் அவரது இமெயில் மற்றும் செல்பேசி எண்ணை அனுப்புகிறேன்.

அன்புடன்
ராஜன்

 

குடுமியான் மலை கல்வெட்டு பற்றிய எனது குறிப்புகள்
———————————————————————————————-

ரோடு என்று சொல்லிக் கொள்ளும்படி ஏதுமில்லாததால் எங்கள் ஓட்டுனர் சுந்தரம் மிகத் திறமையாக ஒரு குத்துமதிப்பாகக் காரை ஓட்டிச் செல்லலானார். வழியெங்கும் சிறிதும் பெரிதுமாக பல குன்றுகள் எல்லாக் குன்றுகளும் வெடி வைத்துத் தகர்க்கப் பட்ட வண்ணமாக இருக்கின்றன. அடுத்த முறை வரும் பொழுது இதில் பாதிக் குன்றுகள் காணாமல் போயிருக்கலாம், ஏன் நார்த்தா மலை என்ற கோவில் கலையின் அற்புதமும் அதனுடன் சேர்ந்து காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. யாருக்காவது நார்த்தா மலையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் இருப்பின் சீக்கிரம் சென்று பார்த்து விடுவது நல்லது. வழியெங்கும் பாறை உடைப்புகளும், உடைந்த கிரானைட் கற்களை ஏற்றிச் செல்லும் மஞ்சள் நிற லாரிகளாலும் நிறைந்திருந்தன. அந்த லாரிகள் போவதற்கும் கூட சாலைகள் கிடையாது அல்லது இருந்த சாலைகளை ஒழித்ததே அந்த லாரிகள்தானா என்பதும் தெரியவில்லை. வழியெங்கும் ஒரு சில ஆடு மேய்ப்பவர்களைத் தவிர வேறு மக்கள் கூட்டம் காணப்படாமல் வெறிச்சோடி இருந்தன. குன்றுகளை குண்டுவைத்துப் பிளப்பதுதான் அந்தப் பகுதியில் முக்கியத் தொழிலாகத் தெரிந்தது.

மாலை கவிழ ஆரம்பித்திருந்தது. சூரியனின் உக்கிரம் குறைந்திருந்தது. கார் புழுதிகள் அடர்ந்த ஒரு மண் சாலை வழியே ஒரு குன்றின் அடிவாரத்தில் போய் நின்றது. குன்றின் அடிவாரத்தினையடைய, மீண்டும் எங்களை ஆச்சரியப்பட வைத்த ஒரு கோவில் வளாகம் என்று சொல்லலாம். 7ம் நூற்றாண்டில் செதுக்கப் பட்ட மாபெரும் இசைக் கல்வெட்டின் இருப்பிடம். இன்று நிஜமாகவே புழுதியின் நடுவினில் கிடக்கிறது. உலகத்தில் வேறு எந்த நாட்டில் அமைந்திருந்தாலும் இந்த இடம் நிச்சயம் உலகப் புகழ் பெற்ற, உலகச் சுற்றுலா வரைபடத்தின் ஒரு முக்கிய ஸ்தலமாக, பல கோடி மக்கள் கண்டு அதிசயப்பட்டிருப்பார்கள்

கோவிலினின் முன்னால், வெளியே ஒரு பெரிய மண்டபம். அந்த மண்டபத்தில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் சிலைகளாக வடிக்கப் பட்டு நிற்கின்றன. குடுமியான்மலை என்ற இந்த ஊர் திருநலக்குன்றம் என்றும் வழங்கப் படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து 20 கி மீ தொலைவில் மணப்பாறை செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்தச் சிறு கிராமம், எனது படங்களைப் பார்த்த பலரும் இப்பொழுதுதான் முதன் முதலில் இந்தப் பெயரையே கேள்விப் படுகிறோம் என்று சொன்னார்கள். இந்தக் கோவில் வளாகத்தில் நான்கு கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று மேலக் கோவில் அல்லது திருமேற்றளி என்று வழங்கப் படும் மலையைக் குடைந்து படைக்கப் பட்டுள்ள அற்புதமான குகைக் கோவில்; சிகாநாதர் சுவாமி ஆலயம் எனப்படும் மிகப் பெரிய சிவன் கோவில்; சௌந்தரநாயகி அம்மன் கோவில்; அப்புறம் குன்றின் மீது ஒரு முருகன் கோவில்.

சிவபெருமானை உள்ளம் உருக வேண்டி வாழும் கோவில் அர்ச்சகர், ஒரு நாள் தரிசனத்திற்கு மன்னன் வராமல் போக பிரசாதங்களை கோவில் தாசிக்கு வழங்கி விட்டாராம். ஆனால் மன்னர் காலதாமதமாக வந்துவிட என்ன செய்வதென்றறியாத அர்ச்சகர் தாசியிடமிருந்து திரும்பி வாங்கி பிரசாதங்களையும் மலர் மாலையையும் மன்னரிடம் வழங்கி விடுகிறார். மாலையில் தலைமுடியைக் கண்ட மன்னர் அர்ச்சகரைக் கண்டு சினமுற, நடுங்கிய அர்ச்சகர் ஆண்டவனை நம்பி, அவர்மேல் பாரத்தைப் போட்டு அது சிவபெருமானின் முடிதான் என்று சொல்லிவிடுகிறார். நம்பாத மன்னர் லிங்கத்தின் தலையில் தடவ அங்கு தன் பக்தரைக் காக்க ஆண்டவனின் குடுமி ஒன்று முளைத்துள்ளது. மெய்சிலிர்த்த மன்னர் இது ஆண்டவனின் திருவிளையாடல் என்பதை உணர்கிறார் என்கிறது சுவாரசியமான தல புராணம். அர்ச்சகர் சுயம்பு லிங்கத்தின் தலை மீதுள்ள ஒரு புடைப்புதான் சிவபெருமான் காட்டிய குடுமி என்று தீபாராதனையில் காட்டினார்.

குடுமியான் மலை கோவில் முதல் பார்வையிலேயே நம்மை வசீகரித்து விடுகிறது. ஒரு பெரிய குன்றும் அதன் அடிவாரத்தில் குன்றை ஒட்டி ஒன்றன் பின் ஒன்றாக கோவில்களும் எழும்பி நின்று ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நம்மை அயர வைக்கின்றன. நாங்கள் சென்றிருந்த பொழுது சூரியன் மலைக்குப் பின்னால் விழுந்து கோவிலின் பின்னிருந்து ஒரு அசாதாரணமான ஒளியைக் கொடுத்தது. வெளி மண்டபத்தைக் கண்டு உள்ளே நுழையும் பொழுதே கோவிலின் சிற்பங்கள் எங்கள் கால்களையும் கண்களையும் கட்டிப் போட்டன. மஅந்தத் தூண் காட்டின் உள்ளே சென்றால் திரும்பிய பக்கமெல்லாம் இருண்ட தூசி படர்ந்த தூண்கள். எங்கும் ஒரு விளக்கு கிடையாது. ஒளியிழந்த களையிழந்த கரிய தூண்கள். ஆயிரம் தூண்கள் உள்ள மண்டபம் அது, சிதிலமடைந்து உள்ளது.

கோவிலின் முன்மண்டபங்களிலும் தூண்கள் பல உள்ளன; அதில் பல அற்புத சிற்பங்கள் கால் உடைந்தும் கை உடைந்தும், முகம் சிதைந்தும் காட்சியளிக்க்கின்றன. கோவிலின் கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபம் தவிர, வசந்த மண்டபம், மகா மண்டபம், சபா மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என நான்கு மண்டபங்கள் ஆளுயரச் சிற்பங்கள் நிறைந்த தூண்களுடன் பிரமாண்டமாக காட்சியளிக்கின்றன. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப் பட்ட அர்த்த மண்டபத்தை, பின்னர் 13ம் நூற்ற்றாண்டில் பாண்டிய மன்னர் காலத்திலும், 15ம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்கள் காலத்திலும், 17ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் காலத்திலும் ஒவ்வொரு மண்டபமாக விரிவுபடுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு மன்னர் காலத்திலும் முந்தைய மண்டபங்களை மிஞ்சும் வண்ணம் போட்டி போட்டுக் கொண்டு இந்தக் கோவிலை விரிவு படுத்தியுள்ளார்கள்.

வெளியே அமைந்த தசாவதார மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப் பட்டுள்ளது. 7ம் நூற்றாண்டில் இருந்து இந்தக் கோவில் தொடர்ந்து விரிவு படுத்தப் பட்டு வந்து இன்றுள்ள பிரும்மாண்டமான நிலையை அடைந்துள்ளது. மண்டபங்களில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் அற்புதமான கலைப் படைப்புகள். சிற்பங்களின் முகங்களில் நவரசங்களும் கொஞ்சுகின்றன. தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் என்று சொல்லி தூணில் இருந்து வந்த நரசிம்மர், நிஜமாகவே இந்தக் கோவிலின் ஒரு தூணில் இருந்துதான் வெளி வந்தார் என்று சொன்னால் நம்பிவிடக் கூடிய தத்ரூபமான உக்கிரநரசிம்மரின் உக்கிரமான சிலை, ஹிரண்ய கசிபுவின் வயிற்றைப் பிளந்து கொண்டு காட்சியளிக்கிறார். பத்துத் தலைகளுடன் ராவணனே நேரில் வந்து நிற்பது போன்ற பத்துத் தலை ராவணன் சிலை சினத்துடன் நம்முன் நிற்கிறது. சிலையா நிஜமா என்று மயங்க வைக்கும் சிற்ப அதிசயங்கள் நிறைந்த மண்டபங்கள். விநாயகர், சரஸ்வதி, ராவணன், நரசிம்மர், ரதி, மன்மதன், ஊர்த்துத்தாண்டவமாடும் நடராஜர், சுப்ரமணியர் என்று வரிசை வரிசையாக சிற்பங்கள். கிருஷ்ணாபுரம் கோவிலிலும், மதுரை ஆயிரங்கால் மண்டபத்திலும் காணப்படும் அதே குதிரை வீரன் சிலையும், வீரபத்திரர் சிலையும், ரதியின் சிலையும் இங்கும் காணப் படுகின்றன. அர்த்த மண்டபத்தின் துவாரபாலகர்கள் சிலைகளும், பிற சிலைகளும் மயக்கவைப்பவை; குறிப்பிடத்தக்கவை.

அந்த மண்டபங்களைக் கண்டு கிளம்பவே மனமில்லாமல் உள்ளே அமைந்த பிற கோவில்களை நோக்கிக் கிளம்பினோம். குடுமியான்மலைக் கோவில் பிற பிரபலக் கோவில்கள் போல், மின்சார விளக்குகள் அதிகமின்றி, எவ்வித ஆரவாரமுமின்றி அழுது வடிந்து கொண்டு ஒரு களையின்றி இருப்பது போல் தோன்றியது. கோவிலின் பராமரிப்பு தொ.பொ.துறையிடம் இருப்பதனால் போதிய விளக்குகள் இன்றி 10ம் நூற்றாண்டில் இருந்தது போலவே வைத்திருக்கிறார்கள். இன்றோ அந்தோ பரிதாபமாக விளக்கேற்றக் கூட வசதியின்றி காட்சியளிக்கிறது. பக்தர்கள் யாராவது காசு தந்தால்தான் விளக்குகள் ஏதாவது ஏற்றப்படும் என்று பரிதாபமாகக் கூறுகிறார் அர்ச்சகர்.

தொடர்ந்து செல்லும் கோவில் இறுதியாகக் குன்றை அடைந்து நிற்கிறது. கோவிலின் தென்புறம் மலையை ஒட்டி இருக்கிறது திருமேற்றளி என்னும் மேலக் கோவில்; இதுதான் இங்குள்ள கோவில்களிலிலேயே புராதனமானது; இந்தக் கோவில் மலையின் பாறையில் இருந்து தொடங்குகிறது. இதைத் திறந்து காண்பிக்க அர்ச்சகர் ஒருவர் எங்களுடன் வந்தார். கற்களால் ஆன படிகளின் மேலேறிச் சென்றால் குடைவரைக் குகைக் கோவில் ஆரம்பிக்கிறது. கதவைத் திறந்ததும் கும்மிருட்டு . 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னராலோ அல்லது பாண்டிய மன்னராலோ கட்டப் பட்டுள்ளது இந்தக் குகைக் கோவில்; இதில் தொடங்கி 17ம் நூற்றாண்டு வரை விரிவடைந்து வந்துள்ளது இந்தக் குடுமியான் மலை கட்டிடக் கலை அற்புதங்கள். குன்றைக் குடைந்து 12 அடிக்குப் 13 அடிக்கு ஒரு கர்ப்பக்கிரகம் குடையப் பட்டுள்ளது. மலைக்குள் சென்று குடைந்துள்ளார்கள் கர்பக்கிரகத்தில் ஒரு சிவலிங்கம். அதன்முன் 23×8 அடிக்கு ஒரு அர்த்த மண்டபமும், நீங்கள் படத்தில் காணும் கல்லினாலான முன்மண்டபமும் 11ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப் பட்டுள்ளது.

குகைக் கோவிலின் உள்ளே அடர்ந்த இருட்டு, வெட்டிப் பாளம் பாளமாக அள்ளலாம். அதை விட அடர்ந்த அமைதி. அர்ச்சகர் மெல்லிய ஒரு விளக்கை ஏற்றி மெதுவாக அந்தக் கோவிலின் உட்புறத்தைக் காட்டலானார். பொன்னியின் செல்வனில் சுரங்க அறைகளும் படிக்கட்டுகளும் வர்ணிக்கப் பட்ட காட்சிகள் நினைவுக்கு வந்தன. குலோத்துங்க சோழன் காலத்துக்கே நாங்களும் சில நிமிடங்கள் காலப் பயணம் செய்து விட்டோம். கல் தூண்களுக்கும் நடுவே வௌவால்கள், வௌவால்கள், வௌவால்கள். ஏதோ ஒரு பெரிய மாநாட்டில் மந்திரத்தால் கட்டப்பட்டு அசையாமல் அமர்ந்திருக்கும் பல நூறு தொண்டர்கள் போல் அமர்ந்திருந்தன. அர்ச்சகர் சட்டென்று விளக்கை மீண்டும் திருப்பி விட்டார். ஒரு சில நொடிகளில் அந்தத் திகில் காட்சி தோன்றி மறைந்தது.

அர்த்த மண்டபத்தின் உள்ளே துவாரபாலகர், சண்டிகேஸ்வரர், போன்ற பல சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன. மலையைக் குடைந்தேழ் சிலையை வடித்துக் குறுகத் தறித்ததொரு குகைக் கோவில். மேலக் கோவிலின் உள்ளே உள்ள கல்வெட்டுக்களில் பரிவாதினி என்ற வீணையைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

குகைக் கோவிலில் இருந்து வெளி வந்து குகைக் கோவிலைத் தொட்டடுத்த அடுத்த அற்புதத்திற்குச் சென்றோம். புகழ் பெற்ற குடுமியான் மலை இசைக் கல்வெட்டும் அதை ஒட்டி ஒரு இடம்புரி விநாயகர் சிலையும் வழிந்தோடும் பாறையில் செதுக்கப் பட்டுள்ளன. குகைக் கோவிலின் தென்புறமாக ஒரு பிரமாண்டமான கல்வெட்டுக் குறிப்பும், ஒரு பெரிய 5 அடி உயர விநாயகர் சிலையும் குன்றின் பாறைச் சுவரில் காணப் படுகின்றன. படத்தில் பார்க்கவும். குகைக் கோவிலின் மேலே பாறையில் 63 நாயன்மார்களின் சிலைகள் பாறையிலேயே வடிக்கப் பட்டுள்ளன. அயராது பாறையைத் தோண்டி தோண்டி கலை அற்புதங்களைப் படைத்துள்ளனர். ஒரு வெறியுடன் தாகத்துடன் கல்லிலே அதிசயங்களை வடித்துள்ளனர். இப்பொழுது அதற்குச் சற்றும் குறையாத வெறியுடனும், தாகத்துடனும் நாம் அதே குன்றுகளை வெடி வைத்துத் தகர்த்த்துக் கொண்டிருக்கிறோம். என்னே ஒரு திருப்பணி?

குகைக் கோவில் மேலே அமைந்துள்ளது. அதே பாறையின் மறு புறத்தில் 13X14 அடிக்கு ஒரு மிகப் பெரிய கல்வெட்டு காணப் படுகிறது, இது பல்லவ கால கிரந்த எழுத்துக்களில் எழுதப் பட்டுள்ளதாம். சித்தம் நமச்சிவாயம் என்று தொடங்கும் அந்த பிரும்மாண்டமான கல்வெட்டுக் குறிப்பு இசை இலக்கணத்தைப் பற்றியும், யாழ் பற்றியும், ஏழு ஸ்வரங்கள் பற்றியும், மகேந்திர வர்மப் பல்லவன் உருவாக்கிய சங்கீத ஜாதி பற்றியும் ஏழு பகுதிகளாக விளக்குகிறது என்கிறார்கள். இசையைப் பற்றி, அதற்கு இலக்கணம் உருவாக்கி அதைக் கல்லிலே நிரந்தரமாக வடிக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது அந்த 7ம் நூற்றாண்டு மன்னனுக்கு. வரலாற்றாசிரியர்களுக்கும், இந்திய இசை வல்லுனர்களுக்கும், வரலாற்றுக்கும் ஒரு முக்கியமான ஆவணமாக விளங்குகிறது அந்த மாபெரும் கல்வெட்டு. குடுமியான் மலைக் கல்வெட்டு என்று உலகப் புகழ் பெற்ற, புத்தகங்களில் மட்டும் இதுவரை கேட்டறிந்த கல்வெட்டை அங்கு கண்டோம். கல்வேட்டு துவங்கும் இடத்திற்கும் மேலே பாறைகளில் அடை அடையாக ஒட்டிக் கொண்டு தொங்குகின்றன ராட்சச தேனடைகள். தேன் கூடுகள். ஃப்ளாஷ் உபயோகிக்க வேண்டாம் என்று அர்ச்சகர் முன்னெசெரிக்கைக் கொடுத்து விட்டார். 1904ம் வருடம் கிருஷ்ண சாஸ்திரி என்பவரால் இந்தக் கல்வெட்டுக் குறிப்புகள் படித்தறியப் பட்டிருக்கிறது. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த பரத நாட்டிய சாஸ்திரத்திற்கும், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்கீத ரத்தினகராவுக்கும் இடைப்பட்ட காலத்தில் செதுக்கப் பட்டுள்ள முக்கியமான இசைக்குறிப்புகளாக இது கருத்தப் படுகிறது. இதை எழுதியவர் யார் என்று உறுதியாகச் சொல்ல இயலவில்லையாயினும் மகேந்திரப் பல்லவராக இருக்கக் கூடும் என்று வரலாற்றாளர்களும் கல்வெட்டு அறிஞர்களும் கருதுகிறார்கள். இசைக் குறிப்பின் ஏழு பகுதிகளுமே ‘சமப்த ஸ்வரகம’ (குறிப்பு முடிகிறது), என்ற ஒரே வாக்கியத்துடன் நிறைவடைகிறதாம். இசைக் குறிப்புகளின் அடியில் கடைசி வாக்கியமாக இது ருத்ராச்சார்யாரின் சீடரும், மஹேஸ்வரனி பக்தரான மன்னரால் இயற்றப்பட்டது என்று காணப்படுகிறது. மேலும் இது எட்டிற்கும் ஏழிற்கும் உரியது என்ற ஒரு கடைக் குறிப்பும் காணக் கிடைக்கிறது. ஏழிழை உள்ள இசைக்கருவிக்கும் எட்டிழை உள்ள இசைக் கருவிக்கும் இது பொருந்தும் என்று அறியப் பட்டிருக்கிறது.

இந்த மாபெரும் கல்வெட்டுக் குறிப்பு தவிர ஏறத்தாழ 120 பிற கல்வெட்டுக் குறிப்புகளும் இந்தக் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகிறது என்கிறார்கள். மேலக் கோவிலின் உட்புறத்திலும் அகிலாண்டேஸ்வரி கோவிலின் வெளிச் சுவரிலும் ஏராளமான கல்வெட்டு எழுத்துகள் காணக் கிடைக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள் யார் யார் எந்தக் காலத்தில் கோவில் திருப்பணிகளைப் புரிந்தார்கள், என்னென்ன சொத்துக்கள் வழங்கப் பட்டன என்ற குறிப்புகளாம். நிலங்களையும், பொன்னையும், மணியையும் பாண்டியர்களும் சோழர்களும் இந்தக் கோவிலுக்கு வாரி வாரி கொடையளித்துள்ளனர். ஆனால் இன்றோ, அந்தோ பரிதாபமாக அடுத்த வேளை பூஜைக்கு விளக்கேற்ற வழியில்லாமல் தவிக்கிறார் குடுமிநாதர்.

மீண்டும் சொல்கிறேன், இப்படியாகப் பட்ட ஒரு மாபெரும் கல்வெட்டுக் குறிப்பு அங்கு உள்ளது என்ற தகவல் பெரும்பாலான தமிழ் நாட்டு மக்களை இன்று வரை சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. டிஸ்கவரி விண்கலம், ஃப்ளோரிடாவில் புயல் என்பதனால் உங்கள் ஊரில்தான் (கலிஃபோர்னியா என் ஊராகி விட்டது) தரை இறங்கியதாமே என்று என்னைக் குறைந்தது ஒரு 50 பேராவது குசலம் விசாரித்திருப்பார்கள், நானும் என்னவோ நான் தான் நாசாவின் தலைமை விஞ்ஞானி போன்றதொரு தோரணையில் அப்படித்தான் என்றும், ஆமாம் பக்கத்தில்தான் என்றும் பகுமானமாகத் தலையசைத்து வைத்தேன் (உண்மையில் ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் அப்படியொன்று இறங்கப் போகும் தகவலே எனக்கு மறந்து போய் விட்டது, கலிபோர்னியாவில் இறங்கிய விபரமும் இவர்கள் சொல்லிதான் எனக்குத் தெரியும்). அவ்வளவு பொது அறிவுள்ள மக்கள், ஆனால் குடுமியான் மலை சென்று வந்தேன் என்று சொன்னால் அது என்கேயிருக்கிறது என்று புருவத்தைச் சுருக்குகிறார்கள்.

குகைக் கோவிலின் சற்றே தெற்கே சொளந்தரநாயகி அம்மன் கோவில் தனியாக நிற்கின்றது. இந்தக் கோவில் 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப் பட்டுள்ளது, இதிலும் கர்ப்பக்கிரகமும், அர்த்தமண்டபமும் , முன்மண்டபமும் அமைந்துள்ளன.

Some Photos at http://picasaweb.google.com/strajan123, http://picasaweb.google.com/rajansada, http://picasaweb.google.com/jemophotos2 ஆகிய இடங்களில் காணலாம். http://picasaweb.google.com/strajan123

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தி,கடிதங்கள்