இஸ்லாம்: மிரட்டல்கள், அவதூறுகள்

கீழ்க்கண்ட இரு கடிதங்கள் எனக்கு வந்தன. அவற்றுக்கு அளித்த பொது எதிர்வினையை பிரசுரிக்க வேண்டாமென்றிருந்தேன். காரணம் எனது இந்தியா கட்டுரை பற்றி எந்தவித பொறுப்பும் இல்லாமல் எழுதப்படும் மறுப்புகளும் கடிதங்களும் வந்தபடியே உள்ளன. அவற்றை எங்கேனும் முடித்துவைக்க வேண்டியிருக்கிறது. நான் எழுதவேண்டியதை எழுதிவிட்டேன். ஆனால் இக்கடிதங்களை நான் பிரசுரிக்க வேண்டிய காரணம் இவற்றில் உள்ள இருதரப்பைச் சேர்ந்த ஐயங்களே. இருவருமே என் நெடுநாள் வாசகர்கள்.

அன்புள்ள ஜெயமோகன்,

கீழ்க்கண்ட கடிதமும் ஒருஇணைய இதழில் வந்த உங்களைப்பற்றிய கட்டுரை ஒன்றின் பி டி எ·ப் இணைப்பும் எனக்கு மின்னஞ்சலில் வந்தன. இதேபோன்று மதவெறியையும், உச்சகட்ட வன்முறையையும் தூண்டும் மின்னஞ்சல்கள் உங்களைப்பற்றி நிறைய அனுப்பப்படுகின்றன இணையத்தில் என்பதை நீங்கள் அறிவீர்களா? பதினெட்டு வருடங்களாக நான் உங்கள் வாசகன்.  இஸ்லாமியனாக இருப்பதில் நிறைவும் பெருமிதமும் கொள்பவன் என்பது உங்களுக்கு தெரியும். இக்கடிதங்கள் ஒரு அச்சத்தையே எனக்கு அளிக்கின்றன என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். [தமிழாக்கம்]

எம்.

see mail

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)அன்பின் சகோதரர்களே! தன்னுடைய நரகல் எழுத்தால் விஷத்தை கக்கி மதசார்பின்மைக்கு வேட்டு வைக்கும் இதுபோன்ற இணைய எழுத்தாளர்களை சமூகத்துக்கு அடையாளம் காட்டுவோம்.
என்றும் அன்புடன்:
jafar safamarva
kuwait

 

அன்புள்ள ஜெயமோகன்,

எனது இந்தியா என்ற உங்கள் கட்டுரையைப் படித்தேன். இஸ்லாமிய தீவிரவாத இதழ்களைப்பற்றி நீங்கள் எழுதியிருந்தீர்கள். நீங்கள் நடத்திய சொல்புதிது இதழே ஒரு இஸ்லாமிய இதழாகத்தானே வந்தது? சதக்கத்துல்லா என்ற இஸ்லாமிய மௌலவி அதற்கு ஆசிரியராக இருந்தாரே. அப்போது சொல் புதிதுக்கு அவர்களிடமிருந்து பெரும் நிதி பெற்றுக்கொண்டீர்கள் என்று பரவலாகச் சொல்லப்பட்டதே. இதற்கு உங்கள் பதில் என்ன? [தமிழாக்கம்]

எஸ்.

***

இடதுசாரி தீவிரவாதம் பேசக்கூடிய சில இணையதளங்களில் எனது இந்தியா என்ற என்னுடைய கட்டுரையை பலவாறாக திரித்தும் வலிந்துபொருள் கொண்டும் அதை ஒரு இந்துத்துவக் கருத்தாகச் சித்தரிக்கும் எழுத்துக்கள் வந்திருக்கின்றன. அவை நான் எதிர்பார்த்தவையே. இந்த தரப்பினரால் இம்மாதிரி திரிப்புகள் செய்யாமல் எந்த வினாவையும் எதிர்கொள்ள முடியாது. விவாதிக்க முடியாது. இனிவரும் சிற்றிதழ்க் கட்டுரைகளும் இதையே செய்யும். அவர்கள் வேறு எதையும் அறியமாட்டார்கள்.

மேலும் இவர்கள் எழுதுவதன் நோக்கமே நான் கட்டுரையில் சொன்னதுபோல இஸ்லாமிய தீவிரநோக்குள்ளவர்களைத் தூண்டிவிடவேண்டும், அவர்களிடம் வன்மத்தையும் வெறுப்பையும் உருவாக்க வேண்டும் என்பதே. ஆகவே இதுவும் ஆச்சரியம் அளிக்கவில்லை. எனக்கு வந்துகொண்டே இருக்கும் தீவிரமான மிரட்டல்கடிதங்களையும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன்.

இது எனக்குப் புதிதும் அல்ல. பல வருடங்களுக்கு முன்பு  யமுனா ராஜேந்திரன் ‘பதிவுகள்’ இணைய தளத்தில் நேசகுமார் என்ற பேரில் எழுதுவது நானே என்று எழுதியிருந்தார். திட்டமிட்டு அவரால் செய்யப்பட்டது அது. ஏனென்றால் நேசகுமார் வேறு ஒருவர் என அப்போது அவருக்கு நன்றாகவே தெரியும். அதையொட்டி மிக உச்சகட்ட மிரட்டல்கள் எனக்கு வந்தன. நான் மீண்டும் மீண்டும் விளக்கங்கள் கொடுத்து மன்றாடி என்னைக் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த அனுபவங்களை நான் இப்போது எழுதக்கூட முடியாது . பல மாதங்கள் மன உளைச்சல் நீடித்தது. அப்போது நான் பல மின்னஞ்சல்களை யமுனா ராஜேந்திரனுக்கு அனுப்பினேன். அவர் அவற்றுக்கு பதில் போடவில்லை என்பதுடன் என் கதை முடியப்போவதாக பிறரிடம் சொல்லி சிரிக்கவும் செய்தார்.

இப்போது யமுனா ராஜேந்திரன் மீண்டும் அக்டோபர்மாத உயிர்மையில் எழுதிய கட்டுரையிலும் அதே உத்தி உள்ளது. இம்முறை புகைமூட்டமாக என்னையும் நேசகுமாரையும் ஒரே பட்டியலில் சேர்க்க முயல்கிறார். இவையெல்லாமே என்னை ஒரு இஸ்லாமிய துவேஷியாக அவர்களுக்குக் காட்டவேண்டும் என்ற திட்டம் உள்ளவை. ஒருபோதும் நான் நேசகுமார் எழுதுவது போன்ற கருத்துக்களை ஆதரிக்க மாட்டேன் என்று அவருக்குத் தெரியும். இது ‘கதையை முடிக்க’ இடதுசாரிகள் இன்று பொதுவாகச் செய்யும் ஒரு சதி.

இம்மாதிரியான முத்திரை குத்தல்கள் அதைத்தொடர்ந்து வரும் கடும் மிரட்டல்கள் போன்றவை ஒரு எதிர்மறை வீராப்புக்கு தள்ளி ‘ஆமாய்யா நான் இந்துத்துவன்தான் என்ன இப்ப?’ என்று நம்மைக் கேட்க வைத்துவிடும் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். அப்படிப்பட்ட தூண்டுதல்களுக்கு ஆளாகமல் இருக்கவே பொறுமை மிகவும் தேவைப்படுகிறது. ஒரு சந்தர்ப்பத்திலும் நான் அப்படிப்பட்ட மத அடிப்படைவாத நோக்குடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள போவதில்லை. என்னுடைய அணுகுமுறை எப்போதும் சகவாழ்க்கை, உரையாடல், ஜனநாயகம் சார்ந்ததே.

இஸ்லாமிய மதத்தை நான் விரிவாக ஆராய்ந்து பயின்றதில்லை. ஆனால் தொடர்ந்து அம்மதத்தைக் கவனிப்பவனாகவே இருந்து வருகிறேன். எந்த மதத்திலும் ஆன்மீகதளம் ஒன்றும் அதன் அரசியல்மயமாக்கப்பட்ட தளம் ஒன்றும் இருக்கும். நான் ஆன்மீக தளத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறேன்.  சமத்துவம் என்ற பண்பில் ஊன்றப்பட்ட ஒரு தரிசனமாகவே இஸ்லாமை நான் காண்கிறேன். அதைப்பற்றி தெளிவாகவே எழுதியும் இருக்கிறேன்.

தமிழக இஸ்லாம் பிற இடங்களை விட அதிகமாக சக மதங்களுடனும் சக பண்பாடுகளுடனும் உரையாடிய ஒன்று. சதக்கத்துல்லா அப்பா போன்ற இஸ்லாமியப் பேரறிஞர்கள்  உருவாக்கிய பண்பு அது. அதன் விளைவாகவே சீறாப்புராணம் போன்ற காப்பியங்கள் உருவாயின. சதக்கத்துல்லா அப்பா அவர்களின் காலத்தில் அவருக்கு மாணவர்களாக படிக்காசுப்புலவர் போன்று பல இந்து புலவர்கள் இருந்திருக்கிறார்கள்.அந்த மரபு முன்னெடுக்கப்படவேண்டும் நீடிக்கவேண்டுமென விழைகிறேன்.

குணங்குடி மஸ்தான் சாயபு ,பீர் முகமது ஒலியுல்லா அவர்கள் வரை வரும் தமிழ் சூ·பி மரபின் மீது பெரும் ஈடுபாடு எனக்கு எப்போதுமே உண்டு. அவர்களின் ஆக்கங்களைக் கூர்ந்து படித்திருக்கிறேன்.இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பற்றியும் தமிழ் இஸ்லாமிய வரலாறு பற்றியும் தொடர்ச்சியாக படித்து வருகிறேன். கேரள இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்திற்காக தமிழ் இஸ்லாம் குறித்த ஏராளமான கட்டுரைகளை நான் எழுதியும் இருக்கிறேன்.

இந்த அடிப்படையில்தான் மௌலானா சதக்கத்துல்லா ஹஸனீ எனக்கு அறிமுகமானார். மீண்டும் மீண்டும் மத உரையாடல்களையும் அமைதிப்போக்கையும் வலியுறுத்தி அதனாலேயே தீவிர அமைப்புகளால் வேட்டையாடப்பட்ட தனிமனிதர் அவர். தினமணியில் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு நான் ஒரு பாராட்டு எதிர்வினை எழுதினேன். தமிழ்நாட்டு இஸ்லாமியப்பண்பாடு பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டோம்.அதன்மூலம் அவர் எனக்கு அறிமுகமானார். [நான் அவரைச் சந்திக்கும்போது அவருக்கு ஆயுதப்போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது] மௌலானா என் நண்பர்.

ஒத்த எண்ணம் கொண்டவர்களை ஒன்று சேர்த்து ஒரு உரையாடலுக்கான இதழாக சொல்புதிதை நடத்தலாமென எண்ணினோம். கடைசி நான்கு இதழ்கள் அவ்வாறு வெளிவந்தன. மௌலானாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய உலகை பிற அறிவியக்கங்களுடன் உரையாட வைப்பதற்கான முயற்சி அது. நிதி நெருக்கடியினாலும் பிற சிக்கல்களினாலும் அம்முயற்சி தொடரவில்லை.

இங்கு மாற்றுச் சமூகங்கள் மீது உக்கிரமான வெறுப்பைப் பயிரிட்டு வளர்ப்பவர்களிடமும் அதற்கு நீரூற்றும் முற்போக்காளர்களிடமும் விவாதிக்க முடியாது. ஆனால் எனக்கு எப்போதுமே ஏராளமான இஸ்லாமிய வாசகர்கள் உண்டு.  விஷ்ணுபுரம் நாவல் பற்றிய மிகச்சிறந்த பல கடிதங்கள் இஸ்லாமிய வாசகர்களால் எழுதப்பட்டவை. அவர்களுக்காகவே இதை எழுதுகிறேன்.

இந்தியா ஒரு நவீன தேசமாக இங்கு வாழும் பலதரப்பட்ட மக்களாலேயே ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள ஒவ்வொருவருக்கும் இந்நாட்டை ஒரு பல்லின, பலமத, பல பண்பாட்டு தேசமாக நிலைநாட்டும் பொறுப்பு உள்ளது. துவேஷங்களுக்குப் பதில் மீள மீள நல்லெணங்களை உருவாக்கிக் கொள்வதும், புண்களையும் வன்மங்களையும்கூட நல்லெண்ணம் மூலம் ஆற்றிக்கொள்வதும் இன்றைய அவசியத்தேவை. வேறு வழியில்லை. நம் சந்ததிகள் இங்கே வாழ்ந்தாக வேண்டும்.

இஸ்லாம் இந்த மண்ணில் வளர்ந்து இந்த நாட்டு மக்களில் கணிசமானவர்களின் ஆன்மீக விடுதலைக்கு வழிகாட்டக்கூடிய ஒரு மதம். ஆகவே அது இந்திய பண்பாட்டிலும் இந்திய தேசியத்திலும் பிரிக்கமுடியாத பங்குள்ள ஒன்றே. இஸ்லாமின் ஆன்மீக மையத்தை அதன் தனித்த பண்பாட்டுக்கூறுகளை மதிப்பதும் கற்றுக்கொள்வதும் ஒரு இந்தியனின் கடமையேயாகும்.

இஸ்லாமியர்களை வெறுப்பதும், ஒதுக்குவதும், தாக்குவதும் இந்த நாட்டை அழிக்கும் எண்ணங்கள். அத்தகைய அனைத்து நோக்கங்களும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. முழுமூச்சாக எதிர்க்கத்தக்கவை. அவை சமரசம் மூலமும் உரையாடல் மூலமும் உருவான நம் முன்னோரின் தேசத்தின் அடித்தளத்தை தகர்க்கும் முயற்சிகள்.

இந்த நாட்டின் பலாயிரமாண்டுக்கால பண்பாட்டை நாம் பின்பற்றுவதென்பது ஒருபோதும் இந்துத்துவ அரசியலாக குறுக்கப்படலாகாது. அதேபோல வெறுப்பில் வேரூன்றியிருக்கும் இஸ்லாமிய மதவெறி அரசியல் ஒருபோதும் இங்குள்ள தொன்மையான இஸ்லாமிய மதத்துடன் அடையாளப்படுத்தபப்டலாகாது. இஸ்லாம் இங்கே அதன் இயல்பான வளர்ச்சியையும் முழுமையையும் அடையவேண்டும். அதுவே நம் ஜனநாயகத்துக்கு பெருமை. இதுவே என் எண்ணமாகும். இந்த  நுண்ணிய வேறுபாடுகளை திட்டமிட்டு அழிக்கும் முதிரா அறிவுஜீவிகள் நம் ஊடகங்களைக் கைப்பற்றி எழுதும் பிரிவினையையும் வன்மத்தையும் தூண்டும் சொற்களையே நான் நிராகரிக்கிறேன். அவை நச்சு சக்திகள்.

இந்த நாட்டில் எல்லாவகையான பிரிவினை, வெறுப்பூட்டும் கருத்துக்களையும் ஊடகங்களில் பேச முடிகிறது.  மாற்றுக்குரல்களை எழுப்ப முடிகிறது. இந்த நாட்டை நேசிக்கிறேன் என்று சொல்வதற்குமட்டும் வரும் அச்சுறுத்தல்களையும் அவதூறுகளையும் எண்ணும்போது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. இப்போது இந்தியாவில் மிகமிக அச்சுறுத்தி ஒடுக்கப்படும் குரலே இதுதானா என்ன?

அன்புடன்
ஜெ

இந்தியா கடிதங்கள்

இந்தியா:கடிதங்கள்

எனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்

எனது இந்தியா:கடிதங்கள்

இந்தியா:கடிதங்கள்

எனது இந்தியாவைப்பற்றி….

எனது இந்தியா:கடிதங்கள்

எனது இந்தியா

முந்தைய கட்டுரைசாங்கிய யோகம் (26 – 38) : தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்
அடுத்த கட்டுரைஆலயம்:கடிதங்கள்