பூக்கள் பூக்கும் தருணம்

மதராசப்பட்டணம் படத்தை பார்த்துவிட்டு வரும்போது நான் ஏதோ முனகுவதை நானே அதிர்ச்சியுடன் கவனித்தேன். அந்தமாதிரி கெட்டவழக்கமெல்லாம் பொதுவாக என்னிடமில்லை. எனக்கு இசை தெரியாது. பாமரக்காதுதான். நான் சீராக முறையாக இசை கேட்பதில்லை. ஓர் இளைப்பாறலுக்காக அவ்வப்போது கேட்பேன். ஒரு பாட்டு மூளைக்குள் மாட்டிக்கொண்டு பலநாட்கள் கூடவே வரும். பல வாரங்களுக்கு கூட வந்த பாட்டுகள் உண்டு. வருடக்கணக்காக நீடிப்பவையும் உண்டு. சினிமாப்பாட்டை நானே கவனிப்பதே இல்லை. அதுவே நாய்க்குட்டி மாதிரி என்னுடன் வந்து வளர்ந்தால்தான் உண்டு. அப்படி வந்து என்றும் கூட இருக்கும் பாட்டுகள் எத்தனையோ.

தமிழ் சினிமாப்பாடல்களில் ’எங்குமே ஆனந்தம்.ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்’ ‘உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித்தெளித்தேன்’ ‘கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்’ ’ஆயிரம் மலர்களே மலருங்கள்’ ‘தெய்வீகராகம் தெவிட்டாத பாடல்..’ என என்னை கிறுக்குக்குக் கொண்டுபோன பாட்டுகள் பல உண்டு.

அந்தவரிசையில் இப்போது ஒன்று. சிலநாட்களாகவே ஒரு வேதாளம்போல தோளில் தொங்கிக்கொண்டிருக்கிறது. மதராசப்பட்டினத்தில் வரும் ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே’ இசையும் வரிகளும் மிகச்சிறப்பாக இணைந்த ஒரு அபூர்வமான கலைத்தருணம் என இந்தப்பாட்டை நினைக்கிறேன். இரண்டுவகையான ஆலாபனைகள் ஒன்றுடன் ஒன்று தழுவி பின்னி உரசிச்செல்லும் விதம் பூமரங்கள் நிறைந்த வெளியில் கைவிரித்து ஓடச்செய்கிறது. ’வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை’ என்றவரிகளுக்கு முன்வரை ஒலிக்கும் இசைக்கோலம் தமிழ் திரையில் ராஜாவும் ரஹ்மானும் அவர்களின் பொற்காலங்களில் நிகழ்த்திய தரத்தில் இருக்கிறது.

முத்துக்குமார் அந்த இசையில் கொப்பளிக்கும் நெகிழ்வையும் காதலின் பிடிபடாது நழுவும் மன எழுச்சிகளையும் அற்புதமான படிமங்களுடன் எழுதியிருக்கிறார். ‘காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும், இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!’ என்ற படிமத்துக்காகவும் ’பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே’ எனர் இரண்டாம் முறை சொல்லை மாற்றiியிருக்கும் நுட்பத்துக்காகவும் அவரை மார்புடன் தழுவிக்கொள்கிறேன்.

கற்பனாவாதக் கலை வாழ்க்கைமேல் ஓர் வெயிலிளமழையை பெய்ய வைத்துவிடுகிறது. கற்பனாவாதத்தை தாண்டிச்செல்லும் ’முதிர்ச்சி’ எனக்கு ஒருபோதும் வந்துவிடலாகாதென எண்ணிக்கொள்கிறேன்


பூக்கள் பூக்கும் தருணம்

[தான தொ தனன,தான தொ தனன]

ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே,
பார்த்ததாரும் இல்லையே

பெண் : புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே

பெண் : நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே

பெண் : எதுவும் பேசவில்லையே,இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?……!

ஆண் : இரவும் விடியவில்லையே, அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே……!

[தான தொ தனன,தான தொ தனன]

ஆண் : வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை,
பாவை பார்வை மொழி பேசுமே!

பெண்: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை,
இன்று இந்த நொடி போதுமே!

ஆண்: வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?

பெண்: வாளின்றி, போரின்றி, வலியின்றி, யுத்தமின்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே?

ஆண்: இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்,
எங்கு கொண்டு நிறுத்தும்

பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்,
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

ஆண்: பூந்தளிரே ……

பெண்:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn’t have you next to me?
Oh where would I be? Oh where, oh where?

ஆண் : எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே!

பெண்: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே!

ஆண் : யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல்,
இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!

பெண்: ஏனென்று கேட்காமல்,தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!

ஆண் : பாதை முடிந்த பிறகும், இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே

பெண்: காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்,
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!

ஆண்/பெண்e: இது எதுவோ!
[தான தொ தனன,தான தொ தனன]

ஆண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே

பெண்: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே

பெண் : எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே …என்ன புதுமை?

ஆண்/பெண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே

ஆண் : இது எதுவோ!!
[தான தொ தனன,தான தொ தனன]

தொகையறா

நான் என்ற சொல் இனி வேண்டாம் !
நீ என்பதே இனி நான்தான் !
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை !
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை !


திரைப்படம் : மதராசபட்டிணம்
வரிகள் : நா.முத்துக்குமார்
இசை : G. V. பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா

http://www.youtube.com/watch?v=baaUCiKwRZE

http://sabaritamil.blogspot.com/2010/07/blog-post_22.html

முந்தைய கட்டுரைவாசகர் சந்திப்பு
அடுத்த கட்டுரைசுஜாதாவை கைவிட்டது எது?