ஆலோசனைக் கடிதங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன்.இன்னுக்க
நான் அஸ்வத். எனக்கு தமிழ் எழுத படிக்க வராது. என்னோட ஸ்கூல்ல தமிழ் இல்ல. இந்தியும் மராத்தியும் மட்டும்தான். நான் பர்ஸ்ட் ஸ்டேண்டர்ட். நான் இந்தி A+. நான் இந்த லெட்டரே அப்பாட்ட சொல்லித்தான் எழுதறேன். தமிழ்ல் அ, ஆ..முடிச்சுட்டேன். உங்க புக்குல நீங்க அ, ஆ — அதிகமாக எழுதறதேயில்ல போல. ஒரு பெரிய புக்குல ஒரேயொரு உம்மாச்சி படம் மட்டும் போட்டிருக்கேள். அதுவும்
உம்மாச்சி படுத்துண்டேயிருக்கார். எங்கம்மாவுக்கும் தமிழ் தோடாதோடாதான் வரும். ஆனா அப்பா எப்பப்பாத்தாலும் உங்க புக்கத்தைதான் படிச்சுண்டுருக்கிறார்.அது போக இண்டர்நெட்டில வேற..

இப்பல்லாம் அப்பா- (மணி) எங்கிட்ட நிறைய பேசறார்.. என்னை குளிப்பாட்டி விட்டா. பகுத் அச்சா லகராஹே.. நீங்க ஏதோ சோட்டா பாச்சாவைப்பத்தி எழுதிருக்கலாம். தேங்க்ஸ்..

என்ன பயம்னா இப்படியெல்லாம் இன்னோருத்தர் எழுதறதை படிச்சுட்டு பாசமயிருக்கிற அப்பா, நாளைக்கு அவா வேற மாதிரி எழுதின என்னவாகும்னு பயமாயிருக்கு. இன்பாக்ட், அப்பாட்ட இதை கேட்டேன், ஹி செட்.. ‘யூ ஆர் ரைட்’னு. முன்னாடி அப்படித்தான் யாரோ தாடிவைச்சா எழுத்தாளர படிச்சுட்டு இரண்டு பெண்டாட்டி ரொம்ப முக்கியம்னு ஊரெல்லாம் பேசி, தாத்தா கையால செருப்படி வாங்கினாராம். (இதை சொன்னப்ப அம்மா ரொம்ப பயந்துட்டா.. உடனே
டீவீடில.. ஹம் ஆப்கே ஹோன் படத்தை எல்லாரையும் உக்காந்து பாக்கவைச்சா..) ஆனா அப்பா சொன்னா.. நம்மை ரெஸ்பெக்ட் பண்றவா சொல்ற எல்லாத்தையும் நம்மை ரெஸ்பெக்ட் பண்ணுவோம்னு.. ‘பாப்பா. மே ஆப்கோ பகுத் ரெஸ்பெக்ட் கர்த்தாவும்னு’ சொன்னேன். அப்பாவுக்கு தீடீர்னு கண்ணு ரெட்டாயி, கலங்கிடுத்து.. ‘தேங்க்ஸ்னு’ சொன்னா.
டைமாயிடுத்து.. ஹோம்வேர்கிருக்கு. வொர்க்ஸீட்டிருக்கு.. தமிழ் படுச்சு..படாவாகி உங்கபுக்கெல்லாம் எனக்குத்தான்னு அப்பா சொல்றா.. இத்தன படா புக்கு..பாப்ரே.!.. பை.. பை.. அப்புறம் சுட்டில உங்களுக்கு இமெயில் பண்றேன்..

அஸ்வத்..
(மிஸ் சொன்னமாதிரி ..டேட்.. டைம்.. ப்ரம் எல்லாம் போடல.. இமெயிலே இதெல்லாம் போட்டுக்கும்)

son of Mr.K.RMani.[Mumbai]

அன்புள்ள அஸ்வத்,
மம்முவெல்லாம் ஒழுங்காச் சாப்பிடாத கொழந்தைகள் எப்போ பாத்தாலும் படுத்துட்டேதான் இருக்கும்னு நான் எழுதின புஸ்தகத்தைத்தான் உங்கப்பா படிக்கிறார்னு நெனைக்கிறேன். உங்கப்பாகிட்டே படிச்சுகிட்டே குளிப்பாட்டவேணாம்னு நான் சொன்னதாச் சொல்லு. அதேமாதிரி வேற புஸ்தகம்லாம் ஒண்ணும் படிக்க வேணாம்னும் சொல்லிரு. ஏன்னா இன்னொரு புஸ்தகத்திலே கொழந்தைங்களோட மம்மியையும் குளுப்பாட்டலாம்னு எழுதியிருக்கதா சொன்னாங்க.

நான் சின்னக்கொழந்தையா இருக்கிறப்ப எங்கம்மா ஆ சொன்னதுமே உள்ள சோத்தை ஊட்டி விட்டிருவாங்க. அதுக்குப்பயந்து நான்லாம் அப்பலேருந்தே ஆ ல்லாம் சொல்றது கெடையாது. ஸ்கூலிலே கூட இ ஈ ன்னுதான் படிக்கவே ஆரம்பிச்சேனாம்.
நல்லா படி. ரோட்டிலே போறப்ப ராஜ் தாக்கரேன்னு ஒரு மாமா பூச்சாண்டி வேசம் போட்டுட்டு வந்தாக்க ஓரமா ஒதுங்கிரு. உன்னோட தமிழ் நல்லாருக்கு. எதிர்காலத்திலே கவிதையெல்லாம் கூட அந்த தமிழிலே நீ எழுதலாம

ஜெமாமா

88

அன்புள்ள ஐயா,

நீங்கள் உங்களுடைய இணைய இதழிலே உலகத்திலே உள்ள எல்லா விஷயங்களைப் பற்றியும் மேலான கருத்துக்களைச் சொல்லி வருவதாக ஊரிலே சொன்னார்கள். சந்தோஷமாக இருந்தது. ஆயுர்வேதம், சித்தா ,யூனானி மருத்துவம், சிறுநீர் மருத்துவம் [ஏனுங்க மத்தது ஒதவுமுங்களா?] போன்றவற்றைப்பற்றியும் எழுதுகிறீர்களாம். திருக்குறள், நாலடியார், நான்மனிக்கடிகை, பகவத் கீதை, குர் ஆன் ஒண்ணுமே விட்டுவைப்பதில்லையாம். பெரிசாக சொல்லி பாராட்டிக்கொண்டார்கள். நல்ல விஷயம். ஒரு ரூபாய் ரேஷன் அரிசி, இலங்கைப்பிரச்சினை இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டார்கள்.

அதையும் சொல்லிவிடவேணுமாய் கேட்டுக்கொள்கிறேன். எல்லாவற்றைப்பற்றியும் எல்லாமும் சொல்லுறதுக்கும் ஒரு ஆள் வேனும் இல்லீங்களா? எதுக்குச் சொல்கிறேனென்றால் இப்போது எனக்கு ஒரு பெரிய பிரச்சினை. அதுக்கு என்ன செய்யாலாம் என்று என்னுடைய சேக்காளிகளிடம் கேட்டபோது இன்னின்னமாதிரி இன்னாருக்கு ஒரு கடுதாசி போடு என்று சொன்னார்கள். நீங்கள் பணமும் வாங்குவதில்லையாமே. அதனால் எழுதுகிறேன்.

அதாகப்பட்டது ஐயா, நான் ஒரு டிவிஎஸ் 50 வண்டி வைத்திருந்தேன். 2000 மாடல். நான் ஆறு வருஷமாக வைத்திருந்தேன். 1600 ரூபாய்க்கு வாங்கியது புரோக்கருக்கு 200 ரூபாய். வாங்கியபின் டயர் மாற்றினேன். மட்கார்டு துருப்பிடித்து இருந்ததையும் மாற்றியிருக்கிறேன். நன்றாகத்தான் ஓடியது. என் வீட்டுக்காரி அதை கழுதை என்றுதான் சொல்லுவாள். எங்கே வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொண்டு போகும். எங்கே வேண்டுமானாலும் விடலாம், ஒருபயலும் தொடவே மாட்டான். அப்பேர்ப்பட்ட வண்டியை இப்போது ஒருவாரமாக காணவில்லை. போலீஸில் புகார்கொடுக்கப்போனேன் ‘ஏன் ஊட்ல டம்ளர் ஸ்பூனு தொலைஞ்சதையும் எளுதி குடுக்கறது?’ என்று அங்கே ஒரு மீசைக்காரப்போலீஸ்காரர் சொன்னார். அதனாலே உங்களுக்கு எழுதுகிறேன். நீங்கந்தான் ஒரு நல்ல வழி காட்டவேணும

பின்குறிப்பு. இதுக்குப் பிறகு ஒரு ‘வேற’ சந்தேகம் இருக்குங்

செந்தில் பழனிச்சாமி

அன்புள்ள ஐயா,
உங்கள் கடிதம். கீதை என்ன சொல்கிறதென்றால்

உடல்கள்
அறியப்படாமையிலிருந்து
உருவாகிவந்தவை.
நடுவே மட்டும்
அறியப்படுபவையாகின்றன
பின்பு கரைந்தழிகின்றன
இதில்
எதற்கு துயரம்?
இது டிவிஎஸ் 50 உடல்களுக்கும் பொருந்தும். ஆகவே நீங்கள் இதை எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் டிவிஎஸ் 50 இந்நேரம் உறுப்புகளாகச் சிதறி பல்வேறு வடிவங்கள் எடுத்திருக்கும். அதாவது பழைய சட்டையை உரித்து புதிய சட்டை அணிந்திருக்கும். கோவை தெருக்களில் எங்கெல்லாமோ அது ஓடிக்கொண்டிருக்கிறது. பல வடிவங்களில். ஆகவே மனம் தேறுக

இல்லாதது
இருப்பதாவதில்லை
இருப்பது
இல்லாமலாவதுமில்லை
இவ்விரண்டின் உண்மையை
தத்துவமறிந்தோர்
அறிவர
என்ற கீதா வாக்கியம் உங்கலுக்கு தேறுதல் அளிக்கும்.

பிகு: அந்த ஆலோசனைகளுக்கு www.charuonline.com என்னும் இணையதளத்தை அணுகுக. ·பீஸீக்காகக் கொஞ்சம் பரிதாப மன்றாடல் இருக்கும். இருந்தாலும் ஆலோசனை பக்காவாக இருக்கும் என்கிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைதோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்: கடிதங்கள்