ஒரு பேராறு

நாராயணகுரு ஒருமுறை கொல்லம் அருகே ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தார். கிராமத்தில் அப்போது ஒரு பகவதிகோயிலில் விழா நடந்துகொண்டிருந்தது. நாராயணகுரு எட்டிப்பார்த்தார். அந்தக் காலகட்டத்தில் குரு கிராமத்து சிறுதெய்வங்களுக்கு எதிராக வெளிப்படையாக ஒரு போரை தொடுத்திருந்தார். உக்கிரமான கிராம தேவதைகளை எடுத்து வீசிவிட்டு அங்கே சாத்வீகமான தெய்வங்களை நிறுவி வந்தார். இது அவருக்கு கடுமையான எதிர்ப்பை உருவாக்கியிருந்த காலகட்டம் அது.

கையில் கமுகுப்பூக்குலையுடன் பகவதியாக சன்னதம் வந்து துள்ளிக் கொண்டிருந்தவர் ஒரு வயோதிகர். அவரது வாயில் பற்களே இல்லை. முதுமையின் களைப்பு காரணமாக பகவதி மூச்சிரைத்தபடி அவ்வப்போது இளைப்பாறிக்கொண்டுதான் ஆடினாள். நாராயணகுருவை கண்டதும் பகவதிக்கு ஆள் யாரென்று தெரிந்துவிட்டது. கிராமத்துப் பகவதிக்கு எதிராக கலகம்செய்யும் சாமியார் அல்லவா?

பகவதி கோபம் கொண்டு கொந்தளித்தது. எம்பி எம்பி குதித்தது. நேராக குருவின் அருகே வந்து ‘ என்னை நீ நம்பலையா? என் மேலே சந்தேகமா? ஊ? திருட்டாந்தம் காட்டணுமா? திருட்டந்தம் காட்டணுமா?’ என்று கூவியது. [திருட்டாந்தம் என்றால் ஆதாரம்]. குரு புன்னகையுடன் ‘ஆமாம் பகவதி’ என்றார். பகவதி ‘’என்ன காட்டணும்? சொல்லு என்னகாட்டணும்?’ என்று துள்ளியது.

‘தங்கள் வாயில் நிறைய பற்கள் முளைப்பதைப் பார்க்கவேண்டும்’ என்றார் குரு. கூட நின்றவர்கள் சிரித்துவிட்டார்கள். பகவதியும் வாளைத்தாழ்த்திவிட்டு பகபகவென சிரிக்க ஆரம்பித்தது.

இந்த சம்பவம் நாராயணகுரு யார் என்பதைக் காட்டுகிறது. அவர் தனக்கு தவறு என தோன்றிய கருத்துக்களுக்கு எதிராக வெளிப்படையான போராட்டத்தை தொடுத்தவர். சமூக சீர்திருத்தத்துக்காக களமிறங்கி போராடியவர். ஆனால் அவரது வழி என்பது சாத்வீகமானது. எதிரிக்கும் அது உள்ளூர சம்மதமாகவே இருக்கும். காரணம் அது அவரது மனசாட்சியின் குரலாகத்தானே இருக்கிறது. ஆகவேதான் நாராயணகுருவை ‘எதிரிகளே இல்லாத போராளி’ என்று கேரள வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.

தன் வாழ்நாள் முழுக்க ஒரு சமூகப்போராளியாக இருந்த நாராயணகுரு ஒரு தருணத்திலும் எதற்கு எதிராகவும் கண்டனங்களை முன்வைத்ததில்லை. எவருக்கும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. எந்த சமூகத்தின் மீதும் எந்த தனிமனிதர்மீதும் ஒரு தருணத்திலும் சிறிதளவுகூட வெறுப்பையோ கோபத்தையோ காட்டியதில்லை. முழுக்கமுழுக்க சாத்வீகமானவராக அவர் இருந்தார். ஆனால் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவர அவரால் முடிந்தது.

காரணம் நாராயணகுரு சமூகசீர்திருத்தவாதி மட்டும் அல்ல என்பதுதான். அவரது சீர்திருத்த முயற்சிகள் ஆழமான ஆன்மீக ஒளியில் இருந்து முளைத்தவை. அவர் ஆன்மீகமாக பல படிகளில் ஏறியவர். முதிர்ந்து கனிந்த மனம் கொண்டவர். ஆகவே ஒரு தந்தையைப்போல அவர் இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல ஒடுக்கும் மக்களுக்கும் அவர் தந்தையின் இடத்தில் இருந்தார். அந்த தந்தையின் ஒரு மகன் முரடன் , இன்னொரு மகன் வலிமையற்றவன் என்று வைத்துக்கொள்வோம். பலவீனமான மகனை வலிமையான மகன் தாக்கினான் என்றால் தந்தை பலவீனமான மகனுக்காக பேசுவார். முரட்டு மகனை திருத்த முயல்வார். ஆனாலும் அவர் இருவருக்கும் தந்தைதான். அவரது அன்பு இருவருக்கும் உரியதுதான். அவர் செய்வது இருவருடைய நன்மைக்காகவும்தான்.

நாராயணகுரு எல்லா மனிதர்களுக்கும் நலம் வரவேண்டும் என்றுதான் அநீதிகளுக்கு எதிராகப் போராடினார். எல்லா மக்கள் மீதும் அன்பு கொண்டிருந்தார். அதனால்தான் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஞானியாகிய நாராயணகுருவுக்கு எல்லா சமூகங்களிலும் சீடர்கள் அமைந்தார்கள். எல்லா தரப்பு மக்களும் அவரால் எழுச்சி அடைந்தார்கள். அவரது உபதேசங்களில் இருந்துதான் கேரளத்தை புதியதாக கட்டிஎழுப்பிய சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் உருவானார்கள். ஒட்டுமொத்த கேரளத்துக்கே மறுமலர்ச்சியை அவரால் உருவாக்க முடிந்தது. கேரள மறுமலர்ச்சியின் நாயகன் என அவரை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நாராயணகுருவால் அறிவின் ஒளிபெற்றவர்கள் பலர். ரவீந்திரநாத் தாகூர் அவரைச் சந்தித்து ஆன்மீகமான மலர்ச்சியை அடைந்திருக்கிறார். காந்தி நாராயண குருவைச் சந்தித்து அவரிடம் தன்னுடைய சாத்வீகமான போராட்டத்தைப்பற்றி விவாதித்திருக்கிறார்.

மேலே சொன்ன நிகழ்ச்சியில் இருந்து நாம் அறியக்கூடிய ஒன்றுண்டு. குருவின் நகைச்சுவை உணர்ச்சிதான் அது. அறியாமை காரணமாக மனிதர்கள் தவறுசெய்கிறார்கள் என்று குரு அறிந்திருந்தார். ஆகவே மனிதர்களைப்பார்த்து அவர் பிரியமாகச் சிரித்தார். மூடத்தனம், முரட்டுத்தனம் போன்றவற்றை குரு எப்போதும் மென்மையாக கேலிசெய்வதைக் காணலாம். அவர் மனிதர்களை புண்படுத்தவில்லை, பண்படுத்தினார். அவர் அறியாமையைவெறுக்கவில்லை, அதுவும் இயற்கையில் உள்ளதுதானே என்றுதான் நினைத்தார்.

தன் சீடர்களுக்கு கற்பிப்பதற்கும் குரு அந்த நகைச்சுவையைத்தான் கருவியாக கொள்கிறார். நாராயணகுருவின் சீடர்களில் சகோதரன் அய்யப்பன் என்று ஒருவர் இருந்தார். அவர் மிகத்தீவிரமான நாத்திகர். குரு சகோதரன் அய்யப்பனை மிகவும் விரும்பினார். நாராயணகுரு ஆலுவா என்ற குருகுலத்தில் வைத்து செய்த ஒரு உரை ஆலுவாப்பேருரை என்ற பேரில் வரலாற்றில் புகழ்பெற்றிருக்கிறது. அதில்தான் அவர் ’ஒருசாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதனுக்குப் போதும்’ என்ற புகழ்பெற்ற வரியைச் சொன்னார். இன்று நாராயணகுருவின் உபதேசங்களில் முக்கியமானதாக அது கருதப்படுகிறது.

ஆனால் சகோதரன் அயப்பன் தன்னைப்பொறுத்தவரை அந்த வரிக்கு ‘சாதி வேண்டாம், மதம் வேண்டாம், தெய்வம் வேண்டாம் மனிதனுக்கு’ என்றுதான் பொருள் என்று அறிவித்தார். நாராயணகுரு அதற்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை. எதையும் விவாதிப்பது நாராயணகுருவின் வழக்கமே அல்ல. அவர் அதிகம் பேசமாட்டார். சில சொற்களை மட்டுமே சொல்வார்.

கொஞ்சநாள் கழித்து சகோதரன் அய்யப்பன் தலித் மக்களுக்காக ஒர் இயக்கத்தை ஆரம்பித்தார். அதற்காக ஒவ்வொருவரும் ஒரு ரூபாய் நன்கொடை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முதல் ஒரு ரூபாயை நாராயணகுரு கொடுக்கவேண்டும் என்று சகோதரன் அய்யப்பன் நேரில் வந்து கேட்டுக்கொண்டார். குரு சிரித்துக்கொண்டு சொன்னார் ‘கொடுக்கிறேன். ஆனால் அய்யப்பனின் கணக்கில் ஒன்று என்றால் பூஜ்யம் என்றுதானே அர்த்தம்?’ சகோதரன் அய்யப்பன் சிரித்துவிட்டார். குரு என்ன சொல்கிறார் என்று அவருக்கு புரிந்தது.

நாராயணகுரு கிராமத்து தெய்வங்களை அகற்றினார் என்று முதலில் சொன்னேன். எதற்காக அதைச் செய்தார். முதல்விஷயம் அந்த தெய்வங்களின் பேரைச்சொல்லி பிழைப்பு நடத்தும் பூசாரிக்கும்பல் ஊர் தோறும் இருந்தது. அவர்கள் மக்கள் பணத்தை சுரண்டி கோழியும் சாராயமும் வாங்கி தின்று குடித்து ஆட்டம் போட்டார்கள். ஆகவே நாராயணகுரு அந்த வழிபாடுகளை ஒழித்தார்

ஒரு சமூகம் எதை வழிபடுகிறதோ அதுதான் அதன் இலட்சியமாக ஆகும்.அதை ஒட்டித்தான் அச்சமூகத்தின் மனம் செயல்படும். மென்மையான விஷயங்களை வழிபடுவது மனதை மென்மையாக ஆக்கும். கல்வியை வழிபட்டால் கல்வி கிடைக்கும். கிராமத்துதெய்வங்கள் கடந்தகாலத்தில் உருவானவை. அப்போது போர் நடந்துகொண்டிருந்தது. வீரமே எல்லாராலும் விரும்பப்பட்டது. ஆகவே போர்த்தெய்வங்களை மக்கள் வழிபட்டார்கள்.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்று கல்விதான் முக்கியமானது. ஆகவேதான் நாராயணகுரு சரஸ்வதி தேவியை நிறுவி அதை வழிபடச் சொனனர். அதன்பின் விளக்கையே கடவுளாக கோயிலுக்குள் நிறுவி அதை வழிபடச்சொன்னார். அதன்பின்னர் அவர் ஒரு நிலைக்கண்ணாடியை கோயிலில் நிறுவி வழிபடச்சொன்னார். லட்சக்கணக்கான எளிய மக்கலிடம் அவர் சொன்னது இதுதான் ’நீ சாதாரணமானவன் அல்ல, உள்ளுள்ளும் கடவுள் இருக்கிறார்’.

அதன்பின் சத்யம் தயை தர்மம் ஆகிய சொற்களை சுவரில் எழுதி அதையே தெய்வமாக வழிபடச்சொன்னார். இவ்வாறு உயர்ந்த பண்புகளை தெய்வமாக வழிபடுவது வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் ஒளியையும் கொடுக்கும் என்று சொன்னார்

நாராயணகுரு முக்கியமான தத்துவ சிந்தனையாளர். ’ஆத்மோபதேச சதகம்’ ’தர்சன மாலா’ போன்ற பல முக்கியமான தத்துவ நூல்களை சம்ஸ்கிருதம் மலையாளாம் மற்றும் தமிழில் எழுதியிருக்கிறார். அவை ஆழமான பொருள்கொண்டவை. நாராயணகுருவின் மாணவர்களான நடராஜகுரு , நித்ய சைதன்ய யதி ஆகியோர் அந்நூல்களுக்கு ஆங்கிலத்தில் விரிவான உரை எழுதியிருக்கிறார்கள். அந்த நூல்கள் உலகமெங்கும் தத்துவ ஞானிகளால் ஆராயப்படுகின்றன

ஆனால் நேர்ப்பேச்சில் குரு தத்துவத்தையும் நகைச்சுவையுடன்தான் சொல்வார். ஒருமுறை சென்னையில் ஒரு பணக்காரர் குருவை அவரது வீட்டுக்கு கூட்டிக்கொண்டு செல்ல கார் அனுப்பியிருந்தார். குருவுக்கு செல்ல விருப்பம் இல்லை. ‘நான் ஏன் அங்கே செல்லவேண்டும்?’ என்று கேட்டார். சீடர்கள் ’ கார் வந்திருக்கிறதே குரு’ என்றார்கள்

குரு சிரித்தபடி ‘வண்டி இருக்கிறது என்பதுதான் ஒரு பயணத்துக்க்கான காரணமா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார். சீடர்கள் அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்துகொண்டார்கள். சிந்தித்துப் பாருங்கள். நாம் வாழ்க்கையில் ஒரு விஷயத்தைச் செய்வதற்குக் காரணம் அது நமக்கு தேவை என்பது அல்ல. அதை நம்மால் செய்ய முடிகிறது என்பதுதான். அல்லது அதைச்செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதுதான்.

போனவருடம் மருத்துவம் படிக்கும் ஓரு மாணவியிடம் கேட்டேன், ’உனக்கு மருத்துவம் பிடிக்குமா?’ என்று. அவள் ‘இல்லை, எனக்கு இலக்கியம்தான் பிடிக்கும்’ என்றாள். நான் ’அப்படியானால் ஏன் மருத்துவம் படிக்கிறாய்?’ என்றேன். ‘எனக்கு பிளஸ்டூவில் ஆயிரத்தி நூற்றியெட்டு மார்க் கிடைத்ததே அதனால்தான்’ என்றாள். வண்டி இருக்கிறது என்பதனால் பயணம் போவது என்றால் இதுதான் இல்லையா?

நாராயணகுரு அபூர்வமான மனிதர். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. அத்துடன் ஆன்மீக ஞானி. அவர் ஆழமான நூல்களை எழுதியவர். அதேசமயம் எளிமையான நகைச்சுவை வழியாக விஷயங்களைச் சொன்னவர். ஆறு முழுக்க நீர் பெருகிச் செல்கிறது. அதில் யானையும் தண்ணீர் குடிக்கும், குருவியும் தண்ணீர்குடிக்கும் இல்லையா? அதேபோல பேரறிஞர்கள் மட்டுமல்ல குழந்தைகள்கூட நாராயணகுருவிடம் அறிந்துகொள்ள ஏராளமாக உள்ளன

நன்றி

[25-08-10 அன்று நாகர்கோயில் கோட்டாறு நாராயண குரு நிலையத்தில் நிகழ்ந்த விழாவில் கட்டுரைப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஆற்றிய உரை]

மறுபிரசுரம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 65
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 66