ஓர் அமரகாதல்

சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் திரு.வி.கல்யாணசுந்தரனாரின் நண்பர். அவரைக்காண பல்வேறுவகை மக்கள் தினமும் வந்துகூடுவார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் விதவைகள். அவர்களுக்கு என்று ஏதேனும் ஓர் அமைப்பு இருந்தால் அது நிலையான உதவிகளை அளிக்க முடியும் என்று சதாசிவ அய்யர் கருதினார். அதற்கு முன்கையெடுத்த திரு.வி.க 1920 ல் சென்னை சௌந்தரியமகாலில் விதவைநலம் காக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.ஸர்.வேங்கடரத்தினம் என்ற பிரமுகர் அதற்கு தலைமை தாங்கினார். சதாசிவ அய்யரின் மனைவி அதில்பேசினார். அதன்பின் திரு.வி.க பேச எழுந்தார்.

விதவை மறுமணம் போன்றவை ஒழுக்கக் கேட்டை வளர்க்கும் என்ற எண்ணம் அன்று வலுவாகவே இருந்தது. ஓர் அம்மையார் எழுந்து திரு.வி.கவை மறித்து ”பெண்கள் விஷயத்தில் ஏன் ஆண்கள் தலையிடவேண்டும்? அதை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் அமருங்கள்” என்று சொன்னார். திரு.வி.க ”ஆம், அதை அவர்களே தீர்மானிக்கட்டும். நான் பேசுவதா வேண்டாமா?”என்று அவையினரை நோக்கிக் கேட்டார். அவையிலிருந்த பெண்களில் அனேகமாக அனைவருமே  நீங்கள் பேசுங்கள் என்று கை தூக்கினர்.

மீண்டும் திரு.வி.க பேச ஆரம்பித்ததும் இன்னொருபெண் எழுந்து ”கைப்பெண் விடுதலை மறுமணம் என்றெல்லாம் பேசுகிறீர்களே, நீங்கள் மனைவியை இழந்தவர்தானே? நீங்களே ஒரு கைம்பெண்ணை மணந்து வழிகாட்டக் கூடாது?” என்றார். முன்னரே திட்டமிடப்பட்ட கேள்வி அது. அந்தக் கேள்வி திரு.வி.கவை ஒருகணம் திகைக்க வைத்துவிட்டது. அவர் மேடைகளில் சிம்மம் போல நிற்பவர் என்று புகழ்பெற்றவர். அவரது மிகச்சிறிய உருவமே அப்போது மறைந்து ஆறடி உயரம் கொண்டவர் என்ற பிரமை உருவாகும். ஆனால் அப்போது அவருக்கு சிறிதுநேரம் பேச்சே எழவில்லை.

பின்னர் அவர் பேச ஆரம்பித்தார் ‘இந்தக் கூட்டம் என்னைப்பற்றியதல்ல. கைம்பெண் மறுமணம் என்ற கருத்தைப்பற்றியது. கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்வதே அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்லது என்பது என் எண்ணம். மனைவியை இழந்தவர்கள் கைம்பெண்களை மறுமணம் செய்துகொள்வதே முறை என்று உறுதியாக நம்புகிறேன். நான் மறுமணம் செய்வதாக இருந்தால் ஒரு கைம்பெண்ணையே மறுமணம் செய்துகொள்வேன். ஆனால்  நான் ஒருபோதும் மறுமணம்செய்துகொள்ள மாட்டேன். ஏனென்றால் அது என் உள்ளத்துக்கு உவப்பானதல்ல’ என்றார்.

திரு.வி.க தன்னுடைய வாழ்க்கைக்குறிப்புகளை வாசிப்பவருக்குத்தான் அதற்கான காரணம் தெரியும். அவர் இளம் வயதிலேயே தொழிற்சங்க அரசியலுக்கு வந்துவிட்டார். கூடவே சைவ சமயப்பணிகளும் தமிழ்ப்பணிகளும். ஆயிரம் விளக்கு தமிழ்ப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியும் வந்தார். அக்காலத்தில் ராமகிருஷ்ண இயக்கத்தின் செல்வாக்கு இளைஞர் மத்தியில் அதிகம். ஆகவே திருமணமே செய்ய வேண்டியதில்லை என்ற முடிவில் இருந்தார்.

திரு.வி.கவின் தமையனாருக்கு அந்தத் துறவு மனநிலை அச்சமூட்டியது. ஆகவே பெண்பார்க்க ஆரம்பித்தார். திரு.வி.க ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் அன்னையின் இடத்தில் இருந்த அண்ணியார் கட்டாயப்படுத்தியமையால் ஒத்துக்கொண்டார்.’ நான் ஏழை, ஏழ்மையை விரும்பும் பெண்ணே எனக்குத்தேவை’ என்றார் திரு.வி.க. பெண்கொடுக்க வருபவர்களிடம் தன் ஏழ்மை விருப்பத்தைப்பற்றிச் சொல்லிவிடுவது அவரது வழக்கம். கடைசியில் அவருக்கு இசைந்த ஒரு பெண் அமைந்தார்.

ஆனால் நிச்சயதார்த்த நாள் நெருங்க நெருங்க திரு.வி.க அச்சம் கொள்ளலானார். திருமணம் அவசியமா என்ற ஐயம் அவரை வாட்டியது. தமையனாரிடம் சென்று திருமண நிச்சயத்தை நிறுத்திவிடச் சொன்னார். ‘பெண் வீட்டாரிடம் அதை நான் சொல்லமாட்டேன்’ என்றார் தமையன். திரு.வி.க ‘சரி நானே சொல்லிவிடுகிறேன்’ என்று தபால் அட்டை வாங்கிவரச்சொல்லி தன் மாணவர் வெ.தியாகராசனை அனுப்பினார். அவர் நேராகச் சென்று திரு.வி.கக்குப் பெருமதிப்பிருந்த தேவப்பிரசாதம்பண்டிதரைக் கண்டு விஷயத்தைச் சொல்ல்விட்டார்

கடும் கோபம் கொண்ட தேவப்பிரசாதம் பண்டிதர் நேராக திரு.வி.க வீட்டுக்கு வந்து திரு.வி.கவை கூப்பிட்டு சரமாரியாகத் திட்டினார். திருமணத்தை அறியாதவனுக்குத் துறவும் சித்திக்காது என்றார். திரு.வி.கவால் மறுபேச்சு பேசமுடியவில்லை. திருமணம் நிச்சயமாயிற்று.

மணமகளின் பெயர் கமலாம்பிகை. அவர் திருச்சி கிருஷ்ணசாமி முதலியாரின் மகள். கிருஷ்ணசாமி முதலியார் திருச்சியில் கார்டன் உட்டிராப்பில் தலைமைக் கணக்கராகப் பணியாற்றினார். அவருக்கு மூன்று குழந்தைகள். அதில் ஒரே மகள் கமலாம்பிகை. கமலாம்பிகைக்கு சிறுவயதாக இருக்கும்போதே கிருஷ்ணசாமிமுதலியாரும் மனைவியும் காலமானார்கள். பெற்றோரை இழந்த கமலாம்பிகை அவரது பெரியப்பா பாலசுந்தர முதலியாரின் வீட்டில் வளர்ந்தார். பாலசுந்தர முதலியாருக்கு ஒரே மகள். அவள் திருமணமாகிப் போய்விட்டிருந்தார். ஆகவே பெரியப்பாவின் செல்லமாக வளர்ந்தார் கமலாம்பிகை. பாலசுந்தர முதலியார் கமலாம்பிகையை பெரிய ஒரு வீட்டை சீதனமாகக் கொடுத்து செல்வச்சிறப்புடன் மணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார்.

திருமணம் 13-9-1912இல் சென்னை இருளப்பன் தெருவில் மணமகளின் தாய்மாமன் பூ.மு.முருகேசமுதலியாரின் இல்லத்தில் நடந்தது. தேவாரம் முழங்கியது. கிறித்தவ ஜெபமும் நடந்தது என்கிறார் திரு.வி.க. பல திறத்தினர் கூடியிருந்தாலும் சொந்தங்களைக்காட்டிலும் இருமத இறையடியாருக்கே சிறப்பு அளிக்கப்பட்டது. திருவல்லிக்கேணி சிவனடியார் திருக்கூட்டத்தின் அன்பு பொன் வேய்ந்த  கௌரிசங்கமாகவும் பீதாம்பரமாகவும் உருக்கொண்டது என்று திரு.வி.க நினைவுகூர்கிறார். அவரது நண்பரும் ஆயிரம் விளக்கு பள்ளியின் தலைமையாசிரியருமான ஜான் ரத்தினம் எழுந்து வெள்ளிச்செம்பொன்றை அன்பளிப்பாக அளித்தார். ”அவரது ஜெபம் அமிர்தமாகியது. அத்தமிழ் மலர்மணத்தை நுகர்ந்துகொண்டே யான் அருகே அமர்ந்திருந்த மணமகளை நோக்காமல் நோக்கினேன்” என்கிறார் திரு.வி.க.

திரு.வி.கவும் கமலாம்பிகையும் ராயப்பேட்டையில் திரு.வி.கவின் வீட்டுக்குத் திரும்பினார்கள். ஏதேனும் ஒரு திருமணப் படலம் பாடம் கேட்டால் நன்றாக இருக்குமே என்று எண்ணினார் திரு.வி.க. ஆகவே தன் நண்பர் சச்சிதானந்தம் பிள்ளையை வரவழைத்து வள்ளி திருமணம் திருமணப் படலத்தை விரிவாகச் சொல்லச்சொன்னார். அந்தச் சொற்பெருக்கு மனதை நனைக்க இல்லறம் புகுந்தார்.

அவரது தன்வரலாற்றுநூலில் தன் இல்வாழ்க்கையைப்பற்றி திரு.வி.க சொல்லும் வரிகள் அவருக்கே உரித்தான வகையில் மிதமாக, இறுக்கமான பண்டிதத்தமிழில் உள்ளன. ஆனாலும் அவ்வரிகளுக்குள் அவரது இதயம் உருகுவதை வாசகர்  வாசித்தறிய முடியும். முதலிரவில் உனக்கு என்ன வேண்டும் என்று கணவன் கேட்டபோது மனைவி ”எனக்கு நீங்கள் தமிழ்சொல்லித்தர வேண்டும்”என்று கோரினாள். ”பொன்னையும் புடவையையும்தானே பெண்கள் கேட்பார்கள்?”என்று வியந்தார் திரு.வி.க. ”எனக்குப் பொன்னும் புடவையும் வேண்டுமளவுக்கு இருக்கிறது. மேலும் வேண்டுமென்றால் கேட்டதுமே வாங்கித்தர பெரியப்பா இருக்கிறார். என் விதிப்பயனால் தமிழறிஞராக  நீங்கள் எனக்கு வாய்த்தீர்கள். எனக்குத் தமிழ்ஞானமே போதும்”என்றாள் கமலாம்பிகை.

திரு.வி.க அவருக்குத் தமிழ் கற்பிக்க ஆரம்பித்தார். ஆனால் அவரது அன்னைக்கு அது பிடிக்கவில்லை. ஆகவே இரவில் தனிமையில் சந்திக்கும்போது விரிவாக தமிழ்ப்பாடம் நடத்தலானார். முதலில் ஔவையார் பாடல்கள். பின்பு பெரியபுராணம். கமலம் இயற்கை அறிவு மிக்கவள் என்பது உடனடியாக திரு.வி.கவுக்கு புரிந்தது.

‘நான் திருக்குறள் படித்தவன், ஆனால் பிடிவாதம் வன்மம் கோபம் போன்ற குணங்கள் என்னிடம் நிறைந்திருந்தன. என் குறள் கல்வி அவற்றைப் போக்கவில்லை. ஆனால் குறளைக் கற்காத கமலம் இயல்பாகவே அந்தத் தீய குணங்கள் இல்லாதவளாக இருந்தாள். அவளுக்குக் குறள் கற்பித்த எனக்கு அவளே குறளாக இருந்தாள். இல்வாழ்க்கை பற்றிக் குறள் சொல்வனவற்றை நான் அவளைக் கண்டே கற்றேன்’ என்கிறார் திரு.வி.க.

கமலத்தின் பெருமைகளைச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறார் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார். அவளது பொறுமை திரு.வி.கவை பிரமிக்கச் செய்கிறது. அவ்வளவுபெரிய கூட்டுக்குடும்பத்தில் வந்துசேர்ந்த செல்லப்பெண் ஒருமுறை கூட சலித்துக்கொண்டதில்லை. இன்முகமன்றி எதையுமே எவருக்கும் காட்டியதில்லை. மாமியாருக்கும் அண்ணியருக்கும் அவளிடம் ஒருமுறைகூட சண்டை வந்ததில்லை. வீட்டில் இருந்த குழந்தைகள் அனைத்துமே அவளது பின்னால்தான் பூனைக்குப் பின்னால் குட்டிகள் போல சத்தம் போட்டுக்கொண்டே அலையும். அவள் இடுப்பிலும் ஒன்று உட்கார்ந்திருக்கும்.

அவர்களுக்குள் மோதல்களே நிகழவில்லை. மிகச்சில சிறு ஊடல்களே திரு.வி.கவின் நினைவில் எஞ்சின. ஒருநாள் அவர் வீட்டிற்குள் நுழைந்தபோது எங்கும் இறுக்கம். என்ன நடந்தது என்று கேட்டபோது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. கமலமும் தெரியாது என்று சொல்லிவிட்டாள். ஆனால் இரவில் தனியாக வந்தபோது தமையனாரின் மனைவிகளுக்குள் சண்டை என்றும் அதை அப்போது சொல்ல விரும்பவில்லை என்றும் சொன்னாள். நான் கேட்டால் சொல்லமாட்டாயா என்று எகிறிய திரு.வி.க மனைவியைக் கோபத்துடன் கடிந்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டார்

மறுநாள் அவர் குளிக்க அமரும்போது வெந்நீர் விடவந்த கமலம் முகம் வாடியிருந்தது. அதைக்கண்டு அவர் மனம் குழைந்தது. அவளைப் பிடித்து ”நான் செய்தது பிழை. நீ முன்மதி நான் பின்மதி ‘ என்றார். ‘ஐயோ பின்மதி [தேய்நிலவு] என்று சொல்லலாமா?’  என்று சொல்லி அவர் வாயைப்பொத்தினாள் கமலம்.

தன் மனைவியிடம் சேர்ந்து பெருங்காவியங்களைக் கற்க வேண்டுமென திரு.வி.க விரும்பினார். கூட்டுக்குடும்பத்தில் அதற்கு வாய்ப்பில்லை என்பதனால் தனிக்குடித்தனம் செல்லலாம் என்று எண்ணி வீடுபார்த்தார். கமலம் அதை ஒப்பவேயில்லை. விட்டுப்பிரிந்தால் உறவுகள் நிலைக்காது, உறவே முக்கியம் என்று சொன்னாள். தன் பெரியப்பாவை விட்டு திரு.வி.கவுக்கு அறிவுரை சொல்லி அம்முயற்சியை நிறுத்திவிட்டாள்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கும் அவ்வப்போது கமலத்துடன் செல்வது திரு.வி.கவின் வழக்கம். வழிபாடு முடிந்தபின் அங்கே குளக்கரையில் அமர்ந்து இலக்கியம் பேசுவார்கள். அது தன் மனைவிக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கண்ட திரு.வி.க வாரந்தோறும் சனி ஞாயிறு தினங்களில் அவ்வாறு எங்கேனும் சென்றுவரலாம் என்று எண்ணினார். கமலாம்பிகையின் பெரியப்பா அப்போது வண்ணாரப்பேட்டையில் குடியிருந்தார். அவரை வாரம்தோறும் சென்று பார்த்துவர எண்ணுகிறோம் என்று தன் அன்னையிடம் சொல்லி அனுமதி வாங்கினார். பிள்ளையில்லாது தனியாக இருக்கும் பெரியவர்கள் அல்லவா, கண்டிப்பாக சென்றுவாருங்கள் என்று அன்னை கூறிவிட்டார்.

வெள்ளிக்கிழமை மாலையே வண்ணாரப்பேட்டைக்குச் சென்ற பின் அங்கே தங்கிவிட்டு மறுநாள் திருவொற்றியூர் சென்று அங்கே கோயிலிலும் கடற்கரையிலும் அமர்ந்து அரைநாள் முழுக்கப் பேசிமகிழ்வது அவர்கள் வழக்கம். சிலசமயம் ஞாயிறு காலையும் அங்கேயே தங்கி திருவொற்றியூர் செல்வதுண்டு. ஞாயிறு மாலை திருவல்லிக்கேணி சைவ சபையில் பேசவேண்டியிருப்பதனால் திரு.வி.க மனைவியுடன் திரும்பிவிடுவார். அவ்வாறு இவர்கள் வந்துசெல்வது பெரியப்பாவுக்கும் பெரியம்மாவுக்கும் அளித்த ஆனந்தம் அளவற்றது. ஏதேனும் ஒருவழியில் பயணச்செலவைக் கமலத்திடம் கொடுத்து விடுவார்கள். ஆகவே இந்தப் பயணம் திரு.வி.கவுக்கு செலவில்லாமலும் இருந்தது.

திருவொற்றியூர் கடற்கரை அக்காலத்தில் மிகமிக அழகானது என்கிறார் திரு.வி.க. மணல் மேடுகளில் உலவியும் விளையாடியும் அவர்கள் அங்கே களித்திருப்பார்கள். அன்றைய தமிழ்நாட்டில் சென்னை போன்ற ஒரு பெருநகரில் மட்டுமே இது சாத்தியமாகும். கமலம் மிகச்சிறப்பாகப் பாடுவாள். ஆனால் அவர் குரலை திரு.வி.கவின் குடும்பத்தினர் கேட்டதேயில்லை. பொதுவாக ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்களில் கமலத்துக்கு விருப்பம் அதிகம். அவளுக்கு தேவாரம் திருவாசகம் சிலப்பதிகாரம் போன்ற நூல்களை திரு.வி.க அப்போது விளக்குவார்.

இக்காலத்தில் கமலம் கருவுற்றாள். முதல்  ஆண் குழந்தை பிறந்த ஒருவாரத்திலேயே மறைந்தது. இரண்டாவது பெண் குழந்தைக்குத் திலகவதி என்று பெயரிட்டார்கள். திரு.வி.க தன்னுள் ஒரு அன்னை இருப்பதை அக்குழந்தை வழியாகவே கண்டுகொண்டார். ஆணுக்குள் உள்ள பெண்மை மிக உன்னதமான ஒரு ஆன்மீகதளம் என்பதை திரு.வி.க பிற்பாடு பல இடங்களில் சொல்லியிருக்கிறார். ஒருவயது வரை வளர்ந்த அக்குழந்தையும் திடீரென இறந்தது.

அவ்விழப்பை திரு.வி.கவால் தாங்க முடியவில்லை. அவர் தன்னை தேசப்பணி, தமிழ்ப்பணி, சைவப்பணி, தொழிற்சங்க இயக்கம் ஆசிரியர் வேலை என்று தீவிரப்படுத்திக் கொண்டார். இக்காலத்தில் கமலாம்பிகைக்கு எலும்புருக்கி –காசநோய்- கண்டது. அக்காலத்தில் அந்நோய் மாபெரும் ஆள்கொல்லி. அதற்கு அன்று கிட்டத்தட்ட மருந்தே கிடையாது. தன் குடும்பத்திலேயே பலரை அந்நோய் உண்டதை திரு.வி.க அறிவார். ஆனால் ஒன்றும் நிகழாதது போல கமலத்திடம் பழகி  அவளை உற்சாகமாக வைத்திருக்க முயன்றார். அவளை அருகிருந்து பார்த்துக்கொண்டார்

”ஆனால் நாள் செல்லச் செல்ல என் துணையின் பொன்னுடல் மெல்லமெல்ல கரைந்தது. அதைக்காணக் காண என் உள்ளமும் கரைந்தது” என்று எழுதுகிறார் திரு.வி.க. பொதுப்பணியை மறந்தார். தமிழையும் மறந்தார். மனைவியே கதியென்று மருத்துவம் செய்தார். கமலம் மெலிந்து உருக்குலைந்தபோதும் கூட முடிந்தவரை நடமாடிக்கொண்டுதான் இருந்தாள். ஒரே ஒருவாரம் மட்டுமே பிறர் தன்னைப் பார்த்துக்கொள்ளும் நிலையில் படுக்கையில் கிடந்தாள். 18-9-1918இல் வெறும் ஆறாண்டு மணவாழ்க்கையின் முடிவில் கமலம் உயிர்துறந்தாள்.

படுக்கையில் கிடந்த மனைவியருகே இருந்து ஆறுதல் சொல்வார் திரு.வி.க. அப்போதும் தன் மனைவியிடம் இருந்த தாய்மையின் கனிவைக் கண்டு முப்பது வருடம் கழித்தும் அவர் கண்ணீர் சிந்துவதுண்டு. ஒருநாள் அரை மயக்கில் ”சோளிங்கபுரம் போகலாமா?”என்று கேட்டாள் கமலா. ”உடல்நிலை சீக்கிரமே சரியாகும். உடனே போகலாம்”என்றார் திரு.வி.க. கமலம் புன்னகை புரிந்து கண்மூடிக் கொண்டாள். நால்செல்லச் செல்ல தன்னினைவு இல்லாமலாயிற்று. திரு.வி.கவின் தோளில் கிடந்து ஆவி பிரிந்தது.

‘மின்னல் என் தலையிலே விழுந்து உடல் பாய்ந்து கால்வழி ஓடியது. மண்ணும் விண்ணும் ஒரே சுழல். கண்களில் தாரை தாரை. கமலத்தின் ஆவி சோர்ந்தது. என் அம்பிகையின் ஆவி சோர்ந்தது.  என் ஆருயிர் கமலாம்பிகையின் ஆவி சோர்ந்தது. ஓருயிர் ஈருடலென வாழ்ந்தோம். ஓருடல் போயிற்று. அமிழ்தும் சுவையுமென இருந்தோம், அமிழ்தம் போயிற்று,,” என்று முப்பதாண்டுகளுக்குப் பின் ஆறாத கண்ணீருடன் எழுதினார் திரு.வி.க.

கமலாம்பிகையை சகோதர சங்கம் என்ற அமைப்பினர் புகைப்படம் எடுத்தனர். உயிருடன் இருக்கும்போது அவளுக்குப் படமே எடுக்கபடவில்லை. அதற்குத் தோன்றவேயில்லை. மனைவின் நினைவு நாட்பட நீங்கும் என்றார்கள் உற்றோர். செல்பவரை எண்ணி வாழ்பவர் இல்லை, எல்லாமே மறக்கலாகும் என்றார்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவருக்குள் கமலாம்பிகை மேலும் மேலும் அழுத்தமாக நிலைபெற்றாள்

இரண்டாம் திருமணத்துக்காகப் பெரிய இடங்களில் இருந்து ஆட்கள் தேடி வரலானார்கள். அப்போது சைவநெறிச்செல்வராகப் புகழ்பெற்றுவிட்டிருந்தார் திரு.வி.க. புதுவையில் இருந்து ஒரு லட்சாதிபதி தேடிவந்து பெண்ணும் பெரும்பொருளும் கொடுக்கிறேன் என்றார். திரு.வி.க நடத்திவந்த தேசபக்தன் இதழை அவரே பணம்கொடுத்து நடத்துகிறேன் என்றார். ஆனால் திரு.வி.க மனம் மாறவில்லை. பொன்னும்பொருளும் இவ்வுலகமே கூட கமலாம்பிகைக்கு ஈடாகாதென்று சொல்லிவிட்டார்.

இப்போது தோன்றும் வைராக்கியம் நாட்பட நாட்பட நீங்கும், அப்போது தனிமை தோன்றும், அதை வெல்வது முடியாது போகும் என்று நலம் விரும்பிகள் சொன்னார்கள். அவர்களிடம் திரு.வி.க வாதிடவில்லை. அதெல்லாம் உண்மை என்று அவரே அறிவார். இல்லறமல்லாது நல்லறமில்லை என்பதை அவரளவுக்கு உணர்ந்தவர் இல்லை. கணவனை இழந்த மனைவியும் மனைவியை இழந்த கணவனும் பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுத்து மணம் செய்தல்தான் முறை என்றார். மணம் செய்யாமல் வாழும் கைம்மை வாழ்க்கை ஆணுக்கானாலும் பெண்ணுக்கானாலும் வீணே. அதில் இன்பம் இல்லை. மனிதர்கள் செய்தேயாகவேண்டிய அறங்களை அத்தகையோர் செய்வது மிகமிக அரிதானது. தனிமை கொண்ட நெஞ்சுக்கு அத்தனிமை அல்லாமல் வேறெதிலும் சிந்தை செல்லாது. ஆகவேதான் தன் வாழ்நாள் முழுக்கக் கைம்பெண் மறுமணத்துக்காகப் போராடினார் திரு.வி.க

ஆனால் அவரால் கமலாம்பிகை நினைவை விட்டு நீங்க முடியவில்லை. அந்நினைவு நீங்குமென்ற எண்ணமும் உருவாகவில்லை. அந்நிலையில் மறுமணம் செய்துகொள்ளுதல் தவறு. ஆகவே வேறு வழியில்லாமல்  அவர் அந்த வாழ்க்கையைத் தேர்ந்துகொண்டார். தொண்டு மூலம் கனிவும் நிறைவும் பெறுவதற்கு சிறந்த வழி இல்வாழ்க்கையே. பயன் கருதாத் தொண்டைப்பற்றிச் சொல்லும் இரு நூல்கள் கீதையும் குறளும். இரண்டுமே இல்லறத்தாரால் இயற்றப்பட்டவையே. ஆனாலும் இல்லறத்துக்கு அவர் மனம் ஒப்பவில்லை.

காரணம் அவருள் எரிந்துகொண்டிருந்த அழியாப்பெருங்காதல். இல்லறம் வேறு காதல் வேறு. இல்லறத்தில் அன்பிருக்கலாம். காதல் அதைவிட மேலான ஒன்று. ”காதல் இயற்கை. அவ்வியற்கையுடன் இயைந்து வாழ்தற்கென்று ஒருத்தியென்றும் ஒருவனென்றும் மன்பதை படைக்கப்படுகிறது.” என்று சொல்கிறார் திரு.வி.க.

அழியாக்காதலுடன் வாழ்ந்த திரு.வி.க பெண்களை வெறுத்து வைராக்யம் கொள்ளவில்லை. பெண்மை என்ற குணம் மீது, பெண்ணுலகம் மீது அந்தப் பெரும் பிரியத்தைத் திருப்பிக் கொண்டார். சிறுகுழந்தை முதல் முதிய பெண்டிர் வரை பெண்களையெல்லாம் நெஞ்சுக்குள் போற்ற ஆரம்பித்தார். ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள?’ என்ற வரியே அவரது மந்திரமாக இருந்தது. வீட்டில் உள்ள தமையார்களின் பெண் குழந்தைகள் அவரது வளர்ப்புக் குழந்தைகள் ஆயின. அவரது தமையனாருக்கு வீடு அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் திரு.வி.க வீட்டில் பெண்குழந்தைகள் ஆடியும் பாடியும் சிரித்து விளையாடும் ஒலி எப்போதும் கேட்கவேண்டுமென விரும்பினார். அப்பெண்களுடன் விளையாடிக் களித்தார்.

தன் அண்ணன் மகள்களைப்பற்றி திரு.வி.க எழுதும் வரிகள் அக்குழந்தைகள் மீது அவருக்கிருந்த பேரன்புக்குச் சான்று. மங்கையர்க்கரசியும் புனிதவதியும் அவரது செல்லங்கள். ”குழந்தைகளை என்னை அடிக்கச் சொல்வேன், உதைக்கச் சொல்வேன், கிள்ளச்சொல்வேன். புனிதவதி என் மேல் திடீரென்று பாயும். என் மயிரைப்பிடித்து இழுக்கும். என்னை அடிக்கும் உதைக்கும். அபராதமும் விதிக்கும். நாளேற நாளேற அபராதமும் எறும்…” அப்பெண்கள் வளர்ந்து குமரிகளாகும்போது தந்தைக்கு ஏற்படும் பரவசத்தைத் திளைத்துத் திளைத்து எழுதுகிறார்.

பின்னர் அப்பெண்களுக்கு மணமாகிக் குழந்தைகள் பிறநதன. மங்கையற்கரசிக்குப் பிறந்த பேத்திகள் கற்பகவல்லி, சிவயோகவல்லி ,வசந்தகுமாரி . புனிதவதிக்குப் பிறந்த பேத்திகள் உலகநாயகி, வனஜாட்சி ,பொற்கொடி. ஆக, அவர் இறப்பு வரை வாழ்ந்த இல்லம் பெண்களால் நிறைந்திருந்தது. மழலை பேசும் பெண்கள் முதல் மூத்துக்கனிந்த பெண்கள் வரை.”என்னை முழு மனிதனாக்கியது பெண்மை. என்னில் கனிவையும் மென்மையையும் கூட்டி வைத்தது பெண்மை” என்கிறார் திரு.வி.க.

அந்த அனுபவ ஞானத்தில் இருந்தே அவர் அவரது ஆகச்சிறந்த நூல் என்று சொல்லப்படும் ”பெண்ணின் பெருமை”யை எழுதினார். முப்பது வருடம் திரு.வி.க பெண்கல்விக்காகவும் விதவை மறுமணத்துக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் போராடியிருக்கிறார். பல பெண் கல்வி நிறுவனங்களை நடத்தியிருக்கிறார். மேடைகளில் பேசியிருக்கிறார். மதவாதிகளின் வாதங்களைத் துணிந்து எதிரிட்டிருக்கிறார். பெண்களுக்கான அமைப்புகளை நிறுவி நடத்தியிருக்கிறார்.

”வருவோர் போவோர் என் வீட்டைக்கண்டு பெண்ணின் பெருமை என்பர். ஏன்? என் வீடு பெண் மயம்.யான் இப்போது குழந்தைகளுடன் விளையாடுகிறேன். குழந்தையாகிறேன். எனக்கு வயது அறுபது. யான் ஆறு வயதுக் குழந்தையாகிறேன்.” என்கிறார் திரு.வி.க பெண் ஆண்மனதில் உருவாக்கும் பேரின்பம் என்பது காமம் மட்டுமல்ல. உண்மையில் காமத்தால் அது மறைக்கப்பட்டிருக்கிறது. அதைத்தாண்டி செல்லும் மனதுக்குத் தாயாக, மகளாக, சகோதரியாக, தூய அழகாக பெண்ணுலகம் கண்முன் விரிய ஆரம்பிக்கிறது. திரு.வி.கவின் வாழ்க்கையே அதற்குச் சான்று.

ஒரு பெண் மீது கொண்ட அமரகாதலே திரு.வி.கவுக்கு மீட்பாக ஆகியது. அது அவரை முழுமைப்படுத்தியது. நாள்தோறும் சிவபாதம் நண்ணி அவர் நாடிய விண்பதம் அந்த மெய்க்காதலாலேயே அவருக்கு மண்ணில் வாய்த்தது.

[திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள். திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு]

ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை:சைவசித்தாந்த முன்னோடி

பெரியசாமி தூரன்

இரு காந்திகள்.

முந்தைய கட்டுரைநுஃமானுக்கு விளக்கு
அடுத்த கட்டுரைமனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்