ஈழ இலக்கியம்:ஒரு கடிதம்

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து படித்துக்கொண்டுவருகிறேன். ஆரம்பத்தில் தங்களை “ஈழத்து இலக்கிய எதிர்ப்பாளராக” யாரோ ஒருவர் அறிமுகப்படுத்தியதால் உள்ளார்ந்த வெறுப்பொன்று இருந்தது உண்மையே. ஆனால் தங்களது எழுத்துகளைப் படித்துக்கொண்டு வர, அந்த வெறுப்பு தானாகவே மறைந்துபோனது.

தங்களது நகைச்சுவைக் கட்டுரையான “அன்னை’ கூட கடைசி வரியில் கண்ணீரைத் துளிர்க்கச் செய்தது. என்னைப்பொறுத்தவரை அன்னையும், வர்கீசின் அம்மாவும் தாய்மையின் அன்பையே சொல்லவந்தன என்பது என் தாழ்மையான கருத்து.என் நண்பரும் கவிஞருமான ‘செங்கதிரோன்’முனனவர் மௌனகுரு அவர்களின் சொந்த இடமான கிழக்கிலங்கையிலிருந்து ‘செங்கதிர்’ என்ற மாதச் சிற்றிதழ் ஒன்றை வெளியிடுகிறார். தங்களது ஆக்கங்கள் சிலவற்றை அவருக்குப் பரிந்துரைத்தேன்.. தாங்கள் அனுமதி அளித்தால் அவற்றைப் பிரசுரிக்க அவரும் ஆவலுடனுள்ளார். அனுமதி தருவீர்களா?

அருமையான படைப்பு. கண்களில் நீர் கசிவதைத் தவிர்க்க முடியவில்லை. அதிலும் நான் பணியாற்றிய இலங்கை வானொலியைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியே. சிலவேளைகளில் எனது குரலையும் தாங்கள் கேட்டிருக்கலாம். எஸ்.எழில் வேந்தன் என் பெயர். விளையாட்டு வர்ணனை செய்வது முதல் பல நிகழ்ச்சிகளைப் படைத்துளேன்.  ஒலி நாடகங்களிலும் நடித்துள்ளேன். என் தந்தையார் இலங்கையின் நவீன கவிதைத்துறை முன்னோடிகளில் ஒருவரான கவிஞர் நீலாவணன். தங்கள் நண்பரான முனைவர் மௌனகுருவை நன்கறிந்தவன்

பதிலளித்தால் மகிழ்வேன்.

நன்றி

எஸ்.எழில்வேந்தன்

அன்புள்ள எழில்வேந்தன்,

உங்கள் கடிதம் கண்டேன்.

தாங்கள் நீலாவாணனின் மகன் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைதேன். மௌனகுரு, எஸ்.பொ இருவரும் நீலாவணனைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள். அவரைப்பற்றி எஸ்பொ எழுதிய நீலாவாணன் நினைவுகள் என்ற நூலையும் படித்திருக்கிறேன். கவிதைகளை அதிகம் படித்ததில்லை. பெருந்தொகையாக ஏதும் வரவில்லை என்று எண்ணுகிறேன்

என்னுடைய படைப்புகளுக்கு அப்படி ‘பதிப்புரிமை’ ஏதும் இல்லை. தாரளமாக பிரசுரிக்கலாம்.

என்னுடைய ஈழ இலக்கிய விமரிசனங்களை ஒட்டி அப்படி ஒரு கசப்பு உருவாக்கப்படுகிறதென்பது உண்மை. ஆனால் அது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அதேயளவுக்கு கசப்பு இங்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஈழ எழுத்துக்கள் மீதான வாசிப்பு என்பது மிக மிகக் குறைவு. ஈழத்தவர் மத்தியில் வாய் உபச்சாரமாக மிகவும் மிகையான புகழ்மொழிகளைச் சூட்டுவார்கள். அப்படி சூட்டிய பலருக்கு ஈழ எழுத்தாளர்களின் பெயர்களேகூட தெரியாது என்பதை நான் அறிவேன். எளிமையாக இதைக் கண்டுபிடிக்கலாம். அப்படி புகழ்பவர்கள் வேறு எங்காவது, எதற்காகவாவது, எந்த ஈழ எழுத்தையாவது, மேற்கோள் காட்டியிருக்கிறார்களா? ஈழ இலக்கியம் பற்றி எதையாவது எழுதியிருக்கிறார்களா?

தமிழகத்தில் ஈழம் ஈழம் என்று சொல்பவர்களில் நான்கு ஈழ எழுத்தாளர் பெயர்களைச் சொல்லத்தெரிந்தவர்கள் ஒரு சிலர் கூட இருக்க மாட்டார்கள். இதனால்தான் ஈழ எழுத்துக்கள் தமிழில் சில பிரதிகள் கூட விற்பதில்லை. ஆனால் இந்த வாய் உபச்சாரங்களே ஈழ எழுத்தாளர்கள் மற்றும் எளிய வாசகர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. அவர்களுடைய வருந்தும் மனதுக்கு அவை ஆறுதல் அளிக்கின்றன.

ஈழ எழுத்து பற்றி சீரான கவனம் கொண்டிருந்த, தொடர்ச்சியாக அதைப்பற்றி இங்கே எழுதிய விமரிசகர் என்றால் வெங்கட் சாமிநாதன்தான். ஈழ எழுத்தை எப்போதுமே அவர் கவனித்துப் படிப்பார். எந்த விதமான உபச்சாரச் சொற்களும் இல்லாமல் நேரடியாக அவரது விமரிசனக் கருத்துக்களை முன்வைப்பார். இன்றும் அதைச் செய்து வருகிறார்.

அவருக்கு அடுத்தபடியாக ஈழ இலக்கியம் குறித்து தொடர்ந்த கவனம் கொண்டிருப்பவன் , தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பவன், நான் மட்டுமே. இதில் எளிய அளவில்கூட என்னுடன் ஒப்பிடக்கூடிய தமிழ் எழுத்தாளர்களோ விமரிசகர்களோ கிடையாது. பெரும்பாலானவர்களுக்கு அங்கே என்ன நடக்கிறதென்பதே தெரியாது.வேதசகாயகுமார் வாசிப்பதுண்டு, பெரிய அளவில் எழுதியதில்லை.

பத்து வருடங்களுக்கும் மேலாக நான் ஈழ எழுத்துக்களைப்பற்றி எழுதி வருகிறேன். ‘அமர்தல் அலைதல்’ என்ற பேரில் தமிழினி வெளியீடாக ஒரு நூல் வந்துள்ளது. ‘ஈழ இலக்கியம் ஒரு விமரிசனப்பார்வை’ என்ற பெரிய நூல் எனி இண்டியன் வெளியீடாக வரவுள்ளது. தமிழ் நவீன இலக்கிய வரலாறுகளில் ஈழ இலக்கியத்துக்கும் சரியான இடம் கொடுத்து எழுதப்பட்டுள்ள நூல் நான் எழுதிய ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’

ஆனால் ஒன்று உண்டு, நான் இலக்கிய மதிப்பீடுகளில் சமரசம் செய்து கொள்வதில்லை. தனி வாழ்விலும் அரசியல்நோக்குகளிலும் நான் எப்போதுமே சமரசப்போக்கை மட்டுமே நாடுபவன். எதிலும் சமரசத்துக்கு ஒரு இடமிருக்கும் என்பதே என் பிரியமான கோட்பாடு. இலக்கியத்தரத்தில் அப்படி அல்ல. மேலானதை, மேலும் மேலானதை தொடர்ச்சியாக நாடுவதே இலக்கியத்தின் ஆதாரமான அக இயல்பு என நம்புகிறேன். ஆகவே சமரசமில்லாமல் தரத்தையே நாடுகிறேன்.

ஆகவே  என்னைப்பொறுத்தவரை உலக இலக்கியத்துக்கு என்ன அளவுகோலோ அதுவே தமிழிலக்கியத்திற்கும். தமிழக இலக்கியத்துக்கு என்ன அளவுகோலோ அதுவே ஈழ இலக்கியத்திற்கும். உபச்சாரம் என்பதற்கே இடமில்லை.

ஒரு வாசகராக உங்களுக்குத் தெரியும், அப்படி ஒரு துல்லியமான ரசனையுடன் இலக்கியத்தைப் பார்த்தால் மிகக்குறைவான படைப்புகளையே அங்கீகரிக்க முடியும் என்று. காரணம் இலக்கியம் என்பது அத்தனை எளிய ஒரு நிகழ்வல்ல. அதற்கு ஒரு அபூர்வத்தன்மை உண்டு. ஒரு மொழிச்சூழலில் பலர் அரசியல், சமூகவியல், தனிப்பட்ட தேவைகளுக்காக பலதளங்களில் நிறையவே எழுதுவார்கள். இலக்கியமாகத் தேறுவது கொஞ்சமே

இலக்கியத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்ட ஒரு விமரிசகன் ஒருவரை அங்கீகரிக்க நூறு பேரை நிராகரிக்க வேண்டியிருக்கும். நிராகரிப்புக்கு உள்ளாகிறவர்களுக்குரிய எளிய ஆயுதம் தங்களை நிராகரிப்பவனை நிராகரிப்பதே. அவனுக்கு இனம், மதம், சாதி என ஏதேனும் முத்திரையைக் குத்தி ஆகவேதான் தனது மேலான படைப்பை அவன் அங்கீகரிப்பதில்லை என்று சொல்லிக் கொள்வது. எனவே பெரும்பாலும் இலக்கியவிமரிசகர்கள் மீது இம்மாதிரியான பொருளில்லாத மனக்கசப்புகள் ஏராளமாக இருக்கும். எழுத்தாளன் விமரிசனம் செய்தால் அந்தக் கசப்புகள் அவன் படைப்புகளை மறைக்கும் திரையாக ஆகிவிடும்.

இதனால்தான் எழுத்தாளர்கள் விமரிசனம் எழுதுவதில்லை. என்னிடமும் பலர் எழுத வேண்டாமெனச் சொன்னதுண்டு. நான் அதைக் ஏற்றுக் கொண்டதில்லை. எதை எழுத வேண்டுமெனத் தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும் என்பதே என் எண்ணம். அதன் மூலம் உருவாகும் எதிர்விளைவுகளைப் பற்றிக் கவலையே படக்கூடாது. இப்போதிருக்கும் ஆயிரம் வாசகர்கள் எப்படியும் இருப்பார்கள். அதற்கு மேல் எதுவும் இங்கே எதிர்பார்ப்பதற்கும் இல்லை

நான் எழுத வந்த நாள்முதல் எனக்கு வசைகளும் அவதூறுகளும் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த இருபதாண்டுக்காலத்தில் மாதம் தோறும் குறைந்தது இரண்டு அவதூறு, வசைக்கட்டுரைகளாவது அச்சிலேறுகின்றன. என் எழுத்து அவற்றை மீறி எனக்கு கொஞ்சம் வாசகர்களைப் பெற்றுத்தந்துள்ளது. அது போதும். எனக்கு என்னை எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், பெருவாரியாகப் படிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. என்னை ஒட்டுமொத்த தமிழகமே வெறுத்தாலும்கூட ஒரு கவலையும் இல்லை.

ஈழ இலக்கியம் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் என்னுடைய வாழ்க்கை நோக்கு, என்னுடைய இலக்கிய அளவுகோல் மட்டுமே செயல்படுகிறது என்பதைக் காணலாம். ஈழ இலக்கியம் என்ற தனிக்கரிசனம் ஏதும் இல்லை. அதுவே இயல்பானது. அது ஈழமக்கள் மீதான நம்பிக்கையும்கூட. அவர்களிடமிருந்து மிகச்சிறந்ததை எதிர்பார்க்கும் விழைவு. அவர்களால் இவ்வளவுதான் முடியும் என்ற சமாதானம் அல்ல அது.

ஈழ இலக்கியத்தில் ஒரு நல்ல படைப்பு உருவானால் அதைப்பற்றி முதன்முதலில் எழுதக்கூடியவனாக நான் இருக்கிறேன். சென்ற காலங்களில் அனேகமாக எல்லா முக்கியமான படைப்பாளிகளைப் பற்றியும் நான்தான் முதலில் விரிவாக எழுதியிருக்கிறேன். அது ஈழ இலக்கிய வெறுப்பால் அல்ல என்று மட்டுமாவது இவர்கள்  எதிர்காலத்தில் ஒத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

வற்கீஸின் அம்மா

கோடுகளை மீறி…ஆழியாளின் கவிதைகள்

எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்

பேராசிரியர் மௌனகுரு

கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு

சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்

அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்

புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து


முந்தைய கட்டுரைஅ.மார்க்ஸ்;கடிதம்
அடுத்த கட்டுரைமத்தகம் (குறுநாவல்) : 1