சுஜாதாவின் அந்தரங்கம்

சுஜாதா அறிமுகம்

அன்புள்ள ஜெயமோகன்,

ஒரு எழுத்தாளனுக்கு privacy என்பதே இருக்கக்கூடாது என்று நினைக்கிறீர்களா? சுஜாதா இறக்கும் தருணத்தில் ஆயிரம் எண்ணம் ஓடி இருக்கும் அதை எல்லாம் இழுப்பானேன்? அதை வைத்து இந்த பதிவை எழுதாமல் இருந்தால் சுஜாதா என்ற மனிதரின் ஆளுமை பற்றி நன்றாக எழுதி இருப்பீர்கள்!

ஆர்வி

அன்புள்ள ஆர்வி

உங்கள் கருத்து ஒரு கோணம். எழுத்தாளர்களுக்கு அந்தரங்கமே கூடாதா என்றால் இருக்கலாம். முடியுமா என்றால் அனேகமாக முடியாது. இதுதான் உண்மை. ஏனென்றால் ஓர் எழுத்தாளன் முன்வைப்பது அவனது அந்தரங்கத்தைத்தான். யோசித்துப்பாருங்கள், ஒரு விஞ்ஞானியின், ஓர் அரசியல்மேதையின், ஒரு தத்துவஞானியின் ஆளுமையைவிட ஏன் ஒர் எழுத்தாளனின் தனி ஆளுமை வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது?

சுந்தர ராமசாமி சொல்வார், ’எழுத்தாளனுக்கு நினைவுச்சின்னமே தேவையில்லை -அவன் வாழ்நாள் முழுக்கச் செய்வது தனக்கு நினைவுச்சின்னம் அமைப்பதை மட்டும்தான்’ என . அந்த சலுகை அவனுக்கு இருக்கிறது, அதற்கான விலையே அவனது அந்தரங்கம் அழிப்பு. [ ஒரே சொல்லாக சேர்த்து எழுதிவிட்டு துணுக்குற்று பிரித்தேன்] எழுத்தாளன் தன் சடலத்தை அறுவைச்சோதனை மேஜையில் விரித்து வைப்பவன் என டி எஸ் எலியட் ஒரு கட்டுரையில் சொல்கிறார்.

தன்னை முன்வைத்து பேசுகிறான் எழுத்தாளன். அவனுடைய அந்தரங்கம் அவன் வாழும் சமூகத்தின் அந்தரங்கத்தின் ஒரு துளி ஆதலால் அதற்கு ஒரு பிரதிநிதித்துவ முக்கியத்துவம் உருவாகிறது. அதுவே எழுத்தாளனின் தனிவாழ்க்கையின் முக்கியத்துவம். காந்தியின் ரத்தசாட்சித்துவம் அளவுக்கே ஹெமிங்வேயின் தற்கொலையும் பேசப்பட்டிருக்கிறது என்பதற்கான விளக்கம் இதுவே.

ஓர் எழுத்தாளனின் அந்தரங்கத்தைப்பற்றி நாம் பேசும்போது அவனது எழுத்துக்கள் வழியாகவே அதைப்பற்றிப் பேசுகிறோம். இங்கே நாம் ரங்கராஜனை மனவசிய மேஜையில் படுக்க வைக்கவில்லை. அவரது எழுத்துக்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். எழுத்தாளனைப்பற்றிய நேர்மையான எந்த விவாதமும் அவனைப்புரிந்துகொள்ள உதவக்கூடியதேயாகும். அவனுடைய அகத்தின் மொழி வெளிப்பாடே அவன் எழுத்து என்பதே அதற்கான காரணம்.

எழுத்தாளனைப்பற்றியும் எழுத்தைப்பற்றிய தர்க்கபூர்வமான எந்தக்கருத்துக்கும் அதற்குரிய முக்கியத்துவம் உண்டு. அவை எவையுமே எழுத்தைப்பற்றியோ எழுத்தாளனைப்பற்றியோ சொல்லப்படும் தீர்ப்புகள் அல்ல. அவற்றைச் சொல்பவனின் ஆளுமையையும் ரசனையையும் சேர்த்துத்தான் அவற்றுக்கு மதிப்பு. எழுத்தாளனையும் எழுத்தையும் ஒரு சமூகம் படிப்படியாக அறிந்து மதிப்பிட்டு உள்வாங்கிக் கொள்கிறது. அந்த ‘செரித்தல்’ நிகழ்வு என்பது ஒரு மாபெரும் விவாதமாகவே இருக்கும். அந்த விவாதத்தின் ஒரு இடத்தை ஒவ்வொரு கருத்தும் நிரப்புகின்றன.

பாரதி முதல் ஜி.நாகராஜன் வரை எல்லா இலக்கியவாதிகளும் இவ்வாறுதான் மதிப்பிடப்பட்டுள்ளனர். தனிவாழ்க்கை இலக்கியம் என்ற பாகுபாடு எங்கும் இருந்ததில்லை. அதுவே இயல்பானது. தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் உருவாகி வந்த மரபென்பது நேர்மையான அந்தரங்கமான வாசிப்பும் கறாரான மதிப்பீடும்தான்

ஜெ

[ஜூலை 30,2010 அன்று பிரசுரமான கட்டுரை]

முந்தைய கட்டுரைஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?
அடுத்த கட்டுரைஇரண்டு மதிப்புரைகள்