புதுமைப்பித்தன் இன்று…

ஜெ,

நீங்கள் சொன்னதில் ஒரு சின்ன சந்தேகம்,

புபி இப்போதும் இருட்டிலேதான் இருக்கிறார் என்கிறீர்களா? எனக்கென்னவோ அப்படி தோன்றவில்லை. இன்றைக்கு கல்கிக்கு ஒரு இலக்கிய முக்கியத்துவமும் இல்லை. நூற்றாண்டுவிழவையே பாருங்கள். கல்கி நூற்றாண்டை அவரது வாரிசுகள்தான் கொண்டாடினார்கள். ஆனால் புபி நூற்றாண்டை எழுத்தாளர்கள் அமைப்புகள் வருசம் பூரா கொண்டாடினார்கள். அவரைப்பற்றித்தான் ஏராளமான ஆராய்ச்சி நூல்கள் வருகின்றன. அவரது எல்லா எழுத்தும் அச்சிலே கிடைக்கிறது. கல்கியின் பாதி புஸ்தகம் கிடைப்பதில்லை. மல்வுவிலையில் நாவல்களை வாங்குகிறார்கள் அவ்வளவுதான். புபிக்கு இருக்கும் முக்கியத்துவம் பாரதியாருக்கு மட்டுமே இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் ராமானுஜன் அப்படி அல்ல. அவரை இப்பவும் தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாது. பள்ளிக்கூடத்தில்கூட பாடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. புபி பள்ளிநாளிலேயே ருசி உள்ள குழந்தைகளுக்கு இன்றைக்கு அறிமுகம் ஆகிவிடுகிறார்

சிவகுமார் கெ

அன்புள்ள சிவகுமார்

நீங்கள் சொன்னது சரி. நான் க.நா.சு எழுதவந்த காலத்தில் புதுமைப்பித்தன் மறக்கப்பட்டிருந்ததைப்பற்றித்தான் சொன்னேன். இன்று புதுமைப்பித்தன்னுக்கு உள்ள முன்னுதாரணபிம்பம் க.நா.சுவால் உருவாக்கி அளிக்கப்பட்டது. அவர் அவரை சொல்லிக்கொண்டே இருந்தார். அவ்வாறாக சிற்றிதழ்வட்டத்தில் அவர் ஒரு வழிகாட்டியாக ஆனார். க.நா.சுவின் வழிவந்தவர்கள் புதுமைப்பித்தன்னை ஒரு குறியீடாக முன்னெடுத்தார்கள். கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, மு.தளையசிங்கம், வெங்கட் சாமிநாதன், வேதசகாயகுமார் என ஒரு பெரிய வரிசை உண்டு.

அவ்வாறு புதுமைப்பித்தன் முன்வைக்கப்பட்டதைக் கண்டித்து அன்றைய மார்க்ஸிய விமரிசகரான தி.க.சிவசங்கரன் ‘வீரவழிபாடு வேண்டாம்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். புதுமைப்பித்தன் மதத்தையும் புராணங்களையும் வைத்து கதை எழுதிவிட்டார் என்ற இயந்திரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ஆனால் க.நா.சு அப்படி ஒரு வழிபாட்டு மனநிலையில் புதுமைப்பித்தன்னை அணுகவில்லை. அவர் புதுமைப்பித்தன்னைப்பற்றி எழுதிய கட்டுரைகளில் கறாரான விமர்சன நோக்கே உள்ளது. உதாரணமாக புதுமைப்பித்தனின் ‘சுப்பையா பிள்ளையின் காதல்கள்’ கதையைச் சுட்டும்போது அதில் ‘சீக்ரட் லை·ப் ஆ·ப் வால்ட்டர்மிட்டி’ என்ற கதையின் சாயல் உண்டு என்பதை சுட்டிக்காட்டிவிட்டுத்தான் மேலே செல்கிறார். பலகதைகளை திட்டவட்டமாக நிராகரிக்கவும் செய்கிறார்.

புதுமைப்பித்தன்னை பிற்போக்கு கதைகளை எழுதியவராக கண்ட முற்போக்கு முகாம்கூட மெல்லமெல்ல அவரை முன்னோடியாக ஏற்றுக்கொண்டதை நாம் பார்க்கிறோம். அதற்கு ஒரு காரணம் புதுமைப்பித்தன்னை வழிபட்ட ஜெயகாந்தன். புதுமைப்பித்தன் நூற்றாண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாடிய அமைப்புகள் இடதுசாரிகளுடையவை.

இன்று புதுமைப்பித்தன் அவருக்கான இடத்தை தரமான வாசகர்களின் நடுவே பெற்றுள்ளார். கல்கியை அவரது இலக்கிய பீடத்தில் இருந்து காலம் எப்போதோ இறக்கி அவரது இயல்பான இடத்தில் முன்னோடியான கேளிக்கை எழுத்தாளர் என்று அமரச்செய்தும்விட்டது. புதுமைப்பித்தன் இன்னும் நெடுங்காலம் பேசப்படுவார். இன்னும் விமரிசிக்கப்படுவார்.

நான் அவரது அங்கீகாரம் பற்றிச் சொன்னது இச்சமூகத்தின் பண்பாட்டு மையங்களின் அங்கீகாரம் பற்றி. அதை உருவாக்க வேண்டியவர்கள் இந்தப் பண்பாட்டில் செயல்படும் அறிவுஜீவிகள். கன்னடத்தில் குவெம்புக்கும் காரந்துக்கும் மலையாளத்தில் தகழிக்கும் பஷீருக்கும் கிடைத்த சமூக அங்கீகாரம் புதுமைப்பித்தன்னுக்கு கிடைக்கவேண்டும். அப்போதுதான் அவர் தமிழ்ப்பண்பாட்டின் முன்னுதாரணமாக அமைய முடியும்

ஜெ

முந்தைய கட்டுரைஇன்செப்ஷன், நனவுணர்வில் கண்ட கனவு
அடுத்த கட்டுரைகேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்