சில சைவப்பாடல்கள்

ஊட்டி கூட்டத்துக்கு சைவ இலக்கிய அறிமுகம் செய்ய வருவதாக இருந்த மரபின் மைந்தன் முத்தையா வர இயலவில்லை. ஆகவே நான் சில கவிதைகளை வாசித்து அவற்றின் அழகியலை மட்டும் அறிமுகம் செய்தேன். அக்கவிதைகள் இவை.

கவிதைகளை ரசிப்பதற்கான ஒரு பயிற்சி மட்டுமே இது. ஆகவே கவிதைகளின் கருத்தியல் அல்லது தத்துவ உள்ளடக்கம் குறித்த விவாதங்கள் அதிகமாக முன்வைக்கப்படவில்லை. சைவம் சார்ந்த கவிதைகளில் சைவ மெய்ப்பொருளே வெளிப்படுகிறது. ஆயினும் அக்கருத்துக்களை கவிதையாக இவை மாற்றிள்ள முறை மட்டுமே கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

விரிவான விளக்கங்கள் மூலம் அக்கவிதைக்குள் வாசகர் செல்வது தடையாகிவிடக்கூடாதென்ற கவனமும் இருந்தது. ஆகவே கவிதையின் குறைந்தபட்ச கவித்துவ அர்த்தசாத்தியங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன.


திருமந்திரம்

மண்ணகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடல் உற்றானுக்கே
கண்ணகத்தே நின்று காதலித்தேனே

மண்ணானவன். வானமானவன். விண்ணானவன். வேதமானவன். பண்ணில் இன்னிசைப்பாடலானவன். அவனை கண்ணில் நிறுத்தி காதல்கொண்டேன். நேராகப்பார்த்தால் இது ஒரு கடவுள் துதி. ஆனால் இங்கே வழிபடப்படுவது தூய கருத்துருவமாகிய சிவம்.

பண்டைய பாடல்களில் வைப்புமுறையை எப்போதும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒவ்வொன்றும் சொல்லப்பட்டுள்ள வரிசையில் எப்போதுமே கவித்துவ உட்குறிப்பும் தத்துவசிந்தனையும் இருக்கும். சாதாரணமாக அவை அமைக்கப்பட்டிருக்காது.

இக்கவிதையில் பரமன் முதலில் மண்ணுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறான். அடுத்து வானம். மூன்றாவது விண். ஏனென்றால் வானம் என்பது விண் அல்ல. வானம் என்றால் பருவடிவமாக அறியப்படுவது. அதாவது . விண் என்றால் தத்துவத்தாலும் உள்ளுணர்வாலும் உய்த்தறியப்படுவது அதாவது .

மூன்றாவதாக வேதம். இங்கே வேதத்தை மெய்யறிவின் வடிவம் என்று பொருள் கொள்வார்கள். வேதம் என்ற சொல்லுக்கே வேதிக்கபட்டது என்று பொருள். அதாவது சாராம்சமாக வெளிப்படுத்தப்பட்டது. ஞானம். விண்ணகம் என்பது எப்போதுமே ஒரு மெய்ஞானமாக மட்டும்தானே அறியப்பட முடியும்? விண்ணகம் அடங்குவது மெய்ஞானத்தில் அல்லவா?

அந்த மெய்ஞானமாகிய வேதம் பண்ணில் அடங்கும். ஆகவே அதைத்தொடர்ந்து வருவது பண். நம் நாவிலும் நெஞ்சிலும் நம் கை கருவியிலும் உள்ள இசை. அதில் பாடலாக அமைந்தவன் என பாடல் இறைவனை குறிப்பிடுகிறது . விண் எனும் அலகிலா வெளி வரை விரிந்து அதில் இருந்து வேதமாக ஆகி சட்டென்று கைக்குள் அடங்கும் பண்ணாக ஆகிவிடுகிறது.

அப்படிப்பட்ட சிவனை கண்ணகத்தே நின்று காதலித்தேன் என்ற வரி இன்னும் அந்தரங்கமாக ஆக்குகிறது. பண்ணில் நின்றவனை என் கண்ணில் நிறுத்தினேன். கண் என்பதை விட கண்ணகம் என்ற மொழி முக்கியமானது. கண்ணாக நிற்கும் அகம். அகக்கண். அவனை நான் என் பிரக்ஞையாக நிறுத்தி காதல்கொண்டேன் என்கிறது பாடல்

இந்தப் பாடலில் உள்ள கவித்துவம் என்பது இதில் உள்ள ஒரு அற்புதமான வட்டம்தான். புறவயமாக ஆரம்பிக்கிறது கவிதை. மண் அதன் பின் வானம் அதன்பின் விண் அதன் பின் புறம் அகமாக ஆகும் தருணமாகிய வேதம். அதன் பின் புறத்தில் அகவய வெளிப்பாடான பண்ணும் பாடலும். அதன்பின் முற்றிலும் அகமாக இருக்கும் பிரக்ஞை.

கிட்டத்தட்ட சைவத்த்தின் பிரபஞ்ச தரிசனமே இதில் வெளிவருகிறது எனலாம். சைவசித்தாந்தம்தான் திருமந்திரத்தின் பேசுபொருள். எளிய துதிகளில் கூட அது நுண்மையாகச் செயல்படுகிறது


யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்ற தலைப்படும்தானே

[முதலாம் தந்திரம்]

’சொல்லிடின், ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான் பற்றப் பற்ற வான்பற்றி நின்ற மறைபொருள் தலைப்படும்தானே. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’

இவ்வாறு இக்கவிதையை பிரித்து அமைத்து வாசிக்கலாம். இதற்கு கொண்டுகூட்டி பொருள் கொள்ளுதல் என்று பெயர். கவிதையின் சொற்றொடர் அலகுகளை தெளிவான பொருள் அமையும்படி இடம் மாற்றலாம். நவீன உரைநடையைக்கூட நாம் மனதுக்குள் அவ்வாறுதான் வாசிக்கிறோம். இது கொஞ்சம் பழகிவிட்டிருக்கிறது அவ்வளவுதான்.

உடலுக்குள் உணர்வாக நிற்கும் மந்திரத்தை பற்றும்தோறும் வானாக நிற்கும் மறைபொருளான சிவம் வசப்படும். இவ்வாறு யான்பெற்ற இன்பத்தை இவ்வுலகமும் பெறுக.

உடலுக்குள் உணர்வாக மந்திரம் இருப்பது போல வானத்தின் சாரமாக அந்த மறைபொருள் இருக்கிறது என்ற உவமை இவ்வரிகளில் உள்ளது.

அப்பர் தேவாரம்

ஞானங் காட்டுவர் நன்னெறி காட்டுவர்
தானங் காட்டுவர் தம் அடைந் தார்க்கெலாம்
தானங் காட்டித்தன் தாளடைந் தார்கள்க்கு
வானங் காட்டுவர் போல்வன்னி யூரரே.

தேவாரம் திருவாசகம் போன்ற பாடல்கள் பெரும்பாலும் தோத்திரங்கள். இறைவனை அவை திட்டவட்டமான உருவில் அதாவது சிவபெருமானாக உருவகம்செய்து வழிபடுகின்றன. போற்றிப்பாடுகின்றன. இறைஞ்சுகின்றன.

ஆனால் அப்பாடல்களில்கூட அவற்றின் வைப்புமுறையை கவனித்தால் அவற்றின் தத்துவமும் கவித்துவமும் கலந்துள்ள முறையைக் காணலாம். இப்பாடலில் சிவன் பக்தனை ஆட்கொள்ளும் முறை சொல்லப்பட்டிருக்கிறது. முதலில் ஞானம் அருளப்படுகிறது. அதன் பின் ஞானத்தின் விளைவாக நன்னெறி. அதன் பின் நன்னெறியின் பெறுபொருளாக தானம் அல்லது வீடுபேறு. அவ்வாறாக தன் தாளை வந்தடைந்தவர்களுக்கு வானவர் நிலை.

இப்பாடலில் நான் சுட்டிக்காட்ட விரும்புவது நந்நெறி என்பதன் விளைவாக ஞானம் சொல்லப்படவில்லை என்பதே. ஞானத்தின் விளைவே நன்னெறி. ஞானத்தையே அளிக்க முடியும், அதன்மூலம் இயல்பாக வருவதே நெறியாக இருக்க இயலும். நெறி என்பது தானாகவே வீடுபேறு அருள்வதாக வேண்டும் என்ற பண்டைய விவேகமும் இப்பாடலில் உள்ளது

திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர்,
துளைக்கை வேழத்தர் தோலர், சுடர்மதி
முளைக்கு மூரற் கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும் வார்சடையார் வன்னியூரரே.

தேவார திருவாசகப்பாடல்களில் சிவனைப்பற்றிய உருவ வருணனை மீண்டும் மீண்டும் வரும். சிவபக்தி இயக்கத்தின் மையநோக்கமே சிவன் என்ற தெய்வத்தின் உருவத்தை கோடிக்கணக்கானோர் மனத்தில் ஆழமாக நிறுவுவதே. உருவம் இல்லாமல் பக்தி இல்லை. பக்தி என்பது மனம் நெகிழ்ந்த நிலை.ஆனால் அது உலகியல் சார்ந்தது. ஆகவே உலகியல் சார்ந்த உருவமே பக்தியை உருவாக்குவதாகிறது

அந்த உருவத்தை கவித்துவமான அழகிய படிமமாக ஆக்குவதன் மூலமே தேவார திருவாசகங்கள் மக்கள் மனதில் நிறுவின. ஒரு உருவெளிக்காட்சியாக சிவபெருமானை காட்டமுயல்கிறது இப்பாடல். இப்பாடலில் சிவனின் தோற்றம் வருணிக்கப்படுவதில் நெடுங்காலமாக தொடர்ந்து வரும் தமிழ் மரபின் முறைமை செயல்படுவதைக் காணலாம்.

வண்டு திளைக்கும்படியாக தேன் ஊறியுள்ள கொன்றைமலர்மாலை அணிந்தவன். துளையுள்ள கை – அதாவது துதிக்கை- கொண்ட யானையின் தோலுரித்தவன், சுடரும் நிலவில் முளைக்கும் புன்னகையின் ஒளி கண்டு நாக்கு வளைக்கும் பாம்புள்ள நீண்ட சடை கொண்டவன்.வன்னியூர்ல் கோயில்கொண்டவன்.

தேவார வர்ணனைகளை பொதுவாக வாசித்துச் சென்றால் அவை வெறும் துதிகளே என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. பெரும்பாலான துதிகளில் மீண்டும் மீண்டும் சிவனின் தலையில் உள்ள பாம்பு, தலையிலுள்ள நிலா, சாம்பல் பூசிய தோற்றம், புலித்தோல் போன்ற தோற்ற விபரங்களும் ஆலகால விஷம் உண்டது, முப்புரத்தை எரித்தது யானையின் தோலுரித்து போர்த்தியது போன்ற தொன்மங்களுமே சொல்லப்படும்

ஆனால் பொதுவாக உருவ வழிபாட்டின் உருவங்கள் ஒரு தியானநிலையின் பருவடிவங்கள் என நாம் எண்ண வேண்டும். அவை தியானத்துக்கு உரியவையும்கூட. அதவது அவை ஒரு கவிதைப்படிமம் போல. கவிஞனால் எழுதப்பட்டவை. கவிதை வாசகர்களுக்காக முன்வைக்கப்பட்டவை. சிவன் என்பது ஒரு கவிதை என்றால் அதன் ஒவ்வொரு சிறு வருணனையும் ஒரு கவிதைப்படிமம். ஆகவே இந்த தோற்ற வருணனைகள் முழுக்க முழுக்க கவித்துவமான குறிப்புகள் கொண்டதேயாகும்.

இந்தப்பாடலையே எடுத்துக்கொள்வோம். தியானத்தில் அமரும் ஒருவனுக்கு இப்பாடல் அளிப்பது எந்தச் சித்திரத்தை? முதல் படிமம் இனியது. வண்டு மொய்க்க தேனூறிய பொன்னிறமான கொன்றைமலர் சூடிய சிரம். அடுத்த படிமம் கொடூரமானது. இருளே உருவான யானையரக்கனை கொன்று அந்த இருளாகிய தோலை போர்த்த்க்கொண்டிருக்கும் சிவம். மூன்றாவது மீண்டும் அழகு. வெண் நிலவின் புன்னகை . அதற்கடுத்து மீண்டும் எதிர்மறை படிமம். ஒளிகண்டு வெருவும் நாகம்.

சிவனின் சித்திரத்தை பேரழகும் பெரும்கொடூரமும் இரண்டறக் கலந்த ஒன்றாக காட்டுகிறது இப்பாடல். இந்த அழகை பெரும்பாலான பாடல்களில் காணலாம்.

முந்தைய கட்டுரைசாதிபற்றி மீண்டும்…
அடுத்த கட்டுரைசில சைவப்பாடல்கள் – 2