கலைச்சொற்கள்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

சமீபத்திய விவாதமான ‘பரப்பியம்’ குறித்த ஒரு வேண்டுகோள். ஒரு கலைச்சொல்லை உருவாக்கும்போது தயவு செய்து மொழியின் ஒலியழகை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, தமிழில் ‘வேதியியல்’ என்பதை நாம் ‘ரசவாதம்’ என்று வைத்திருக்கலாம். தமிழ் அறிவியல் பாட நூல்கள் வெறுப்படைய வைப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஏன் கணிதமும் அறிவியலும் சித்தர் பாடலமைப்பில் இருக்கக் கூடாது? உதாரணத்திற்கு, H2o என்பதை விளக்க, “கேளப்பா, காரீயமும் பிராணனும் சேர நீராம்!”

நான் மொழியில் எந்த விதத்திலும் புலமை வாய்ந்தவன் அல்ல. ஆனால், பல சொற்களை பயன்படுத்தும் போது அவற்றின் ஒலி அமைப்பை அவை தொடர்பான பிற சொற்களை, அவை தரும் பொருளை பலமுறை யோசித்துப் பார்க்கிறேன். ‘தேவடியாள்’ ‘பரத்தை’ இந்த வார்த்தைகள் எப்படி ஒரு அதிர்ச்சியையும் கேவலமான ஒரு உணர்வையும் கொடுக்கிறது பாருங்கள். (மேலும் சில – ஆழம், பரந்த, விரிந்த, நினைவு, கனவு). தமிழின் ஒளியலகில் ஈடுபாடு கொண்ட நுண்மையான உணர்வுள்ள குழுவால் கலைச்சொற்கள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

உங்கள் வாசகர் வட்டம் மிகப் பெரிது. நீங்கள் கலைச்சொல்லுக்கு எங்கெங்கோ தேடுவதை விட, வாசகர்களோடு அல்லது, அவர்களில் (எங்களில்) மொழி அழகியலில் ஈடுபாடு கொண்டவர்களோடு கலந்து, அவர்களில் ஒரு குழு ஏற்படுத்தி இதனை செயல்படுத்தினால், தமிழுக்கு இது ஒரு சிறந்த தொண்டாகவே அமையும்…
பாலா, கோவில்பட்டி.
http://www.bala1977.blogspot.com/

அன்புள்ள பாலா

கலைச்சொற்களை அப்படி எளிதாக விவாதித்து உருவாக்க முடியாது. பலசமயம் புதிய சொற்கள் நமக்கு ஒவ்வாமையை உருவாக்கும். ஆனால் கேட்கக் கேட்க காது பழகி பிடித்துவிடும். ஊடகம் என்ற சொல் எனக்கு அப்படி சுத்தமாகப் பிடிக்காத சொல்லாக இருந்திருக்கிறது

சில சொற்கள் நமக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக ஒவ்வாமல் தோன்றும். எனக்கு வேதியியல் மிக அருமையான சொல்லாக்வே தோன்றுகிறது. நாம் ஒரு சொல்லை விரும்பாமலிருக்க உளவியல் காரணங்கள் இருக்கலாம். அவ்வாறு ஒரு சொல்லை நாம் மட்டும் நிராகரித்துவிட முடியாது. அது சூழலில் உள்ல சொல் என்றால் நாம் பயன்படுத்தியாகவேண்டும்

கடைசியாக சொல்லுருவாக்கத்தில் பல விதிகளும் தேவைகளும் உள்ளன. கலைச்சொல் மேலும் சொற்களை உருவாக்கக்கூடியதாக இருக்கவேண்டும். வேதி என்பது கெமிக்கல் என்ற சொல்லுக்கு நிகரானது. வேதிவினை வேதிப்பரிணாமம் வேதிக்கூறு என அச்சொல்லை நீட்டலாம். இயல் என்பது ஒரு தனி அறிவியலைச் சுட்டும் சொல். வாதம் என்பது ஒரு சிந்தனையை மட்டும் சுட்டும் சொல். வேதியியலுக்குள் உள்ள ஒரு முறைதான் ரசவாதம்

சொல்லை சொல்லாக்க விதிகளையும் அச்சொல்லின் பொருளின் பின்னணியையும் அறிந்தவர்கள் உருவாக்குவதே முறை. அது ஒரு பொதுவிவாதத்தளத்துக்கே முன்வைக்கப்படுகிறது. அது சூழலால் ஏற்கப்பட்டால் மட்டுமே நீடிக்கிறது. அப்படி கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட பல சொற்கள் வழக்கொழிந்து விட்டன. ஒலி சார்ந்த ஒரு தேர்வு சமூகத்தில் செயல்படத்தான் செய்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைவாசகர்ளுடனான சந்திப்பு
அடுத்த கட்டுரைஎன் பேட்டி